Tag Archives: செல்லத்தாயி

செல்லத்தாயி

”இதுங்க சரிவரும்-ங்கறே? “ நல்லமுத்து , செல்லத்தாயிக்காக சற்றே நடை வேகத்தைக் குறைத்தார்.

“எல்லாம் சரியா வரும். கொஞ்சம் விட்டுப் பாப்பம்” செல்லத்தாயி , தனது ஆர்த்த்ரிடீஸ் கால்களில் இட வலமாக ஆடியபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நடந்தாள். வெயில் மாலையிலும் தீவிரமாக இருந்தது.

“ஊர்லேந்து வர்றப்போவே சொன்னேன். அந்த டாக்டரு வெளங்காதவன். அவன் சொன்னான்னு ஒரு புது செருப்பு.. இப்ப காலைக் கடிக்கி, கையக் கடிக்கின்னு சொல்லிட்டே நடக்கே. ஒனக்கெல்லாம் அந்த ரப்பர் செருப்புதான் சரி, செல்லி”

“சரி வுடுங்க. என்னமோ. செருப்பு வாங்கியாச்சு. ரொம்ப கடிச்சா, இங்கனக்குள்ள எதாச்சும் வேலைக்காரிக்கு கொடுத்துடுவம். சரி, இன்னிக்கு காலேல மருமவ முகம் அப்படியே வாடிக்கடந்துச்சு பாத்தியளா? ”

“ரெண்டு பேரும் இப்படி உம்-முனுதான, நாம வந்தன்னிலேந்து இருக்காவ? இன்னெக்கென்னா புதுசா வாடுதா, சாடுதான்னு கிளப்புற?” நல்லமுத்து குரலில் ஏமாற்றமும், விரக்தியும் , அடித்த வெயில் தாங்காது வெளிப்பட்டன.

மும்பைக்கு ஒரு மாதம் முன்பு பையன் முத்துக்குமார் வீட்டுக்கு வந்து இறங்கிய நல்லமுத்து, செல்லத்தாய் அம்மாள், போரிவல்லி பகுதியில் இரண்டு படுக்கையறை வீட்டில் இரு நாட்களில் இருக்கப் பழகிவிட்டனர். தூத்துக்குடியிலிருந்து வந்தவர்களுக்கு வெயிலும், வியர்வையும் பழகியிருந்தாலும், வீட்டில் மகனும், மருமகளும் பேசாமலேயே இருப்பது தர்ம சங்கடமாக இருந்தது.

முத்துக்குமார் ஒரு தனியார் வங்கியின் கிளை மேலாளர். மருமகள் லட்சுமி ஒரு மென்பொருள் உருவாக்கும் பெரிய கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். சம்பளத்துக்கு இருவருக்கும் குறைவில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு காலையில் கிளம்பிப் போவார்கள். மாலையில் வந்ததும், லாப்டாப்பும், மொபைலுமாக ஆளுக்கு ஒரு அறையில் அமர்ந்துவிடுவார்கள். ஹாலில் டி.வி யாருக்கோ வந்த வாழ்வாக ஓடிக்கொண்டிருக்கும்,. என்ன சேனல், யார் பார்க்கிறார்கள் என்பது இருவருக்கும் தெரியாது.

இது ஒரு மாதமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதில் நல்லமுத்துவின் கோபம் எகிறத் தொடங்கியது. “இதென்னா, வீட்டுக்கு அம்மையும் அப்பனும் வந்திருக்காவ? அவங்க கிட்ட ‘என்ன, சாப்டீயளா, எதாச்சும் வேணுமா?;ன்னு ஒரு வார்த்தை கேக்கப்படாது? ரெண்டும் அந்த பொட்டி முன்னாடி விடிஞ்சதுலேந்து கிடக்குதுவோ.” செல்லத்தாயிடம் பொருமினார். அவர்கள் வரும் நேரமாதலால், செல்லத்தாயி, அவரை மெல்லக் கிளப்பி வெளியே கூட்டி வந்துவிட்டாள்.

“இந்தாருங்க. சிறுசுங்க. கல்யாணமாயி ரெண்டு வருசம்தான் ஆவுது. என்ன சண்டையோ என்னமோ? இவனும் உச்சாணிக்கொம்புல ஏறி நிக்கான் -ஒங்கள மாரி. அவளும் இத்தனை ராங்கித்தனம் செய்யேண்டாம். சம்பந்தியம்மாவுக்கு ஒரு போன் போடுங்க. நான் பேசுதேன்”

“ஒனக்கு, என்னச் சொல்லலேன்னா தூக்கம் வராதே? அந்தம்மா என்ன செய்யும்?. ”நானுஞ்சொல்லுதேன். நீங்களும் மாப்பிளைக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க’ங்கும். இங்கிட்டு வந்தால்லா பொண்ணு வண்டவாளம் தெரியும் அவியளுக்கு?. நான் முடிவு பண்ணிட்டேன், செல்லி. செல்லி, கேக்கியாட்டி?”

“சொல்லுங்க. நல்லாத்தான் கேக்கு.” என்றாள் செல்லி, மூச்சிறைத்தபடி. நடக்க முடியவில்லை. செருப்பினுள் பாதம் வீங்குகிறது. உப்பைக் குறைக்கணும்.

“ நாளைக்கு நான் இங்கிட்டு போரிவல்லி ஸ்டேஷன்ல போயி ஊருக்கு டிக்கட் போட்டுடுதேன்.  இங்க இருந்தா நமக்கும் செரிப்பட்டு வராது, அதுக, தலைவிதி, என்னமோ அடிச்சிக்கட்டும், பிடிச்சிக்கட்டும், என்ன சொல்லுத?”

“க்கும். இப்படி விட்டேத்தியா சொல்லத்தான் நீரு இங்க வந்தீரோ? இல்ல கேக்கேன். அதுக பாட்டுக்கு விடறதுக்கு நாம என்ன சொல்லவேண்டியிருக்கு? கொஞ்சம் பாப்பம். பொறவு பைய்ய, ரெண்டுபேருக்கும் சொல்லுவம்”

“கோட்டி பிடிச்சுருச்சாட்டீ ஒனக்கு? என்னத்தன்னு சொல்லுவே? இதுகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு தெரியாம என்ன ராம கதை சொல்லச் சொல்லுத? போம்வே-ன்னுட்டான்னு வச்சிக்க… என் மூஞ்சிய எங்கன கொண்டு வைக்க? “

செல்லி கால் அகட்டி நின்றாள். மூச்சிரைக்க பேசினாள் “ இந்தாரும். சொல்லுதேன்னு நினைக்கப்படாது. இத்தன நாளு இருந்தீயளே, அதுகளுக்கு என்ன மனஸ்தாபம்னு ஒரு வார்த்த கேட்டிருப்பீயளா? இல்ல, நீங்களா கண்டுபிடிக்க பாத்திரிப்பீயளா? ஒண்ணும் செய்யாம, ஆ, ஊன்னு குதிச்சா எப்படி? எல்லாம் ஒங்கம்மா குணம்.. குத்தம் மட்டும் பாக்கத் தெரியும்.”

நல்ல முத்து வாய்க்குள் “ முண்ட, ஒன்ன  எப்பவோ கொன்னு போட்டிருக்கணும், எங்கம்மாவையா சொல்லுத?” என்று திட்டியபடி, அவளுடன் திரும்பி வீடு நோக்கி நடந்தார். நாளை எப்படியும் டிக்கட் எடுதுறணும். சீனியர் சிட்டிசன் -ன்னா தனி கவுண்ட்டர் உண்டுமா? கேக்கணும். இந்த நாய்ப்பய ஊர்ல எல்லாத்துக்கும்லா க்யூ-ங்கான்?

லட்சுமியும், முத்துக் குமாரும் வழக்கம்போல தனித்தனி அறையில் லாப்டாப்பில் முழுகியிருந்தனர். பாத்தியா? என்பது போல் ஒரு சிரிப்புடன் நல்ல முத்து ஹாலின் சோபாவில் அமர்ந்தார். “ஏட்டி, அது என்னா சீரியலு? அன்னிக்கு பாத்தமே? தாடிக்காரன், பொஞ்சாதிய விட்டுட்டு ஒரு பொண்ணோட இருக்கான்…அப்புறம்?”

“எல்லாம் ஒரே மாரித்தான் இருக்கும். சும்மா இரிங்க. நான் பாத்துட்டிருக்கேன்லா? தொணதொணங்கக் கூடாது, ஆமா.”

தனக்குள் முணுமுணுத்தவாறே புத்தக அலமாரியைத் தேடிப்போனார் நல்ல முத்து.

சாப்பிடும் நேரத்தில் நால்வரும் மேசையில் அமர்ந்திருந்தனர். லட்சுமி தனது மொபைலில் யாருக்கோ  செய்தி அனுப்பியபடி இருக்க, முத்துக்குமார் தனது ஐ பேட்-ல் ஏதோ படித்து சிரித்துக் கொண்டிருந்தான். நல்ல முத்து இருவரையும் பார்த்து தன் மனைவியைப் பார்த்தார். “ இதுக வெளங்குமா?” என்றது அவர் முகம். செல்லத்தாயி, இருவரையும் ஒரு முறை பார்த்தாள். மவுனமாக சோற்றைப் பரிமாறினாள்.

அடுத்தநாள், சனிக்கிழமை காலையில் லட்சுமி சமையலறையில் நுழைகையில் ஆச்சரியமானாள். “அத்தே, நீங்க என்ன செய்யறீங்க? உங்களுக்கு ஏன் சிரமம்?”

“இருக்கட்டும்மா. மாமாவுக்கு இன்னிக்கு பொறந்தநாள். வைகாசி விசாகம்”

“அட! மாமா சொல்லவே இல்ல பாருங்க! “

“அவருக்கே தெரிஞ்சிருக்காது. ஒரு பாயாசம் செஞ்சுருவம், என்னா?”

“ம்ம்ம். அவருக்கு ஷுகர் இருக்கே அத்தே.? “

“இருந்தா என்னா? ஒரு நாளு கொஞ்சம் குடிச்சா ஒன்னும் ஆவாதுட்டீ. மாத்திரை ஒன்னு கூடப் போட்டுகிடச் சொல்லுதேன். நாளைலேந்து திருப்பி கஞ்சி, நாலு நாளைக்கி”

டிக்கட் வாங்கி வந்த நல்ல முத்து, மதியம் சாப்பாட்டில் திகைத்தார். “ஏ, என்னா இன்னிக்கி? பாயாசமெல்லாம் தடபுடலா இருக்கு? இவனுக்கா, இவளுக்கா, யாருக்கு பொறந்த நாளு?”

“வெளங்கிச்சி. ஒங்களுக்குத்தான் இன்னிக்கு பொறந்தநாளு.”

“அங் “ வியந்தார் நல்ல முத்து. பாயாசத்தை கண்கொட்டாமல் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு பார்த்தார். “ நம்மூர் மண்டை வெல்லம் கிடைக்கா இங்க? இன்னொரு  டம்ப்ளர் ஊத்துட்டீ” என்றார் டம்ப்ளரை ஏந்தியபடி.

“ கால்வாசிதான் தருவேன். ஒடம்புக்கு ஆவாது.” என்ற செல்லத்தாய் இரு கரண்டி பாயாசத்தை அதில் ஊற்றினாள். லட்சுமி ஒரு சிரிப்போடு அந்த நாடகத்தைப் பார்த்திருந்தாள். முத்துக் குமார் மெல்ல தலையை நிமிர்த்தினான்.

“ஏட்டி, இதென்னா? கையில கட்டு? சுட்டுகிட்டியோ?” நல்ல முத்து சற்றே பதறி செல்லத்தாயியின் கையைப் பற்றினார்.

“அட , வுடுங்க. மண்டைவெல்லம் தட்டிப் போடப் போனேனா? ,கண் மறைச்சிட்டு… வெரல்ல நசுக்கிட்டேன். “

“ இதென்னா, புடவையில ரெத்தம்? என்னத்துக்கு  இப்படி கொலை வெறியில பாயாசம் செய்யோணும்? லே,முத்து , டாக்டரு இருப்பாரா? போவம்”

“அய்ய, அதெல்லாம் வேண்டாங்கேன்லா? வேணும்னா நானே சொல்லுவேன்.  புது எடம் பாத்தீயளா.? சில சாமான் எங்க இருக்குன்னு தெரிய மாட்டேங்கு. அதான். அவசரத்துல வெல்லம் தட்டிப் போடயிலே, கையில நசுக்கிட்டு. நீங்க குடிங்க.”

நல்ல முத்து எழுந்தார் -பாயாசம் குடிக்காமலே. உள்ளே சென்று டெட்டால் எடுத்து வந்தார். ”கையக் காட்டுட்டீ. கண்ணு மண்ணு தெரியாம எதாயாவது செஞ்சு தொலைக்கவேண்டியது. தானாவும் தெரியாது.சொன்னாலும் வெளங்காது உனக்கு.”

“ஒரு எழவும் இல்ல. அடிபட்டு ரெண்டு மணி நேரமாச்சு. இப்ப வந்து டெட்டால் போடுதாராம்!. அப்பவே, மஞ்சத்தூள் வச்சு , ரத்தம் நின்னுட்டு”

லட்சுமி அந்த பாசத்தின் வசை மொழிகளைக் கேட்டு நின்றிருந்தாள். இது நாள் வரை இந்த குமார் ஒரு முறையாவது கிச்சனில் என்ன செய்கிறாய்?  என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பானா?

சட்டென அவளுக்குள் ஒன்று உறைத்தது. முத்துக் குமாரின் பிறந்த நாளன்று கேக் வாங்கி வெட்டியிருக்கிறோமே தவிர, ஒரு முறையாவது நானாக ஒரு இனிப்பு தயாரித்ததுண்டா? இந்த அத்தை, முடியாத வயதில், சர்க்கரை கூடுதலாப் போட்டு, சாதம் கரிய விட்டு என்று ஏதோ செய்து, பாயாசம் என்று ஒன்று உண்டாக்க, அதனை ரசித்து குடித்து விட்டு “இன்னோன்னு கிளாஸ்” என்கிறாரே மாமாவும்? இந்த வசவுகளின் உள்ளிருக்கும் வாசம் என்ன?

சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் வந்தவள், லாப்டாப்பை மூடி வைத்தாள். கண்களை மூடி சிந்திக்கலானாள்.

முத்துக்குமாரும்,  நல்லமுத்துவும் போரிவில்லி காய்கறி மார்க்கெட் அருகில் நிறைந்த  காய்கறிப் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். ஆட்டோ இன்னும் வரவில்லை.

“லே முத்து. இங்கன பக்கத்துலதான் மீன் மார்க்கெட் இருக்கோ? கருவாடு வாடையடிக்கே?”

“ஆமா. ஆனா,ஒங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துகிடாதுல்லா? வேணாம்”

“எனக்கு பிடிக்காதுல. ஒங்கம்மாவுக்கு பிடிக்கும். ஆனா தனக்குன்னு வாங்கி,செய்ய மாட்டா. எனக்கு வேணும்னா செய்வால்லா? அதுல ரெண்டு மூணு துண்டு அதிகம் திம்பா. பாவம், அவளுக்கு வேற என்ன ஆசை இருக்கு? ஆச்சி, இன்னும் ரெண்டு வருசம் போச்சுன்னா,  என்னை, ’இதெல்லாம் நீரு திங்கவே கூடாது’ன்னு திட்டுவான், அந்த எழவெடுத்த டாக்டர். சரி, அதுக்குள்ள எதாச்சும் அவளுக்கு பிடிச்ச மாரி இருக்கட்டும். என்னா?”

ஒரு வாரத்தில் அம்முதியவர்கள் கிளம்பிப் போனபின், லாப்டாப்புகள் அதிகம் அந்த வீட்டில் திறக்கப் படவில்லை. சில நாள்களுக்குப் பின் ஒரு அறை அடைந்தே கிடந்தது.

பல நூறு வருடங்கள் முன்பு ஒரு பெண், கைவிட்டுப் பிசைந்த சோற்றில், புளியைக் கரைத்து விட்டு, புளிசாதமாக்க் கிளறி, அடுப்புப் புகை கண்ணில் ஏறி, முகமெல்லாம் வியர்க்க, சோற்றுக்கையை, தனது சேலையில் துடைத்து, அந்த நாற்றத்தோடே, கணவனுக்குப் பரிமாற, அவன் அந்த புளிச்சோற்றை “இனிது”என்று பாராட்டியபடி உண்கிறான். அதுகண்டு, அவள் நெற்றி, மகிழ்வின் நிறைவால் ஒளிர்ந்தது.

”முளிதயிர் பிசைந்த காந்தல் மெல்விரல்

கழுவுறு கலிங்கம்,கழாஅது, உடீஇ

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தன்றுழந்து அட்ட தீம்புளிப் பாகர்

“இனிது” எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”

 – கூடலூர் கிழார்,  குறுந்தொகை.