இது ஒரு ஒலிப்பதிவாக https://kasturisudhakar.in/2021/04/10/talk-on-lakshmana-indrajit-war-kural-and-management-principles/ என்ற சுட்டியில் இருக்கிறது. சுட்டியைச் சொடுக்கினால் அத்தளத்தில் கேட்க இயலும்.
Author Archives: kasturisudhakar(கஸ்தூரி சுதாகர்)
எளியதாய்க் கணிதம் கல்
இரு வருடங்கள் முன் நண்பர் ஒரு மொபைல் வாங்கினார். ₹13000 ஆச்சு. ஆன்லைனில் அதே மாடல் ₹12000, இரு வாரங்களில் கிடைத்தது. நண்பர் வயிறெரிந்தார். ஆயிரம் ரூபாய் போச்சே… ரெண்டே வாரம் பொறுத்திருந்தா…. புலம்பல் பல நாட்கள் நிற்கவில்லை.
அதே ஆன்லைன் தள்ளுபடி விற்பனையில் ஒரு ஃப்ரிட்ஜ் பார்த்தார். ₹23000. வந்து கொடுக்கும் செலவு ₹1000. தெருவோர ஓபராய் மாலில் அதே ஃப்ரிட்ஜ் விலை ₹23000 . கொண்டுவந்து வைப்பது இலவசம். மொத்தத்தில் ₹ 1000 லாபம் , மற்ற ஆன்லைன் விற்பனையுடன் பார்த்தால்.மனிதர் ஆன்லைனில் வாங்கினார். அது ஆயிரம் ரூபாய் கூடுதல் ஆச்சே ? என்றால் , போகட்டும்’ ஆயிரம்தானே? 23000ல் அது ஒண்ணுமேயில்லை”. என்றார்.இரு வாரமுன் ₹ 1000 க்கு அழுதவர், இப்ப அது பரவாயில்லை எங்கிறார். எப்படி ? என்றால், ரூ 23000ல ஆயிரம் கொஞ்சம்தான் தாக்கம் என்று சொல்லிக்கொண்டேன். ஏன் இப்படி நினைக்கிறோம்? என்பது புரியவில்லை
நமது மூளை லாகரிதம் வழியில் சிந்திக்கிறது’ என்கிறார் சுபஸ்ரீ , தனது வலைத்தளம் Mathyarn.com -ல் ஒரு பதிவில்.
இரு எண்களை அதனதன் லாகரிதம் அடிப்படையில் கணக்கிடுங்கள். ( உங்கள் எண் x எனக் கொண்டால், அது y என்ற எண்ணின் z என்ற அடுக்காக இருக்கும்.
logz Y= X ) இரண்டின் படிமங்களின் வேறுபாட்டைக் கணக்கிடுங்கள். அது சிறியதாக இருப்பின், எண் எத்தனை சிறியதாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில், வேறுபாடு பெரிதாகத் தெரியும். எத்தனை பெரியதாக இருக்கிறதோ, அதன் வேறுபாடு சிறியதாகத் தெரியும். ( வலைப்பதிவில் லாகரிதம் பற்றிய செய்தியைப் பார்க்கவும்).இப்படி நாம் அறியாமல் கடந்துபோன கணித முறைகள் ஏராளம். லாகரிதம், கால்குலஸ் , காரணிகள், HCF, LCM வர்க்கம், வர்க்க மூலம், exponential , கற்பனை எண்கள்….இதற்கெல்லாம் எதாவது பயன் உண்டா? இருக்கிறது எங்கிறார் சுபஸ்ரீ. அவர் சிறுவர்களுக்காக , இன்றைய எடுத்துக்காட்டுகளுடன் அடிப்படைகளை விளக்குவதை, வெட்கத்தை விட்டு நாமும் பயிலலாம்.ஆங்கிலத்தில் இருக்கிறது.
எளிய மொழியைத்தான் கையாளுகிறார். மிக நேர்த்தியாக , நம்முடம் பேசுவது போல் உரையாடலாக விளக்குகிறார். அருமை. இன்றைய குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். நானெல்லாம் ‘ வெண் படம் வரைக” என்று லடிஸ் சார் , பெரியதாக வட்டங்கள் வரைந்து விளக்கியபோது தூங்கிக்கொண்டிருந்தேன். லாகரிதம் கொண்டு பெருக்குவது என்பது 5 மார்க் கணக்கு. லாகரிதம் டேபிள் அந்த பள்ளி வகுப்போடு சரி. கால்குலேட்டர் இருக்கையில் எவன் லாகரிதம் போடுவான்? மூளையே லாகரிதத்தில் சிந்திக்கிறது என்பது பொட்டில் அறைந்து விளக்கிய உண்மை. நன்றி சுபஸ்ரீ.மேற்கொண்டு விவரங்களை www.mathyarn.com ல் காணவும். குழந்தைகளுக்குக் காட்டவும் என அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன்.
இன்றுபோய் நாளை வா
”ராவணனை இன்றுபோய் நாளை வா”ன்னு ராமன் சொன்னதுல ஒரு பெரும் தந்திரம் இருக்குங்கேன்” என்றார் சொக்கலிங்கம். விழா முடிந்து அனைவரும் போனபின், தமிழ்ச்சங்கத்தின் பேரவையில் நாங்கள் மூவர் தவிர யாருமில்லை. செக்ரெட்டரி இருமுறை வந்து பார்த்து “ஏஸியை அணைச்சிருவாங்க. நம்ம ரூம்ல ஒக்காந்து பேசலாம்” என்றார். கரண்ட் பில் ஏறுமோ என்ற கவலை அவருக்கு.
“இங்கிட்டே இருப்பம். இது நல்லாயிருக்கு” என்றவாறே சொக்கலிங்கம் கால்களை மடித்து சேரில் வைத்து சப்பணமாக அமர்ந்தார்.
“என்னான்னு சொல்லுதேன் கேளு. ராவணன் சுத்த வீரன். போர்ல ஆயுதங்கள் இழப்பது சகஜம். ஒன்னு போனா இன்னொன்னு எடுப்பாங்க. ஆனா இவன் நிலை வேறு. எல்லாத்தையும் இழந்தான். மகுடத்தையும், சிவன் தந்த வாளையும் கூட இழந்த நிலையில ராமன் சொல்றான் ‘ இன்று போய் நாளை வா”
இதுல ஒண்ணு பாருடே. எல்லாத்தையும் இழந்தவன் நிராயுதபாணியா நிக்கிறவனைக் கொல்லாம விடறது தருமம் என்பது மட்டுமில்லே, அவனைப் பாத்து சொன்னாம்பாரு “ நீ பாவம், இன்னிக்கு விடறேன். திருப்பி சண்டைக்க்கு வா. அப்பவும் ஒன்னை வெல்வேன்னு” .. அதுல மனரீதியா அப்பவே ராவணனைக் கொன்னுட்டான் பாத்துக்க. அப்புறம் கொல்றதெல்லாம் உடல் சார்ந்த நிகழ்வு. பெரும்பகுதியான ராவணன் அப்பவே செத்தாச்சு”
” பெரும்பகுதி,சிறு பகுதின்னு உண்டா? கொன்னா கொன்னதுன்னு எடுக்கணும்” என்றார் ஆல்பர்ட்டு.
“அட அப்படியில்லடே . ஒருத்தன் எதுல வாழறான்?, கல்விச்செருக்கு, செல்வச் செருக்கு, வீரச்செருக்கு, பலம், புகழ் இதானே? இதுல எங்க அடி விழுந்தாலும் சிறுசிறு மரணங்கள் எப்பவும் சம்பவிக்கும். ஒவ்வொருமுறை புகழப்படும்போதும் இன்பத்துல வாழறோம். சிறுமைப்படும்போது, அவமானத்துல சிறிது சாகிறோம். வாழ்வு சாவுங்கறது ஒரு தடவ நடக்கிறது இல்ல கேட்டியா?”
“அது சரி. நீங்களா ஒண்ணு கற்பனை பண்ணிக்கிடுவீங்க. அப்புறம் கம்பன் அப்ப்டி எழுதினான் இப்படி எழுதினான்னு சொல்லவேண்டியது. “ ஆல்பெர்ட்டு சீண்டிவிட்டு, விஷமமாகக் கண்ணடித்தார்.
“வே, கம்பன் ஒரு பாட்டுல எல்லாத்தையும் வச்சிருக்கான்னுவாரு எங்க காலேஜ் தமிழ்த்துறை ஆசிரியர் . அந்த பாசுரம் நிறையபேருக்குத் தெரிஞ்ச ஒண்ணுதான்.
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு , வெறுங்கையோடிலங்கை புக்கான்.
ஒவ்வொண்ணா பாக்கோணும். பலத்துல , தைரியத்துல ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு, பேராபத்து நம்மீது திடீர்னு வர்றப்போ கலங்காம எதிர்கொள்வது, இது பயமின்மை, வலிமை என்பதன் கலவை. மற்றது தானே போய் ஒரு ஆற்றுதற்கரிய ஒன்றைச் செய்து வலிமையைக் காட்டுவது. இதில் வலிமை, தன்னம்பிக்கை , எடுத்த காரியத்தின் பின்னிற்கும் காரணம்.. இதெல்லாம் வேணும்.
வாரணம் பொருத மார்பு – முதல் வகையைச் சேர்ந்த்து.
வரையினை எடுத்த தோள் – ரெண்டாவது வகை. ஆனா காரியம் என்னான்னு பாரு?.. தன் வலிமையைக் காட்ட நினைத்த செருக்கு. இது பண்பு இல்லை.
கல்விச் செருக்கு . நாரத முனிவரையே ஜெயித்த திறமை ராவணனுக்குண்டு.
தாரணி மவுலி பத்து – கிடைத்த அங்கீகாரம், செல்வம் , புகழ்
சங்கரன் கொடுத்த வாள் – சந்திரஹாஸம் என்ற வாளை சிவன் அன்புடன் பாராட்டிக் கொடுத்த விருது, பெரும்புகழ் இது.
இதெல்லாம் இருந்தா ஏன் பத்துதலையிலயும் கர்வம் ஏறிக்கிடக்காது? ஒரு தலைக்கே நாம இன்ன ஆட்டம் ஆடறோம். இந்த செருக்கையெல்லாம் விடணும்,விடணும்னுதான் நாம பாடுபடறோம்.
ஆனா இந்த ராவணனுக்கு வந்த அதிர்ஷ்டம்.. எதை விடுத்தால்தான் இறை கிட்டுமோ, அதையெல்லாம் இறைவனே வந்து ஒவ்வொண்ணா இவனுக்கு எடுத்திருக்கான். இதை விட வேற என்ன வேணும்?
அடுத்த வார்த்தை முக்கியம் “ வெறும்கையோடு” எல்லாம் போன நிலையில் , கையைக் கூப்பி சாமீ, சரண்-ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும். இதுவரை கம்பன் ரொம்ப நம்பிக்கையில இருந்திருக்கான். சரணாகதியோட உச்ச கட்ட நிலை இது.
அடுத்தாப்புல அந்த ராவணன் பண்ணினதுல கம்பன் வெதும்பிப் போய் எழுத்தாணியை கீழ போட்டிருப்பான் ‘ இலங்கை புக்கான்” . இதுக்காகவே அவனைக் கொன்னிருக்கலாம்”
சொக்கலிங்கம் சொல்லச் சொல்ல வாய் பிளந்து கேட்டிருந்தோம். ஏஸியின் ஹம்மிங் ஓசை தவிர ஒன்றுமே இல்லாத ஒரு அமைதி நிலவியது. “ஏஸி ஓடுது. அணைக்கணும்”என்றார் செக்ரெட்டரி மீண்டும் வந்து.
ராவணனுக்கும் அவருக்கும் அதிக வித்தியாசமில்லை
ஆவுடைநாயகி – 2
“ திருநெல்வேலி வருகிறேன். 4 நாட்கள் இருப்பேன்.” என வீராகவனுக்கு ஆவுடையக்கா எழுதியிருந்தார். எனக்கு உள்ளூற ஒரு எரிச்சல்தான். எனக்கு எழுதவில்லை…
சனிக்கிழமை காலையில் பஸ்பிடித்துப் போனால், அக்கா எங்களைப் பார்த்து வியப்பாள் என நினைத்து ஏமாந்தோம். “ வாங்கடா. மத்தியான வேளை. முதல்ல சாப்பிடுங்க” என்றாள். “ எப்படியும் நீங்க ரெண்டுபேரும் இங்க வரக் கிளம்புவீங்கன்னு தெரியும். அதுவும் இன்னிக்கு லீவு. அரைமணி நேரம் இருங்க. சோறு ஆக்கிடறேன்”
அது அவரது பெரியம்மா வீடு என்பதால், தயங்க, அவர் எங்களுடன் பஸ் ஸ்டாண்டு பக்கம் ஓட்டலில் சாப்பிட வந்தார். ஃபுல் மீல்ஸ் என டோக்கன் அவரே வாங்கினார். “நான் சம்பாதிக்கிறேன். நீங்க ரெண்டுபேரும் வேலைக்குப்போய் பிறகு எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க, என்ன?”
அக்காவை இம்ப்ரெஸ் செய்ய நினைத்து, புரட்சிகரமாகப் பேசத் தொடங்கி அரைகுறை கம்யூனிஸம், சோசலிசம் ( பக்கத்தில்தான் NCBH தள்ளுபடியில் சோசலிசம் என்றால் என்ன? ரூ 2 க்கு விற்றுக் கொண்டிருந்தது ) என உளற, அவர் மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்பொழுதெல்லாம் புரட்சி சிந்தை என்பது இந்துக்கள் இந்துக்களை திட்டுவது, ஏளனம் செய்வது என்பதை முக்கிய அம்சமாகக் கொண்டது. அதுவும் பிராமணர்கள் பிராமணர்களைத் திட்டுவது மிக முக்கியம்.
“பாலசந்தர் அருமையான டைரக்டர் “ என்றேன். “ பழைய படம் பாருங்க அரங்கேற்றம் னு ஒண்ணு. அதுல ஒரு ப்ராமின் கேர்ல்…”

அக்கா போறும் என்பதாகத் தடுத்தாள் “ இது ஓட்டல். கத்திப் பேசக்கூடாது. அப்புறம் வேறென்ன படம் பார்த்த?
“ம்…. மன்மதலீலை?” சொன்னாள் அடிப்பாளோ? டீசண்ட்டாக “ நிழல் நிஜமாகிறது “ என்றேன். அந்த கமல் கம்யூனிஸ்ட் நடிப்பு நல்லா இருந்துச்சு. கம்பன் ஏ…மா..ந்தா…ன்”
அக்கா நேராகப் பார்த்தாள் “ அதுல இருக்கற பெரிய போலித்தனம் தெரியலை உனக்கு? அந்த கேரக்டர் பெண்களை மதிக்கிற கம்யூனிஸ்ட் , ஷோபா கடைசியில அனுமந்துவுடன் வாழப்போவதாகச் சொல்கையில்,கமல் கை தட்டுவார். ஆனால் கம்பன் ஏமாந்தான் பாட்டுல “ ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே? ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” ன்னு பாடுவார். இது முரணாப் படலை உனக்கு?”

விழித்தேன் “ அக்கா, அது ஒரு காதல் பாட்டு. He is just teasing her”
“டீஸ் பண்றதுக்கும் சொல்லற வார்த்தைகள் மோசம்டா. பெண்ணுரிமை பத்திப்பேசற ஒருத்தன் எப்படி அதை மிதிக்கற மாதிரி காதல் செய்வான்?”
அப்ப கமல் போலி?
“ அந்த கேரக்டர் போலி. டைரக்ஷன்ல பெரிய ஓட்டை. பாலச்சந்தர்னா உடனே தூக்கி வைக்க்கூடாது. எது நல்லதோ அதை பாராட்டணும். எதுல சறுக்கியிருக்காரோ, அதைச் சொல்லணும்”
Objective criticism என்பதை சற்று விளக்கினார் . “ இதை கணியன் பூங்குன்றனார் சொல்லுவார் “ பெரியோரென வியத்தலும் இலமே; சிறியோரென இகழ்தல் அதனிலும் இலமே”
அக்கா தொடர்ந்தாள் “ இந்த புரட்சி சிந்தனைன்னு காட்டிக்கறது பெரிய போலித்தனம். அந்த அரங்ககேற்றம் படம் இருக்கே, அதுல ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் காட்டறான்? ஏன்னா அப்படிக் காட்டினாத்தான் “ அடேயப்பா! என்ன ஒரு துணிச்சல் இந்த டைரக்டருக்கு?” ந்னு ஒரு பாராட்டு வரும்னு அவங்க நினைப்பு. இதையே ஒரு மாற்று சமுதாயம், மாற்று மதக் கேரக்டராக் காட்டச் சொல்லேன். மாட்டாங்க. “
வியந்து கேட்டிருந்தேன். அக்கா தொடர்ந்தாள் “ நான் அந்த ஜாதி இல்ல. ஆனா எனக்கு இப்படி போலித்தனமா காட்டறது எதுக்குன்னு விளங்குது. இப்ப ஒரு ஜாதியைச் சொன்னவன் மனசுல அப்படித்தான மத்த ஜாதிப் பொண்களைப் பத்தி விரசமான எண்ணம் இருக்கும்?.
பாலச்சந்தர் படமா? எதிர் நீச்சல், இரு கோடுகள் பாரு. ஸ்ரீதர் படமா? மீனவ நண்பனை விட்டுறு. கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை பாரு.”
“அப்ப சிவாஜி படம்? பட்டிகாடா பட்டணமா ? பாத்திருக்கீங்களாக்கா? “ நல்வாழ்த்து நான் சொல்லுவேன்”னு ஒரு பாட்டு வரும். அதுல பெண்கள் அடிமைத்தனம் பத்தி ஒரு வரி “கோபம் கொண்டு உதைத்தாலும், கொண்டவனை மறக்காதே”. இதை என்ன சொல்றீங்க?”
“அடேய்” என்றாள் அக்கா பொறுமையாக “ அந்தப் படம் பின்னணியுமே அப்படி. சிவாஜி ஒரு பட்டிக்காட்டு ஆணாதிக்க சமூக வளர்ப்பு ஆளாக் காட்டியிருப்பாங்க. படிச்ச, சிகரெட் ஊதற, கோலத்தை ஸ்கூட்டரால் அழிக்கிற கம்யூனிஸ்ட்டா இல்ல. அந்தப் பாட்டுல ஒரு வரி வரும் “ யாரிடம் குறையில்லை, யாரிடம் தவறில்லை, வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை, வா” எவ்வளவு பாஸிட்டிவான வரி! கம்பன் ஏமாந்தான்ல காட்டு பாப்போம். பாட்டு மெட்டு நல்லா இருக்கும். அதோட நிறுத்திக்கணும். அவர் பெரிய டைரக்டர்னு , சொன்னதையெல்லாம் மனசுல போட்டுக்கக் கூடாது
சினிமா, நடிகர்கள், டைரக்டர்கள், சிந்தனையாளர்கள் பற்றி ஒரு தெளிவு வந்தது அப்பொழுதுதான். இனி ரசிப்போம். ஆனால், சிந்தனைகளை வாங்கி நிறைப்பதில்லை, அது இலவசமாகக் கிடைத்தாலும்.
அடுத்த வாரம் “ இன்னிக்கு ஜீவாவின் சிந்தனைகள் பத்தின கூட்டம் இருக்கு வர்றியா? “ என்ற அழைப்பிற்கு “ இல்லை “ என்றேன்.
வாடகை சைக்கிள்

பஸ்ஸ்டாண்டில் இருந்து சிவன்கோவில் ஐந்து நிமிட நடை. திருநெல்வேலிக்காரர்கள் பாஷையில் ”ரெண்டு எட்டு எடுத்து வச்சா வந்துரும்.”
“என்ன மெதுவா நடக்கீங்க? வேல கெடக்கு. நைட்டு சோறு யாரு பொங்குவா?” சீதாலட்சுமியின் குரலைப் பொருட்படுத்தாது வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்துப் பின்னே நடந்தான் சிவராமன். கோபத்தில் அவன் மூச்சு சீரற்று வந்தது. சீதா ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் வேகத்தில் கோவிலை நோக்கி நடந்தாள். “இந்தாளு எப்பவுமே இப்படித்தான். மத்தியானம் பேசினோம்லா? அதான் வேதாளம் முருங்க மரம் ஏறிக்கெடக்கு. விடுடி. வருவாரு” அருகில் நடந்த தங்கையிடம் கடுப்புடன் பேசியபடி நடந்தாள்.
சிவராமன் தனிச்சையாகத் தலை திருப்பினான். முன்பு இங்கு தனராஜ் அண்ணன் கடை இருந்தது. ஆறுமுக நாடார் வாடகை சைக்கிள் கடை. என்று போர்டு போட்டு “ கடம் அன்பை முரிக்கும்” என்று இலக்கணத்தை முறித்துப்போட்ட சாக்பீஸ் எழுத்து எச்சரிக்கையுடன் போர்டு தொங்கியதுபச்சைக்கலர் ஹெர்குலிஸ், டபுள் பார் ராலே, முன் வீல் பக்கம் ட்புள் ஸ்ப்ரிங், காரியர் வைச்சது , வைக்காதது எனப் பல சைக்கிள்கள், பெயிண்ட்டால் எண் இடப்பட்டு வரிசையாக நின்றிருக்கும்.
சிறுவர்களுக்கு இரு குட்டையான சைக்கிள்கள் இருந்தன. “ஐஞ்சு பைசாக்கு அரை மணி நேரம்- சிகப்பு சைக்கிள், ரெண்டு பைசாவுக்கு – ஊதா சைக்கிள்” என்று தனராஜ் தன் இச்சைக்கு விலை வைத்திருந்தார். சில பசங்களுக்கு அரைமணி நேரம் முடிந்திருந்தாலும் அதிகம் வாங்க மாட்டார் .சிலநேரம், பெரிய சைக்கிள் ஓட்டும் மிதமிஞ்சிய ஆசையில், சின்ன சைக்கிளை வைத்துவிட்டு, “அண்ணாச்சி இன்னும் ரெண்டு நிமிசம் இருக்குல்லா?. ஒரேயொருவாட்டி, அந்த திருப்பம் வரை அரைப்பெடல் போயிட்டு வந்துர்றேன்” என்று கெஞ்சினாலும் “போடே, ? பெரிய சைக்கிளெல்லாம் மீசை இல்லாத பயலுவளுக்குக் கிடையாது. ” என்று இரக்கமே இல்லாமல் மறுத்துவிடுவார். அவரை , இசக்கி ஆச்சியின் கெட்ட வார்த்தை வரிகளில் திட்டிக்கொண்டே சிறுவர்கள் திரும்பிப் போவார்கள். . (இசக்கி ஆச்சியின் கொடுவாய் மொழியை இங்கு பதிவு செய்ய முடியாது).

தனராஜ் அண்ணாச்சி கடை இருந்த இடத்தில் மொபைல் கடை ஒன்று முளைத்திருந்தது. சிவராமன் நின்று உள்ளே கவனித்தான். அந்த முதியவர்…தனராஜ்… தனராஜ் அண்ணாச்சியேதான். ”தெரியுதா அண்ணாச்சி?” கேட்டு அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“ டே, நீ முரளி தம்பில்லா?! எப்படி இருக்க? ஒங்கண்ணன் முரளி எங்கிட்டிருக்கான்? முப்பது வருசமாச்சேய்யா பாத்து?!” அண்ணாச்சியின் கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன.”ஒக்காருடே, அப்பா எங்கிட்டிருக்காரு?””அப்பா, போயாச்சி அண்ணாச்சி. பத்து வருசமாவுது” தனராஜ் சற்றே மவுனித்தார் “அவர மாரி ஆட்களையெல்லாம் இனிமேப் பாக்க முடியாது. கடைமேல ஒரு கேஸ் வந்தப்ப, அவர்தான் முன்னாடி நின்னு முடிச்சுக்கொடுத்தாரு. இல்லேன்னா, வள்ளிசா கடை போயிருக்கும், கேட்டியா? ஆமா” என்றவர் தயங்கியபடி தொடர்ந்தார் “ ஒனக்கு முன்னாடி போச்சே, ரெண்டு பொம்பளேள்? அது ஒன் சம்சாரமும், அவ தங்கச்சியுமா?”
“ஆமாண்ணாச்சி. வடக்குத்தெருவுலதான் அவங்க அப்பா வீடு”
“தெரியும்டே” சிரித்தார் அவர் “ மணிகண்டன் சாரோட மூத்த மவ. கலியாணத்துக்குக் கூப்டிருந்தாரு பாத்துக்க. நான் அப்பப் பாத்து தென்காசிக்குப் போயிருந்தன். நீதான் மாப்பிளைன்னு தெரியாமப் போச்சே?. சரி, எல்லாம் இந்தூர்ல நமக்குச் சொந்தந்தானேய்யா, என்ன சொல்லுத?”சட்டென முகம் சீரியசானார் “ அதென்னா முகம் வாடி இருக்கே? அவளும் கோபமால்லா போனா? என்ன விசயம்? அண்ணாச்சிகிட்ட சொல்லலாம்னா சொல்லு”
“ஓண்ணுமில்லண்ணாச்சி. அவ தம்பிக்கு புல்லட்டு வேங்கணும்னா. நா ’இப்ப வேணாம். அவனா, கடன அடைக்கற புத்தியோட வர்றப்போ வேங்கித்தாறன்னேன். அதாம் கோபம். பயல்னா ஒரு பொறுப்பு வேணாமாண்ணாச்சி? சும்மா வேங்கிக்கொடுத்து குட்டிச்சுவராக்குதாங்க”
அண்ணாச்சி மவுனமாக இருந்தார் “நீ சொல்றது நியாயந்தான்.” சட்டென நிறுத்தி “ டே, ரெண்டு டீ போடுறே, தம்பி யாருன்னு தெரிதா? நம்ம முரளி இருக்காம்லா? அவந்தம்பி. சின்ன சைக்கிள் கேப்பாம்லா? ஆங், அவந்தான்! ”
டீக்கடை அண்ணாச்சி வாயெல்லாம் பல்லாக “ டே, ஒம்பேரு மற்ந்திட்டு. முரளி நல்லாருக்கானா? நம்ம கடைல திருட்டு தம் அடிச்சு, கடம் வச்சில்லா டீ குடிப்பான் ஒங்கண்ணன்? அவனக்கிட்ட ”செல்லையாவப் பாத்தேன். ஒங்கணக்குல இன்னும் அம்பது ரூவா கடனா நிக்கி”ன்னாருன்னு சொல்லு. என்ன சொல்லுவியாடே?” இருவரும் சிரித்தார்கள்.
அண்ணாச்சி “ டே, நீ சொல்ற மாரி பயலுவளுக்குப் பொறுப்பு வரணும்தான். ஆனா, பொம்பளேள் புத்தி இருக்கே, அதுல பாசம் கண்ணக் கட்டிரும் பாத்துக்க. எந்தம்பிக்கு இல்லேன்னா சொல்லுதீரு?ன்னுதான் அவளுக்கு முதல்ல வருமே தவிர, நீ என்னத்துக்குச் சொல்லுதே?ன்னு தோணாது. இதெல்லாம் பதவிசா எடுத்துச் சொல்லணும்டே”
“என்னண்ணாச்சி சொல்ல? எளவு ஒண்ணும் புரியாம கத்துதாளுவோ. போட்டி-ன்னு வந்துட்டேன்.’ கோயிலுக்கு வேங்க’-ன்னு இழுக்கா இப்ப.” ”மரியாதைக்கி அவ கூடக் கோயிலுக்குப் போயிட்டு வா. அதான் முறை”
“எப்படீண்ணே? மனசு கொதிச்சுக் கிடக்கு. என்னத்தையாச்சும் சொன்னாள்னா, இடம் காலம் பாக்காம, களுத கன்னத்துல ஒரு இளுப்பு இளுத்துருவேன்”
“டே!” என்றார் அண்ணாச்சி,பதட்டமாக, “ அடங்கி இரி” கையைக் காட்டி அமர்த்தினார். ஒரு நிமிடம் மவுனமாயிருந்தனர் இருவரும்.
“டே, இப்ப நான் தனியாளு. ஒனக்குத் தெரியுமான்னு தெரியல. எம்பொண்டாட்டி பரமேஸ்வரி கண்ணாலம் கட்டி ஒருவருசத்துல பிரிஞ்சி போனா. அப்ப, நீயெல்லாம் சின்னப் பய. முரளிக்குத்தெரியும். அவம் பாத்திருக்கான்.
கோபம் இருக்கு பாரு, மோசமான குணம் பாத்துக்க. நாம என்னதான் நல்லது பண்ணி ஒருகுடம் பால் மாரி இருந்தாலும், ஒரு நிமிச கோபம், அதுல ஒரு கள்ளிச் சொட்டா விழுந்துரும். பின்னென்ன, குடம் பூரா வெசம் தானே?
பரமேஸ்வரி அன்பாத்தான் இருந்தா பாத்துக்க. ஒரு நாள் அவ கடைக்கு வந்து “ மாமா, தம்பி வந்திருக்கான். அம்பது ரூவா கொடுங்க. ” அன்னிக்கின்னு பாத்து எனக்கு என்னமோ சின்ன கோபம் . “எதுக்குட்டீ?” ந்னேன். “கோளியடிச்சி குளம்பு வச்சிருதேன். கறி வேணும்னா, கடைல சும்மாவா தருவாக?”ன்னா. இவ்வளவுதான் சொன்னா பாத்துக்க. எனக்கு வந்திச்சே கோபம்.
“ செருக்கியுள்ள, எனக்கா சொல்லித்தாரே? நானே இங்க ஓட்டாண்டியா நிக்கேன். நீயென்னன்னா, தம்பிக்கு கோழி குழம்பு வக்கணும்னு வந்து நிக்க, என்னட்டீ? நாயே, பிச்சிருவேம் பிச்சி” சொன்னவன் சொன்னதோட நின்னிருக்கணும். கையை ஓங்கிட்டேன். அவ அழுதுகிட்டே என்னமோ சொல்ல, நான் அவளைக் கடையிலேர்ந்து தரதரன்னு தெருவுல , இந்தா இங்கதான், ஒரு மூங்கில் கம்பு இருக்கும்லா, நம்ம கடைக் கூரைக்கி? அதுல மோதவிட்டு அடிச்சிட்டேன்.
அன்னிக்கு அவ அம்மா வீட்டுக்குப் போனவதான். நான் போயிக் கூப்பிடல, எங்காத்தா அப்பா, மாமா.. யாரு பேசப் போவல சொல்லு? அவ அந்த மிருகத்தோட வாழ மாட்டேன்னுட்டா.
நானும் ‘பொட்டச் சிறுக்கிக்கு இம்புட்டு கோவம், அங்? நான் போயிக் கூப்பிடமாட்டேன். வந்தா வீட்டுல இருந்து வாழட்டும் இல்ல, சிவம்பாறைலேர்ந்து ஆத்துல விழுந்து சாவட்டு” ந்னு விட்டுட்டேன்.
இருவத்தைஞ்சு வருசம் ஓடிட்டு. அவளுக்கு என்னமோ மார்ல கட்டின்னாங்க. புத்து நோய்னு மெட்ராஸ் கூட்டிட்டுப் போனாவ. அப்பத்தான் எனக்கு விசயம் தெரீயுது. அங்க போயிப் பாத்தம் பாரு.”அண்ணாச்சியின் குரல் நடுங்கியது. “
லே, “ சட்டென அழுகையில் வெடித்தார் “ லே, ரெண்டு பேருக்கும் மத்தியில கிடந்த ஒரு சீலை கிழிஞ்சி தொங்கிச்சி அங்கிட்டு. “ஏம்மாமா, என்ன முன்னாலயே பாக்க வரல?”னு அவ கேக்கா… என்ன சொல்ல?
”சிறுக்கி மவளே, இந்த கூறுகெட்டவன் மனசுல நீதாண்டி இருந்த… ஆனா அதோட விசமா வீம்பு ஒண்ணு நின்னு போச்சே?”ன்னு விம்முதேன். அவ கண்ணுல நீரா வடியுது “ நாந்தான் மாமா தப்பு செஞ்சிட்டேன். ஒங்கள ஒ்க்காத்தி வச்சி, ஒரு வாய்ச் சோறு சமச்சிப் போடலயே ? எனக்கும்லா வீம்பு வளந்துகிடக்கு? அதான் ஆத்தா , ஈரமில்லா நெஞ்சுல ஒனக்கு எதுக்குட்டீ உசிரு?ன்னு எடுக்கா போலுக்கு. எல்லாம் என் பாவம். என்னோட போவட்டு”ன்னா. ரெண்டு வாரத்துல போயிட்டா.
இப்ப எனக்கு வீம்பு பிடிக்கக்கூட ஆளில்ல தம்பி. ஒங்கூட சண்டை போட பொண்டாட்டி இருக்கா. போ.. அவகூட சண்ட போட்டு, சமரசமா இரி.
வாடகை சைக்கிளை ஒருநாள் போட்டுட்டுத்தான் எல்லாரும் போவணும். நேரம் முடியறதுக்குள்ள வண்டி ஒட்டி வேலையப் பாக்கறவன் புத்திசாலி. அத விட்டுட்டு, ரோட்டுல சண்டை போட்டு நின்னு, சோலி முடிக்காம, வண்டியத் திருப்பிக் கொடுக்கறவன என்ன சொல்ல? வண்டி ஓட்டறப்ப அடிபடாம, சந்தோசமா ஓட்டணும். அதான் சூச்சுமம். “
சிவராமன் எழுந்து வீடு நோக்கி நடந்தான் . ஒரு நிமிடம் கழித்து அதே தெருவில் கோயிலைப் பார்த்துத் திரும்பி நடந்தான். அண்ணாச்சி கடை விளக்கு அணைந்திருந்தது.
கதையா? நிஜமா ? என்று கேட்காதீர்கள்.உங்கள் மனம், இது கதை என்றால் கதை. நிஜமென்றால் நிஜம்.
கணிதம் கற்க Mathyarn.com வலைத்தளம்.
இரு வருடங்கள் முன் நண்பர் ஒரு மொபைல் வாங்கினார். ₹13000 ஆச்சு. ஆன்லைனில் அதே மாடல் ₹12000, இரு வாரங்களில் கிடைத்தது. நண்பர் வயிறெரிந்தார். ஆயிரம் ரூபாய் போச்சே… ரெண்டே வாரம் பொறுத்திருந்தா…. புலம்பல் பல நாட்கள் நிற்கவில்லை.
அதே ஆன்லைன் தள்ளுபடி விற்பனையில் ஒரு ஃப்ரிட்ஜ் பார்த்தார். ₹23000. வந்து கொடுக்கும் செலவு ₹1000. தெருவோர ஓபராய் மாலில் அதே ஃப்ரிட்ஜ் விலை ₹23000 . கொண்டுவந்து வைப்பது இலவசம். மொத்தத்தில் ₹ 1000 லாபம் , மற்ற ஆன்லைன் விற்பனையுடன் பார்த்தால்.மனிதர் ஆன்லைனில் வாங்கினார். அது ஆயிரம் ரூபாய் கூடுதல் ஆச்சே ? என்றால் , போகட்டும்’ ஆயிரம்தானே? 23000ல் அது ஒண்ணுமேயில்லை. என்றார்.
இரு வாரமுன் ₹ 1000 க்கு அழுதவர், இப்ப அது பரவாயில்லை எங்கிறார். எப்படி ? என்றால், ரூ 23000ல ஆயிரம் கொஞ்சம்தான் தாக்கம் என்று சொல்லிக்கொண்டேன். ஏன் இப்படி நினைக்கிறோம் என்பது புரியவில்லை
நமது மூளை லாகரிதம் வழியில் சிந்திக்கிறது’ என்கிறார் சுபஸ்ரீ , தனது வலைத்தளம் Mathyarn.com -ல் ஒரு பதிவில். இரு எண்களை அதனதன் லாகரிதம் அடிப்படையில் கணக்கிடுங்கள். இரண்டின் படிமத்தின் வேறுபாட்டைக் கணக்கிடுங்கள். அது சிறியதாக இருப்பின், எண் எத்தனை சிறியதாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில், வேறுபாடு பெரிதாகத் தெரியும். எத்தனை பெரியதாக இருக்கிறதோ, அதன் வேறுபாடு சிறியதாகத் தெரியும். ( வலைப்பதிவில் லாகரிதம் பற்றிய செய்தியைப் பார்க்கவும்).
இப்படி நாம் அறியாமல் கடந்துபோன கணித முறைகள் ஏராளம். லாகரிதம், கால்குலஸ் , காரணிகள், HCF, LCM வர்க்கம், வர்க்க மூலம், exponential , கற்பனை எண்கள்….இதற்கெல்லாம் எதாவது பயன் உண்டா? இருக்கிறது எங்கிறார் சுபஸ்ரீ. அவர் சிறுவர்களுக்காக , இன்றைய எடுத்துக்காட்டுகளுடன் அடிப்படைகளை விளக்குவதை, வெட்கத்தை விட்டு நாமும் பயிலலாம்.
ஆங்கிலத்தில் இருக்கிறது. எளிய மொழியைத்தான் கையாளுகிறார். மிக நேர்த்தியாக , நம்முடம் பேசுவது போல் உரையாடலாக விளக்குகிறார். அருமை. இன்றைய குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்.
நானெல்லாம் ‘ வெண் படம் வரைக” என்று லடிஸ் சார் , பெரியதாக வட்டங்கள் வரைந்து விளக்கியபோது தூங்கிக்கொண்டிருந்தேன். லாகரிதம் கொண்டு பெருக்குவது என்பது 5 மார்க் கணக்கு. லாகரிதம் டேபிள் அந்த பள்ளி வகுப்போடு சரி. கால்குலேட்டர் இருக்கையில் எவன் லாகரிதம் போடுவான்?
மூளையே லாகரிதத்தில் சிந்திக்கிறது என்பது பொட்டில் அறைந்து விளக்கிய உண்மை. நன்றி சுபஸ்ரீ.மேற்கொண்டு விவரங்களை www.mathyarn.com ல் காணவும். குழந்தைகளுக்குக் காட்டவும் என அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன்.

காவல் மீன்கள்
வானம் மந்தமாக , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாமெனப் பயமுறுத்தியது. பேராசிரியர் அழகர்சாமி, ஆய்வு மாணவி தயமந்தியை ஏறிட்டார். ”வீட்டுக்குக் கிளம்பும்மா. மழை பெருசா வரும்போல இருக்கு”
“வணக்கம் சார்”. ஜோசப் வாசலில் நின்றிருந்தான்.“கிளம்பிட்டீங்களா ப்ரொபஸர்? அப்ப நாளைக்கு வர்றேன்” .
“ வராதவன் வந்திருக்க. சொல்லு. பேசிக்கிட்டே போலாம்” மூவரும் பல்கலை இயற்பியல் துறையின் நீண்ட தாழ்வாரத்தில் நடந்தனர்.
“நீங்க போனவாரம் ‘அறிவியல் அறிவோம்’ கழகத்துல பேசினது மனசுல ஓடிட்டிருக்கு சார். ஒவ்வொரு செயலிலும் அறிவியல், தொலைநோக்குப் பார்வைன்னு பாக்கணும்னு சொன்னீங்க.”
ஜோசப் தொடர்ந்தான். “எங்க கிராமம்… சொல்லியிருக்கேன்… தூத்துக்குடி பக்கம் கடலோரப் பகுதி. கடல்ல காவல் மீன்கள்ன்னு இருக்குன்னும், அது இருக்கறதுனாலதான், எங்கள்ள பலரும் பிழைச்சிருக்காங்கன்னும் ஊர்ல ஒரு கதை உண்டு. அதுல என்ன அறிவியல்?னு பாத்து ஊருக்குச் சொல்லணும் சார். குறைஞ்ச பட்சம், எங்க ஊர்ல இருக்கற இந்த மூட நம்பிக்கையை உடைக்கணும்.”
அழகர் சாமி நின்றார். நெல்லைப் பாணன் பாட்டு… லேசாக நினைவில் ஓடியது. கடல் ஒருவனை உள்ளே இழுக்கிறது. அப்போது…
“முன்னே திரையிழுக்க, பின்னே நினைவிழுக்க
நெஞ்சடங்க, நினைவடங்க, நீஞ்சுவது தானடங்க…
அஞ்சாமே சென்றிடடா. அருங்காவல் மீனிருக்கும்.
மச்சமது நின்றிடவே , கச்சிதமாய்த் திரும்பிடுவாய்”
“அங்! அப்படித்தான் பாட்டு போகும் சார்! உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஜோசப் வியக்க, அழகர்சாமி, தான் உரக்கப் பாடியதை நினைத்து ஒருகணம் வெட்கினார்.
“ரொம்ப வருசம் முந்தி, நெல்லைப்பாணர் -நு ஒருத்தர் வீட்டுல குடியிருந்தோம். அவருக்கு அப்பவே எழுவது வயசிருக்கும். அவர் தாத்தா வைச்சிருந்த ஓலைச்சுவடியெல்லாம் காட்டுவார். அதுல இருந்த ஒரு பாடல் இது. சரியா நினைவில்லை. இது காவல் மீன் பத்தின பாட்டு-ந்னுவார்”
ஜோசப். “நீங்க நேரடியாகப் பாத்து இதுல இருக்கற அறிவியல் என்னன்னு சொல்லுங்க. சமூக வலைத்தளத்துலன்னு பெருசா பரப்பிடலாம். நீங்க எப்ப வரமுடியும்?” என்றான்
“சனிக்கிழமை?”.தயமந்தி, அன்னிக்கு உனக்கு வேற வேலை ஒண்ணுமில்லையே?”
அது கிராமமல்ல. குக்கிராமம். கடற்கரையை ஒட்டிய சில தெருக்கள். நூறு குடும்பங்கள் இருந்தால் பெரிது. ஒருபுறம் கடல் அலைகள் சோம்பலாக அடித்துக் கொண்டிருக்க, சற்று தொலைவில் தென்னை மரங்கள் , பாறைகள் என பசுமையாக இருந்தது.
சில ப்ஸாஸ்டிக் நாற்காலிகளை ஒரு குடிசையின் வாசலில் இட்டிருந்தார்கள். வயசான ஒருவர் வணக்கம் என்றார். “ நான் அந்தோணி. இவன் ஜெரால்டு.“ அழகர்சாமி , தன் வரவால் அவர்கள் உள்ளூடும் ஒரு பதட்டத்தைக் கவனித்தார்.
“காவல் மீனு பத்தியா? லே, ஜெரால்டு, இப்போதைக்கி நீதான் பாத்திருக்க. சாருகிட்ட சொல்லு”
ஜெரால்டு எழுந்தான். “ஒரு வாரம் முந்தி… கொஞ்சமா ஃபாரின் சரக்கு அடிச்சிருந்தேம்லா? வடக்கால இறங்கிட்டேன். போட்-ல சட்டுனு ஒரு ஆட்டம். விழுந்துட்டேன்.
இழுத்துச்சு பாருங்க, ஒரு இழுப்பு… காலு சதை பிடிச்சிருச்சு. சுர்ருனு ஒரு வலி. நீஞ்ச முடியல. கரைக்கு வர திரும்புதேன். தண்ணி கடலுக்குள்ள இழுக்கு. சரி.. இன்னிக்கு செத்துட்டோம்னே நினைச்சிட்டேன். திரேசம்மா முகம் கண்ணுக்குள நிக்கி. சின்னப் பொண்ணு மூஞ்சி தெரியுது. மன்னிச்சுக்க புள்ள-னுகிட்டே இழுப்புல போயிட்டிருக்கேன்.கொஞ்ச தூரத்துல அது தெரிஞ்சிச்சி”
“எது?” என்றார் அழகர் சாமி
“காவல் மீனு. கருப்பா நிழல் மாரி… தட்-னு ஒரு மீன்மேல இடிச்சிருக்கேன். குறைஞ்சது ஆறு ஏழு இருக்கும். சின்னதும் பெரிசுமா.. “
“எவ்வளவு பெரிசு?”
“ஒரு சாண்லேர்ந்து, ரெண்டடி வரை. நடுவுல ஒண்ணு ரொம்பப் பெரிசு. சரியாப் பாக்கல.” ஜெரால்டு ஒருகணம் நிறுத்தித் தொடர்ந்தான்.
“காவல் மீன் கண்டா, வலப்பக்கம், இடிச்சா இடப்பக்கம்னு நீஞ்சணும், கேட்டிருக்கம்லா? இடது பக்கமா திரும்பி நீஞ்சுதேன். தண்ணி உள்ள இழுக்கு. இப்ப திரும்பவும் ஒரு இடி.. ஒரு பெரிய மீன் நான் ,கடலுக்குள்ள இன்னமும் போகாம தடுத்துக்கிட்டு நீஞ்சுது. கொஞ்ச தூரம் வந்ததும், நின்னிட்டு. நான் கரைப்பக்கமா மெல்ல மெல்லத் திரும்பி நீஞ்சி வந்துட்டேன். என்னைக் கரைப்பக்கமாத் தள்ளின மீன் மட்டுமில்லைன்னா, ஹார்பர் பக்கம் பொணமா ஒதுங்கியிருப்பேன்.”
“அந்த இடத்தைக் காட்ட முடியுமா?” அழகர் சாமி எழுந்தார்.
கடற்கரையில் ஜெரால்டும், அந்தோணியும் தமயந்தியும் அவருடன் நின்றிருக்க, இரு இளைஞர்கள், வீடியோ கேமிராவும் கையுமாக அதனைப் படமெடுத்துக் கோண்டிருந்தனர்.
அந்தோணி, கடலை நோக்கிக் கை காட்டினார்” தெக்கால அங்கிட்டு ஒரு பாறை மாரித் தெரியுது பாருங்க, ஆங்! அதுக்கு அங்கிட்டு ஒரு இன்னொரு பாறை இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல தான் இழுப்பு போகும். இதேமாரி, வடக்காம ரெண்டு மேடு இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல இழுப்பு. மணல் மேடு பாருங்க… அது இடம் மாறிட்டே இருக்கும். அதுனால, இழுப்பு இடத்த கரெக்டா சொல்ல முடியாது.”
“இதுக்கு ஒரு பாட்டு உண்டுல்ல?” என்றார் அழகர்சாமி.
சிரித்தார் அந்தோணி“நெல்லைப்பாணன்னு ஒருத்தரு இருநூறு வருசத்துக்கு முன்னாடி ஓலைல எழுதி வைச்சு, அதை அவர் பேரன் புத்தகப்பதிப்புல போட்டாருன்னுவாங்க. அது , “ மச்சமது கண்டிட்டால், வலப்புறமா கைபோடு; இச்சையுடன் தீண்டிட்டா, இடப்புறமாக் கைபோடு” -னு போவும். இதான் சூச்சுமம். இங்கிட்டு எல்லாப் பயலுவளுக்கும் இது தெரியும். ஜெரால்டு பொளைச்சதுக்கும் இதான் காரணம்”
“தெக்கால, எப்படிப் போக?” என்ற அழகிரிசாமியை நிறுத்தினார் அந்தோணி “அய்யா, இங்கிட்டு மோட்டார் போட், வலை போட அனுமதி கிடையாது. சமூக உத்தரவு. ஒரு பய இந்த எல்லைக்குள்ள மீன் பிடிக்க முடியாது. நம்ம படகுல கூட்டிட்டுப் போறேன். “
படகில், திடீரென கடலை நோக்கிய இழுப்பை உணர்ந்தார் அழகர்சாமி. இருபுறமும் நுரைப்படுகைகள் வளைந்து கடல் நோக்கி விரைந்ததைக் கண்டார். இரண்டு நுரைகளும் இணையுமிடத்தில் மீன்கள் நிற்குமென்றார் அந்தோணி. அவைகளைக் காண முடியவில்லை. கடின முயற்சியின்பின், பக்கவாட்டில் திரும்பி, மெல்ல, வெகு தொலைவு வந்து, கரையை நோக்கித் திரும்பினர். பின், ஆறு வாரங்கள் தொடர்ந்து வார இறுதிகளில் அவரது ஆய்வைத் தொடர்ந்தார்.
முடித்து விடைபெறும்போது, அந்தோணி “இங்கிட்டு கிடைச்ச கோரல், சாமி. வச்சிகிடுங்க”. என்றார். தூத்துக்குடி விடுதியில் அன்றிரவு, வெகுநேரம் அழகிரிசாமியின் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது.
மறுநாள், தொலைக்காட்சி, வீடியோ காமெராக்கள் சூழ நடுவே அழகர்சாமி அமர்ந்திருந்தார்.
“எனது அனுபவத்திலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இதனைப் பகிர்கிறேன். இந்த மீன்களின் செயல் புதிராகவே இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாக இந்த நிகழ்வு கவனிக்கப்பட்டு, பதியப்பட்டிருக்கிறது. மீன்கள் ஏன் காலம் காலமாக அங்கு நிற்கின்றன? என்பது எதிர்காலத்தில் விளக்கப்படலாம்.”
கையில் இருந்த ஒரு கோரல் துண்டை நீட்டினார் “ இங்கு கிடைத்த இந்தக் கோரல் மிக அபூர்வமானது. ஆஸ்திரேலிய கோல்ட் கோஸ்ட் அருகே கிடைக்கும் கோரலின் வகையிது. இந்தப் பகுதி, மீன் பிடித்தல், டைவிங் போன்ற மனித இயக்கங்களிற்கு அப்பாற்பட்டது எனவும் ,காக்கப்பட்ட பகுதியெனவும் அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”
மறுநாள், “ஸார்” என்ற தமயந்தி குரலில் நிமிர்ந்தார் அழகர்சாமி. “ நீங்க டி.வில காட்டின கோரலும், அந்தோணி கொடுத்த கோரலும் ஒரே வகையில்லையே சார்? அவர் கொடுத்தது சாதாரண கோரல்”
அழகிரிசாமி புன்னகைத்தார் “தெரியும்.”
“அப்புறம் ஏன் சார்?” திகைத்தாள் தயமந்தி.
“இரு பாறைகள் நடுவே வேகமாக நீர் செல்லும்போது, நடுவே குறுகிய இடத்தில் அழுத்தம் குறைந்த பகுதி உருவாகும். இது பெர்னூலி ப்ரின்ஸிபிள். அங்கு சரியாக நடுவில் முன்னோக்கி நீந்தியபடி நிற்கும் மீன்கள் முன்னும் செல்லாது பின்னும் செல்லாது நிற்கமுடியும். அந்த இடத்தில் அவற்றைப் பிற மீன்கள் தாக்க முடியாது. எனவே இங்கு சில மீன் கூட்டங்கள் இயற்கையான இழுப்பின்போது நிற்கின்றன என்பது என் ஊகம். டால்ஃபின்கள் போல், அவை இங்கிருக்கும் மனிதர்களோடு இசைந்து வாழக் கற்றுக்கொண்டுவிட்டன. ஸிம்பயாசிஸ். எனவே , அகப்படும் மனிதர்களை வலப்பக்கம் இடப்பக்கம் விலக்கி நீந்த வைத்து காப்பாற்றுகின்றன. அடிப்படை அறிவியல்”
அழகிரிசாமி தொடர்ந்தார் “ இதைச் சான்றுகளோடு நிறுவலாம். அதன்பின் என்ன ஆகும்? மர்மம் ஒன்றுமில்லை என அறிந்தால், விசைப்படகுகளும், வலைப்பிடிப்பும் அங்கு வரும். மீன் இனம் அழியும். பவழப்பாறைகள் சிதையும். ஒரு மர்மம் குறித்த நம்பிக்கை காலம் காலமாக இயற்கையைக் காக்கிறது என்றால், அறிதல் அதை அழிக்கிறது என்றால், எது நல்லது? என்பதைக் காட்டுவதுதான் அறிவியல் கண்ணோட்டம். அதற்கு அறிவியல் மட்டுமல்ல, தொலை நோக்குப் பார்வையும் வேணும்.”
வெளி வந்த தமயந்தியை ப்ரொபஸர் வசந்தி அழைத்தார் “தயமந்தி, ஆண்டு மலர்ல, டாக்டர் அழகர்சாமி பத்தி நாலு வார்த்தை எழுதணும். சொல்லேன். அவர் ஒரு சிறந்த….”
“மனிதர்” என்றாள் தமயந்தி.
பேசத் தெரியாதவள்
‘சங்கர ராமனின் பெண் வீட்டுக்கு வந்துவிட்டாள் ‘ என்று அடுத்த அபார்ட்மென்ட் வித்யா சொன்னபோது, பெரியதாக ஒன்றும் நினக்கவில்லை. மிளகு ரசம் காரமாக இருந்ததில் , நாக்கில் பெரிதாக நீர் ஊற, உஸ் உஸ் என்றிருந்தேன். மாலையில் சங்கர ராமனின் போன் வந்தபோது, நினைவு வரவே கேட்டேன்.
‘ம்’ என்றார் சுரத்தில்லாமல். ஒரே பெண். எப்பவும் அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர், திருமணமாகி இரண்டு வருடத்தில் பெண் வீட்டுக்கு வருவதில் இப்படி உற்சாகமின்றி இருக்கிறாரே? கேட்டுவிட்டேன்.
“கொஞ்சம் பல்லவி ஓட்டல் பக்கம் வர்றீங்களா? அஞ்சு நிமிசம் பேசணும்” என்றார். மனதில் ஏதோ குறக்களி அடித்தது. பதினைந்து நிமிடத்தில் வந்தவர், ஒரு காபி ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக இருந்தார். ” என்ன விசயம்?’ என்றேன்.
“ராகினிக்கு டைவர்ஸ் ஆயிருமோன்னு தோணுது”
அமைதியாக இருந்தேன். தொடர்ந்தார் ” ரெண்டுபேருக்கும் அதிகம் பொறுமை கிடையாது. வள் வள்னு அப்பவே வீட்டுல சத்தம் போட்டு சண்டை போடுவாங்க. அடுத்த நிமிசம் சமாதானமாயிருவாங்க. சரி, சிறுசுங்க. பொறுப்பு வரலைன்னு கமலாவும் நானும் சொல்லிக்கிட்டோம். மாப்பிள்ளை தங்கமான மனுசர். சும்மா சொல்லக் கூடாது. இதுக்கு கூறு கிடையாது.”
“அப்படி ஒட்டுமொத்தமா முடிவுக்கு வர்றது சரியில்ல சங்கரா. என்னன்னு பொறுமையா கமலாவை விட்டுக் கேக்கச் சொல்லு”
“கேட்டாச்சு. இவ , அவனுக்கு என்மேல அன்பு இல்ல, எரிஞ்சு விழறான். ஆனா, அவன் ப்ரெண்ட்ஸ் வந்தா அப்படி சிரிச்சு பேசறான் எங்கிறாள். என்ன சொல்ல? நாமளும் அப்படித்தான்”
“இத கமலா சரியா எடுத்துச் சொல்லிருவா. கவலைப்படாத”
“அவனும் போன் பண்ணி , அங்க்கிள் அவளுக்கு என் மேல பிரியமே இல்ல. எப்பப் பாத்தாலும் சீரியல் பத்திப் பேச்சு. அன்னிக்கு ஆபீஸ்ல நடந்தது பத்தி.. இதேதான். வேற ஒண்ணுமே அவளுக்கு லைஃப்ல முக்கியமில்ல’ ங்கறான். என்ன சொல்ல?”
‘இதுக்கா டைவர்ஸ்? உனக்குக் கூறு இருக்கா? பேசிப் புரிய வைப்பியியா? அதை விட்டுட்டு”
“பேசற மாதிரி அவங்க இல்லை. இன்னியோட ரெண்டு மாசமாச்சு , அவ வந்து. ஒருதடவ கூட போன்ல் இவளும் பேசல, அவனும் பேசல”
கவலையானேன். இது லதாங்கி மாமியிடம் செல்லவேண்டிய கேஸ். “யாரு? அந்த லதாங்கி மாமியா? வேண்டாம்ப்பா. எடக்கு மடக்கா எதாச்சும் கேப்பா. போன தடவை, எங்க வீட்டு நாய் அவளைப் பாத்து அதிகமாக் குரைக்கறதுன்னு ஊரெல்லாம் சொல்லி… ஏற்கனவே வீடு ஒரு மாதிரியா இருக்கு..” சங்கரன் மறுத்தார். ஒரு மாதிரிப் பேசிப் புரியவைத்தேன்.
லதாங்கி மாமி, மாஸ்க்கின் பின் பூதகரமாயிருந்தாள் ” சிரிக்காதடா. கட்டையில போறவனே. நான் மூஞ்சிய மூடினப்புறம்தான் பாக்கற மாதிரி இருக்கறதா, மாமா சொல்றார். என்ன விசயம் சொல்லு”
சிரிக்காமல், சொன்னேன். மாமி ஒரு நிமிடம் காலண்டரைப் பார்த்தாள். “நாளைக்கு அமாவாசை. கமலாவாத்துக்குப் போயிட்டுவந்து சொல்றேன். இன்னும் அந்த எளவெடுத்த நாய் இருக்கா? குரைச்சுத் தொலைக்கும்”
இருவாரங்களில் சங்கர ராமன் போன் செய்தார். ‘மாப்பிள்ளை வந்திருக்கார். நாளைக்கு ரெண்டுபேரும் கிளம்பறா. ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்”
ராகினியும், கணவனும் வணங்கினார்கள். இருவரின் கண்களிலும் புதுக்காதல், புதுமணத் தம்பதியரின் ஒளி. சங்கரன் வாசல் வரை வந்து வழியனுப்பினார் ” ரொம்ப தாங்க்ஸ்டா, நீ சொல்லி அந்த மாமி வந்தா பாரு, அதுக்கப்புறம்தான் எங்களுக்கு மூச்சு வந்தது. “
‘லதாங்கி மாமியா?’ என்றேன். நாய் அன்றும் குரைத்துக்கொண்டிருந்தது.
“ஒண்ணு சாப்டாச்சு. போறும்” என்றாள் லதாங்கி மாமி, உறுதியாக. ” உனக்கு டயாபடீஸ். ஞாபகம் இருக்கில்லியா? ம்… ஒரு ஜாங்கிரியே பயந்துண்டேதான் கொடுத்தேன். மாத்திரை மறக்காமப் போட்டுண்டுடு”
“என்ன சொன்னீங்க?” என்றேன், மற்றொரு ஜாங்கிரியை எடுக்க முயன்றபடி. பேச்சு சுவாரஸ்யத்தில் மாமி மறந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில்.
ஜாங்கிரித் தட்டை மறுபுறம் நகர்த்தியபடி மாமி தொடர்ந்தாள் ” அந்தப் பொண்ணுக்கு அவன் மேல ஆசை இல்லாமலில்லை. என்ன … ஒரு வீம்பு, ஈகோ-ம்பாளே, அதுமாதிரி. போன ரெண்டு நிமிஷத்துல தெரிஞ்சு போச்சு. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். ப்ரச்சனை புரிஞ்சு போச்சு’
“என்ன ப்ரச்சனை?” ஜாங்கிரித் தட்டு உள்ளே சென்றுவிட்டது. இனி, பேச்சு மட்டும்தான்.
” அதுக்கு பேசத் தெரியலைடா. ஒருத்தர் வந்தா, அவாளை பத்திக் கேட்கணும். நமக்குச் சொல்லவேண்டியதை, அவாளைத் தானா கேக்க வைச்சு, அப்புறம் சொல்லணும். அதுலதான் மதிப்பு இருக்கும். இல்லேன்னா, அவாத்து நாய் குலைக்கற மாதிரி ஒரு மதிப்பு இருக்காது. குரைக்கற நாயை யாருக்காவது பிடிக்குமோ? அது நல்லதுக்குக் குரைச்சாகூட ” ஷட்அப்”னுவா. அப்ப புருஷன் கேப்பனோ?”
விழித்தேன்
“ஆபீஸ் போயிட்டு அசந்து வர்றான். அனுசரணையா ரெண்டு வார்த்தை முத ரெண்டு நிமிசம் கேக்கறதுல தப்பில்லையே? வந்ததும் வராததுமா , இன்னிக்கு எனக்கு என்ன நடந்தது தெரியுமா?ண்னு ஆரம்பிச்சா, அவனுக்கும் ‘ ஷட் அப்”தான் மனசுல வரும். ஒரு பேச்சுன்னா, எதித்தாப்புல இருக்கறவா மேல ஒரு கரிசனமா இருந்தாத்தான் அதுல ஒரு பிடிப்பு, ஈர்ப்பு இருக்கும்.
அந்தப் பேச்சே, நம்மைப் பாத்து, அவாளே, ‘நீ எப்படி இருக்காய்?’நு கேக்க வைக்கும். வைக்கணும். அதுக்கப்புறம் உன்னோட ப்ரச்சனை என்னன்னு சொன்னா, அவனுக்கும் அதுல ஒரு கவனம் இருக்கும். தன்னைக் கவனிக்கறவ கிட்ட அவனுக்கும் ஒரு கிடப்பாடு – மாரல் ஆப்ளிகேஷன் இருக்குமே? “
அசந்து போனேன். ‘சரி மாமி, இதை எப்படி அவளுக்குப் புரிய வைச்சீங்க? நீங்க சொன்ன மாதிரி ஒரு ஈகோ…”
“சொல்லற விதத்துல சொன்னா, கேக்கற விதத்துல கேக்கும்கள் ,குழந்தேள். அது கேக்கலைன்னா, நீ சொல்ற விதத்துல தப்பு இருக்குன்னு அர்த்தம்”
“சரி. என்ன சொன்னீங்க?”
” இன்னிக்கு அமாவாசை. நிறைஞ்ச நாள். இப்பவே அவனுக்கு ஒரு போன் போட்டுப் பேசு-ன்னேன். தயங்கித்து. போனை நீ போடு. அவன் பேசுவன். நான் கியாரண்டின்னேன்’
சிரித்தேன்” அதெப்படி, அவன் பேசுவான்னு நீங்க சொன்னீங்க?”
மாமி டம்ளரில் தண்ணீர் கொடுத்தாள் ” பேசறப்போ, கேள்வி மட்டும் கேளு, அதுவும் அவனைப்பத்தி, அவன் ஆபீஸ் பத்தி, மாமனார் மாமியார் பத்தி மட்டும் கேளு. நீ எப்படி இருக்கை?ண்னு அவன் கேக்கற வரை அவன் சொன்னதிலேயே திரும்பிக் கேளு-ன்னேன்” நாலே கேள்வி இவ கேட்டா, அஞ்சாவது, அவன் கேக்க ஆரம்பிச்சுட்டான் ” நீ எப்படி இருக்கே? நீ இல்லாம எப்படி போர் அடிக்கறது தெரியுமா? அது இதுன்னு…”
மவுனமானேன். அதன் பின் ” மாமி, இது செயற்கையா இல்லையா? “
“எதுடா செயற்கை? புருஷன் எப்படி இருக்கான்?ணு கேக்கறதா? இல்ல மாமியார் ப்ளட்ப்ரஷர் எப்படி இருக்குன்னு கேக்கறதா? உனக்கு அவாளைப் பிடிச்சிருந்தா இந்த கேள்வியெல்லாம் வருமா வராதா?”
“வரும்.. ஆனா”
“என்ன ஆனா? அத முதல்ல கேட்டுட்டுப் போ. அது அவனோட அக்கறையைத் தானும் பகிர்ந்துக்கிறது. அப்புறம், உன்னோட விருப்பத்தைச் சொல்லு. அவன் பகிர்ந்துகட்டும். சாப்பிடறவன் இலைல இடம் இருந்தான்னா, சாதம் சாதிக்க முடியும்.? அவன் உக்காரவேயில்லை. அதுக்குள்ள சாதத்தை வாயில திணிச்சா? அதும்பேரு போஜனம் போடறதா?”
மாமி தொடர்ந்தாள் ” ஒவ்வொருத்தர் மனசும் எப்பவும் சிந்தனைல நிறைஞ்ச்சிருக்கும். பிறத்தியார் சொல்லறதைக் கேக்கத் தோணாது. தன்னோட சுமையை இன்னொருத்தன் வாங்கிண்டான்னா, ஒரு கைம்மாறா, அவனோட சுமையைத் தானும் வாங்கிப்பன். இதுதான் பரஸ்பர மரியாதை. பேச்சு இப்படி இருக்கணும். அப்ப பேச்சுல , ஒரு பிடிப்பு, உசிர் இருக்கும்.”
இரு’ என்றவள் ஒரு சம்புடத்தை நீட்டினாள். ” இது மங்கைக்கு. நான் போன் கேட்டு அவகிட்ட கேப்பேன். உள்ள இருக்கறது எதுவும் குறைஞ்சிருந்ததுன்னு தெரிஞ்சது, உன்னை அப்புறம் இந்தாத்துக்குள்ள விடமாட்டேன். ஆமா”
மாமா ” நீ கண்டுக்காதே. பேசத் தெரியாது அவளுக்கு” என்றார் வாசலில்.
முத்துச்சிப்பி வெளியே கரடுமுரடாகத்தான் இருக்கும்.
கதை வாசிக்கும் முறை.
ஜி மெயிலை நேற்றுதான் பல நாட்களுக்குப் பிறகு திறந்தேன். மென்னியை நெறிக்கும் சிறு சிறு வேலைகளில் சொந்த வாழ்வு பல நேரம் மறந்து போகிறது.
இரு மின்னஞ்சல்கள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று 7.83 ஹெர்ட்ஸ் நாவலில் வரும் ஹார்ப் (HAARP) குறித்த கேள்வி .”வாசிப்பவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? ஒரு மேட்டிமைத்தனம் தெரிகிறது” என்பதாகச் சென்றது. அவருக்கு பதில் எழுதினேன். ” வாசிப்பவர் மேலும் தெரிந்துகொள்ள முயல்வார், ஆவலாக இருப்பார் என்று நினைக்கிறேன். அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொய்ப்பதில்லை. இன்றைய இணைய உலகில் வெகு விரைவில் ஹார்ப் பற்றி ஒருவர் அறிந்துகொள்ள இயலும். அதனை முயற்சிக்காமல், “சரவணன் லாட்ஜ் முதலாளி கல்லாவைத் திறக்குமுன் ஒரு முறை ‘முருகா’ என்றார்” என்று எழுதுவதுதான் நல்லது என்றால் , மன்னிக்கவும், அது வேறு விதமான கதை வகை.’
நான் ஒன்றும் முயற்சிக்க மாட்டேன். எனக்குத் தெரிந்த அளவில் மட்டுமே எழுத்து இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தும். சமூகச் சூழல் சார்ந்த கதைகள், அதற்குக் கரு தரமுடியும்.
அறிவியல் தளக்கதைகள் அப்படியல்ல. நாம் அறிந்தது, இன்னும் அறிய வேண்டியது குறித்து ஒரு இயக்கத்தை நம்மிடம் தூண்ட வேண்டும். நம்மிடம் பல நேரங்களில் கதை வராது; நாம் அதனிடம் தேடிப் போக வேண்டும். குளத்தில் குளிப்பது ஒரு ரகம்; ஓடும் ஆற்றில் குளிப்பது வேறு ரகம். நம்மில் பலருக்கு இது புரிய நாளாகும் எனத் தோன்றுகிறது.
மற்ற கடிதம் சற்றே வித்தியாசமானது. டர்மரின் 384 -ல் அவர் ஒரு நாவலின் அளவுக்கு எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன் என்று தொடங்கியிருந்தார். “ப்ளேட் ரீடர் , மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர், FTP என்பதெல்லாம் தெரிந்திருக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது”
ஓரு கதையில் எனக்குத் தெரிந்தது மட்டுமே வரவேண்டுமென்றால் நாம் எல்.கே.ஜி பாடபுத்தகம் மட்டுமே படிக்க வேண்டும். புதிதாக அறியவேண்டுமென்பதில் ஒரு மெனக்கெடல் தேவை. சுஜாதா அவர்கள் , ‘நைலான் கையிறு” கதையில், சுநந்தாவின் அண்ணன், அவளை சிதையேற்றி வந்ததும் ‘ எஜாக்குலேட்டரி வெயின்-ஐ அறுத்துக்கொண்டு ரத்தம் கொட்ட இறந்து போனான்’ என்று எழுதியிருப்பார். இதை வாசிக்கும்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன். எஜாக்குலேட்டரி வெயின் என்றால் என்ன? வெயின் என்றால்?…

ஒரு டாக்டர் மாமாவிடம் கேட்டது நினைவிருக்கிறது. அவர் புன்னகையுடன் “வெயின் என்றால் சிரை – கெட்ட ரத்தம் ஓடற குழாய். இதேமாதிரி நல்ல ரத்தம் ஓடற தமனிக்கு ஆர்ட்டரி- என்று பெயர் ” என்று சொல்லித்தந்ததும் நினைவிருக்கிறது. எஜாக்குலேட்டரி வெயின் எனக்குப் புரியவில்லை. அவர் சொல்லவுமில்லை.
ஆனால் எதோ மர்மமான ஒன்றை அறுத்திருக்கிறான் என்பது புரிந்தது, அதோடு, தமனியும் சிரையும், அவற்றின் ஆங்கிலப் பெயர்களும். இதற்கு சுஜாதாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். பள்ளியில் படிப்பது மட்டும் படிப்பல்ல. வெளியே படிப்பதில் நல்ல பயன் இருப்பதை நன்றாக உணர்ந்த காலம் அது.
வாசிக்கும் புத்தகம், நீங்கள் அதனைத் தூக்கி எறிவதுடன் முடிந்து போனால், அது ஒரு தாக்கத்தை, ஒரு முன்னேற்றத்தை உங்களிடம் ஏற்படுத்தாது போனால், அது வெறும் “இன்றைக்கு தக்காளி ரசம்” என்ற மெனு போன்ற செய்தி தாங்கி வந்த காகிதக் குப்பை.
உங்களை எழுப்பி, இணையத்தில் தேட வைத்து, நண்பர்களின் மத்தியில் கேட்க வைத்து, ‘சை! என்னடா இது? புரியலையே?” என்று கை பிசைய வைத்தால், அது சிங்கமான உங்களைத் தூண்டி எழுப்பிய ஒரு சர்க்கஸ் மாஸ்ட்டரின் சாட்டை.
பிரபலமான ஒரு ஆங்கில நாவல் கூட, நம்மை வேறு தளங்களில் செய்தி அறியத் தேடவிடாமல் இருந்ததில்லை. இருப்பதில்லை. அவற்றின் வெற்றியே, புத்தகத்தை விட்டு வெளியே நம்மை வாழ்வை வாசிக்க வைப்பதுதான். லூவர் ம்யுஸியத்திற்கு இன்றும் டா வின்சி கோட் புத்தகத்துடன் ,ஆட்கள் வருவதைப் பார்க்க இயலும். அங்கிருக்கும் காவலாளிகள் கூட, எந்த ஓவியத்தை இங்கு பார்க்க முடியாது , இத்தாலிக்குப் போகவேண்டுமென்பதைச் சொல்லித்தருமளவிற்கு புத்தகத்தின் வீச்சு பரவலாயிருக்கிறது. எவரும் அப்படிக் கேட்பதைச் சுமையாகக் கருதவில்லை.

இது தமிழ் வாசிப்பு உலகில் வர இன்னும் நாளாகுமெனத் தோன்றுகிறது. ஆனால் வருமென ஒரு நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் எழுத ஏன் கற்கவேண்டும்?
“தமிழ் எதுக்குக் கத்துக்கணும்? அதான் பேச வருது, எழுத்துக்கூட்டி வாசிக்க வருது. டி.வில சொல்றது புரியுது. இதுக்கு மேலே எதுக்குத் தனியாக் கத்துக்கணும்கறீங்க,அங்கிள்?”
நண்பரின் மகள் சொன்னதில் ஒரு கணம் அமைதியாக இருந்தேன். ஒரு மொழி வெறியனாக, அல்லது குருட்டுத்தனமான அடையாளக் காப்பு என்ற பெயரில் தமிழைக் கற்றுக்கொடுக்க முடியாது. எதிர்மறை விளைவுகளே ஏற்படும் சாத்தியம் உள்ளது.
“இப்படிப் பார்ப்பமே?” என்றேன். “ஐரோப்பிய நாடுகள்ல இப்ப,லத்தீன் படிக்கத் திடீர்னு நிறையபேர் ஆர்வம் காட்டறாங்க. இறந்த மொழின்னு எல்லாராலும் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மொழி இப்ப எதுக்குத் திடீர்னு தூக்கிப் பிடிக்கறாங்க? ஒரு குழுவும் லத்தீன் என் தாய்மொழி, என் குழுவின் அடையாளம்னு கொடி பிடிக்கலை. ஆனாலும் ஏன் இந்த ஆர்வம்?”
“ஓரு சவால் என்பதால்?” என்றாள் அவள் சற்றே யோசித்து. ” லத்தீன் மொழியின் இலக்கணம் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று, அதுல கவிதை எழுதுவது என்பது அழகான, சிக்கலான ஒரு கணக்கைப் போட்டுப் பார்ப்பது போல். நல்ல தர்க்கத்தைக் கேட்பது போல்”
“இதைத்தான் பாரதி ” இது இரு பண்டிதர்கள் தர்க்கம் செய்வது போல் இருக்கிறது” என்றான் , பாம்புப் பிடாரன் குழலூதுகிறான் என்ற பாட்டில்.” என்றேன் சிரித்து. அவள் ‘ஓ” என்றாள் சற்றே வியந்து. ‘இது கேட்டதில்ல. தேச பக்திப் பாடல்கள், பெண் விடுதலை, ஞானப்பாடல்’நு கேட்டிருக்கேன்’ என்றாள்.
“இதுக்குத்தான் தமிழ் படிக்கணும்கறது. தமிழ் தெரியற எல்லாருக்கும் பாரதி தெரியாது. பாரதி படிச்ச எல்லாருக்கும் பாம்புப்பிடாரன் பாடல் தெரிந்திருக்காது. அது தெரிந்த எல்லாருக்கும் இந்த வரி ஈர்த்திருக்காது. ஒரு நிகழ்தகவின் அடிப்படையில பார்த்தால், இந்த கவிதை உணர்வு வருவதற்குக் கண்டிப்பாத் தமிழ் தெரிந்திருக்கணும்னு சொல்லலாமா?”
“You can” என்றாள் சிந்தனை வயப்பட்டு. ” ஆனா, இன்னும் லத்தீனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு படுத்தறீங்க்கன்னு தெரியலை”
“நீ சொன்ன த்ரில், சவால் தமிழ்ல அதிகம். தமிழ் இலக்கணம் லத்தீன் இலக்கணத்திற்கு நிகரா, ஏன், ஒரு படி அதிகமாகவே அழகா வடிவமைக்கப்பட்டு, அதுல எழுதறவனுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும். எப்படி ஒரு ஜிம்ல, முப்பது கிலோ எடையை பத்து தடவை தூக்கும்போது, வியர்வை பொங்க, அதை ஒரு வெற்றிக் களிப்புடன் பார்ப்பமோ, அதுமாதிரி, தமிழ் மரபுக்கவிதை புரியறப்போ, எழுதறப்போ ஒரு நிறைவு இருக்கு. அட்ரினலின் சுரப்பதை உணர முடியும். ஒரு நிறைவு, மகிழ்வு, வெற்றியின் களிப்பு”
“It is an opiate” என்றாள் சிரித்து. ” லெட் மி ட்ரை . ஆனா ஒரு உத்திரவாதமும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்;படிச்சா சொல்லுவேன்”

“சொல்ல வேண்டாம். நானே வாசிச்சுத் தெரிஞ்சுக்கறேன்” என்றேன். நண்பரின் வீட்டில் இருக்கும் கம்பராமாயணம் என்றாவது ஒரு நாள் அவள் விரல்களால் புரட்டப்படும்.
காத்திருப்போம், நம்பிக்கையோடு.