‘ஒரேயொரு ஆசைடா” என்றார் பெரியண்ணா, அங்கவஸ்த்திரத்தை இழுத்துவிட்டபடியே. காற்றில் அங்கவஸ்த்திரம் உப்பி, உடலிலிருந்து விலகிப் பறந்தன. நாங்குனேரியில் சட்டையில்லாமல் நடந்தால் ஒன்றும் விகல்பமாகப் பார்க்கமாட்டார்கள்.
தேரடி அருகே கார் நிறுத்தவேண்டாமென யாரோ எச்சரிக்க, டிரைவரிடம் “ அந்த சிகப்பு கம்பி கதவு போட்ட வீடு இருக்குல்லா?. அது நம்ம வெங்கி வீடுதான். அங்க வாசல்ல நிறுத்திடு. கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு” என்றார் சின்னண்ணா. மறுபடி… நாங்குனேரியில் யாரும் ஊராரே; யாரும் எவருக்கும் கேளிர்.
பெரியண்ணா தொடர்ந்தார் “ இன்னிக்கு எம்பெருமான் திருநட்சத்திரம். மடத்துல சாப்பாடு உண்டு. ஜீயர் ஸ்வாமியைப் பாத்துட்டு, நேரமிருந்தா, மடத்துல சாப்டுட்டுப் போலாம்”
இதுவா ஆசை? வேறென்னவோ சொல்லப் போறாருன்னுல்ல நினைச்சேன்?
சின்னன்ணா “ கொஞ்சம் வேகமா நடங்கோ. நாழியாச்சு. ஜீயர் கிளம்பிருவர்” கொதிக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல், அனைவரும் தவளையாகத் துள்ளி, வெளிமண்டபத்துள் நுழைந்தோம்.
வலது புறம் மடத்துள் எட்டிப்பார்த்தார் அண்ணா “ ஜீயர் சாமி இன்னும் வரலை. பெருமாள் சேவிச்சுட்டு வாங்க. “ என்றார் மடத்து வாசலில் காவலில் இருப்பவர். அதோடு “ இதாரு சாமி? “ என்றார் சின்னண்ணணிடம். திருமலை என்ற பாபு அண்ணன் அங்கு அடிக்கடி வருவதால் அனைவருக்கும் தெரியும். நானும் பெரியண்ணனும் எப்பவாவது வருவதால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரிடமும் நான் யார் என்பதைச் சொல்லவேண்டும். சிலருக்குத் தந்தை வழி மூதாதைகள் தெரியும். சிலருக்குத் தாய்வழியில். இல்லையென்றால், அண்ணன் பெயர் சொல்லி அவரது கடைசி தம்பி என வேண்டும். ஊர்க்காரர்களுக்கு நம் முகம் சற்றே தெரிந்த முகம் போல சந்தேகம் வந்தால், கேள்விகள் வந்துவிடும் ‘ டே அம்பி. சித்த நில்லு. நீ யாரு பிள்ளை?” எனக் கேட்கும் மங்கைப் பாட்டியிலிருந்து, “ அங்! கஸ்தூரி மாமா பையன் ! அப்படிச் சொல்லு. சும்மா, தூத்துக்குடி, அவன் இவன் -னுண்டிருக்காதைக்கி” என்று நம் வாழ்வை சட்டையே செய்யாமல், சொல்லும் தோத்து மாமா வரை…
பாபு அண்ணன் “ இவன், என் கடைசி தம்பி.. பம்பாயில..” மன்னி அதற்குள் “ நேரமாச்சு. வந்து பேசிக்கலாம். நடை சாத்திடுவா”
“இல்லடி. அவர் , இவன் யாருன்னு…”
“ எழுவது வருஷமா அவரும் அங்கதான் நின்ணுண்டிருக்கார். பத்து நிமிஷத்துல எங்க போகப்போறார்?” என்றவள் என்னைப் பார்த்து “ யாராச்சும் கிடைச்சா, பனரப் பனரப் பேசிண்டே நிப்பர்டா உங்கண்ணா.” மேலும் விரைவாக அண்ணன் முன்னே நடந்தார்.
“ஸ்ரீவரமங்கைத் தாயார் சன்னதி , சேவிச்சுக்கோ. இவளுக்குத்தான் இந்த மடம், ஊர் , சொத்து எல்லாம். பெருமாள் சும்மா , நம்ம நாலாம் நம்பராத்து தோத்து மாமா வாசல்ல உக்காந்துண்டிருக்கற மாதிரி இருந்துண்டிருக்கார்” யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். திருனெல்வேலிக்காரர்களுக்கு, சன்னதியில் நிற்கும்போதும் லொள்ளு போகாது.
அவசரமாக வெளிவந்து மடத்தின் படிகளை ஏறும்போது கட்டியக்காரர் “ சரியியே” என்று முழங்குவது கேட்டது. அனைவரும் பரபரப்பாக தூணை ஒட்டி நின்றனர். ஜீயர், முக்கோல் பிடித்தபடி மெல்ல நடந்து போவது தெரிந்தது. சிலர் சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்க, பெண்கள் முழங்காலில் மடிந்து வணங்கினர். அறு நூறு ஆண்டுப் பழக்கம். உதிரத்தில் ஓடுகிறது.
“சாமி வந்துட்டாவ. சீக்கிரம் சேவிச்சிட்டு வாங்க. இன்னும் பத்து நிமிசம்தான்” அவர் இன்னும் என்னை பார்த்த பார்வையில் ‘இவன் யாரு?” என்பது தொக்கி நின்றது.
ஜீயர் வீற்றிருக்க , பக்கவாட்டில் விழுந்து சேவித்தோம். ஜீயர், திருமலை அண்ணனைப் பார்த்தார் . கை குவித்து வாய் மூடி வளைந்து அண்ணன் “ ஸ்வாமி, இவர் மூத்தவர் மன்னார். இவன் கடைசி. ஸ்ரீபாத தீர்த்தம், ஜீயர் ஸ்வாமி கடாட்சம் வேணும். யதேஷ்டம்”என்றார் படபடப்பாக.
பெரியண்ணன் கையால் வாய் புதைத்து “ ஸ்வாமின், அடியேன் ரிடையர்ட் ஆயாச்சு. இப்ப பையனோட …” ஜீயர் கேட்டுக்கொண்டார். பின்னர் என்னைப் பார்த்து,
“ இவன் என்ன செய்யறான்?” என்றார்
திருமலை அண்ணன் பரபரப்பாக “ டேய். ஜீயர் கேக்கறார். சொல்லு”
நான் என்ன சொல்வதென்று தெரியாமல் “ சயன்ஸ் சாஃப்ட்வேர் “என்று ட்விட்டர் அடித்தேன். வைணவ பரிபாஷை சுட்டுப்போட்டாலும் எனக்கு வருவதில்லை.
அருகில் இருந்த ஏ.ஜி. கோபாலன் அண்ணன் “ இவன் சயன்ஸ்ல எழுதறான். சம்ப்ரதாயத்துலயும் என்னமோ எழுதுவன், ஸ்வாமின்” என்றார். இதற்கு என்ன சொல்லப் போகிறார் ? என எதிர்பார்த்திருந்தேன். ஜீயர்களுக்கு , இதுபோல் ஆற்றில் ஒரு கால், சேற்றிலொரு கால் வைப்வர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இராது.
“ஒண்ணு சொல்றேன். இப்ப சயன்ஸ் எழுதறவா, திருமால் தசாவதாரம்னா, மீன், ஆமைன்னு பரிணாம வளர்ச்சின்னு சொல்லிடறா. அது சரியில்லை” என்றார் ஜீயர்.
அதன்பின் ஒரு விளக்கம் அளித்தார். இப்போது நினைவில்லை. கேட்டு எழுதுகிறேன்.
“ஸைக்காலஜி பத்தி எழுதறேன்னா… கொஞ்சம் ஜாக்ரதையா எழுதணும். மனசுன்னு ஒன்ணு இருக்கே, அதுக்கு ஸ்வப்ன அவஸ்தைன்னு ஒண்ணு உண்டு. அதுல யதார்த்தமும் இருக்கும், ஸ்மரணை தப்பின படியின் நிலையும் இருக்கும். அதான் மனசு சொல்றதையெல்லாம் கேக்கப்படாது, அடக்குன்னு பெரியவா சொல்றா”
‘ஸ்வப்னா அவஸ்தைன்னா ?’
ஜீயர் அருகே இருந்தவர்கள் கடுப்புடன் பார்த்தார்கள் . அவருக்கு நேரமாகிவிட்டது. இந்தப் பயல் என்னமோ கேட்டுக் கொண்டிருக்கிறான்….
“ ஸ்வப்ன அவஸ்தைக்கு ஒரு உதாரணம். நாமே செத்துப் போய், பிணமாக் கிடக்கற மாதிரி கனவு வரும். அதை நாமே தூக்கிண்டு போறமாதிரியும் வரும். நம்மை நாமே சுமந்து… இதுக்கு என்ன சொல்லுவை?” ஜீயர் சிரித்தார்.

“Interpretation of Dreams ல Sigmund Freud என்ன சொல்றான்னு பாக்கணும் ஸ்வாமி” என்றேன். “பாரு “என்றவர் “ அப்புறம் வேளை இருந்தா வா. சொல்றேன்” என்றார்.
பெரியண்ணன் ஒரு கேள்வியுடன் அமர்ந்திருந்தார். மடத்தில் சாப்பிடவேண்டும். அது பெரிய விஷயமா? நேரமாகிவிட்டதே? சாப்பாடு பந்தி முடிந்திருக்கும்.
ஜீயர் சட்டென அண்ணனைப் பார்த்தார் “ மதியம் அமுது ஆயாச்சா ?”
அண்ணன் தயங்கி “ இன்னும் ஆகலை ஸ்வாமி. “
“மடத்துல ஆகலாமே ? “ என்றவர் தலையுயர்த்தி அருகில் நின்றிருந்தவரிடம், ‘இங்கயே அமுது ஆகட்டும்” என்றபடி எழுந்து சென்றார்.
மடத்தின் உள்புறம் குறுகலான பாதையில் வரிசையில் சென்றோம். எங்க்கெங்க்கொ வளைந்து, திடீரென ஒரு மண்டபத்தில் அது முடிந்தது. “இது முதல் தட்டு இல்லையா?” என்றார் பெரியண்ணா திகைத்து.
“ஆமா, பெரியவாளுக்கெல்லாம் இங்கதானே தளிகை பரிமாறுவா?” என்றார் ராமானுஜம் எங்கிற ராமாஞ்சு மாமா. அவர் அண்ணனின் நண்பர். எங்களுடன் , அன்று ஜீயரைக் காண சிவகாசியிலிருந்து வந்திருந்த இரு குடும்பத்தினரும் இருந்தனர். இது ஜாதீயக் கட்டு அல்ல. அனைவருக்கும் உண்டு.
பெரியண்ணா திகைத்து அமர்ந்தார் “ நான் ஹைஸ்கூல் படிக்கறச்சே இங்க மடத்துல சாப்டிருக்கேன். எங்களுக்கெல்லாம் மூணாம் தட்டு – அதான் கடைசி. முதல் தட்டுல, பெரியவர்கள், ஆச்சார்யார்கள், ரெண்டாம் தட்டுல க்ருஹஸ்தர்கள் அதன்பின் கடைசில சிறுவர்கள். “
அண்ணா தொடர்ந்தார் “ ஸ்கூல்ல இருந்து இங்க வர்றதுக்கு 15 நிமிஷம். சாப்பிட 10 நிமிஷம். அப்புறம் திரும்ப ஓடணும். ஒருமணி நேரம் லஞ்ச்சு வேளை. வீடுகள்ல சாப்பாடு இருக்காது. மடத்துல சாப்பாடுன்னா அந்த ஒரு வேளை போஜனம் தான் , ஸ்கூல்ல படிக்க வைச்சது”
ராமாஞ்சு மாமா, “ இந்த உடம்பு, இந்த வாழ்க்கை, இதெல்லாம் இந்த மடம் போட்ட பிச்சை. இந்த மடம் அன்னிக்கு சோறு போடலைன்னா, நாமெல்லாம் இருந்திருக்கவே மாட்டோம்” என்றார் அகம் குழைந்து.
அண்ணா தொடர்ந்தார் “ இலவச மதிய உணவுத் திட்டம் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி இதெல்லாம். இங்க நான் சாப்பிட்டு 62 வருஷமாச்சு. அப்பெல்லாம் ஒரே ஒரு நினைவுதான் வரும். என்னிக்காவது ஒரு நாள் அந்த முதல் தட்டுல நாம உட்கார்ந்து சாப்பிடணும்னு… நிறைவேறாமலே இருந்தது. இன்னிக்கு…” சட்டென நிறுத்தினார்.
“இலையில பாத்து சாதிங்கோ” என்றார் ஒருவர் பரிமாறுபவரிடம். “பெரியவர்களுக்கு நீ தடா புடான்னு சாதிக்காதே. கேட்டுப் பரிமாறணும்.”
“ஓய்.நாப்பது வருஷமா நானும் பரிமாறிண்டிருக்கேன். எனக்குத் தெரியும்வே. சும்மாயிரும்.”
அண்ணா, கொஞ்சம் சாதம் போட்டதும் “ போறும்” என்றார். எல்லாம் குறையக் குறைய வாங்கிக் கொண்டார். “இருக்கு ஓய்! நீர் சங்கோஜப் படாம சாப்பிடும். வயறு நிறையலைன்னா தாயாருக்கு மனசு கேக்காது”
ரசம் உறிஞ்சிக்கொண்டிருந்த ஒருவர் “ மடமே அவளோடதுதான்னேன்.” என்றார்.
“ஓய். அவள், பெருமாளை மடப்பள்ளி பக்கமே வரப்படாதுன்னுட்டா தெரியுமா? ‘எங்குழந்தைகளுக்கு எது வேணும், எவ்வளவு வேணும்னு எனக்குத் தெரியுமா,உமக்குத் தெரியுமா? நீர் உள்ள போய் இருந்து வர்றதுகளுக்கு சேவை சாதியும் போம்”ன்னுட்டா சீவரமங்கைத் தாயார். அதுனாலதான் இன்னிக்கும் மடம் சோறு போடறது. அவள் தர்றா. “
“கொஞ்சம் அதிகம் வாங்கிக்கோண்ணா” என்ற என்னைப் பார்த்து மெல்ல பக்கவாட்டில் சாய்ந்தார் அண்ணா “மூணாவது தட்டுல பசங்க இன்னும் இருப்பாங்கடா பசியோட. அவங்க சாப்டட்டும். என்னை மாதிரி எத்தனை பேர் முதல் தட்டுல ஒரு நாள் சாப்பிட்ணும்னு நினைச்சிண்டிருக்கானோ?”
வெளியே வரும்போது “பாபு, மடத்துக்கு பணம் எப்படி அனுப்பறதுன்னு கேளு. NEFTல அனுப்பிடறேன்”
மடத்துத் திண்ணையில் ஒருத்தர் கால் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தார். சினேகமாகச் சிரித்து அண்ணனிடம் “ அமுது ஆச்சா ?” என்றவர் “ யாரு எப்ப என்ன சாப்ட்டா நிறையும்னு அவளுக்குத் தெரியும். அது அவள் கணக்கு. உன் பசி அடங்க அறுவத்து ரெண்டு வருசமாச்சு. சிலருக்கு இன்னும் கொடுத்து வைக்கலை.” என்றார்.
இரு அண்ணன்களும், ராமாஞ்சு மாமாவும் அங்கு ஒரு கணம் நின்றனர். கண்ணாடியைக் கழற்றித் துடைத்து, “ மடத்து ரசம் அன்னிக்கு மாதிரியே இன்னும் அதே காரம். கண் கலங்கறது” என்றார் அண்ணா. ராமாஞ்சு மாமா ஆமோதித்துத் தலையசைத்தார்.
கண் கலங்கியது ரசத்தால் அல்ல. அனைவருக்கும் தெரியும். அது சோறு.
மடத்துச் சோறு.