தலைவலியும் சரணாகதியும்

லதா சுகுமார் “ வாங்கண்ணா” என்றபோது சுரத்தில்லாமல் இருந்தாள்.

“என்னம்மா? உடம்பு சரியில்லையா?” என்றேன்,தயங்கியபடி. தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ?

“இருங்கண்ணே. டீ நாம்போட்டுக் கொண்டுவர்றேன்” என்றபடி சுகுமார் உள்ளே விரைந்தான். எனது நெடுநாளைய நண்பர் என்றாலும், அடிக்கடி சந்திப்பதில்லை. மும்பை அப்படி. 19 கிமீ -ல் இருப்பவரைச் சந்திக்கப் போகவேண்டுமென்றாலும் மாசக்கணக்காகிறது.

”மைக்ரேன் அண்ணா. நேத்து நைட்லேந்து சனியன் விடமாட்டேங்கிறது. ஸாரி” என்றாள் லதா. தலையில் சுகுமாரின் கைக்குட்டையையின், முடிச்சு நெற்றிப்பொட்டில் அழுத்துமாறு கட்டியிருந்தாள். வீட்டில் யூகலிப்டஸின் மெல்லிய நெடி.

“உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்” திணறியபடியே அமர்ந்தாள்.

“அப்புறம் பேசலாம்ம்மா. போய்ப் படுத்துத் தூங்கு”  அதனைக் கவனிக்காமல் தொடர்ந்தாள்.

“போன வாரம் ராஜகோபாலன் வந்திருந்தார். ரொம்ப நல்ல உளவியல் ஆலோசகர், அதுவும் நம்ம கலாச்சாரப்படி அருமையான வாழ்க்கைப்படிகளெல்லாம் சொல்லுவார்னு சுகுமார் சொன்னார். இந்த தலைவலியோட  எப்படி தினம்தினம் வாழ்றது?-னு கேட்டேன். நிஜமாவே அழுதுடுவேன் போல இருந்தேன். “

சுகுமார் வழக்கம்போல கண்றாவியாக  டீ போட்டிருந்தார். ஒன்றும் சொல்லாமல் லதாவைக் கவனித்தேன். அவள் தொடர்ந்தாள்.

“எல்லாத்தையும் கேட்டார். வீட்டுப் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு, என் வேலையில் அழுத்தம், சுகுமாரின் குணம்.. எதையும் விடலை. எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல குறிப்பெடுத்துட்டு, அடுத்த நாள் வந்தார்.  “ உனக்கு ஒண்ணுமில்லை டாக்டர்கிட்ட மைக்ரேனுக்கு ஆலோசனை கேளு; முக்கியமா சரணாகதி செய்.”ன்னுட்டு போயிட்டார். இதுவா ஆலோசனை? கடுப்பாயிருச்சு. இந்த வைணவர்களெல்லாம் சரணாகதின்னு சொல்லுவாங்களாமே? அதுதானே சொல்றாரு?”

விழித்தேன். தலைவலிக்கும் சரணாகதிக்கும் என்ன தொடர்பு? ‘தெரியலைம்மா’ என்று வந்துவிட்டேன். அடுத்த வாரம் ராஜகோபாலைச் சந்தித்து இது பற்றிக் கேட்டேன்.

அவர் சிந்தனை வயப்பட்டார் “ அவங்களுக்கு நான் சொன்னது புரியலை. அல்லது, தலைவலியில ஒரு குவியத்துடன் கேட்டிருக்கமாட்டாங்க. தலைவலின்னு மட்டுமல்ல, எந்த ஒரு சவாலுக்கும், சரணாகதிதான் மருந்து  – உளவியல் படி”

”சார். சும்மா மதக்கொள்கையெல்லாம் புகுத்தப்படாது. அவங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னு பாத்து சொல்வீங்களா, அதை விட்டுட்டு..”

இது மதக்கொள்கையில்ல சுதாகர். சரணாகதின்னு சொல்றதுல, இருக்கிற ப்ரச்சனையை இறைவன் கிட்ட விட்டுட்டு, எல்லாம் நீ பாத்துக்கன்னு  ப்ரச்ச்னையைத் தள்ளிவிடறோம்னு தப்பா புரிஞ்சுக்கறோம்.  சரணாகதின்னா, சவாலை விட்டு ஓடிப்போகிறதோ, ஒரு முயற்சியும் எடுக்காமல் சோம்பேறியாக இருப்பதோ அல்ல. மாறாக தெளிவாக முயற்சி எடுக்க, நாம் எடுக்கும் ஆரோக்கியமான முதற்படி அது”

“அதெப்படி. இறைவன்கிட்ட விட்டுட்டு, மனசை லேசாக்கிறதுதானே இது?”

“இல்லை. சரணாகதின்னு சொல்லிட்டா, நாம சவாலைச் சமாளிக்க முயற்சி எடுக்ககூடாதுன்னு எங்கேயும் சொல்லலை. இது சவாலிலிருந்து தப்பித்து ஓடும் கோழைத்தனமும் இல்லை.”

“அப்ப என்னதான் சரணாகதி?”

” ஒரு சவால் வருகிறது என்றால் இரு எதிர்நிகழ்வுகள் நம்மிடம் தோன்றுகின்றன. ஒன்று உள்ள ரீதியில்,  இது என்ன? என்று எச்சரிக்கையாகிறோம். கோபம், எரிச்சல், வருத்தம் என எதிர்நிலை உணர்வுகள் மேலோங்க, நாம் செய்வதென்ன? ஒன்று உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறோம். அல்லது , நம் மனத்தில் மூன்று வகையான நடிகர் நிலையில் நிகழ்வை எதிர்கொள்கிறோம்”

“மூன்று நடிகர்கள்?”

“சினிமாவில் பார்க்கிறோமே? பாதிக்கப்பட்டவர் ( victim), காப்பாற்றும் நாயகர் (Hero) மற்றும் தீயவர் ( villain) இந்த மூன்று நிலையில்தாம் நாம் சிந்திக்கிறோம். ஒன்று நம்மை நோக்கிய சுய இரக்கம், அல்லது சூழலில் காப்பாற்றும் நாயகர், அல்லது கோபம் மேலிட, இவனை என்ன செய்யலாம்? என தீய எண்ணத்துடனான திட்டமிடல், செயலாற்றல். இது மூன்றும் நம்மை நாம் மறக்கச் செய்து, உணர்வு வழி செல்ல வைக்கின்றன. இதில் அழுத்தம் கூடிக்கூடி வருமே தவிர குறையாது.

அடுத்த எதிர்நிலை, உடல் பற்றியது. அழுத்தம் படபடப்பு, திடீர்ச் சோர்வு, ரத்தச் சர்க்கரை அளவு மாற்றம், இதய நோய் என எல்லாம் , மனம் சார்ந்த உடல் மொழி. இதற்கு மருந்து எடுக்கும்போது, நோயின் ஆதி நாடி வேறெங்கோ இருக்கிறது.

இரண்டிற்கும் ஒரே தீர்வு.

சரணாகதி என்பதை நிகழ்வை அப்படியே உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு “ ஆமா, இப்ப எனக்கு தலைவலி. இது வந்தா  எளிதில் போகாது. நிதானமா வேலையைப் பாத்துட்டு படுத்துவிட வேண்டியதுதான்” என்று தனக்கு வந்திருப்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டால், நமது எத்ரிப்பு உணர்வுகள் மறையும். அடுத்ததாக “கைக்குட்டை, நீலகிரித் தைலம், ஆவி பிடித்தல், செல்போனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு அறையில் கண்ணை மூடிக்கொண்டு படுத்தல்” இது செய்யக்கூடிய நிகழ்நிலை – ப்ராக்டிகல்.

தலைவலி மாறவில்லை. அதனை நோக்கிய நம் சிந்தனை மாறுகிறது. எனவே செயல் மாறுகிறது. இல்லைன்னா “ எனக்குன்னு ஏன் இப்படி மைக்ரேன் வருது?” என்று சுய இரக்கம், “சே, இதென்ன எப்பவும்? வாழவும் விடாம சாகவும் விடாம” என்று எரிச்சல், கோபம் அழுகை – அல்லது “ இதுக்கு ஒரு  வழி பாக்காம விடப்போறதில்ல. webmd.comல என்ன சொல்லியிருக்கான்னு பாக்கறேன்” என்று ஒரு திடமில்லா ஹீரோ நிலை… மூன்றுமே தலைவலி போனதும் பிசுபிசுத்துப் போயிடும்.

ஆனா, சவாலை அப்படியே ஏற்றுக்கொண்டு, வாழ்வின் ஒரு படிநிலை இது என்று ஒத்துக்கொண்டால், சிந்தனை வேறாக மாறும். சரணாகதி என்பது அந்த நிகழ்வில் சரணடைவதல்ல; நம் மனப்போக்கில் மாற்றத்தைக் கொண்டு இயற்கையின் போக்கினை ஏற்றுக்கொண்டு,எதிர்ப்பின்றி அதன் சீற்றத்தை ஒத்துக்கொள்வது. அதன்மூலம் தெளிவாகச் சிந்திப்பது.

இதை வைணவம், இறைவனிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டு, நீதான் இதையும் கொடுத்தாய். இப்படி அழகான வாழ்வும் கொடுத்தாய். இந்த நிகழ்வை நான் எதிர்கொள்வதெப்படி என்பதையும் நீயே கொடுப்பாய் ” என்று தன்னிலிருந்து, இறைவனுக்கு சவால்களை, உணர்ச்சிகளைக் கொடுத்துவிடச் சொல்கிறது. சவாலுக்காக  நாம்தான் செயலாற்றவேண்டும். ஆனால், இப்போது நம் சிந்தையும் செயலும் வேறு தளத்திலிருந்து வரும். அமைதி, ஆற்றல், நற்சிந்தை என்பன தெளிவை முன்னிறுத்தும்.  முடிவு, மிக வேறாக இருக்கும்.”

ராஜகோபாலன் நிறுத்தினார் “ நீங்கள் Eckhart Tolleன் The Power of Now படித்திருக்கிறீர்களா? “ என்றார்

“இல்லை” என்றேன் ஒரு குற்ற உணர்வோடு. வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் கையிலெடுக்க நேரமில்லை. அப்படிச் சொல்லும் ஒரு சாக்கு.

”நிகழ்கணத்தில் நமது மனதை நிறுத்தச் சொல்கிறான் எக்கார்ட். இறந்த காலமும், எதிர்காலமுமற்ற நிலையில், ஓகே இப்ப மைக்ரேன்.. என்ன செய்யலாம்? என்பது “ சே, திரும்பவும் வந்திருச்சே?”,  “ ஐயோ, காலம்பூரா இது வருமோ?” என்ற கேள்விகளின் நிலையிலிருந்து மாறூபட்டது. முழுக்க நிகழ்கணத்தில் நம் சிந்தையை வைத்து, வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை சமாளிப்பதைப் பற்றி சிந்திக்கச் சொல்கிறான். கடைசி சாப்டர் Surrender பற்றியது. இது ஒரு வகையில் நான் சொன்ன சரணாகதிதான்.”

படிக்கவேண்டுமென்று மனதில் குறித்துக்கொண்டேன்.

“ Gaur Gopal Dasன்னு ஒருத்தர் பேசறதைக் கேட்டிருப்பீங்க. அவர் முழுமனவிழிப்புடன் இருத்தல் பற்றி ஒரு பேட்டி கொடுத்திருக்கார். எதைச் செய்யும்போதும், அதில் மட்டும் மனதைச் செலுத்துங்கள் என்கிறார்… தண்ணீர் குடித்துக்கொண்டே டி.வி பார்க்கிறீர்களா? தண்ணீர் குடித்ததும் மனதில் நில்லாது, டி.வி பார்த்ததும் நில்லாது. ஒன்றை மட்டும் நினைத்துக் குவியம் செலுத்துங்கள், ஒரு கணத்தில். இதுதான் அந்த நிலையில் உலகியல் நிலையில் சரணாகதி.”

அடுத்த வாரம் லதாவிடம் சொல்லவேண்டும் – முழுமனத்துடன், அக்கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி.

‘The Power of Now” – by  Eckhardt Tolle

https://www.youtube.com/watch?v=bLmFxbRRZ-E

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s