பீஷ்ம…

உச்சி வெயிலில், தெருவில் அனைத்து வீட்டுக் கதவுகளும் மூடியிருக்க, மயான நிசப்தத்தைக் குலைக்க, எங்கோ ஒரு இருசக்கரவண்டி உயிர்த்து மரித்த தீன ஒலி முயன்று தோற்றிருந்தது.

வீடுகளின் வாசற்கூரைகளினடியே நடந்தேன். கடைசி வீட்டிற்கு முந்திய வீடு, முடுக்கின் ஓரமாக… கதவு சார்த்தியிருந்தது. அழைத்துப் பார்த்து யாரும் வராததால், முடுக்கினூடே நடந்து, வீட்டின் பக்கவாட்டுக் கதவைத் தட்டினேன்,’யாரு?’ என்ற ஒலியில் நிம்மதியடைந்தேன். டீச்சர் இருக்கிறார்.

சில நிமிடங்களில் கதவு திறக்க, “தூங்கிட்டீங்களோ? சாரி” என்றேன். ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தார். மேலே கழியில் உலர்த்தியிருந்த சேலை காற்றில் நழுவிக் கீழே விழுந்தது.

“செல்வி சொன்னா, டீச்சர் உடம்பு முடியலைன்னு.. வர்றீங்களா? ஆஸ்பத்திரிக்குப் போவோம்?”

“வேணாம். நடக்க முடியாது, வெயில்”
“வாசல் வரை வாங்க. தெருக்கோடியிலதான் கார் நிறுத்தியிருக்கேன். கொண்டு வந்துருவேன்.”
“வேண்டாம்டா” எண்றார் மூச்சு வாங்க ” இந்த வீட்டுக்கு மூச்சுத் திணறலோட வந்தேன். அப்படியே போயிடறேன். உள்ள தண்ணியிருக்கு. எடுத்துட்டு வா”
சற்றே இதமான சூட்டுடன் சொம்பில் வெந்நீர் இருந்தது. துளசி வாசனை. ஒரு டம்ளர் நீர் குடித்து, ஆஸ்த்துமா ஸ்ப்ரேயை எடுத்து ஒருமுறை அழுத்தி இழுத்தார். ஆசுவாசமாக சாய்ந்தபடி.

“உன்னை வரச் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆஸ்பத்திரி போறதுக்கு இல்லை”

“இன்னொரு நாள் பேசலாம். இப்ப ரெஸ்ட் எடுங்க”

அவர் கையை உயர்த்தித் தடுத்தார் ” இத்தனை வருஷமா நீ கேக்க நினைச்சுத் தயங்கினதை நானே சொல்றேன். மெதுவா ஒரு கதையா எழுது”

கதை எழுத இதுவா நேரம்? டீச்சர் சொன்னா சொன்னதுதான். மொபைலில் ரெகார்டரை இயக்கி விட்டுக் காத்திருந்தேன்.

“பொக்காரோ ஸ்டீல் ப்ளாண்ட் போகணும்னா, கல்கத்தாவிலிருந்து ஒரு ரயில்தான் அப்போவெல்லாம் உண்டு. நாளெல்லாம் கொதிக்கக் கொதிக்கப் பயணித்து இறங்கினா, காலையா மாலையான்னே தெரியாது. எப்பவும் சூரியன் இருக்கறமாதிரியே ஒரு உணர்வு. இது 1977ல சொல்றேன். நிலக்கரி பூமி வேற. இரவெல்லாம் அதனோட கொதிப்பு.

திருமணமாகி ரெண்டாவது வருஷம் பொக்காரோவுக்கு மாற்றம். அவருக்கு இஞ்சினீயரிங் காண்ட்ராக்ட்ல அக்கவுண்ட் செக்ஷன் பொறுப்பு. மகள் அப்பத்தான் பிறந்திருந்தா.

குவாட்டர்ஸ் கொடுத்திருந்தாங்க. எனக்கு வேலை இல்லாம போர் அடிச்சதுன்னு, பக்கத்துல இருந்த கன்னட ராவ்ஜி பையனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமா பெயர் பரவி, எதிர்த்த குடியிருப்பு, அக்கம் பக்கத்துல இருந்து குழந்தைகளை ட்யூஷனுக்கு அனுப்பினாங்க. இந்தி கொஞ்சம் தெரியும்ங்கறதாலே , மொழி ஒரு தடையா இல்லை.

அங்கே ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல டெம்பரரியா வேலைபாத்த நம்மூர்ப் பெண்ணு , பேர் வேண்டாம்… ட்யூஷனும் எடுத்துகிட்டிருந்தா. ட்யூஷன்ல இருந்து குழந்தைகள் கழண்டு, என்கிட்ட வர்றது அவளுக்குப் பிடிக்கல. பெற்றோர்கள் எங்கிட்ட அனுப்பறதுல திடமா இருந்தாங்க.

எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். அவ புருஷன் அங்க செக்யூரிட்டில இருந்தான். ரெண்டு மூணுதடவை இவரைப் பாக்க வீட்டுக்கு வந்திருக்கான். குவாட்டர்ஸ் ரேஷங்கடையில ஒரு தடவை பாத்திருக்கான். ஹலோன்னு சொல்லியிருப்போம். இவ வீட்டுக்கு ஒரு தடவை கூப்பிட்டா. போனப்போ அவ புருஷனும் இருக்கறதப் பாத்துட்டு, கிளம்பிட்டேன். இரு டீ குடிச்சுட்டுப் போன்னு சொன்னா.

அடுத்த தடவை பாடப்புத்தகம் வாங்க அவ வீட்டுக்குப் போனப்ப அவ இல்ல. அந்தாளு மட்டும் இருந்தான்னு சட்டுனு திரும்பிட்டேன். வழியில அவ என்னைப் பாத்து முறைச்சா. சரி என்னமோ சந்தேகம்னு அவகிட்ட சொல்லத் தொடங்க்கறதுக்குள்ள கிளம்பிட்டா.

அதுக்கு அடுத்த தடவை மீண்டும் புத்தகத் தேவை… போகறதுக்கு ரொம்ப யோசிச்சேன். வழியில்லாம, போனபோது, அவளும் அவ புருஷனும் வீட்டுல இருந்தாங்க. இவனுக்கு எப்ப ட்யூட்டின்னே தெரியலையே?ன்னு சங்கடமாப் பாத்துகிட்டு இருக்கறச்சே, அவ சட்டுன்னு கதவை மூடினா. தலைவிரி கோலமா நின்னு ஒரேகத்தல் அழுகை. ‘நீயும் என் புருஷனும் கள்ளத்தனமா உறவு வைச்சிருக்கீங்க. அதுக்குத்தானே இங்க வர்றே?ந்னு கத்தறா”

திகைச்சுப்போய் நான் எதுவும் சொல்லறதுக்குள்ள, வாசல்ல கூட்டம் கூடியிருச்சு. அந்த ஆளு, இல்ல இல்லன்னு சொல்லிப் பாக்கறான். அவ கேக்கலை ‘நீ எனக்குத் துரோகம் பண்ணறே-ன்னு அவன் மேல பாயறா. வெளிய இதெல்லாம் கேக்குது.

அவன், சொல்லிட்டே வாசலைப் பாக்கறான். ஒரே கூட்டம். ஒரு கணம் என்னைப் பாத்தான்.

பெல்ட்டைக் கழட்டி என்னை மாறி மாறி அடிக்கறான். அலர்றேன் நான். ‘என்ன ஏண்டா பாவி அடிக்கறே?’ணு கேக்கறேன். ” இனிமே என்னைப் பாக்க வருவியா? வருவியா?’ந்னு கத்திகிட்டே அடிக்கறான். அவ கொஞ்சம் கொஞ்சமா அடங்கறா. சுருண்டு நான் விழுந்து கிடக்கறேன். அவன் வாசக் கதவைத் திறந்து ‘தண்டனையை நானே கொடுத்துட்டேன். நான் ஒழுக்கமானவன்.” ந்னு சொல்லிட்டிருக்கான்.

யாரோ ஓடிப்போய்ச் சொல்ல, என் வீட்டுக்காரர் வந்து என்னை சைக்கிள்ல வைச்சுக் கூட்டிட்டுப் போனாரு. அந்த ஐந்து நிமிஷ சைக்கிள் பயணத்துல அவர் பேசவேயில்ல. அடிச்சதை விட அவர் அமைதியா இருந்தது பெரிய நரகவேதனைடா.

பக்கதுவீடு, எதிர்வீட்டுல இருந்து பெண்கள் வந்து கவனிச்சுக்கிட்டாங்க்க. அடுத்த நாள்லேர்ந்து ஒரு குழந்தையும் படிக்க வரலை. நான் வெளிய வந்தா, பெண்கள் வீட்டுக்கதவைச் சாத்தினாங்க.

ரெண்டாவது நாள் என்னை மட்டும் தனியா அவரு கல்கத்தாவுக்கு ட்ரெயின் ஏத்திவிட்டாரு. கல்கத்தாவுல என் மாமா வீட்டுல ரெண்டு நாள். அதுக்கப்புறம் அப்பா வந்து கூட்டிட்டுப் போனார்.

ஒரு மாசம் கழிச்சு மாமியார் வீட்டுலர்ந்து நாலு பேர் வந்தாங்க. யாருக்கும் தெரியாம முடிச்சுருவம்’நு பேச்சு. மகளை அவங்க வளர்க்கறதா முடிவு. அம்மா தலையை முட்டிக்கொண்டு அழுதாள். உன் புத்தி ஏண்டி இப்படிப் போச்சு?ன்னு அவ கேட்டப்ப, நிஜமா நான் செத்துப் போனேன். ‘நீ இப்படி பண்ணியிருக்க வாய்ப்பில்ல. உன் பக்க நியாயத்தைச் சொல்லு’-ன்னு ஒரு ஆளு கேக்கலை. எல்லாருக்கும் அவரவர் மானம், மரியாதை, சமூக வாழ்வு.

அடுத்தாப்புல தங்கை கலியாணத்துக்கு நிக்கறான்னு பேச்சு வந்து தொக்கி நின்றது. என்னை என்ன செய்ய?

அடுக்களையில், இரவெல்லாம் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என ஒரு கூட்டம் மிகத் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை அடுத்த அறையில் படுத்திருந்தவள் அறியமுடியாதா என்ன?

“மாப்பிள வீட்டுக்காரங்க பாக்க வரும்போது இவ இருந்தா, ஏன் இருக்கா? ந்னு கேள்வி வரும். என்ன சொல்லப்போறோம்?’

“மெட்ராஸ்ல பி.எட் காலெஜ்ல சீட் வாங்கித் தர்றென்னு மாமா சொல்றாரு. கேட்டுப் பாப்பமா? அப்படியே ஒரு வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் அல்லது ஒரு வாடகை வீடு… அவளுக்குன்ன்னு ஒரு வாழ்க்கை அமையணும்ல?’

இரு நாட்களில் அம்மா கேட்டாள் ” உன் வாழ்க்கையைப் பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்க?”
“மெட்ராஸ்ல பி.எட் படிக்கறேம்மா. அப்படியே ஒரு வேலைக்கும் பாத்துட்டம்னா”

அண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இரு வருடங்களில் , ராஜஸ்தானியர் அறக்கட்டளைல ஸ்கூல்ல வேலை. அங்கிருந்து ரெண்டு வருஷத்துல இங்க வந்துட்டேன். இந்த வீடு அம்மா எனக்குன்னு எழுதி வைச்சது. எப்பவாச்சும் அண்ணன் வருவாரு. அண்ணி, அந்த தெருக்கோடில நிப்பா. அண்ணன் பையன் ஒரு தடவ வந்தான். தங்க்கச்சி மக கலியாணத்துக்குக் கூப்பிட்டுட்டு “வழக்கத்துக்குக் கூப்பிடறேன். வரணும்னு இல்ல. பாத்துக்க” என்றாள்.

சிந்தித்துப் பார்த்தேன். நானாக சொந்தம் கொண்டாடி வரப்போவதில்லை என்பதை அவர்களுக்கு உறுதி செய்தேன். வானிலிருந்து எவரும் ‘பீஷ்ம’ என்று பூச்சொரியவில்லை. என்னை யார் வைத்து வெல்வது? என்பதை நானே அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தேன். சமூக அந்தஸ்தென்னும் சிகண்டியை முன்னிறுத்து அம்பு எய்தனர். இதோ அம்புகளின் படுக்கையில் கிடக்கிறேன். பீஷ்ம என்பது சத்திய வாக்கு,உறுதி. அதற்குப் பாலினமில்லை.

வாழ்க்கையில, உன்னை நம்பி இருக்கறவங்களுக்கு உண்மையா இருக்க தைரியம் வேணும். அதில்லாதவங்க பெத்துக்கக் கூடாது, வளர்க்கக் கூடாது, திருமணம் செய்துகொளக் கூடாது. இதுதான் என் சாந்தி பர்வ அறிவுரை உனக்கு. ”

டீச்சர் பக்கவாட்டில் சாய்ந்தார். மூச்சு இளைத்தது. டம்ளரில் வென்னீர் சரித்து அவருக்குப் புகட்டினேன். “இத்தனை சிகண்டிகள் கொண்டு அம்பு எய்தவர் மத்தியில், அம்பில்லாமல் , என்னை அடியாத ஒருவன், இளைப்பாற நீர் தருகிறாய். இது கங்கை நீர் ; நீ என் சிறந்த மாணாக்கன் அர்ஜூனன். சந்தேகமே இல்லை.”

டீச்சர் சுவரோரம் ஒருக்களித்துப் படுத்தார். பின் நேராக நிமிர்ந்து… ஆம்புலன்ஸுக்கு போனில் அழைத்துக் காத்திருந்தேன். அது வருவதற்குள் வந்துவிடவேண்டும்…

அவரது உத்தராயணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s