”ராவணனை இன்றுபோய் நாளை வா”ன்னு ராமன் சொன்னதுல ஒரு பெரும் தந்திரம் இருக்குங்கேன்” என்றார் சொக்கலிங்கம். விழா முடிந்து அனைவரும் போனபின், தமிழ்ச்சங்கத்தின் பேரவையில் நாங்கள் மூவர் தவிர யாருமில்லை. செக்ரெட்டரி இருமுறை வந்து பார்த்து “ஏஸியை அணைச்சிருவாங்க. நம்ம ரூம்ல ஒக்காந்து பேசலாம்” என்றார். கரண்ட் பில் ஏறுமோ என்ற கவலை அவருக்கு.
“இங்கிட்டே இருப்பம். இது நல்லாயிருக்கு” என்றவாறே சொக்கலிங்கம் கால்களை மடித்து சேரில் வைத்து சப்பணமாக அமர்ந்தார்.
“என்னான்னு சொல்லுதேன் கேளு. ராவணன் சுத்த வீரன். போர்ல ஆயுதங்கள் இழப்பது சகஜம். ஒன்னு போனா இன்னொன்னு எடுப்பாங்க. ஆனா இவன் நிலை வேறு. எல்லாத்தையும் இழந்தான். மகுடத்தையும், சிவன் தந்த வாளையும் கூட இழந்த நிலையில ராமன் சொல்றான் ‘ இன்று போய் நாளை வா”
இதுல ஒண்ணு பாருடே. எல்லாத்தையும் இழந்தவன் நிராயுதபாணியா நிக்கிறவனைக் கொல்லாம விடறது தருமம் என்பது மட்டுமில்லே, அவனைப் பாத்து சொன்னாம்பாரு “ நீ பாவம், இன்னிக்கு விடறேன். திருப்பி சண்டைக்க்கு வா. அப்பவும் ஒன்னை வெல்வேன்னு” .. அதுல மனரீதியா அப்பவே ராவணனைக் கொன்னுட்டான் பாத்துக்க. அப்புறம் கொல்றதெல்லாம் உடல் சார்ந்த நிகழ்வு. பெரும்பகுதியான ராவணன் அப்பவே செத்தாச்சு”
” பெரும்பகுதி,சிறு பகுதின்னு உண்டா? கொன்னா கொன்னதுன்னு எடுக்கணும்” என்றார் ஆல்பர்ட்டு.
“அட அப்படியில்லடே . ஒருத்தன் எதுல வாழறான்?, கல்விச்செருக்கு, செல்வச் செருக்கு, வீரச்செருக்கு, பலம், புகழ் இதானே? இதுல எங்க அடி விழுந்தாலும் சிறுசிறு மரணங்கள் எப்பவும் சம்பவிக்கும். ஒவ்வொருமுறை புகழப்படும்போதும் இன்பத்துல வாழறோம். சிறுமைப்படும்போது, அவமானத்துல சிறிது சாகிறோம். வாழ்வு சாவுங்கறது ஒரு தடவ நடக்கிறது இல்ல கேட்டியா?”
“அது சரி. நீங்களா ஒண்ணு கற்பனை பண்ணிக்கிடுவீங்க. அப்புறம் கம்பன் அப்ப்டி எழுதினான் இப்படி எழுதினான்னு சொல்லவேண்டியது. “ ஆல்பெர்ட்டு சீண்டிவிட்டு, விஷமமாகக் கண்ணடித்தார்.
“வே, கம்பன் ஒரு பாட்டுல எல்லாத்தையும் வச்சிருக்கான்னுவாரு எங்க காலேஜ் தமிழ்த்துறை ஆசிரியர் . அந்த பாசுரம் நிறையபேருக்குத் தெரிஞ்ச ஒண்ணுதான்.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு , வெறுங்கையோடிலங்கை புக்கான்.
ஒவ்வொண்ணா பாக்கோணும். பலத்துல , தைரியத்துல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, பேராபத்து நம்மீது திடீர்னு வர்றப்போ கலங்காம எதிர்கொள்வது, இது பயமின்மை, வலிமை என்பதன் கலவை. மற்றது தானே போய் ஒரு ஆற்றுதற்கரிய ஒன்றைச் செய்து வலிமையைக் காட்டுவது. இதில் வலிமை, தன்னம்பிக்கை , எடுத்த காரியத்தின் பின்னிற்கும் காரணம்.. இதெல்லாம் வேணும்.
வாரணம் பொருத மார்பு – முதல் வகையைச் சேர்ந்த்து.
வரையினை எடுத்த தோள் – ரெண்டாவது வகை. ஆனா காரியம் என்னான்னு பாரு?.. தன் வலிமையைக் காட்ட நினைத்த செருக்கு. இது பண்பு இல்லை.
கல்விச் செருக்கு . நாரத முனிவரையே ஜெயித்த திறமை ராவணனுக்குண்டு.
தாரணி மவுலி பத்து – கிடைத்த அங்கீகாரம், செல்வம் , புகழ்
சங்கரன் கொடுத்த வாள் – சந்திரஹாஸம் என்ற வாளை சிவன் அன்புடன் பாராட்டிக் கொடுத்த விருது, பெரும்புகழ் இது.
இதெல்லாம் இருந்தா ஏன் பத்துதலையிலயும் கர்வம் ஏறிக்கிடக்காது? ஒரு தலைக்கே நாம இன்ன ஆட்டம் ஆடறோம். இந்த செருக்கையெல்லாம் விடணும்,விடணும்னுதான் நாம பாடுபடறோம்.
ஆனா இந்த ராவணனுக்கு வந்த அதிர்ஷ்டம்.. எதை விடுத்தால்தான் இறை கிட்டுமோ, அதையெல்லாம் இறைவனே வந்து ஒவ்வொண்ணா இவனுக்கு எடுத்திருக்கான். இதை விட வேற என்ன வேணும்?
அடுத்த வார்த்தை முக்கியம் “ வெறும்கையோடு” எல்லாம் போன நிலையில் , கையைக் கூப்பி சாமீ, சரண்-ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும். இதுவரை கம்பன் ரொம்ப நம்பிக்கையில இருந்திருக்கான். சரணாகதியோட உச்ச கட்ட நிலை இது.
அடுத்தாப்புல அந்த ராவணன் பண்ணினதுல கம்பன் வெதும்பிப் போய் எழுத்தாணியை கீழ போட்டிருப்பான் ‘ இலங்கை புக்கான்” . இதுக்காகவே அவனைக் கொன்னிருக்கலாம்”
சொக்கலிங்கம் சொல்லச் சொல்ல வாய் பிளந்து கேட்டிருந்தோம். ஏஸியின் ஹம்மிங் ஓசை தவிர ஒன்றுமே இல்லாத ஒரு அமைதி நிலவியது. “ஏஸி ஓடுது. அணைக்கணும்”என்றார் செக்ரெட்டரி மீண்டும் வந்து.
ராவணனுக்கும் அவருக்கும் அதிக வித்தியாசமில்லை