Category Archives: பொதுவகை

கேஸெட் ப்ளேயர் பாடல்கள்.

கேஸெட் ப்ளேயர் பாடல்கள்.

“ஒரு நிமிஷம் பேசலாமா?” என்றர் சரவணன். போன் அழைப்பு கரகரவென்று இருந்தது.

பேஸ்புக் அக்கவுண்ட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததில், அதிக நேரம் கிடைப்பதாக ஒரு உணர்வு . அது உண்மையென நிரூபித்தது, நண்பர்களோடு அளாவளாவும் நேரங்கள்.

“சொல்லுங்க” என்றதும் மடமடவெனப் பொழிய ஆரம்பைத்தார். ” என்ன சொல்லன்னு தெரியல. எனக்கும் குமாருக்கும் நடுவே ஒரு பெரிய விரிசல் வந்திருச்சுன்னு நினைக்கேன்.”

“சும்மா உளறக்கூடாது. சும்மா சில நாட்கள் மூடு அவுட் ஆயிருக்கும். பேசாம இருந்திருப்பான். வேலையில்லாம இருக்கீயளோ?”

“இல்ல. அவன் சில மாசமாகவே, அவங்கம்மாகிட்ட மட்டும்தான் பேசறான். எங்கிட்ட போனைக் கொடுக்கச்சே, கால் கட் ஆயிறுது, இல்ல கட் பண்ணிடறான்.  அபூர்வமா, பேச்சு இருந்தாலும், ‘ என்னப்பா, எப்படி இருக்கீங்க?’ அவ்வளவுதான்.”

“அட, எதாச்சும் மனஸ்தாபம் இருந்தா பேசித் தீத்துக்க வேண்டியதுதான? நீங்க கேக்கலாமே? “என்னல, என்ன விசயம்?னு கேட்டாச் சொல்லிட்டுப் போறான்”

“நான் எதுக்குக் கேக்கணும்?” வெடித்தார் சரவணன். “அவனுக்கு எவ்வளோ செஞ்சிருக்கேன்? சின்ன பயலா இருக்கச்சே, நான் கோவிச்சுக் கிட்டேன்னா, அவனா வந்து பேசுவான். சரியாயிரும். இப்ப, தனியா டெல்லியில இருக்கிற தைரியம். திமிரு. நாம வேண்டாதவனா ஆயிட்டம்.”

“சரவணன்” என்றேன் பொறுமையாக, ” அப்படி எதாச்சும் அவன் சொன்னானா? அவன் போக்குல எதாச்சும் மாற்றம் இருக்கா?ன்னு உங்க மனைவிகிட்ட கேட்டீங்களா? “

“அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரியுதே?!. ‘தங்கச்சி கலியாணத்துக்கு கொஞ்சம் சேத்து வையி. அடுத்த வருசம் தை பிறந்தா, ஜாதகம் எடுக்கணும்’-னு சொல்லறேன்…அவன், ரூம் அடைச்சு நிக்கற மாதிரி யானை சைஸ்ல ஒரு டி.வி வாங்கி வைச்சிருக்கான். திட்டிப்பிட்டேன். கோவம். இன்னும் அப்படியே போயிட்டிருக்கு. பழைய மாதிரி இல்லடே, பசங்க. மாறிட்டானுவ”

“உங்ககிட்ட ஒரு பானஸானிக் கேஸட் ரிகார்டர்/ப்ளேயர் இருந்திச்சே? அதுவும், டபுள் கேஸட் ரிகார்டர். இருக்கா?” என்றேன்.

Retro Ghetto Blaster Isolated On White Stock Photo, Picture And Royalty  Free Image. Image 14733111.


சட்டெனத் தடுமாறினார். கொஞ்சம் கோபமாக , ” கிடக்கு. அதப் பத்தி என்ன பேச்சு இப்ப?”

“பழைய பாட்டு, உங்க ஊர்ல, கடையில கொடுத்துப் பதிஞ்சு கொண்டுவருவீங்க. நாம ரூம்ல இருக்கச்சே, எல்லாரும் பழையபாட்டு லிஸ்ட் போட்டு, அதுல பொறுக்கி எடுத்து, ஊருக்குப் போறச்ச, ஸோனி ஸி-90 கேசட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வருவீங்க. அதுல இருந்து உங்க டபுள் கேஸட் ரிகார்டர்ல பதிவு செஞ்சுகிட ஆவலாக் காத்துகிட்டிருப்பம், நாங்கல்லாம்!”

சிரித்தார் ‘ பொன்னான காலமய்யா அது! ஒவ்வொரு பாட்டும் மனப்பாடம்லா? எத்தன தடவ கேட்டிருப்பம்!”

“நீங்க, எம் ஜி யார் விசிறி. ‘பெண் போனால்” பாட்டை அப்படியே ம்யூஸிக்கோட பாடுவீங்களே?”

கடகடவென்று சிரித்தார் ” இப்பவும் நினைவு வச்சிருக்கீங்களே?!”

“எந்த அளவுக்கு அதுவெல்லாம் தாக்கியிருக்குன்னா, எங்கயாச்சும் ‘பெண் போனால்’ பாட்டு கேட்டா, அடுத்த பாட்டு ” இந்தப் பச்சைக்கிளிக்கொரு” மனசு எதிர்பார்க்குது. நம்ம கேசட்டுல அதுதான அடுத்த பாட்டு?!”

“கரெக்டு!” என்றார் வியந்து. “எனக்கும் இப்படித்தான் எதிர்பார்ப்பு வரும். ‘நினைக்கத் தெரிந்த மனமே’ பாட்டுக்கப்புறம் ” பொய்யிலே பிறந்து ” பாட்டு நம்ம கேஸட்டுல. நான் வாய் விட்டுப் பாடிறுவனா?, பக்கத்துல இருக்கறவங்க, ஒரு மாதிரியாப் பாப்பாங்க. வேற பாட்டு வந்திருக்கும்!”

“இதான் சரவணன், பழக்கத்தோட வலிமை. முந்தி நாம தீவிரமா ரசிச்சது, நடந்ததை இப்பவும் எங்கெல்லாமோ, மனசு எதிர்பார்க்கும். காஸட் காலம் முடிஞ்சாச்சு. அதுல நாடாவெல்லாம், குடல் உருவிப் போட்ட மாதிரி வெளிய வந்து, நாம அதைத் தூரப் போட்டாச்சு. இப்ப mp3 ப்ளேயர்ல கேக்கறப்ப, வேற பாட்டு வரும். இதுதான் எதார்த்தம். நம்ம பழைய கேசட்டை இன்று இண்ட்டெர்னெட் ஸ்ட்ரீமிங்ல எதிர்பார்ப்பது எப்படி மடமையோ, அது மாதிரிதான், நம்ம பிள்ளைகள், அன்னிக்கு இருந்த மாதிரி இப்பவும் இருக்கணும்னு எதிர்பார்க்கறது. அவர்கள் மாறுகிறார்கள், அவர்கள் வாழ்வு. நாமும் மாறணும். “

அமைதியாக இருந்தார் ” அப்ப நம்ம பிள்ளைகள் கிட்ட நல்லதை எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்றீங்க?”

“குதர்க்கமாப் பேசக்கூடாது. அவங்க நல்லா இல்லைன்னா, இவ்வளவு வளர்ந்திருப்பாங்களா? நாம பழசை எதிர்பார்த்து, நடக்கலைன்னா, புதுசா வர்றது, மோசமில்லைன்னா, ரசிக்கக் கத்துக்கறதுதான் நல்லது. ‘பெண் போனால்’  பாட்டுக்கப்புறம் ‘பொய்யிலே பிறந்து’ பாட்டு வரலைன்னா என்ன?  ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை’ பாட்டு வந்தாலும் நல்லதுதானே?  வொய் திஸ் கொலைவெறி’ வந்தாத்தான் கவலைப்படணும்”

அவர் சிரித்தார். “அடுத்த பாட்டு முணுமுணுக்காதீங்க’-ந்னு சொல்லுறீங்க? “

“பாடுங்க. அடுத்த பாட்டு, மாத்தி வந்தா, ஒரு வியப்பான சிரிப்புடன், அதை முணுமுணுக்கக் கத்துக்குங்க. நீங்க பதப்படுத்தின கேஸட்டுல உங்களுக்குத் தெரியாத பாட்டு ஒண்ணும் வராது. கவலைப்படாதீங்க. வந்தா, மெல்லச் சொல்லிப்பாருங்க. தானா, பாட்டு மாறும்.”

நான் கேட்காமலேயே ” யார் அந்த நிலவு? டொய்ங்க்ட டொட்டொ டொடடெய்ங்க்” என்று பாட்டு வந்தது மறுமுனையில்.

சிரித்தேன். “அண்ணாச்சி, அது சிவாஜி பாட்டு. நீங்க மறந்தும் சிவாஜி புகழா மாந்தராச்சே? எம் ஜியார் மட்டும்லா உங்களுக்குத் தெய்வம்?” என்று சொல்லவந்தவன் அடக்கிக் கொண்டேன்.


மறுமுனையில் கரகரப்பு நின்றுபோய், குரல் தெளிவாகிப் பாட்டு சீராக வந்துகொண்டிருந்தது.

கண்ணாடி மறைக்கும் பார்வை

கண்ணாடிக் கடைகளில் ஏன் அனைத்து அநியாய விலைக்கு விற்கிறார்கள்? என்பது புதிராக இருக்கிறது. எல்லாருக்கும் ப்ளாஸ்டிக் லென்ஸ்களின் அவசியம் இல்லை. அதுவும் bi focal, blue filter, anti reflection , photochromatic லென்ஸ்கள் என up selling ல் படுத்தி எடுத்துவிடுகிறார்கள்.

போரோ ஸிலிகேட் -ல் வந்த கனமான கண்ணாடிகள் நன்றாகவே பயன்பட்டன. கவனமாகக் கையாளவேண்டுமென்பதைத் தவிர, மூக்கில் ஒரு தடம் பதியும் என்பதைத் தவிர , வேறொன்றும் அதில் குறைவில்லை. சொல்லப்போனால், ஸ்டைல் ஃபேக்டர் அதிகமாகவே இருந்தது.

சாதாரண போரோ ஸிலிகேட் கண்ணாடியிலும் புற ஊதாக்கதிர்கள் தடுக்கப்படும் என்பதைச் சொன்னால்,கண்ணாடிக் கடை சேஸ்ல்மேன் ஒரு எதிரியாகப் பார்க்கிறான். ப்ளாஸ்டிக் லென்ஸில், கோட்டிங் இருந்தால் மட்டுமே புற ஊதாக்கதிர்கள் மட்டுப்படும் என்பதை ஒரு வீடியோவில் காட்டினான். “சரி, ஒரு புற ஊதாக்கதிர் விளக்கு கொண்டு வா. சாதாரணக்கண்ணாடியிலும் இதனைக் காட்டுகிறேன்” என்றால், ” சார் , வாசல்ல உக்காருங்க; உங்க ஃப்ரேம் வரும்போது, கூப்ப்பிடறேன்”

“கூலிங் கிளாஸ் வேணும்னா, புற ஊதாக்கதிர் தடுக்கும் ப்ளாஸ்டிக் லென்ஸ் நல்லது சார், இல்ல, ரே பான் மாதிரி க்ளாஸ்ஸிக் கிளாஸ் லென்ஸ் மாட்டுங்க. சும்மா சீப்பா இருக்கே-ந்னு ரோடு சைட்ல வாங்கிறாதீங்க” என்றார் ஒரு கண்ணாடிக்கடை நண்பர். ‘என் லாபம் மட்டும் வச்சு சொல்லலை. பொதுவாகவே, கண்ணாடி நல்ல தரம் உள்ளதா வாங்குங்க. என்ன மாதிரி பயன்பாடு வேணும்?னு தெளிவாச் சொல்லிருங்க.

கண்ணாடிக்கடை வச்சிருக்கறவருக்கு உங்க தேவை புரியணும். கம்ப்யூட்டர்ல அதிகவேலையா? ப்ளூ லைட் ஃபில்ட்டர் போட்டது பாக்கணும், வெளிய சுத்தறீங்களா? பவர் இல்லாட்டி, புற ஊதாக்கதிர் தடுக்கும் கூலிங் கிளாஸ் போதும். பவர் உள்ளதுன்னா, ஸ்பெஷலாச் செய்யணும்”

என்ன சொன்னாலும், அந்த போரோ சிலிக்கேட் கண்ணாடியின் ஒரு கெத்து, ஒரு கனம் , சிரமமில்லாத பார்வை, இந்த ப்ளாஸ்டிக் லென்ஸ்களில் இல்லையோ? எனச் சிந்தனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அறிவியல் புனைவுகளும், அவசரங்களும்

தங்கள் அறிவியல் புனைவுகளை ஆர்வத்துடன் சில இளைய எழுத்தாளர்கள் வரைவு வடிவில் அனுப்பியிருக்கிறார்கள். 2021 சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் புத்தக வடிவில் கொண்டுவர அவர்களது அவசரம் புரிகிறது.

அறிவியல் புனைவு எழுதுவதில் உள்ள சிரமங்கள் அறிவேன். கதையும் சரியான நேரத்தில் வெளிவரவேண்டும். அதே நேரம் கதை சரியாகவும் இருக்கவேண்டும். அவசரத்தில் கதை பிறழ்ந்துவிடும் அபாயம் உண்டு.

தொழில்நுட்பத்தில் வேறுபாடு இருந்தால், கற்பனை என்று சொல்லிவிடலாம். “வீட்டு வாசலில் ராக்கெட் காப்ஸ்யூல் வந்து நின்றது” இப்படி நாளை இருக்குமென்று சொல்வதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், மூன்றே நாட்களில் ஒரு மீன் பரிணாம வளர்ச்சியில் முதலையானது என்பதில் சிக்கல் இருக்கிறது.

புரிந்துகொண்டவர்கள் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். சிலர் நட்பை முறித்துக் கொண்டுவிடுகிறார்கள். தருக்கம், அறிவியலோடு அமைதியாக இதெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வையகம் வாயில் கண்டவர்…

யசோதை மட்டும்தான் வாயில் வையகம் கண்டாளா? நாம் பார்த்த சினிமா, கேட்ட கதைகளில் யசோதை ‘க்ருஷ்ணா, மண்ணைத் தின்றாயா?” என்று கேட்டதற்கு , கண்ணன் இல்லை எனத் தலையாட்ட, அவள் ‘ வாயைக் காட்டு” என்றதற்கு, வாயைக் காட்ட, அண்ட சராசரங்களும் அதில் கண்டதாக கதை உண்டு. மண்ணை ( பூமியை) விழுங்கினாயா? என்ற கேள்விக்கு ‘இல்லை’என்ற பதில் ‘பூமி மட்டுமல்ல; அனைத்தையும் விழுங்கினேன்’என்ற பொருளில் தலையசைத்ததாகவும், வாயில் அனைத்தயும் உண்டதைக் காட்டியதாகவும் ஒரு பொருள் சொல்லுவார்கள்.

பெரியாழ்வார் பாசுரத்தில் ,

“கையும் காலும் நிமிர்த்திக் கடாரநீர்பையவாட்டி் பசுஞ்சிறு மஞ்சளால் ஐயநாவழித்தாளுக்கு ஆங்காந்திடவையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே” என்பதன் அடுத்த பாசுரம்

“வாயில் வையகம் கண்ட மடநல்லார்ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயச்சீருடை பண்புடைப் பாலகன்மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே”

என்று செல்கிறது. கண்ணனுக்கு நீராட்டுகையில் வாயினை வழித்த அனைத்து மாதர்களும் வாயில் வையம் கண்டனர். சித்தப்பாவிடம் இதற்கு , பல ஆண்டுகள் முன்பு விளக்கம் கேட்டேன்…

வழக்கம்போல் எதோ ஒரு உறவு திருமணத்தில் அவர் ஒரு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்கையில்…அவர் கண்களை மூடியபடி “” அவனுக்கு பணிவிடை செய்யற எல்லா ஆய்ச்சியரும் யசோதைதான். எல்லா ஜீவாத்மாவும் அவனுக்கு ஒண்ணுதான். இன்னார் அடுத்தார், இன்னார் சிறியார்னு அவனுக்குக் கிடையாது. யாரு கண்டா? நமக்கே ஒரு காலம் எதாவது சிறுபிள்ளை வாயில காட்டுவானோ என்னமோ?” என்றார்.

‘இன்னொண்ணு’ என்றார் தொடர்ந்து ” டேய்!, அமலானாதிபிரான் பாசுரம் தெரியுமா உனக்கு?” “தெரியும் சித்தப்பா”

” ரெண்டு தனியன் உண்டு. அதுல ரெண்டாவது தமிழ். சொல்லு பாப்போம்” ‘என்னடா இது?’ என்று திகைத்தாலும் , சொன்னேன்.

“காட்டவே கண்ட பாத கமலம், நல்லாடை உந்தி

தேட்டறு உதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்…”

“ஆங்! உன் கேள்விக்கு பதில் அதுல முதல் அடியிலயே இருக்கு பாரு. ‘காட்டவே கண்ட பாதகமலம்’. அவன் விருப்பப்பட்டு தன் உருவத்தை அங்கம் அங்கமா அவருக்குக் காட்டினான். அவரும் எழுதினார். அதுமாதிரி, அவன் விருப்பம் – நா வழித்த ஒவ்வொரு ஆய்ச்சியும் வாயில் வையகம் கண்டாள். ஸ்வாதந்தரியம் அவனுக்கு மட்டுமே உண்டு. நாச்சியாரே என்ன கேக்கிறாள் ? கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ? அவளே கேட்டுத் தெரிஞ்சிக்கணும். ஆனா, அவன் விருப்பப்பட்டா, ஒண்ணும் தெரியாத் ஆய்ச்சியருக்கே வாயில உலகம் தெரியும்”

இதுவரை நான் வியந்தவர்களின் வாய்களில் பல இருண்ட குகைகளாக மட்டுமே இருந்திருக்கின்றன.

ஒரு சொல் அறிய…

பக்தன் என்றால் எல்லாம் இறைவன் சார்ந்ததாகத்தான் சிந்தனையும், செயலும் , சொல்லும் இருக்கவேண்டுமா? இல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஒருவன் செய்யாவிட்டால்  குடிகள் எப்படி தழைக்கும்?’

இந்தக் கேள்வியை ஒரு குருவிடம் ஒருவ்ர் கேட்டதை சமீபத்தில் ஒரு வீடியோவில் காண நேர்ந்தது. அவர் புன்னகையுடன் “ காமம் தேவைதான். எப்பேர்ப்பட்ட காமம் தேவை? உலகம் தொடர்ந்து இயங்க்கத் தேவையான காமம் என்ற அளவில். சம்பாதிக்க ஆசைப்படுகிறாய். பொருள் ஈட்டுவதில், பிறர்க்கும் உதவி செய்கிறாய். அந்த அளவில் நல்லது. உடலைப் பேண, உடற்பயிற்சி செய்கிறாய், நல்ல உணவு உண்கிறாய். அதுவும் பிறருக்கு உதவ, நோயால் பிறரைத் துன்பப் படுத்தாமல் இருக்குமளவில்  ஆரோக்கியத்தைப் பேணல் நன்று. கீதையில் ‘காமோஸ்மி பரதர்ஷப’ எங்கிறான் கண்ணன். “ நான் காமம்” என்பதன் பொருளை  அறிய அதன் முன் வார்த்தையைச் சேர்த்து வாசிக்க வேண்டும். சாத்திரங்கள் அனுமதித்த காமம் நான் என்று வருகிறது. எனவே அதுவும் அளவிற்குட்பட்டதாக இருக்கவேண்டும். எதுவும் அவன் குறித்தே என்பது நினைவில் இருக்கவேண்டும். ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள பலதும் கற்க வேண்டும் நீ”

ஒரு நண்பர் தென் திருப்பேரை பதிகத்தின் முதற்பாசுரத்தை வாட்ஸப்பில் அனுப்பி “ வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளைக்குழா விளையாட்டொலியும் “ என்பதில்  வேத, விழா ஒலிகள் இறைவனைச் சார்ந்ததென்று சொல்லலாம். எப்படி பிள்ளைகள் விளையாட்டொலி இறைவனைச் சார்ந்ததாக இருக்கும் ? என்றார்.

இம்மூன்றும் “ மனம், வாக்கு, இயக்கம்  மூன்றும் இறைவனைக் குறித்ததாக இருக்கவேண்டுமென்பதைச் சொல்வது” என்றேன். வாயினாற்பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது என்பதில் வேத ஒலி – சொல், விழா ஒலி – மனத்தின் ஒருங்கு ( சாமிக்கு ரெண்டு முழம் பூ கொடும்மா, என்ற சந்தையின் ஒலி முதல், நாயன வாத்திய ஒலி வரை அனைத்தும் அவன் குறித்தே). ஆனால் பிள்ளைகள் விளையாட்டொலி? அது இயக்கமல்லவா? அதெப்படி விளையாட்டு இறைவனைக் குறித்து இருக்க முடியும்?  இதில் Jayanthi Iyengar அவர்களது பதிவிலிருந்த பிள்ளைகள் விளையாட்டொலி குறித்த வரிகளை சுட்டிக்காட்டியிருந்தேன்.

எதுவானாலும் அவன் பிள்ளைகள் விளையாட்டு என்று அவன் கோவிலில் விளையாடுவதை ரசிக்கிறான் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விளையாட்டில் எப்படி இறை இருக்கும்?

இப்பாசுரத்திற்கு, ஈடு பன்னீராயிரப்படி வியாக்கியானத்தை அறியத் தலைப்பட்டேன். “ விளையாட்டொலிக்கு உசாத்துணையாக வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் “பாலா அபி க்ரீடமானா “ என்ற வாக்கு காட்டப்பட்டிருந்தது. (விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளும் எனப் பொருள்) இராமனுக்கு மறுநாள் பட்டாபிஷேகம் என்பதால், அயோத்தியில் குழந்தைகள் கூட, இராம பட்டாபிஷேகத்தை  வைத்தே விளையாடினார்கள் என்பது முழு ஸ்லோகத்தில் வரும் பொருள்.

நகர் திருவிழாக்கோலம் பூண்டால், அங்கு சிறுவர்கள் அதன் தாக்கத்தில் தங்கள் விளையாட்டை மாற்றிக் கொள்வார்கள். இராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலில் ‘ஜீயோ” என்று அழைத்தால்  ப்ரசாதம் வாங்குவதைக் கண்ணுற்ற சிறுவர்கள், காவிரி மணலை ப்ரசாதமாக வைத்துக்கோண்டு மற்றொரு சிறுவனை ஜீயோ என்றழைக்க, அங்கு வந்து கொண்டிருந்த இராமானுஜர் தாமே சென்று மணல் ப்ராதத்தை வாங்கிக்கொண்டதாக வரலாறு. குழந்தைகள் தங்களுக்கு வரும் தாக்கத்தை தங்கள் விளையாட்டில் இணைத்துக் கொள்வார்கள். இது அயோத்தியில் நடந்தது எனில், தென் திருப்பேரையில் ஏன் நடக்காது? அங்குள்ள குழந்தைகள் தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதரை முன்வைத்து விளையாடியிருக்கலாம். எனவே இயக்கம் ( கர்மம்) இங்கு இறை சார்ந்ததாகவே இருக்கும்.

விளையாட்டு என்பது  விளையாட்டல்ல. அது அலகிலா விளையாட்டுடையானவனுக்கு அருகில் கொண்டு செல்லும் பாதை.

தமிழில் ஒரு சொல்லைப் புரிய, சமஸ்க்ருதம் உதவுகிறது. ஸமஸ்க்ருத வரியான “ மனஸா, வாச்சா, கர்மா” என்பதனை ஆண்டாள் “ வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது” என்று அவையனைத்தும் இறைவனைக் குறித்தே என்று ஒரு வார்த்தையில் விளக்கினாள். அந்த யோகியின் சொல் நினைவு வந்தது ” ஒரு சொல்லை முழுதும் புரிந்துகொள்ளப் பலதும் கற்கவேண்டும் நீ” . இரு பெரு மொழிகளின் கலாச்சாரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒன்றை வெறுத்து ஒதுக்குவது அவரவர் சிந்தை.

மோட்சம்

”யாரையெல்லாம் கூப்பிடப் போறீங்க?” என் கேள்வியின் பின் நின்ற கவலை சுந்தரத்திற்குப் புரிந்திருந்திருந்தது.

“ஈஸ்வரன் சாரைக் கூப்பிடல; ஆனா, அவரே வந்துடறேன்னு சொல்றாரு. என்ன சொல்ல முடியும்?” தயங்கினார் சுந்தரம். அனிச்சையாக என்னுள் ஒரு பெருமூச்செழுந்தது.

மாதம் ஒரு நாள் ஒருவர் வீட்டில் நாங்கள் நாலைந்துபேர் கூடுவோம். என்னதான் பேச்சு என்றில்லை. ஆனால், இலக்கியம் , வாழ்வு சார்ந்ததாக இருக்கவேண்டும். வெட்டிப்பேச்சு இருக்கக்கூடாது. என்று சில நிபந்தனைகளுடன் சிறு ரசிகர் வட்டம். சில நேரம் மதியச் சாப்பாடு, பல வேளை எதாவது உடுப்பி ஓட்டலில் காபி என்று இரு மணி நேரத்தில் முடிந்துவிடும் கூட்டம்.

தவறாகச் சேர்க்கப்பட்டவர் ஈஸ்வரன். எங்களில் பெரியவர் , கொஞ்சம் இங்கிதம் தெரியாதவர். எப்போது எப்படிப் பேசவேண்டுமெனத் தெரியாது. அதிரப் பேசுவார். திருவாசகம், கம்பன், பாரதி எனப் பேசினாலும், ஆழமற்ற பேச்சாகவே இருக்கும். போன முறை அவர் பேசியது ஒரு கசப்பையே ஏற்படுத்தியிருந்தது. எனவே தவிர்த்துவிடத் தீர்மானித்திருந்தோம். சிலர் அவர் வரட்டும் என்றார்கள். நானும் சிலரும் வேண்டாமென்றோம். இப்போ தானகவே வந்து நிற்கப் போகிறார்.

“எங்க வீட்டுலதான் மீட்டிங். நாளைக்கு மதியம் மூன்றரைக்கு வந்திருங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காபிக்கு வெளியே போயிருவோம்”

சுந்தரம் ஏன் இப்போது தன் வீட்டில் அழைக்கிறான்?என்று தோன்றாமலில்லை.
சுந்தரத்தின் தந்தை, வெங்கடேசன், ரயில்வேயில் பெரிய பதவியிலிருந்தார். மனைவி நாகம்மாளைத் திடீரெனத் தள்ளிவைத்துவிட்டு கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அது நிலைக்கவில்லை. நாகம்மாளிடம் இருந்த தன் பெண்ணையும் பையன் சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு மும்பை வந்துவிட்டார். நாகம்மாள் ஊரில் தன் சகோதரன் வீட்டில் வாழ்ந்து சில வருடங்கள் முன்பு இறந்து போனார்.

“அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்றேன் வீட்டில் நுழைந்தபடியே .
“இருக்காரு.. நாம பேசினாக் கேக்குது புரியுது. பதில் பேச முடியலை. படுக்கையிலேயேதான் எல்லாமும். என் பொண்டாட்டி “ ஒரு நர்ஸ் வைங்க. என்னால எல்லாம் செய்ய முடியாது’ன்னுட்டா. இப்ப ஒருமாசமா ஒரு நர்ஸ் வந்துட்டுப் போறாங்க.”
” பக்கவாதம் சரியாயிருச்சுன்னாரே டாக்டர்?” என்றேன். அறையின் ஒரு கோடியில் வெங்கடேசன் படுத்திருப்பது தெரிந்தது. மிக மெலிந்து, எலும்புக்கூடாக உடல். பஞ்சடைந்த கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க, கழுத்து ஒரு ஓரமாக வளைந்திருந்திருக்க, வாயின் ஓரமாக கோழை வழிந்திருந்தது. ஒரு துர்நாற்றம் அறையில் மெல்ல பரவி, நாசியில் துளைத்தது.

”அப்பாவுக்குத் தொந்திரவாக இருக்காதோ?” என்றேன்.

“இல்ல, நாம பேசறதக் கேப்பாரு. இப்ப தூக்கம் வராது. வந்தாலும் தூங்கமாட்டார். என்ன கொஞ்சம் அதிரப் பேசக்கூடாது” சுந்தரம் , ஈஸ்வரன் வரவின் ஆபத்தைப் புரிந்துகொள்ளவில்லை

அடுத்த நிமிடம் வாசல் கதவு டமால் என அதிர, திடுக்கிட்டுத் திரும்பினேன். “ஸாரி” என்றார் ஈஸ்வரன். ‘கொஞ்சம் வேகமா அடைச்சுட்டேன்.”

“ஈஸ்வரன், வெங்கடேசன் சார் படுத்திருக்கார்” என்றேன் சற்றே கோபமாக . “ அதான் ஸாரின்னுட்டேனே?” இது என்ன பதில்?

வீட்டினுள்ளே இருந்தவர்கள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து பார்த்து எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர்.

“அப்பா என்னமோ நினைச்சிகிட்டிருக்கார் போல. ரெண்டு நாளாவே சரியா சாப்பிடல, தூங்கலை. என்னமோ உளர்றாரு. என்னன்னு எங்கள்ல யாருக்கும் புரியலை” சுந்தரம் ஏதோ சொல்லி இறுக்கத்தைத் தளர்த்த முயற்சித்தான்.

பேச்சு எங்கெங்கோ சென்று இறப்பு, மோட்சமெனத் திரும்பியது.
“ இறப்பு நம் கருமத்தால் வருவது” என்றார் நமச்சிவாயம். ”அதுக்கப்புறம் சொர்க்கம் நரகம், பிறப்பு எல்லாம் நம் கருமந்தான் தீர்மானிக்கிறது. பட்டினத்தார் சொல்றாரு “ பற்றித்தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே”

ஈஸ்வரன் “ I beg to differ” என்றார் ஆங்கிலத்தில். நான் கவலையடைந்தேன். இந்தாள் எதையெதையோ பேசுவாரே? இன்னும் பத்து நிமிசம் நரகவேதனையாகத்தான் இருக்கும்.

“இறக்கும்வரைதான் நம் கருமங்களின் பலம். அதன்பின் எங்கே யார் போகவேண்டுமென்பதை அவன் தீர்மானிக்கிறான், அதுவும் கருமங்களின் வழியாக. அது நம் கருமமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை”

“அப்போ, என் தாத்தா பல நல்ல காரியங்களாகச் செய்து, நான் ரவுடியாகத் திரிந்தாலும், இறுதியில் எனக்கு மோட்சம் என்கிறீர்கள் “ எனது நையாண்டியை அவர் பொருட்படுத்தவில்லை.

சுந்தரம் , ஏதோ சிறிய சிந்தனையின் பின் தொடர்ந்தான்
“இறைவன், நம்மை எப்படியும் தன்னிடம் வரச்செய்யவேண்டுமெனத்தான் பார்க்கிறான். ராமனை எடுத்துக்குங்க. ராவணனோட தீய செயலுக்குத்தான் அத்தனை அழிவையும் கொண்டுவந்தான்.
விபீடணன் இராமனிடம் சொல்கிறான், ”மொய்ம்மைத் தாயனெத் தொழத்தக்காள் மேல் தங்கிய காதலும், நின் சினமுமல்லால்- இராவணனை யாரூம் வென்றிருக்க முடியாது”. கருமத்திற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்.”

“கரெக்ட்” என்றார் சுரேஷ் “ யாருக்காக, எதற்காக ராமன் போர்செய்தான்?

“மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா(க) இலங்கை வேந்தன் முடிஒருபதும்,தோள் இருபதும் போயுதிர “ போர் செய்தான். இதே போல் “ பாரதப்போரில் யாருக்காக வந்தான்? பாண்டவர்களுக்கா ? இல்லை. “ பந்தார் விரலி பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்து … சங்கம் வாய் வைத்தான்” , சுந்தரம் நம்ம கருமம் ஒழுங்கா இருந்தா ,வினைப்பயன் ஒழுங்கா வரும். இல்லேன்னா, இறைவன் மூலமாகவே கூட, நமக்குத் தீவினை வந்து நிற்கும்.”

“அஹ்ஹ்ஹ்” குரல் கேட்டுத் திரும்பினோன். வெங்கடேசன் தீனமாக ஏதோ குழறினார் .

“என்னமோ அவர் நினைப்புல ஓடுது. ஏதோ டென்ஷன்ல இருக்கார்போல” என்றார் சுரேஷ்.

“தெரியல. ஒருவேளை எங்கம்மா நினைப்பா இருக்கும்” என்றார் சுந்தரம் “ என்ன பாடுபடுத்தியிருப்பாரு அவங்கள? அம்மா ரொம்பப் பொறுமைசாலி. இவர் அடியெல்லாம் வாங்கிகிட்டு எங்களை அணைச்சுகிட்டுப் படுத்திருப்பாங்க. தூங்கும்போது அவங்க கன்னத்துல கை வைச்ச்ப்பேன். சிலநேரம் சூடா, கண்ணீர் விரலை நனைக்கும். இவர் கருமம், இப்படி படுக்க வைச்சிருச்சு. அது எங்கம்மா கண்ணீர்தான்.” என்றவர் எங்களை ஒருமுறை பார்த்தார்

“ சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்க. கருமமும் அதன் பயனும் இப்படித்தான் இருக்கும். எங்க அப்பாவாகவே இருந்தாலும், எனக்கு இப்ப ரொம்ப பாசமெல்லாம் ஒண்ணுமில்ல. இவருக்குச் செய்யவேண்டியது என் கடமை. செய்யறேன். அவ்வளவுதான். இவரெல்லாம் நரகத்துக்குத்தான் போவாரு”

“அஹ்ஹ்ஹ்ஹ்” குரல் வளையில் ஏதோ அடைக்கக் குழறினார் வெங்கடேசன். மூச்சு விட முடியாமல் திணற, சுந்தரம் அவர் தலையைத் தூக்கிப் பிடித்தார். சளி , குரல்வளையிலிருந்து இறங்க, அவர் மூச்சு சீரானது.

ஈஸ்வரன் “ நீங்க நினைக்கறது மாதிரி இல்ல” என்றார் தீர்மானமாக “ கொல்லும் வரையில்தான் இறைவனே கருமம், அதன் பலம் பார்க்கிறான். அதன்பின் தன்னிடம் அந்த ஆத்மா வந்து சேர எதாவது நற்காரியம் இருக்குமா?என்று பார்க்கிறான். பெரியாழ்வார் சப்பாணி பாடலில் சொல்கிறார்
“ இரணியன் உளம் தொட்டு, ஒண்மார்கவலம் பிளந்திட்ட கைகளால் “ ,
உளம் தொட்டு என்றால் என்ன? அவனது உள்ளத்தில் தேடிப்பார்க்கிறாராம். தன்னைக்குறித்த ஏதாவது நல்ல எண்ணம் இருக்குமோ? என்று. இருந்திருந்தால் அவனுக்கு மோட்சம். அப்படி ஒன்றும் இல்லாதததால், அவன் மார்பைப் பிளந்து வதை செய்கிறார்” என்று ஒரு வியாக்கியானம் உண்டு. “

“அய்யா” என்றேன் பொறுமையாக “ நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, இதெல்லாம் வைச்சு, இறைவன் தண்டனை தருவான் அல்லது மாட்டான் என்று சொல்லிவிட முடியாது. ‘பாரமான பழவினை பற்றறுத்து”தான் எதையும் செய்வான். நாம் செய்வதன் பலனை அடைந்தே ஆகவேண்டும்”

“அஹ்ஹ்ஹ்ஹ்” இந்த முறை சற்று அதிகமாவே வெங்கடேசனின் திணறல் இருந்தது. கவலையோடு பார்த்தேன். சுந்தரம் ஒரு உணர்ச்சியும் இல்லாதிருந்தான். இது சகஜம் போலும்.

ஈஸ்வரனின் குரல் உயர்ந்தது “ புரியாம பேசாதீங்க. இராவணனை ராமன் கொல்கிற வரையில்தான் சினத்தோடு இருந்தான். “சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற” .. சினம் அதுவரையில்தான். அதோட ராமவதாரத்தின் முக்கிய பணி முடிந்தாச்சு. இப்ப இறைவனின் பணி தொடங்குது. ராமன் யோசிக்கிறான் இந்த ராவணனோட ஆத்மாவை எப்படி வானுலகு அனுப்புவது? எல்லாமே மோசமான வினைகள் செய்திருக்கிறான். அப்போது மண்டோதரி தென்படுகிறாள். மண்டோதரி கற்புக்கரசி. அவளது காதல் மிகத் தூய்மையானது. அவளது காதலுக்கு ஏற்றவனாக இருப்பதே இராவணனின் ஒரு தகுதிதான். ஒரு கற்புக்கரசியின் கணவன் எப்படி நரகம் போக முடியும்?. மண்டோதரியின் காதலன் என்ற ஒரு காரணம் கொண்டே , இராவணனை வானுலகு அனுப்பிவிடுகிறான்”

அடுத்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் எரிச்சலில் ப்ச் என்ற ஒலிகள் கேட்டன. “ மெதுவா, மெதுவா” என்று ஈஸ்வரனுக்கு சைகை காட்டினேன். கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.

“இதை கம்பராமாயணம் சொல்லலை. திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,

“ வம்புலாங் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்புதன்னால் முனிந்த அழகன்”

பெரிய திருமொழியில் நாலாம் திருமொழியில் ஐந்தாவது பாசுரம். நீங்களே பாத்துக்குங்க, அங்” என்றவர் மேலும் குரல் உயர்த்தினார் “ ஒரு பத்தினிப் பெண்ணின் காதலுக்கு அவ்வளவு மதிப்பு. நாம செஞ்ச நல்வினையால்தான் அப்படி பெண்களை மனைவியாகப் பெறுகிறோம். அவர்களது நல்வினை நம்மை நிச்சயம் மோட்சத்துக்குத்தான் அனுப்பும். ராவணன் போலாம்னா, நாம போகமுடியாதா?”

சுந்தரத்தின் மனைவி சிவந்த கண்களுடன் எழுந்து வந்தாள் “ ப்ளீஸ், மெதுவாப் பேசுங்க, ராத்திரி பூரா இவர் தொல்லையால தூங்க முடியலை. இப்பத்தான் கொஞ்சம் கண்ணசர்ந்தேன்.தலை வலிக்குது”

”ஓ, சாரி சாரி’ என்றவாறே ஈஸ்வரன் எழுந்தார்.அனைவரும் வெளீயே சென்று உடுப்பி ஓட்டலில் காபி அருந்திக் கிளம்பினோம்.

“இனிமே யார் யாரைக் கூப்பிடறதுன்னு ஓட்டுப் போட்டு எடுக்க வேண்டியதுதான். யாரையும் குத்தம் சொல்லலை. ஆனா, மத்தவங்களுக்கு வீண் சிரமம் கொடுக்கக்கூடாது” என்றார் சுரேஷ். ஆம் எனத் தலையசைத்தேன்.

இரு நாட்களில் வெங்கடேசன் இறந்துபோனார் எனச் செய்தி வந்தது. சுந்தரத்தைப் பார்க்கச் சென்றோம். “ கடைசி இரண்டு நாளா அவர் முகத்துல ஒரு அமைதி. அதிகம் குழறலை. ஏதோ சொல்லுவார். அது நாகம்மா ந்னு எனக்குக் கேட்டது. அது ஒரு பிரமையாக இரூக்கலாம். அவர் கஷ்டப்பட்டாலும், இறப்பு அமைதியாக இருந்தது”

உடுப்பி ஓட்டலில் ஒரு மேசையில் சுரேஷும் ஈஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள். “அன்னிக்கு சத்தமாப் பேசினது எல்லாருக்கும் எரிச்சலா இருந்திருக்கும். தெரியும். தெரிஞ்சேதான் அப்படிப் பேசினேன்” என்றார் ஈஸ்வரன் . நான் சுவாரசியமானேன்.

“ நாம பேசறதுல , வெங்கடேசனுக்கு மேலும் மன உளைச்சல் வந்திருக்கும். பாவம் சொல்ல முடியலை. கடைசி நேரத்துல அல்லாடறார். அவர் மனைவிக்கு செஞ்ச கொடுமை, தனது தீயசெயலாலே எங்கே நரகமா அனுபவிப்போமோன்னு ஒரு பயம்.. மரணத்தை விட மரண பயம் கொடியது தெரியுமோ சுரேஷ்? அதான் , ஏதோ நம்மாலானதுன்னு ஒரு பாசுரத்தை விளக்கினேன். அதுல என்ன அமைதி கிடைச்சிருக்குமோ தெரியாது.”

“இருந்தாலும், இப்படி திரிச்சுச் சொல்லலாமா சார்?”

“ஒரு உயிர் அமைதியாப் போறதுக்கு, நம்ம அரைகுறை அறிவால ஒரு பயன் கிடைக்கிறதுன்னா, என்ன தப்பு? என்ன, என் தவறுக்கு எப்ப்படி தண்டனை வருமோ? வரட்டும் பாத்துக்கலாம். பாசுரம் பாடினதுக்கு ஒரு பலன்ன்னு ஒன்று இருக்கும். “

அடுத்த மாத மீட்ட்ங்க்கிற்கு ஓட்டு கேட்டு வந்தார் சுரேஷ். எனது வாக்கை பதித்தேன்.

மடத்துச் சோறு

‘ஒரேயொரு ஆசைடா” என்றார் பெரியண்ணா, அங்கவஸ்த்திரத்தை இழுத்துவிட்டபடியே. காற்றில் அங்கவஸ்த்திரம் உப்பி, உடலிலிருந்து விலகிப் பறந்தன. நாங்குனேரியில் சட்டையில்லாமல் நடந்தால் ஒன்றும் விகல்பமாகப் பார்க்கமாட்டார்கள்.

தேரடி அருகே கார் நிறுத்தவேண்டாமென யாரோ எச்சரிக்க,  டிரைவரிடம் “ அந்த சிகப்பு கம்பி கதவு போட்ட வீடு இருக்குல்லா?. அது நம்ம   வெங்கி வீடுதான். அங்க வாசல்ல நிறுத்திடு. கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு” என்றார் சின்னண்ணா.  மறுபடி… நாங்குனேரியில் யாரும் ஊராரே; யாரும் எவருக்கும் கேளிர்.

பெரியண்ணா தொடர்ந்தார் “ இன்னிக்கு எம்பெருமான் திருநட்சத்திரம். மடத்துல சாப்பாடு உண்டு. ஜீயர் ஸ்வாமியைப் பாத்துட்டு, நேரமிருந்தா, மடத்துல சாப்டுட்டுப் போலாம்”

இதுவா ஆசை? வேறென்னவோ சொல்லப் போறாருன்னுல்ல நினைச்சேன்?

சின்னன்ணா “ கொஞ்சம் வேகமா நடங்கோ. நாழியாச்சு. ஜீயர் கிளம்பிருவர்” கொதிக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல், அனைவரும் தவளையாகத் துள்ளி, வெளிமண்டபத்துள் நுழைந்தோம்.

வலது புறம் மடத்துள் எட்டிப்பார்த்தார் அண்ணா “ ஜீயர் சாமி இன்னும்  வரலை. பெருமாள் சேவிச்சுட்டு வாங்க. “ என்றார் மடத்து வாசலில் காவலில் இருப்பவர். அதோடு “ இதாரு சாமி? “ என்றார் சின்னண்ணணிடம். திருமலை என்ற பாபு அண்ணன் அங்கு அடிக்கடி வருவதால் அனைவருக்கும் தெரியும். நானும் பெரியண்ணனும் எப்பவாவது வருவதால், ஒவ்வொரு முறையும், ஒவ்வொருவரிடமும் நான் யார் என்பதைச் சொல்லவேண்டும். சிலருக்குத் தந்தை வழி மூதாதைகள் தெரியும். சிலருக்குத் தாய்வழியில். இல்லையென்றால், அண்ணன் பெயர் சொல்லி அவரது கடைசி தம்பி என வேண்டும். ஊர்க்காரர்களுக்கு நம் முகம் சற்றே தெரிந்த முகம் போல சந்தேகம் வந்தால், கேள்விகள் வந்துவிடும் ‘ டே அம்பி. சித்த நில்லு. நீ யாரு பிள்ளை?” எனக் கேட்கும் மங்கைப் பாட்டியிலிருந்து, “ அங்! கஸ்தூரி மாமா பையன் ! அப்படிச் சொல்லு. சும்மா, தூத்துக்குடி, அவன் இவன் -னுண்டிருக்காதைக்கி” என்று நம் வாழ்வை சட்டையே செய்யாமல், சொல்லும் தோத்து மாமா வரை…

பாபு அண்ணன் “ இவன், என் கடைசி தம்பி.. பம்பாயில..”   மன்னி அதற்குள் “ நேரமாச்சு. வந்து பேசிக்கலாம். நடை சாத்திடுவா”

“இல்லடி. அவர் , இவன் யாருன்னு…”


“ எழுவது வருஷமா அவரும் அங்கதான் நின்ணுண்டிருக்கார். பத்து நிமிஷத்துல எங்க போகப்போறார்?” என்றவள் என்னைப் பார்த்து “  யாராச்சும் கிடைச்சா, பனரப் பனரப் பேசிண்டே நிப்பர்டா உங்கண்ணா.”  மேலும் விரைவாக அண்ணன் முன்னே நடந்தார்.

“ஸ்ரீவரமங்கைத் தாயார் சன்னதி , சேவிச்சுக்கோ. இவளுக்குத்தான் இந்த மடம், ஊர் , சொத்து எல்லாம். பெருமாள்  சும்மா , நம்ம  நாலாம் நம்பராத்து தோத்து மாமா வாசல்ல உக்காந்துண்டிருக்கற மாதிரி இருந்துண்டிருக்கார்”  யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். திருனெல்வேலிக்காரர்களுக்கு, சன்னதியில் நிற்கும்போதும் லொள்ளு போகாது.

அவசரமாக வெளிவந்து மடத்தின் படிகளை ஏறும்போது கட்டியக்காரர் “ சரியியே” என்று முழங்குவது கேட்டது. அனைவரும் பரபரப்பாக தூணை ஒட்டி நின்றனர். ஜீயர், முக்கோல் பிடித்தபடி மெல்ல நடந்து போவது தெரிந்தது. சிலர் சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்க, பெண்கள் முழங்காலில் மடிந்து வணங்கினர். அறு நூறு ஆண்டுப் பழக்கம். உதிரத்தில் ஓடுகிறது.

“சாமி வந்துட்டாவ. சீக்கிரம் சேவிச்சிட்டு வாங்க. இன்னும் பத்து நிமிசம்தான்” அவர் இன்னும் என்னை பார்த்த பார்வையில் ‘இவன் யாரு?” என்பது தொக்கி நின்றது.

ஜீயர் வீற்றிருக்க , பக்கவாட்டில் விழுந்து சேவித்தோம். ஜீயர்,  திருமலை அண்ணனைப் பார்த்தார் .  கை குவித்து வாய் மூடி வளைந்து அண்ணன் “ ஸ்வாமி, இவர் மூத்தவர்  மன்னார். இவன் கடைசி. ஸ்ரீபாத தீர்த்தம், ஜீயர் ஸ்வாமி கடாட்சம் வேணும். யதேஷ்டம்”என்றார் படபடப்பாக.

பெரியண்ணன் கையால் வாய் புதைத்து “ ஸ்வாமின், அடியேன் ரிடையர்ட் ஆயாச்சு. இப்ப பையனோட …” ஜீயர் கேட்டுக்கொண்டார். பின்னர் என்னைப் பார்த்து,

“ இவன் என்ன செய்யறான்?” என்றார்

திருமலை அண்ணன் பரபரப்பாக “ டேய். ஜீயர் கேக்கறார். சொல்லு”

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் “ சயன்ஸ்  சாஃப்ட்வேர் “என்று ட்விட்டர் அடித்தேன். வைணவ பரிபாஷை சுட்டுப்போட்டாலும் எனக்கு வருவதில்லை.

அருகில் இருந்த ஏ.ஜி. கோபாலன் அண்ணன் “ இவன் சயன்ஸ்ல எழுதறான். சம்ப்ரதாயத்துலயும் என்னமோ எழுதுவன், ஸ்வாமின்” என்றார். இதற்கு என்ன சொல்லப் போகிறார் ? என எதிர்பார்த்திருந்தேன். ஜீயர்களுக்கு , இதுபோல் ஆற்றில் ஒரு கால், சேற்றிலொரு கால் வைப்வர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இராது.

“ஒண்ணு சொல்றேன். இப்ப சயன்ஸ் எழுதறவா, திருமால் தசாவதாரம்னா, மீன், ஆமைன்னு பரிணாம வளர்ச்சின்னு சொல்லிடறா. அது சரியில்லை” என்றார் ஜீயர்.

அதன்பின் ஒரு விளக்கம் அளித்தார். இப்போது நினைவில்லை. கேட்டு எழுதுகிறேன்.

“ஸைக்காலஜி பத்தி எழுதறேன்னா… கொஞ்சம் ஜாக்ரதையா எழுதணும். மனசுன்னு ஒன்ணு இருக்கே, அதுக்கு ஸ்வப்ன அவஸ்தைன்னு ஒண்ணு உண்டு. அதுல யதார்த்தமும் இருக்கும், ஸ்மரணை தப்பின படியின் நிலையும் இருக்கும். அதான் மனசு சொல்றதையெல்லாம் கேக்கப்படாது, அடக்குன்னு பெரியவா சொல்றா”

‘ஸ்வப்னா அவஸ்தைன்னா ?’ 

ஜீயர் அருகே இருந்தவர்கள் கடுப்புடன் பார்த்தார்கள் . அவருக்கு நேரமாகிவிட்டது. இந்தப் பயல் என்னமோ கேட்டுக் கொண்டிருக்கிறான்….

“ ஸ்வப்ன அவஸ்தைக்கு ஒரு உதாரணம். நாமே செத்துப் போய், பிணமாக் கிடக்கற மாதிரி கனவு வரும். அதை நாமே தூக்கிண்டு போறமாதிரியும் வரும். நம்மை நாமே சுமந்து… இதுக்கு என்ன சொல்லுவை?” ஜீயர் சிரித்தார்.

Photo Courtesy : Sri. A.G.Gopalan

“Interpretation of Dreams ல  Sigmund Freud  என்ன சொல்றான்னு பாக்கணும் ஸ்வாமி” என்றேன். “பாரு “என்றவர் “ அப்புறம் வேளை இருந்தா  வா. சொல்றேன்” என்றார்.

பெரியண்ணன் ஒரு கேள்வியுடன் அமர்ந்திருந்தார். மடத்தில் சாப்பிடவேண்டும். அது பெரிய விஷயமா? நேரமாகிவிட்டதே? சாப்பாடு பந்தி முடிந்திருக்கும்.

ஜீயர் சட்டென அண்ணனைப் பார்த்தார்  “ மதியம் அமுது ஆயாச்சா ?”

அண்ணன் தயங்கி “ இன்னும் ஆகலை ஸ்வாமி. “

“மடத்துல ஆகலாமே ? “ என்றவர் தலையுயர்த்தி அருகில் நின்றிருந்தவரிடம், ‘இங்கயே அமுது ஆகட்டும்” என்றபடி எழுந்து சென்றார்.

மடத்தின் உள்புறம் குறுகலான பாதையில் வரிசையில் சென்றோம். எங்க்கெங்க்கொ வளைந்து, திடீரென ஒரு மண்டபத்தில் அது முடிந்தது. “இது முதல் தட்டு இல்லையா?” என்றார் பெரியண்ணா திகைத்து.

“ஆமா, பெரியவாளுக்கெல்லாம் இங்கதானே தளிகை பரிமாறுவா?” என்றார் ராமானுஜம் எங்கிற ராமாஞ்சு மாமா. அவர் அண்ணனின் நண்பர். எங்களுடன் , அன்று ஜீயரைக் காண சிவகாசியிலிருந்து வந்திருந்த இரு குடும்பத்தினரும் இருந்தனர். இது ஜாதீயக் கட்டு அல்ல. அனைவருக்கும் உண்டு.

பெரியண்ணா திகைத்து அமர்ந்தார் “ நான் ஹைஸ்கூல் படிக்கறச்சே இங்க மடத்துல சாப்டிருக்கேன். எங்களுக்கெல்லாம் மூணாம் தட்டு – அதான் கடைசி. முதல் தட்டுல, பெரியவர்கள், ஆச்சார்யார்கள், ரெண்டாம் தட்டுல  க்ருஹஸ்தர்கள் அதன்பின் கடைசில சிறுவர்கள். “

அண்ணா தொடர்ந்தார் “ ஸ்கூல்ல இருந்து இங்க வர்றதுக்கு 15 நிமிஷம். சாப்பிட 10 நிமிஷம். அப்புறம் திரும்ப ஓடணும். ஒருமணி நேரம் லஞ்ச்சு வேளை. வீடுகள்ல சாப்பாடு இருக்காது. மடத்துல சாப்பாடுன்னா அந்த ஒரு வேளை போஜனம் தான் , ஸ்கூல்ல படிக்க வைச்சது”

ராமாஞ்சு மாமா, “ இந்த உடம்பு, இந்த வாழ்க்கை, இதெல்லாம் இந்த மடம் போட்ட பிச்சை. இந்த மடம் அன்னிக்கு சோறு போடலைன்னா, நாமெல்லாம் இருந்திருக்கவே மாட்டோம்” என்றார் அகம் குழைந்து.

அண்ணா தொடர்ந்தார் “ இலவச மதிய உணவுத் திட்டம் எல்லாம் வர்றதுக்கு முன்னாடி இதெல்லாம். இங்க நான் சாப்பிட்டு 62 வருஷமாச்சு. அப்பெல்லாம் ஒரே ஒரு நினைவுதான் வரும். என்னிக்காவது ஒரு நாள் அந்த முதல் தட்டுல நாம உட்கார்ந்து சாப்பிடணும்னு… நிறைவேறாமலே இருந்தது. இன்னிக்கு…”  சட்டென நிறுத்தினார்.

“இலையில பாத்து சாதிங்கோ” என்றார் ஒருவர் பரிமாறுபவரிடம். “பெரியவர்களுக்கு நீ தடா புடான்னு சாதிக்காதே. கேட்டுப் பரிமாறணும்.”

“ஓய்.நாப்பது வருஷமா நானும் பரிமாறிண்டிருக்கேன். எனக்குத் தெரியும்வே. சும்மாயிரும்.”

அண்ணா, கொஞ்சம் சாதம் போட்டதும் “ போறும்” என்றார். எல்லாம் குறையக் குறைய வாங்கிக் கொண்டார். “இருக்கு ஓய்! நீர் சங்கோஜப் படாம சாப்பிடும். வயறு நிறையலைன்னா தாயாருக்கு மனசு கேக்காது”

ரசம் உறிஞ்சிக்கொண்டிருந்த ஒருவர் “ மடமே அவளோடதுதான்னேன்.” என்றார். 

“ஓய். அவள், பெருமாளை மடப்பள்ளி பக்கமே வரப்படாதுன்னுட்டா தெரியுமா? ‘எங்குழந்தைகளுக்கு எது வேணும், எவ்வளவு வேணும்னு எனக்குத் தெரியுமா,உமக்குத் தெரியுமா? நீர் உள்ள போய் இருந்து வர்றதுகளுக்கு சேவை சாதியும் போம்”ன்னுட்டா சீவரமங்கைத் தாயார். அதுனாலதான் இன்னிக்கும்  மடம் சோறு போடறது. அவள் தர்றா. “

“கொஞ்சம் அதிகம் வாங்கிக்கோண்ணா” என்ற என்னைப் பார்த்து மெல்ல பக்கவாட்டில் சாய்ந்தார் அண்ணா “மூணாவது தட்டுல பசங்க இன்னும் இருப்பாங்கடா பசியோட. அவங்க சாப்டட்டும். என்னை மாதிரி எத்தனை பேர் முதல் தட்டுல ஒரு நாள் சாப்பிட்ணும்னு நினைச்சிண்டிருக்கானோ?”

வெளியே வரும்போது “பாபு, மடத்துக்கு பணம் எப்படி அனுப்பறதுன்னு கேளு. NEFTல அனுப்பிடறேன்”

மடத்துத் திண்ணையில் ஒருத்தர் கால் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தார். சினேகமாகச் சிரித்து அண்ணனிடம்  “ அமுது ஆச்சா ?” என்றவர் “ யாரு எப்ப என்ன சாப்ட்டா நிறையும்னு அவளுக்குத் தெரியும். அது அவள் கணக்கு. உன் பசி அடங்க அறுவத்து ரெண்டு  வருசமாச்சு. சிலருக்கு இன்னும் கொடுத்து வைக்கலை.” என்றார்.

இரு அண்ணன்களும், ராமாஞ்சு மாமாவும் அங்கு ஒரு கணம் நின்றனர். கண்ணாடியைக் கழற்றித் துடைத்து, “ மடத்து ரசம் அன்னிக்கு மாதிரியே இன்னும் அதே காரம். கண் கலங்கறது”  என்றார் அண்ணா. ராமாஞ்சு மாமா ஆமோதித்துத் தலையசைத்தார்.

கண் கலங்கியது ரசத்தால் அல்ல. அனைவருக்கும் தெரியும். அது சோறு.

மடத்துச் சோறு.

கடனும் காதலும்

“இது என்ன விலை?” முன்னும்பின்னும் அந்த செண்டுபாட்டிலை நகர்த்தி, கண்களை இடுக்கி விரித்து, ஏதோ கதகளி அபிநயம் பிடித்துக்கொண்டிருந்தான் நண்பன் கிரீஷ்.

“கொடு”என்று பிடுங்கி வாங்கினேன். ”பன்னிரெண்டு யூரோ”

”அப்ப..” மனதுள் நூறால் பெருக்கி, 12ஐ 82ஆல் பெருக்கி ஏதோ செய்துவிட்டு “ ஆத்தீ. இவ்வளவா,? நம்மூர்ல பாதிவிலைக்கு வாங்கலாம்” என்று கீழே வைத்தான். இதேபோல் சில பொம்மைகளையும் எடுத்து, திகைத்து திருப்பி வைத்த வண்ணம் இருந்தான்.

முப்பத்தி ஐந்து வயது, கிரீஷுக்கு. ஏழு வயதில் ஒரு பெண். ஐந்து வயதில் ஒரு பையன். அரசு வேலைக்குப் போகும் மனைவி. சொந்த வீடு. சொர்க்க வாழ்வு..

”ரூம் வரை நடந்துட்டோம்னா, டாக்ஸி செலவு மிச்சம், வர்றீங்களா?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நடக்கத் தொடங்கினான்.. மூச்சிரைக்க அருகில் நடந்து வருகையில், கேட்டு விட்டேன். “கிரீஷ்,பைசா கொண்டுவந்திருக்க.ஆனா ஒண்ணும் வாங்கவும் இல்ல. வாங்கணும்னு ஆசையுமிருக்கு. என்ன ப்ரச்சனை?”

வேகத்தைக் குறைத்தான் கிரீஷ் “ என்ன சொல்ல? செண்ட்டு வாங்கிட்டு வாங்க-ன்னா மனைவி. பையனுக்கு ரிமோட் கார். இது மட்டுமே கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய். இன்னும் மத்ததெல்லாம் சேத்தா, பத்தாயிரம் துண்டுவிழும். அடுத்தமாசம் ஈ.எம்.ஐ கட்ட உதவுமேன்னு தோணுது.”

“ரொம்ப கணக்குப் பாக்காத” என்றேன். ‘வாழ்க்கையில கணக்குப் பாக்க முடியாத சந்தோசம் நிறைய இருக்கு”

அவன் நின்றான் . குளிரில் வாயிலும் மூக்கிலும் புகை பறந்தது “ எனக்கு வாங்கணும்னும் ஆசை இருக்கு. அதே நேரம் இருக்கிற கடனெல்லாம் பாக்கறச்சே, பயமாவும் இருக்கு. அனுபவிப்பதைத் தள்ளிப்போடுவோம்னு தோணுது. ஆனா வீட்டுல இதைப் புரிஞ்சிக்க மாட்டாங்க. நான் கஞ்சப்பிசிநாரின்னுதான் என் மனைவி அவ வீட்டுல சொல்லியிருக்கா”

சட்டென அவன்மீது அனுதாபம் எழுந்தது.. ஆசைகளற்ற ஜடமல்ல அவன். ஆசைகளோடு, அதீத யதார்த்த கவலைகளும் ஒருசேரப் பொங்கி , பொருள் வாங்கும் நேரத்தில் அவனைத் தடுக்கிறது. பொறுப்புகளுள்ள ஒரு கணவன், தந்தை அங்கு தனியாக பிளவுபட்டு நிற்கிறான்,தடுமாறுகிறான். ஆண்களின் உலகம் பலநேரங்களில் இப்படியான பிளவுகளின் நடுவில்தான் இருக்கிறது.

ஊருக்கு வந்ததும். இரு வாரங்களில் அவன் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. கிரீஷின் குழந்தைகள் புதுமுக வெட்கத்தில் பேச மறுத்து,சிறிது நேரம் கழித்து தங்களது பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்துவந்து காட்டி, கவனத்தை ஈர்க்க முயற்சித்தன. உணவிற்குப்பின் அனைவரும் அமர்ந்திருக்கையில் “ இவருகிட்ட கொஞ்சம் தாராளமா இருக்கச் சொல்லுங்கண்ணே” என்றாள் அவன் மனைவி. ”எதுக்கெடுத்தாலும் கணக்கு பாக்கறாரு. எனக்கு வாங்கறத விடுங்க. பிள்ளைங்களுக்கு வாங்கறதுக்குக்கூட ஒரு கஞ்சத்தனம். என்னத்த சேத்துவைக்கப் போறோம்?”

அவன் சற்றே நெளிந்தான். குழந்தைகள் டிவியில் ‘டோராவின் பயணங்கள்’ பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளறைக்குப் போனோம். ”பண நிலமை பத்தி இவங்க கிட்ட பேசியிருக்கியா?” என்றேன் அவனிடம்.

“ஆமா” என்றவன் சற்றே தயங்கி “ அது பத்திப் பேசறதே அவளுக்குப் பிடிக்கல. நீங்க பாத்துக்கோங்க என்கிறாள்.”

“என் வருமான வங்கிக்கணக்கு யூஸர் நேம், பாஸ்வேர்டு கூட இவர்கிட்டத்தான் கொடுத்துவச்சிருக்கேன். எனக்கு தனியா சேத்துவைச்சுக்கணும்னு எல்லாம் கிடையாது” என்றாள் பெருமையுடன்.

“இது ஒரு பெருமையா? உனக்கு அக்கறையே கிடையாது. அவ அக்கவுண்ட்லேர்ந்து ஒரு ம்யூச்சுவல் ஃபண்டு , எஸ்.ஐ.பி போட்டுக்கொடுத்தேன் சார். அதுல இப்ப என்ன லாபம் வந்திருக்குன்னு கேளுங்க, தெரியாது அவளுக்கு.” என்றான் சூடாக.

“எனக்கு ஏன் தெரியணும்? உங்க வேலை அது. உங்க கஞ்சத்தனத்துக்கு சப்பக் காரணம் கட்டாதீங்க.”

”சரி, வீட்டுக்கடன் எவ்வளவு பாக்கி, தெரியுமா உனக்கு?” நான் இருப்பதை மறந்து இருவருக்கும் உரையாடல் சூடாகத் தொடங்கியது.

“அதான் ஃபினான்ஷியல் மேட்டர் எல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டீங்கல்ல? கலியாணத்தும்போது என்ன சொன்னீங்க?”

“அட, அதுக்காக ஒண்ணுமே தெரியாம இருக்கறதா? கடனை விடு, உன்னோட ஃபார்ம் 16 இன்னும் வரலை..,. எதாவது யோசிச்சியாடி நீ?”

பிரச்சனை என்னைத் தாண்டி இருவரின் குரலிலும் உயர்ந்தது. குழந்தைகள் எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் டி.விக்கு போய்விட்டன. பத்து நிமிடத்தில் இருவரும் அமைதியாக, விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். சுரத்தே இல்லாமல் விடைகொடுத்தனர். ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே, சாலை முடிவு வரை, நடந்தேன். குல்மோஹர் பூக்கள் மவுனமாகச் சொரிந்துகொண்டிருக்க, மாலை இதமாக இருக்க,மனம் பாரமாக இருந்தது.

இருவரும் அன்பும் பொறுப்பும் உள்ளவர்கள்தாம். ஆனால் பங்கிட்டுக் கொள்வது என்பதன் பேரில் , ஒருவர் மீது மட்டும் முக்கியமான பொறுப்பு ஒன்றை முழுமையாகச் சுமத்திக்கொண்டு, இப்போது அதனைக் குற்றப்படுத்துகிறார்கள். பொறுப்பு என்பது இருவருக்கும் பொது என்று இருவரும் உணரவில்லை. ஆரம்பகால உணர்ச்சிவசப்படுதலில் செய்த தவறுகள் பலவற்றில் ஒன்று இது.

பெண்களில் பலருக்கு நவீன முதலீடுகள், வீடு வாங்குவது, லாப நட்டங்கள், கடன் வழிமுறைகள் பற்றித் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள விருப்பப்படுவதில்லை. ‘அதெல்லாம் அவரு பாத்துக்குவாரு. எனக்கு ஒன்னுமே தெரியாது’ என்று பெருமையாகச் சொல்வது இருபது வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் சாத்தியப்படலாம். இன்றைய நிலை வேறு. படித்த பெண்களே பலரும் செல்வ ஆளுமை, வருமான ஆளுமை,முதலீட்டு ஆளுமைகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதெல்லாம் ஆண்களின் தளம் என விட்டுவிடுகிறார்கள்.

எதிர்பாராது எதாவது நடந்துவிட்டால் எப்படி ஆயுள் காப்பீட்டைப் பெறுவது, கணவன் எங்கெங்கெல்லாம் முதலீடு செய்து வைத்திருக்கிறான்? என்பதை அறிந்து வைத்திருத்தல், வங்கிக்கணக்கில் பணம் பெறும் உரிமை தனக்கு இருக்கிறதா?என்று அறிதல், இவையெல்லாம் அடிப்படை அறிவு. இதில்லாமல், ஒரு அசம்பாவிதம் நேர்ந்தால், குடும்பம் திணறும். திணறுகின்றன.

இந்த முக்கியமான விஷயங்கள் ஆரம்பகாலத்திலேயே தெளிவாகப் பேசப்படவேண்டும். இதற்கென ஒரு நேரம் செலவிடுவது , ரொமாண்ட்டிக்காக சினிமா போவதை விட அவசியம். சேமிப்பு, காப்பீடு, முதலீடு முதலியவற்றில் இருவருக்கும் பங்கு இருப்பது அவசியம். “உனக்கு ஒன்னும் தெரியாது, நான் பாத்துக்கறேன்’ என்பதும் “ அவருதாங்க எல்லாமே பாக்கறது’ என்று பெருமையாகச் சொல்வதும் ஆபத்து.

திருமணத்தின் பின் ஆண்களுக்குப் பேச்சு என்பது வீடுகளில் கணிசமாகக் குறைகிறது. முதலில் இருந்த ஆர்வம், கரிசனம், நகையுணர்வு , திருமணமான சில மாதங்களில் பிசுபிசுத்துப்போவதை அதிர்ச்சியுடன் , மனைவி கவனிக்கிறாள். அவனைப் பொறுத்தவரை, “அதான் கலியாணம்தான் ஆயாச்சே? நடக்கவேண்டிய வேலையப் பார்ப்போம்’ என்று யதார்த்தமெனும் போர்வையுள் நுழைகிறான். அவளுக்கு ‘இந்தாளு, கலியாணத்துக்கு முந்திப் பேசின பேச்சு என்ன? இப்ப இருக்கற இருப்பென்ன?” என்று அதிர்ச்சியும், ஏமாற்றமும் பொங்குகிறது. முதல் விரிசல் இந்த ஏமாற்றங்களில் உருவாகின்றன. ஆலோசகர்கள், ’இதை முன்னிட்டேனும், லாப்டாப், மொபைல் சாட், டி.வி போன்றவற்றை ஒரு மணி நேரமேனும் மூடிவைத்துவிட்டு, அரட்டை அடியுங்கள் ‘ என்கிறார்கள்.

இந்த பேச்சுக்குறைவெனும் பிளவில் நழுவி விழுந்து தொலைந்து போகும் பலவற்றில் ஒன்று குடும்ப ஆதாரம் பற்றிய செய்திகளும், திட்டங்களும்.ஆண்கள் இதெற்கெனப் பேச முயலவேண்டும். அது இல்லாத பட்சத்தில், மனைவி, ‘நம்ம வீட்டுக்கடன் என்னாச்சு?’என்றாவது கேட்டுத் தூண்ட வேண்டும். ம்யூச்சுவல் ஃபண்டுகள், டெப்பாஸிட்டுகள், பி.பி.எஃ என்றால் என்ன? என்பதன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும்.உரையாடல்களில் அன்பு வளர்வதோடு, வீட்டின் நிதி ஆரோக்கியமும் வளரும்.

சப்தமற்ற , அதிசய மாலைப்பொழுது அது. ஸ்கூட்டரைக் கிளப்பும் ஓசையைக்கூட தவிர்க்க விரும்பினேன். மவுனம் நல்லதுதான். ஆனால் இயற்கை கூட தனது நிசப்த்தின் மூலம் நம்மிடம் பேசத்தான் விழைகிறது.

புடவைக் கலர்

”இந்தப்புடவை எப்ப வாங்கினது,சொல்லுங்க பார்ப்போம்”

”இது உங்கம்மா வீட்டுல கொடுத்தது” என்ற கணவர், முகம் மாறுவது தெரிந்து அவசரமாக மாற்றுவார் ”இல்ல, போன தீபாவளிக்கு உங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தமே, அப்ப..”

“நீங்கதான் வாங்கிக்கொடுத்தீங்க.”

“அங்?” என்று விழித்துவிட்டு “ ஆ…மா… ரெண்டு வருஷமுந்தி, கலியாண நாளுக்கு வாங்கினோம்..போத்தீஸ்லதானே?”

“ஒன்ணும் நினைவிருக்காதே உங்களுக்கு?. போன வருஷம் பிறந்தநாளைக்கு வாங்கினது. இந்தப் பச்சைக் கலர்ல இல்லைன்னுதானே டி.நகர் முழுக்கத் தேடினோம்?..”

இதன்பின் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ “ என்மேல எங்க அக்கறை இருக்கு உங்களுக்கு? இதெல்லாம் வீட்டுல அன்பும் பாசமும் இருக்கறவங்களுக்குத்தான் ஞாபகமிருக்கும்” என்று தொடரும் உரையாடல்கள். ஒரு அசட்டுச் சிரிப்போ அல்லது சிறு வேலையில் ஈடுபடுவதுபோன்றோ எதோவொரு வகையில் சூழ்நிலையைத் தவிர்க்கப்ப்பார்த்து, கணவர் நழுவுவார். “அது.. உனக்கு எந்த புடவையும் எடுப்பா இருக்கும், இது என்ன ஸ்பெஷலா..?”

இந்த நாடகங்கள் சில வீடுகளில் தெரிந்தே இடப்படுகின்றன. நாளடைவில் அது நிஜமாகிப்போய்விடுகின்றன. இந்த நாடகங்களின் பின்னணியைச் சற்றே அலசுவோம்.

தன் கணவனின் கவனம் தன்மேல் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துக்கொள்வதில் ஒரு மனைவி பெருமையடைகிறாள். இது பிறருக்குத் தெரிவிப்பது மட்டுமல்ல, தனக்கே ஒரு முறை நிச்சயமாக்கிக் கொள்கிறாள். பிறர் இருக்கும் சூழலில், இக்கவனம் சோதிக்கும் கேள்விகள், கணவனால் வேறுவிதமாக அறியப்படுகிறது.

“நான் இவளிடம் விழுந்து கிடக்கிறேன் என்பதை என்/அவள் வீட்டாருக்குக் காட்டும் முயற்சி’ என உள்மனதில் ஒரு எச்சரிக்கை அவனுள் எழுகிறது. ஆணாதிக்க சூழ்நிலையில் வளர்ப்பும், வாழ்வுமான அவனது மனம் , எச்சரிக்கையை உரத்தகுரலில் மேலெழச் செய்து, எதிராக்கச் செயலை, வேறுவிதமாக நடத்த முயல்கிறது. ‘ இக்கேள்விகளுக்குப் பதில் தெரிந்தாலும், தவிர்த்துவிடு”

அந்த நினைவே இல்லாதது போல ஒரு நடிப்பை, போலித்தடுமாற்றத்தை , நகையுணர்வாக அவன் சார்ந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது. சரியாக அவன் பதில் சொல்லியிருந்தால், வெகு சிலரால் மட்டுமே அது அங்கீகரிக்கப்படும்.”அம்மாவுக்குப் புடவை வாங்கிக்கொடுக்கணும்னு நினைவில்ல, பொண்டாட்டியோட போன வருஷப் பிறந்தநாளுக்கு வாங்கின புடவை கலர் , ஞாபகமிருக்கு. ” இப்படி ஒரு வார்த்தை போதும்.

தனது அன்பை வெளிக்காட்டுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டு ஆண் மிக எச்சரிக்கையாகிறான். இடர்கள் வரும்போது, மூளை அதனை முழுதும் தருக்க ரீதியில் கிரகித்து, ஆராயுமுன்னரே, மூளையின் உணர்வு ஆளுமைப் பகுதியில் முதலில் உள்வாங்கிவிடுகிறது. அதன் எதிராக்கம், ‘இதனைத் தவிர்த்துவிடு’ என்பதாகவே பெரும்பாலும் இருக்கும். இது கற்கால மனிதன் காலத்திலிருந்தே தோன்றிடும் எச்சரிக்கை உணர்வு. இப்போது நம்மை சிங்கமோ புலியோ அடிக்கும் அபாயமில்லை. ஆனால், மூளை இன்றும், எந்த ஒரு சவாலையும் இந்த உணர்வு ஆளுமைப் பகுதி துணைகொண்டும் பார்க்கிறது. எனவே, தர்மசங்கடமாக நிலையை ஒரு ஆண் தவீர்க்க நினைக்கிறான்.

“புடவை கலரெல்லாம் எப்படிம்மா ஞாபகமிருக்கும்? நேத்திக்கு வாங்கின சட்டை கலரே எனக்கு நினைவில்லை” ஆண்களின், இதுபோன்ற உதாசீன, தன்னை மிக பிஸியான ஆளெனக் காட்டிக்கொள்ளூம் எத்தனிப்புகள் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன.

“அவனுக்கு காலேல என்ன சாப்பிட்டான்னே நினைவிருக்காது. போனவருஷம், ஸ்கூட்டரை கடையில நிறுத்தி வைச்ச ஞாபகமே இல்லாம திரும்பி வந்துட்டு, ஸ்கூட்டரைத் தேடினானே?” என்று பேசப்படுபவை, ’ உன் புடவையெல்லாம் அவனுக்கு முக்கியமில்லை’ என்பதாக அவளுக்குச் சொல்லப்படும் மறைமுக செய்திகள்.

உண்மையில் பிரச்சனை புடவைக் கலர் இல்லை. அது அவள்மீது அவன் கவனம், அன்பு, ஈர்ப்பு எந்த அளவில் இருக்கிறது? என்பதைப் பறைசாற்ற அவளிடமிருந்து வந்த கேள்வி. இது மற்ற பெண்களுக்கும் தெரியும். ஆனால், தன்வீட்டு ஆண்களுக்கு என வரும்போது, பெரும்பாலும் அவர்களது நிலைப்பாடு அவனைச் சார்ந்ததாக இருக்கும். அவள் வயதொத்த சிலர் “ அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும். ஏன், பொண்டாட்டி புடவையோட கலர் நினைவுல இருந்துட்டாத்தான் என்ன?” என்று கேட்டாலும், அவர்களது கணவர் என்று வரும்போது “ அவருக்கு இதெல்லாம் தெரியாது’ என்று பதில் வருவது இயற்கை.

இந்த நாடகங்களைத் தாண்டி பலர் வந்துவிடுகிறார்கள். ஒரு சீண்டலாக, நகையுணர்வாக அது கலந்துவிடுகிறது. ஆனால், சிலர் மனதில், ‘இவன் என்னைக் கவனிப்பதில்லை’ என்ற எண்ணம் வேரூன்றிவிடுகிறது. ஒரு எதிர்வினை, அலட்சியச் சொல்லாகவோ, செயலாகவோ வருவதை, அவன் குறித்தான மதிப்பீடுகளில், ஒரு நேர்கோட்டின் நீட்சியாக , இவர்கள் புள்ளிவைத்து, வலுப்படுத்திக்கொள்கிறார்கள். தன் கணவன் குறித்து ஒரு வெறுப்பும் கோபமும், ஏமாற்றமும் சிறிதுசிறிதாக வளர்ந்துவிடுகிறது.

90களில் மணமானவர்களில் சிலர் இதில் சற்றே மாற்றத்தைக் கண்டிருக்கலாம். அது இடம், பொருளாதார , தான் தழுவிய சமூகத்தின் மாற்றங்களின் பாதிப்பு என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். இந்த கவனமற்று இருப்பதாகப் போடப்படும் போலி நாடகங்களை நிஜமென நம்பி, முன்முடிவுகளுடன் இருப்பவர்கள் இன்றும் உண்டு. “எங்க அக்கா புருசன், ஒரு டைப்பு. அவளுக்கு என்ன வேணும்னுகூட கேக்க மாட்டாரு மனுசன்’ என்பவர்கள் , அவர் எப்போதுமே அப்படித்தான் இருக்கிறாரா, இல்லை நம்ம முன்னாடிமட்டும்தான் இப்படியா? என்றெல்லாம் ஆராய்ந்து கேட்கமாட்டார்கள்.

ஓரிரு முறை இப்படி மாறுபட்ட நிகழ்வுகள் இருப்பின், மனைவி ‘சரி, இந்தாளு வேஷம்தான் போடறாரு,”என்பதாக அறிந்துகொண்டு, கணவனிடம் வெளிப்படையாகப் பேசி சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது மிக அவசியம். தவறான முன்முடிவுகள், காலப்போக்கில் வேறு எண்ணங்களை உருவாக்கும். உளவியல் ரீதியில் ஒரு கருத்துப்பிழை delusion , தன் கணவனைக்குறித்து எழும் வாய்ப்பு இருக்கிறது. அவன் நடத்தையைச் சந்தேகித்தல், அவனது முடிவுகளை எதிர்த்தல், குழந்தைகளை அவன் நியாயமாகவே கண்டித்தாலும், அவர்களுக்குச் சாதகமாக அவன் மீது சண்டை போடுதல் என்பவை இந்த தவறான முன்முடிவுகளின் வளர்ச்சியும் நீட்டலுமே.

பொதுவிடத்தில் மனைவியிடம் சில வார்த்தைகள் அன்பாகப் பேசுவதில் தவறில்லை என்றும், அவள் குறித்து என் கவனம் இருக்கிறது என்பதைக் காட்டுவது ,எங்களது ஆரோக்கியமான மணவாழ்வின், அன்பின் ஆழத்தைக் காட்டும் ஒரு குறி என்றும், ஆண்களுக்கு உணர்த்தப்படவேண்டியது அவசியம். தன் மனைவியிடம் அன்பாக இருப்பது, தன் அன்னையிடமோ, சகோதரிகளிடமோ பாசத்தைக் குறைக்காது என்பதை அவர்கள் அடிக்கடி தங்கள் சொற்களால், செயல்களால் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருப்பின், அதனைச் செய்தே ஆகவேண்டும். மனைவி மட்டுமே எப்போதும் அன்பை, கவனத்தை இழக்கவேண்டியதில்லை- அது போலித்தனமான செயலாக இருந்தாலும்.

ஏனெனில், நிகழ்வுகள் போலியோ, உண்மையோ, அந்த நேரத்தில் ,இடத்தில் அது நிஜமாகவே உள்ளங்களைப் பாதிக்கின்றன. இதனை இருவருமே நாடக நிகழ்வாக அறிந்து செயலாற்றவோ, அல்லது நாடகமே நிகழ்த்தாது இயல்பாக நடக்கவோ முடிவெடுக்க வேண்டும்.

பீஷ்ம…

உச்சி வெயிலில், தெருவில் அனைத்து வீட்டுக் கதவுகளும் மூடியிருக்க, மயான நிசப்தத்தைக் குலைக்க, எங்கோ ஒரு இருசக்கரவண்டி உயிர்த்து மரித்த தீன ஒலி முயன்று தோற்றிருந்தது.

வீடுகளின் வாசற்கூரைகளினடியே நடந்தேன். கடைசி வீட்டிற்கு முந்திய வீடு, முடுக்கின் ஓரமாக… கதவு சார்த்தியிருந்தது. அழைத்துப் பார்த்து யாரும் வராததால், முடுக்கினூடே நடந்து, வீட்டின் பக்கவாட்டுக் கதவைத் தட்டினேன்,’யாரு?’ என்ற ஒலியில் நிம்மதியடைந்தேன். டீச்சர் இருக்கிறார்.

சில நிமிடங்களில் கதவு திறக்க, “தூங்கிட்டீங்களோ? சாரி” என்றேன். ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தார். மேலே கழியில் உலர்த்தியிருந்த சேலை காற்றில் நழுவிக் கீழே விழுந்தது.

“செல்வி சொன்னா, டீச்சர் உடம்பு முடியலைன்னு.. வர்றீங்களா? ஆஸ்பத்திரிக்குப் போவோம்?”

“வேணாம். நடக்க முடியாது, வெயில்”
“வாசல் வரை வாங்க. தெருக்கோடியிலதான் கார் நிறுத்தியிருக்கேன். கொண்டு வந்துருவேன்.”
“வேண்டாம்டா” எண்றார் மூச்சு வாங்க ” இந்த வீட்டுக்கு மூச்சுத் திணறலோட வந்தேன். அப்படியே போயிடறேன். உள்ள தண்ணியிருக்கு. எடுத்துட்டு வா”
சற்றே இதமான சூட்டுடன் சொம்பில் வெந்நீர் இருந்தது. துளசி வாசனை. ஒரு டம்ளர் நீர் குடித்து, ஆஸ்த்துமா ஸ்ப்ரேயை எடுத்து ஒருமுறை அழுத்தி இழுத்தார். ஆசுவாசமாக சாய்ந்தபடி.

“உன்னை வரச் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆஸ்பத்திரி போறதுக்கு இல்லை”

“இன்னொரு நாள் பேசலாம். இப்ப ரெஸ்ட் எடுங்க”

அவர் கையை உயர்த்தித் தடுத்தார் ” இத்தனை வருஷமா நீ கேக்க நினைச்சுத் தயங்கினதை நானே சொல்றேன். மெதுவா ஒரு கதையா எழுது”

கதை எழுத இதுவா நேரம்? டீச்சர் சொன்னா சொன்னதுதான். மொபைலில் ரெகார்டரை இயக்கி விட்டுக் காத்திருந்தேன்.

“பொக்காரோ ஸ்டீல் ப்ளாண்ட் போகணும்னா, கல்கத்தாவிலிருந்து ஒரு ரயில்தான் அப்போவெல்லாம் உண்டு. நாளெல்லாம் கொதிக்கக் கொதிக்கப் பயணித்து இறங்கினா, காலையா மாலையான்னே தெரியாது. எப்பவும் சூரியன் இருக்கறமாதிரியே ஒரு உணர்வு. இது 1977ல சொல்றேன். நிலக்கரி பூமி வேற. இரவெல்லாம் அதனோட கொதிப்பு.

திருமணமாகி ரெண்டாவது வருஷம் பொக்காரோவுக்கு மாற்றம். அவருக்கு இஞ்சினீயரிங் காண்ட்ராக்ட்ல அக்கவுண்ட் செக்ஷன் பொறுப்பு. மகள் அப்பத்தான் பிறந்திருந்தா.

குவாட்டர்ஸ் கொடுத்திருந்தாங்க. எனக்கு வேலை இல்லாம போர் அடிச்சதுன்னு, பக்கத்துல இருந்த கன்னட ராவ்ஜி பையனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமா பெயர் பரவி, எதிர்த்த குடியிருப்பு, அக்கம் பக்கத்துல இருந்து குழந்தைகளை ட்யூஷனுக்கு அனுப்பினாங்க. இந்தி கொஞ்சம் தெரியும்ங்கறதாலே , மொழி ஒரு தடையா இல்லை.

அங்கே ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல டெம்பரரியா வேலைபாத்த நம்மூர்ப் பெண்ணு , பேர் வேண்டாம்… ட்யூஷனும் எடுத்துகிட்டிருந்தா. ட்யூஷன்ல இருந்து குழந்தைகள் கழண்டு, என்கிட்ட வர்றது அவளுக்குப் பிடிக்கல. பெற்றோர்கள் எங்கிட்ட அனுப்பறதுல திடமா இருந்தாங்க.

எல்லார்கிட்டயும் நல்லாப் பேசுவேன். அவ புருஷன் அங்க செக்யூரிட்டில இருந்தான். ரெண்டு மூணுதடவை இவரைப் பாக்க வீட்டுக்கு வந்திருக்கான். குவாட்டர்ஸ் ரேஷங்கடையில ஒரு தடவை பாத்திருக்கான். ஹலோன்னு சொல்லியிருப்போம். இவ வீட்டுக்கு ஒரு தடவை கூப்பிட்டா. போனப்போ அவ புருஷனும் இருக்கறதப் பாத்துட்டு, கிளம்பிட்டேன். இரு டீ குடிச்சுட்டுப் போன்னு சொன்னா.

அடுத்த தடவை பாடப்புத்தகம் வாங்க அவ வீட்டுக்குப் போனப்ப அவ இல்ல. அந்தாளு மட்டும் இருந்தான்னு சட்டுனு திரும்பிட்டேன். வழியில அவ என்னைப் பாத்து முறைச்சா. சரி என்னமோ சந்தேகம்னு அவகிட்ட சொல்லத் தொடங்க்கறதுக்குள்ள கிளம்பிட்டா.

அதுக்கு அடுத்த தடவை மீண்டும் புத்தகத் தேவை… போகறதுக்கு ரொம்ப யோசிச்சேன். வழியில்லாம, போனபோது, அவளும் அவ புருஷனும் வீட்டுல இருந்தாங்க. இவனுக்கு எப்ப ட்யூட்டின்னே தெரியலையே?ன்னு சங்கடமாப் பாத்துகிட்டு இருக்கறச்சே, அவ சட்டுன்னு கதவை மூடினா. தலைவிரி கோலமா நின்னு ஒரேகத்தல் அழுகை. ‘நீயும் என் புருஷனும் கள்ளத்தனமா உறவு வைச்சிருக்கீங்க. அதுக்குத்தானே இங்க வர்றே?ந்னு கத்தறா”

திகைச்சுப்போய் நான் எதுவும் சொல்லறதுக்குள்ள, வாசல்ல கூட்டம் கூடியிருச்சு. அந்த ஆளு, இல்ல இல்லன்னு சொல்லிப் பாக்கறான். அவ கேக்கலை ‘நீ எனக்குத் துரோகம் பண்ணறே-ன்னு அவன் மேல பாயறா. வெளிய இதெல்லாம் கேக்குது.

அவன், சொல்லிட்டே வாசலைப் பாக்கறான். ஒரே கூட்டம். ஒரு கணம் என்னைப் பாத்தான்.

பெல்ட்டைக் கழட்டி என்னை மாறி மாறி அடிக்கறான். அலர்றேன் நான். ‘என்ன ஏண்டா பாவி அடிக்கறே?’ணு கேக்கறேன். ” இனிமே என்னைப் பாக்க வருவியா? வருவியா?’ந்னு கத்திகிட்டே அடிக்கறான். அவ கொஞ்சம் கொஞ்சமா அடங்கறா. சுருண்டு நான் விழுந்து கிடக்கறேன். அவன் வாசக் கதவைத் திறந்து ‘தண்டனையை நானே கொடுத்துட்டேன். நான் ஒழுக்கமானவன்.” ந்னு சொல்லிட்டிருக்கான்.

யாரோ ஓடிப்போய்ச் சொல்ல, என் வீட்டுக்காரர் வந்து என்னை சைக்கிள்ல வைச்சுக் கூட்டிட்டுப் போனாரு. அந்த ஐந்து நிமிஷ சைக்கிள் பயணத்துல அவர் பேசவேயில்ல. அடிச்சதை விட அவர் அமைதியா இருந்தது பெரிய நரகவேதனைடா.

பக்கதுவீடு, எதிர்வீட்டுல இருந்து பெண்கள் வந்து கவனிச்சுக்கிட்டாங்க்க. அடுத்த நாள்லேர்ந்து ஒரு குழந்தையும் படிக்க வரலை. நான் வெளிய வந்தா, பெண்கள் வீட்டுக்கதவைச் சாத்தினாங்க.

ரெண்டாவது நாள் என்னை மட்டும் தனியா அவரு கல்கத்தாவுக்கு ட்ரெயின் ஏத்திவிட்டாரு. கல்கத்தாவுல என் மாமா வீட்டுல ரெண்டு நாள். அதுக்கப்புறம் அப்பா வந்து கூட்டிட்டுப் போனார்.

ஒரு மாசம் கழிச்சு மாமியார் வீட்டுலர்ந்து நாலு பேர் வந்தாங்க. யாருக்கும் தெரியாம முடிச்சுருவம்’நு பேச்சு. மகளை அவங்க வளர்க்கறதா முடிவு. அம்மா தலையை முட்டிக்கொண்டு அழுதாள். உன் புத்தி ஏண்டி இப்படிப் போச்சு?ன்னு அவ கேட்டப்ப, நிஜமா நான் செத்துப் போனேன். ‘நீ இப்படி பண்ணியிருக்க வாய்ப்பில்ல. உன் பக்க நியாயத்தைச் சொல்லு’-ன்னு ஒரு ஆளு கேக்கலை. எல்லாருக்கும் அவரவர் மானம், மரியாதை, சமூக வாழ்வு.

அடுத்தாப்புல தங்கை கலியாணத்துக்கு நிக்கறான்னு பேச்சு வந்து தொக்கி நின்றது. என்னை என்ன செய்ய?

அடுக்களையில், இரவெல்லாம் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என ஒரு கூட்டம் மிகத் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருப்பதை அடுத்த அறையில் படுத்திருந்தவள் அறியமுடியாதா என்ன?

“மாப்பிள வீட்டுக்காரங்க பாக்க வரும்போது இவ இருந்தா, ஏன் இருக்கா? ந்னு கேள்வி வரும். என்ன சொல்லப்போறோம்?’

“மெட்ராஸ்ல பி.எட் காலெஜ்ல சீட் வாங்கித் தர்றென்னு மாமா சொல்றாரு. கேட்டுப் பாப்பமா? அப்படியே ஒரு வொர்க்கிங் வுமன் ஹாஸ்டல் அல்லது ஒரு வாடகை வீடு… அவளுக்குன்ன்னு ஒரு வாழ்க்கை அமையணும்ல?’

இரு நாட்களில் அம்மா கேட்டாள் ” உன் வாழ்க்கையைப் பத்தி என்ன யோசிச்சு வைச்சிருக்க?”
“மெட்ராஸ்ல பி.எட் படிக்கறேம்மா. அப்படியே ஒரு வேலைக்கும் பாத்துட்டம்னா”

அண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இரு வருடங்களில் , ராஜஸ்தானியர் அறக்கட்டளைல ஸ்கூல்ல வேலை. அங்கிருந்து ரெண்டு வருஷத்துல இங்க வந்துட்டேன். இந்த வீடு அம்மா எனக்குன்னு எழுதி வைச்சது. எப்பவாச்சும் அண்ணன் வருவாரு. அண்ணி, அந்த தெருக்கோடில நிப்பா. அண்ணன் பையன் ஒரு தடவ வந்தான். தங்க்கச்சி மக கலியாணத்துக்குக் கூப்பிட்டுட்டு “வழக்கத்துக்குக் கூப்பிடறேன். வரணும்னு இல்ல. பாத்துக்க” என்றாள்.

சிந்தித்துப் பார்த்தேன். நானாக சொந்தம் கொண்டாடி வரப்போவதில்லை என்பதை அவர்களுக்கு உறுதி செய்தேன். வானிலிருந்து எவரும் ‘பீஷ்ம’ என்று பூச்சொரியவில்லை. என்னை யார் வைத்து வெல்வது? என்பதை நானே அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தேன். சமூக அந்தஸ்தென்னும் சிகண்டியை முன்னிறுத்து அம்பு எய்தனர். இதோ அம்புகளின் படுக்கையில் கிடக்கிறேன். பீஷ்ம என்பது சத்திய வாக்கு,உறுதி. அதற்குப் பாலினமில்லை.

வாழ்க்கையில, உன்னை நம்பி இருக்கறவங்களுக்கு உண்மையா இருக்க தைரியம் வேணும். அதில்லாதவங்க பெத்துக்கக் கூடாது, வளர்க்கக் கூடாது, திருமணம் செய்துகொளக் கூடாது. இதுதான் என் சாந்தி பர்வ அறிவுரை உனக்கு. ”

டீச்சர் பக்கவாட்டில் சாய்ந்தார். மூச்சு இளைத்தது. டம்ளரில் வென்னீர் சரித்து அவருக்குப் புகட்டினேன். “இத்தனை சிகண்டிகள் கொண்டு அம்பு எய்தவர் மத்தியில், அம்பில்லாமல் , என்னை அடியாத ஒருவன், இளைப்பாற நீர் தருகிறாய். இது கங்கை நீர் ; நீ என் சிறந்த மாணாக்கன் அர்ஜூனன். சந்தேகமே இல்லை.”

டீச்சர் சுவரோரம் ஒருக்களித்துப் படுத்தார். பின் நேராக நிமிர்ந்து… ஆம்புலன்ஸுக்கு போனில் அழைத்துக் காத்திருந்தேன். அது வருவதற்குள் வந்துவிடவேண்டும்…

அவரது உத்தராயணம்.