Category Archives: இலக்கியம்

இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், கதைகள்

ஒரு சொல் அறிய…

பக்தன் என்றால் எல்லாம் இறைவன் சார்ந்ததாகத்தான் சிந்தனையும், செயலும் , சொல்லும் இருக்கவேண்டுமா? இல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஒருவன் செய்யாவிட்டால்  குடிகள் எப்படி தழைக்கும்?’

இந்தக் கேள்வியை ஒரு குருவிடம் ஒருவ்ர் கேட்டதை சமீபத்தில் ஒரு வீடியோவில் காண நேர்ந்தது. அவர் புன்னகையுடன் “ காமம் தேவைதான். எப்பேர்ப்பட்ட காமம் தேவை? உலகம் தொடர்ந்து இயங்க்கத் தேவையான காமம் என்ற அளவில். சம்பாதிக்க ஆசைப்படுகிறாய். பொருள் ஈட்டுவதில், பிறர்க்கும் உதவி செய்கிறாய். அந்த அளவில் நல்லது. உடலைப் பேண, உடற்பயிற்சி செய்கிறாய், நல்ல உணவு உண்கிறாய். அதுவும் பிறருக்கு உதவ, நோயால் பிறரைத் துன்பப் படுத்தாமல் இருக்குமளவில்  ஆரோக்கியத்தைப் பேணல் நன்று. கீதையில் ‘காமோஸ்மி பரதர்ஷப’ எங்கிறான் கண்ணன். “ நான் காமம்” என்பதன் பொருளை  அறிய அதன் முன் வார்த்தையைச் சேர்த்து வாசிக்க வேண்டும். சாத்திரங்கள் அனுமதித்த காமம் நான் என்று வருகிறது. எனவே அதுவும் அளவிற்குட்பட்டதாக இருக்கவேண்டும். எதுவும் அவன் குறித்தே என்பது நினைவில் இருக்கவேண்டும். ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள பலதும் கற்க வேண்டும் நீ”

ஒரு நண்பர் தென் திருப்பேரை பதிகத்தின் முதற்பாசுரத்தை வாட்ஸப்பில் அனுப்பி “ வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளைக்குழா விளையாட்டொலியும் “ என்பதில்  வேத, விழா ஒலிகள் இறைவனைச் சார்ந்ததென்று சொல்லலாம். எப்படி பிள்ளைகள் விளையாட்டொலி இறைவனைச் சார்ந்ததாக இருக்கும் ? என்றார்.

இம்மூன்றும் “ மனம், வாக்கு, இயக்கம்  மூன்றும் இறைவனைக் குறித்ததாக இருக்கவேண்டுமென்பதைச் சொல்வது” என்றேன். வாயினாற்பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது என்பதில் வேத ஒலி – சொல், விழா ஒலி – மனத்தின் ஒருங்கு ( சாமிக்கு ரெண்டு முழம் பூ கொடும்மா, என்ற சந்தையின் ஒலி முதல், நாயன வாத்திய ஒலி வரை அனைத்தும் அவன் குறித்தே). ஆனால் பிள்ளைகள் விளையாட்டொலி? அது இயக்கமல்லவா? அதெப்படி விளையாட்டு இறைவனைக் குறித்து இருக்க முடியும்?  இதில் Jayanthi Iyengar அவர்களது பதிவிலிருந்த பிள்ளைகள் விளையாட்டொலி குறித்த வரிகளை சுட்டிக்காட்டியிருந்தேன்.

எதுவானாலும் அவன் பிள்ளைகள் விளையாட்டு என்று அவன் கோவிலில் விளையாடுவதை ரசிக்கிறான் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விளையாட்டில் எப்படி இறை இருக்கும்?

இப்பாசுரத்திற்கு, ஈடு பன்னீராயிரப்படி வியாக்கியானத்தை அறியத் தலைப்பட்டேன். “ விளையாட்டொலிக்கு உசாத்துணையாக வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் “பாலா அபி க்ரீடமானா “ என்ற வாக்கு காட்டப்பட்டிருந்தது. (விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளும் எனப் பொருள்) இராமனுக்கு மறுநாள் பட்டாபிஷேகம் என்பதால், அயோத்தியில் குழந்தைகள் கூட, இராம பட்டாபிஷேகத்தை  வைத்தே விளையாடினார்கள் என்பது முழு ஸ்லோகத்தில் வரும் பொருள்.

நகர் திருவிழாக்கோலம் பூண்டால், அங்கு சிறுவர்கள் அதன் தாக்கத்தில் தங்கள் விளையாட்டை மாற்றிக் கொள்வார்கள். இராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலில் ‘ஜீயோ” என்று அழைத்தால்  ப்ரசாதம் வாங்குவதைக் கண்ணுற்ற சிறுவர்கள், காவிரி மணலை ப்ரசாதமாக வைத்துக்கோண்டு மற்றொரு சிறுவனை ஜீயோ என்றழைக்க, அங்கு வந்து கொண்டிருந்த இராமானுஜர் தாமே சென்று மணல் ப்ராதத்தை வாங்கிக்கொண்டதாக வரலாறு. குழந்தைகள் தங்களுக்கு வரும் தாக்கத்தை தங்கள் விளையாட்டில் இணைத்துக் கொள்வார்கள். இது அயோத்தியில் நடந்தது எனில், தென் திருப்பேரையில் ஏன் நடக்காது? அங்குள்ள குழந்தைகள் தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதரை முன்வைத்து விளையாடியிருக்கலாம். எனவே இயக்கம் ( கர்மம்) இங்கு இறை சார்ந்ததாகவே இருக்கும்.

விளையாட்டு என்பது  விளையாட்டல்ல. அது அலகிலா விளையாட்டுடையானவனுக்கு அருகில் கொண்டு செல்லும் பாதை.

தமிழில் ஒரு சொல்லைப் புரிய, சமஸ்க்ருதம் உதவுகிறது. ஸமஸ்க்ருத வரியான “ மனஸா, வாச்சா, கர்மா” என்பதனை ஆண்டாள் “ வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது” என்று அவையனைத்தும் இறைவனைக் குறித்தே என்று ஒரு வார்த்தையில் விளக்கினாள். அந்த யோகியின் சொல் நினைவு வந்தது ” ஒரு சொல்லை முழுதும் புரிந்துகொள்ளப் பலதும் கற்கவேண்டும் நீ” . இரு பெரு மொழிகளின் கலாச்சாரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒன்றை வெறுத்து ஒதுக்குவது அவரவர் சிந்தை.

மோட்சம்

”யாரையெல்லாம் கூப்பிடப் போறீங்க?” என் கேள்வியின் பின் நின்ற கவலை சுந்தரத்திற்குப் புரிந்திருந்திருந்தது.

“ஈஸ்வரன் சாரைக் கூப்பிடல; ஆனா, அவரே வந்துடறேன்னு சொல்றாரு. என்ன சொல்ல முடியும்?” தயங்கினார் சுந்தரம். அனிச்சையாக என்னுள் ஒரு பெருமூச்செழுந்தது.

மாதம் ஒரு நாள் ஒருவர் வீட்டில் நாங்கள் நாலைந்துபேர் கூடுவோம். என்னதான் பேச்சு என்றில்லை. ஆனால், இலக்கியம் , வாழ்வு சார்ந்ததாக இருக்கவேண்டும். வெட்டிப்பேச்சு இருக்கக்கூடாது. என்று சில நிபந்தனைகளுடன் சிறு ரசிகர் வட்டம். சில நேரம் மதியச் சாப்பாடு, பல வேளை எதாவது உடுப்பி ஓட்டலில் காபி என்று இரு மணி நேரத்தில் முடிந்துவிடும் கூட்டம்.

தவறாகச் சேர்க்கப்பட்டவர் ஈஸ்வரன். எங்களில் பெரியவர் , கொஞ்சம் இங்கிதம் தெரியாதவர். எப்போது எப்படிப் பேசவேண்டுமெனத் தெரியாது. அதிரப் பேசுவார். திருவாசகம், கம்பன், பாரதி எனப் பேசினாலும், ஆழமற்ற பேச்சாகவே இருக்கும். போன முறை அவர் பேசியது ஒரு கசப்பையே ஏற்படுத்தியிருந்தது. எனவே தவிர்த்துவிடத் தீர்மானித்திருந்தோம். சிலர் அவர் வரட்டும் என்றார்கள். நானும் சிலரும் வேண்டாமென்றோம். இப்போ தானகவே வந்து நிற்கப் போகிறார்.

“எங்க வீட்டுலதான் மீட்டிங். நாளைக்கு மதியம் மூன்றரைக்கு வந்திருங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. காபிக்கு வெளியே போயிருவோம்”

சுந்தரம் ஏன் இப்போது தன் வீட்டில் அழைக்கிறான்?என்று தோன்றாமலில்லை.
சுந்தரத்தின் தந்தை, வெங்கடேசன், ரயில்வேயில் பெரிய பதவியிலிருந்தார். மனைவி நாகம்மாளைத் திடீரெனத் தள்ளிவைத்துவிட்டு கோவாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அது நிலைக்கவில்லை. நாகம்மாளிடம் இருந்த தன் பெண்ணையும் பையன் சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு மும்பை வந்துவிட்டார். நாகம்மாள் ஊரில் தன் சகோதரன் வீட்டில் வாழ்ந்து சில வருடங்கள் முன்பு இறந்து போனார்.

“அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்றேன் வீட்டில் நுழைந்தபடியே .
“இருக்காரு.. நாம பேசினாக் கேக்குது புரியுது. பதில் பேச முடியலை. படுக்கையிலேயேதான் எல்லாமும். என் பொண்டாட்டி “ ஒரு நர்ஸ் வைங்க. என்னால எல்லாம் செய்ய முடியாது’ன்னுட்டா. இப்ப ஒருமாசமா ஒரு நர்ஸ் வந்துட்டுப் போறாங்க.”
” பக்கவாதம் சரியாயிருச்சுன்னாரே டாக்டர்?” என்றேன். அறையின் ஒரு கோடியில் வெங்கடேசன் படுத்திருப்பது தெரிந்தது. மிக மெலிந்து, எலும்புக்கூடாக உடல். பஞ்சடைந்த கண்கள் எங்கோ நிலைகுத்தியிருக்க, கழுத்து ஒரு ஓரமாக வளைந்திருந்திருக்க, வாயின் ஓரமாக கோழை வழிந்திருந்தது. ஒரு துர்நாற்றம் அறையில் மெல்ல பரவி, நாசியில் துளைத்தது.

”அப்பாவுக்குத் தொந்திரவாக இருக்காதோ?” என்றேன்.

“இல்ல, நாம பேசறதக் கேப்பாரு. இப்ப தூக்கம் வராது. வந்தாலும் தூங்கமாட்டார். என்ன கொஞ்சம் அதிரப் பேசக்கூடாது” சுந்தரம் , ஈஸ்வரன் வரவின் ஆபத்தைப் புரிந்துகொள்ளவில்லை

அடுத்த நிமிடம் வாசல் கதவு டமால் என அதிர, திடுக்கிட்டுத் திரும்பினேன். “ஸாரி” என்றார் ஈஸ்வரன். ‘கொஞ்சம் வேகமா அடைச்சுட்டேன்.”

“ஈஸ்வரன், வெங்கடேசன் சார் படுத்திருக்கார்” என்றேன் சற்றே கோபமாக . “ அதான் ஸாரின்னுட்டேனே?” இது என்ன பதில்?

வீட்டினுள்ளே இருந்தவர்கள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து பார்த்து எரிச்சலுடன் திரும்பிச் சென்றனர்.

“அப்பா என்னமோ நினைச்சிகிட்டிருக்கார் போல. ரெண்டு நாளாவே சரியா சாப்பிடல, தூங்கலை. என்னமோ உளர்றாரு. என்னன்னு எங்கள்ல யாருக்கும் புரியலை” சுந்தரம் ஏதோ சொல்லி இறுக்கத்தைத் தளர்த்த முயற்சித்தான்.

பேச்சு எங்கெங்கோ சென்று இறப்பு, மோட்சமெனத் திரும்பியது.
“ இறப்பு நம் கருமத்தால் வருவது” என்றார் நமச்சிவாயம். ”அதுக்கப்புறம் சொர்க்கம் நரகம், பிறப்பு எல்லாம் நம் கருமந்தான் தீர்மானிக்கிறது. பட்டினத்தார் சொல்றாரு “ பற்றித்தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே”

ஈஸ்வரன் “ I beg to differ” என்றார் ஆங்கிலத்தில். நான் கவலையடைந்தேன். இந்தாள் எதையெதையோ பேசுவாரே? இன்னும் பத்து நிமிசம் நரகவேதனையாகத்தான் இருக்கும்.

“இறக்கும்வரைதான் நம் கருமங்களின் பலம். அதன்பின் எங்கே யார் போகவேண்டுமென்பதை அவன் தீர்மானிக்கிறான், அதுவும் கருமங்களின் வழியாக. அது நம் கருமமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை”

“அப்போ, என் தாத்தா பல நல்ல காரியங்களாகச் செய்து, நான் ரவுடியாகத் திரிந்தாலும், இறுதியில் எனக்கு மோட்சம் என்கிறீர்கள் “ எனது நையாண்டியை அவர் பொருட்படுத்தவில்லை.

சுந்தரம் , ஏதோ சிறிய சிந்தனையின் பின் தொடர்ந்தான்
“இறைவன், நம்மை எப்படியும் தன்னிடம் வரச்செய்யவேண்டுமெனத்தான் பார்க்கிறான். ராமனை எடுத்துக்குங்க. ராவணனோட தீய செயலுக்குத்தான் அத்தனை அழிவையும் கொண்டுவந்தான்.
விபீடணன் இராமனிடம் சொல்கிறான், ”மொய்ம்மைத் தாயனெத் தொழத்தக்காள் மேல் தங்கிய காதலும், நின் சினமுமல்லால்- இராவணனை யாரூம் வென்றிருக்க முடியாது”. கருமத்திற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும்.”

“கரெக்ட்” என்றார் சுரேஷ் “ யாருக்காக, எதற்காக ராமன் போர்செய்தான்?

“மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா(க) இலங்கை வேந்தன் முடிஒருபதும்,தோள் இருபதும் போயுதிர “ போர் செய்தான். இதே போல் “ பாரதப்போரில் யாருக்காக வந்தான்? பாண்டவர்களுக்கா ? இல்லை. “ பந்தார் விரலி பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்து … சங்கம் வாய் வைத்தான்” , சுந்தரம் நம்ம கருமம் ஒழுங்கா இருந்தா ,வினைப்பயன் ஒழுங்கா வரும். இல்லேன்னா, இறைவன் மூலமாகவே கூட, நமக்குத் தீவினை வந்து நிற்கும்.”

“அஹ்ஹ்ஹ்” குரல் கேட்டுத் திரும்பினோன். வெங்கடேசன் தீனமாக ஏதோ குழறினார் .

“என்னமோ அவர் நினைப்புல ஓடுது. ஏதோ டென்ஷன்ல இருக்கார்போல” என்றார் சுரேஷ்.

“தெரியல. ஒருவேளை எங்கம்மா நினைப்பா இருக்கும்” என்றார் சுந்தரம் “ என்ன பாடுபடுத்தியிருப்பாரு அவங்கள? அம்மா ரொம்பப் பொறுமைசாலி. இவர் அடியெல்லாம் வாங்கிகிட்டு எங்களை அணைச்சுகிட்டுப் படுத்திருப்பாங்க. தூங்கும்போது அவங்க கன்னத்துல கை வைச்ச்ப்பேன். சிலநேரம் சூடா, கண்ணீர் விரலை நனைக்கும். இவர் கருமம், இப்படி படுக்க வைச்சிருச்சு. அது எங்கம்மா கண்ணீர்தான்.” என்றவர் எங்களை ஒருமுறை பார்த்தார்

“ சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்க. கருமமும் அதன் பயனும் இப்படித்தான் இருக்கும். எங்க அப்பாவாகவே இருந்தாலும், எனக்கு இப்ப ரொம்ப பாசமெல்லாம் ஒண்ணுமில்ல. இவருக்குச் செய்யவேண்டியது என் கடமை. செய்யறேன். அவ்வளவுதான். இவரெல்லாம் நரகத்துக்குத்தான் போவாரு”

“அஹ்ஹ்ஹ்ஹ்” குரல் வளையில் ஏதோ அடைக்கக் குழறினார் வெங்கடேசன். மூச்சு விட முடியாமல் திணற, சுந்தரம் அவர் தலையைத் தூக்கிப் பிடித்தார். சளி , குரல்வளையிலிருந்து இறங்க, அவர் மூச்சு சீரானது.

ஈஸ்வரன் “ நீங்க நினைக்கறது மாதிரி இல்ல” என்றார் தீர்மானமாக “ கொல்லும் வரையில்தான் இறைவனே கருமம், அதன் பலம் பார்க்கிறான். அதன்பின் தன்னிடம் அந்த ஆத்மா வந்து சேர எதாவது நற்காரியம் இருக்குமா?என்று பார்க்கிறான். பெரியாழ்வார் சப்பாணி பாடலில் சொல்கிறார்
“ இரணியன் உளம் தொட்டு, ஒண்மார்கவலம் பிளந்திட்ட கைகளால் “ ,
உளம் தொட்டு என்றால் என்ன? அவனது உள்ளத்தில் தேடிப்பார்க்கிறாராம். தன்னைக்குறித்த ஏதாவது நல்ல எண்ணம் இருக்குமோ? என்று. இருந்திருந்தால் அவனுக்கு மோட்சம். அப்படி ஒன்றும் இல்லாதததால், அவன் மார்பைப் பிளந்து வதை செய்கிறார்” என்று ஒரு வியாக்கியானம் உண்டு. “

“அய்யா” என்றேன் பொறுமையாக “ நீங்க சொல்றதெல்லாம் சரி. ஆனா, இதெல்லாம் வைச்சு, இறைவன் தண்டனை தருவான் அல்லது மாட்டான் என்று சொல்லிவிட முடியாது. ‘பாரமான பழவினை பற்றறுத்து”தான் எதையும் செய்வான். நாம் செய்வதன் பலனை அடைந்தே ஆகவேண்டும்”

“அஹ்ஹ்ஹ்ஹ்” இந்த முறை சற்று அதிகமாவே வெங்கடேசனின் திணறல் இருந்தது. கவலையோடு பார்த்தேன். சுந்தரம் ஒரு உணர்ச்சியும் இல்லாதிருந்தான். இது சகஜம் போலும்.

ஈஸ்வரனின் குரல் உயர்ந்தது “ புரியாம பேசாதீங்க. இராவணனை ராமன் கொல்கிற வரையில்தான் சினத்தோடு இருந்தான். “சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற” .. சினம் அதுவரையில்தான். அதோட ராமவதாரத்தின் முக்கிய பணி முடிந்தாச்சு. இப்ப இறைவனின் பணி தொடங்குது. ராமன் யோசிக்கிறான் இந்த ராவணனோட ஆத்மாவை எப்படி வானுலகு அனுப்புவது? எல்லாமே மோசமான வினைகள் செய்திருக்கிறான். அப்போது மண்டோதரி தென்படுகிறாள். மண்டோதரி கற்புக்கரசி. அவளது காதல் மிகத் தூய்மையானது. அவளது காதலுக்கு ஏற்றவனாக இருப்பதே இராவணனின் ஒரு தகுதிதான். ஒரு கற்புக்கரசியின் கணவன் எப்படி நரகம் போக முடியும்?. மண்டோதரியின் காதலன் என்ற ஒரு காரணம் கொண்டே , இராவணனை வானுலகு அனுப்பிவிடுகிறான்”

அடுத்த அறையில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் எரிச்சலில் ப்ச் என்ற ஒலிகள் கேட்டன. “ மெதுவா, மெதுவா” என்று ஈஸ்வரனுக்கு சைகை காட்டினேன். கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.

“இதை கம்பராமாயணம் சொல்லலை. திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,

“ வம்புலாங் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக, அம்புதன்னால் முனிந்த அழகன்”

பெரிய திருமொழியில் நாலாம் திருமொழியில் ஐந்தாவது பாசுரம். நீங்களே பாத்துக்குங்க, அங்” என்றவர் மேலும் குரல் உயர்த்தினார் “ ஒரு பத்தினிப் பெண்ணின் காதலுக்கு அவ்வளவு மதிப்பு. நாம செஞ்ச நல்வினையால்தான் அப்படி பெண்களை மனைவியாகப் பெறுகிறோம். அவர்களது நல்வினை நம்மை நிச்சயம் மோட்சத்துக்குத்தான் அனுப்பும். ராவணன் போலாம்னா, நாம போகமுடியாதா?”

சுந்தரத்தின் மனைவி சிவந்த கண்களுடன் எழுந்து வந்தாள் “ ப்ளீஸ், மெதுவாப் பேசுங்க, ராத்திரி பூரா இவர் தொல்லையால தூங்க முடியலை. இப்பத்தான் கொஞ்சம் கண்ணசர்ந்தேன்.தலை வலிக்குது”

”ஓ, சாரி சாரி’ என்றவாறே ஈஸ்வரன் எழுந்தார்.அனைவரும் வெளீயே சென்று உடுப்பி ஓட்டலில் காபி அருந்திக் கிளம்பினோம்.

“இனிமே யார் யாரைக் கூப்பிடறதுன்னு ஓட்டுப் போட்டு எடுக்க வேண்டியதுதான். யாரையும் குத்தம் சொல்லலை. ஆனா, மத்தவங்களுக்கு வீண் சிரமம் கொடுக்கக்கூடாது” என்றார் சுரேஷ். ஆம் எனத் தலையசைத்தேன்.

இரு நாட்களில் வெங்கடேசன் இறந்துபோனார் எனச் செய்தி வந்தது. சுந்தரத்தைப் பார்க்கச் சென்றோம். “ கடைசி இரண்டு நாளா அவர் முகத்துல ஒரு அமைதி. அதிகம் குழறலை. ஏதோ சொல்லுவார். அது நாகம்மா ந்னு எனக்குக் கேட்டது. அது ஒரு பிரமையாக இரூக்கலாம். அவர் கஷ்டப்பட்டாலும், இறப்பு அமைதியாக இருந்தது”

உடுப்பி ஓட்டலில் ஒரு மேசையில் சுரேஷும் ஈஸ்வரனும் அமர்ந்திருந்தார்கள். “அன்னிக்கு சத்தமாப் பேசினது எல்லாருக்கும் எரிச்சலா இருந்திருக்கும். தெரியும். தெரிஞ்சேதான் அப்படிப் பேசினேன்” என்றார் ஈஸ்வரன் . நான் சுவாரசியமானேன்.

“ நாம பேசறதுல , வெங்கடேசனுக்கு மேலும் மன உளைச்சல் வந்திருக்கும். பாவம் சொல்ல முடியலை. கடைசி நேரத்துல அல்லாடறார். அவர் மனைவிக்கு செஞ்ச கொடுமை, தனது தீயசெயலாலே எங்கே நரகமா அனுபவிப்போமோன்னு ஒரு பயம்.. மரணத்தை விட மரண பயம் கொடியது தெரியுமோ சுரேஷ்? அதான் , ஏதோ நம்மாலானதுன்னு ஒரு பாசுரத்தை விளக்கினேன். அதுல என்ன அமைதி கிடைச்சிருக்குமோ தெரியாது.”

“இருந்தாலும், இப்படி திரிச்சுச் சொல்லலாமா சார்?”

“ஒரு உயிர் அமைதியாப் போறதுக்கு, நம்ம அரைகுறை அறிவால ஒரு பயன் கிடைக்கிறதுன்னா, என்ன தப்பு? என்ன, என் தவறுக்கு எப்ப்படி தண்டனை வருமோ? வரட்டும் பாத்துக்கலாம். பாசுரம் பாடினதுக்கு ஒரு பலன்ன்னு ஒன்று இருக்கும். “

அடுத்த மாத மீட்ட்ங்க்கிற்கு ஓட்டு கேட்டு வந்தார் சுரேஷ். எனது வாக்கை பதித்தேன்.

கரடிக்காமம்

மாலை ஆறுமணியானது, அந்திக்கருக்கலில் தெரியாமற்போனது. சந்திரசேகர், பதட்டத்துடன் செருப்பை அணிய முயல , அது சறுக்கி விலகி எங்கோ போனது. அவசரமாக அதைத் துரத்தி அணிந்து, சரக் சரக்கென வேகமாய் நடந்தான் சேகர். வேதநாயகம் உரையாடலைத் தொடங்கியிருப்பாரோ?
“வா, சேகர்” என்றார் வேதநாயகம்,பொய்ப்பல் செட் பளீரெனத் தெரிய, ”லேட்டு போலிருக்கு இன்னிக்கு?”
“சாரி. கல்யாணிகூட ஒரு சின்ன சண்டை. டிஸ்டர்ப் ஆயிட்டேனா, மறந்துபோச்சு” ப்ளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்த ஜேம்ஸ் சிரிப்பதாக நினைத்து, குதிரை போல கனைத்தார். பாலாமணி டீச்சர் இன்னும் வரலை என்பதை, சேகர் உணர்ந்தான்.
“இன்னிக்கு நாம மூணுபேர்தான் இருக்கம். ரசூல் ஒருவாரம் வரமுடியாதுன்னுட்டான். டூர் போறானாம்.” வேதநாயகம் மூன்று பீங்கான் குவளைகளில் டீயை நிரப்பினார்.
“எந்த கதாநாயகனாவது பொண்டாட்டிகிட்ட சண்டை போட்டதா இலக்கியம் சொல்லுதா அய்யா? அப்ப, அது எப்படி காலம் காட்டும் கண்ணாடின்னு சொல்ல முடியுங்கேன்?” ஜேம்ஸ் தொடங்கி வைத்தான்.
“அதென்ன ஜேம்ஸ்? சிலப்பதிகாரத்துல, கானல் வரிப்பாடல் சொல்லுதே?, அங்கதான கோவலனுக்கும் மாதவிக்கும் பிரிவு வந்தது? “
“ஹ..” என்றார் ஜேம்ஸ், முன் நெற்றியைத் தடவியபடி “ அவங்க கணவன் மனைவியாய்யா? சும்மா சேந்து வாழ்ந்தாங்க. இப்ப சொல்றாமாதிரி லிவ் இன் ரிலேஷன்ஷிப். கணவன் மனைவின்னா கோவலன் -கண்ணகியில்லா சொல்லணும்?”
“அட, மாதவிகிட்ட சண்டை போட்டுப் போனதுலானதான அவன் கொலையுண்டு போனான்?” என்றான் சேகர்.
“ அப்ப கீப்புகிட்ட கூட சண்டை போடக்கூடாதுங்கீங்க?” ஜேம்ஸ் சீண்டினான்.
சேகர் ஜேம்ஸை ஆழமாகப் பார்த்தான். ஜேம்ஸுக்கு இலக்கியமெல்லாம் பரியச்சமில்லை. சும்மா ஒரு வெட்டிப்பேச்சுக்கு கூட்டத்தில் கலந்துகொள்கிறான். கடும் உழைப்பில், அலைச்சலில் முப்பது வயதிற்கு அவன் நாற்பதாகத் தெரிந்தான். இரு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமண மண்டபத்தில், எஸ்தர் இவனுக்கு மகள் போலிருந்தாள். வேதநாயகத்தின் அண்டை வீடு என்பதால் , நெருக்கம் அதிகம்.
வேதநாயகம் தில்லியில் ஏதோ செண்ட்ரல் கவர்மெண்ட் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். மதுரையில் சொந்த வீட்டில் குடிவந்த இரு மாதத்திலேயே , அவர் மனைவி இறந்துவிட, தனியராக வசித்துவந்தார். பேஸ்புக்கில் பழக்கமான நண்பர்களை சந்திப்பது, அவர்களோடு இலக்கியம் பேசுவது என்று பொழுதைக்கழிப்பவர். வாராவாரம் அவர் வீட்டில் இலக்கிய உரையாடல் நடக்கும்.
வேதநாயகம் புன்னகைத்தார் “ ஜேம்ஸ், சும்மா மேலோட்டமா இலக்கியம் பேசக்கூடாது. கொஞ்சம் உள்ள போனாத்தான், அதிலுள்ள உளவியலெல்லாம் புரியும். மணிமேகலையில ஆதிரை பிச்சையிட்ட காதைன்னு படிச்சிருக்கியா?”
“இல்ல” என்று தலையசைத்தான் ஜேம்ஸ். சேகர் நெளிந்தான். இதோட ரெண்டு தடவை செல்போனில் கல்யாணி அழைத்துவிட்டாள். ஜேம்ஸுக்கு ப்ரச்சனையேயில்லை. அவன் வீடு அடுத்த வீடுதான் என்பதால் எந்த நேரம் எஸ்தர் அழைத்தாலும் போய்விட முடியும். இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு இப்பவே எழுந்து போய்விடலாமா? என்று நினைத்துக்கொண்டிருக்கையில் வேதநாயகம் பேசத் தொடங்கினார்.
“மணிமேகலைக்கு கிடைச்ச அட்சய பாத்திரத்துல முதல் பிச்சை போடறது ஒரு கற்புக்கரசியா இருக்கணும். அப்பத்தான் பாத்திரம் எப்பவும் உணவு கொடுத்துகிட்டே இருக்கும். மணிமேகலா தெய்வம் ஆதிரைன்னு ஒருத்தி கதையச் சொல்லுது. அவ புருசன், சாதுவன் என்கிறவன் அவளை விட்டுப் பிரிஞ்சு பணத்தையெல்லாம் தொலைச்சு, பொருளீட்டுவதற்கு கப்பல்ல போறான். கப்பல் முங்கிருது. இதெல்லாம் , நல்ல மனைவியைப் பிரிஞ்ச பாவத்தின் சம்பளம் இல்லையா?”
“அவ கற்புக்கரசியா இருந்தா, அவன் பிழைச்சிருக்கணும்ல?”
“ஜேம்ஸ். நல்லாயிருக்கே! அவன் பிழைக்கணும்னா அவ கற்போட இருக்கணும். ஆனா அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம், என்ன?!” விவாதம் சூடாவதை உணர்ந்த சேகர் இடைமறித்தான்.
“இதப்பத்தி அப்புறம் பேசுவம் சார். சாதுவன் என்னானான்?”

“சாதுவன் நீந்தி, காட்டு மனுசங்க வாழற ஒரு தீவுல ஒதுங்கறான். அவனை அவங்க பிடிச்சு, தலைவன்கிட்ட கொண்டு போறாங்க. அந்த இடம் எப்படி இருந்துச்சின்னா….

”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளை ஒரு குடுகையில நிரப்பி வைச்சிருக்கான். பச்சை இறைச்சியின் நாற்றம் வருது. இறந்த விலங்குகளின் உலர்த்தப்பட்ட வெண்மையான எலும்புகள் போடப்பட்ட இருக்கை – அதுல அந்த தலைவன் அமர்ந்திருக்கான்.”

“அங்.! அவங்க இருக்கற இருப்பை மட்டும் சொல்லிட்டு விட்டா எப்படி? அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குமுல்ல? அவனுக்குன்னு ஒரு ஒழுங்கு இருக்கும். அதத்தான் பேசணும்.” என்றான் ஜேம்ஸ்.

“ஹ.ஹ..” சிரித்தார் வேதநாயகம். “. இந்த ஒழுக்கமெல்லாம் அவரவர் பார்வைக்கு ஏத்தபடி மாறும். எனக்கு ஒழுக்கமாத் தெரியறது, உனக்கு ஒழுங்கீனமாத் தெரியும். அந்த தலைவன் இருப்பைச் சொன்னாத்தானே, உனக்கு அவன் கூட்டம் ஒழுங்கீனமா, அருவெறுப்பாத் தெரியும்? அந்த இருக்கையில, தலைவன் , ஒரு பெண்ணோட இருக்கான். அதுவும் எப்படி… ஆண்கரடி, காமத்துல பெண்கரடியோட கூடி இருப்பதைப்போல’ங்கறாரு.

“எண்குதன் பிணையோ டிருந்ததைப் போல
பெண்ணுடன் இருந்த பெற்றி”

எண்கு-ன்னா ஆண் கரடி. பிணைன்னா பெண் கரடி. ஏன் கரடிக்காமம்? இதுதான் சூச்சுமம்.” வேதநாயகம் டீயை உறிஞ்சினார். சேகர் முன்னே குனிந்து அவரை ஆர்வமாகப் பார்த்தான்.

“அதென்ன கரடிக்காமம்?” என்றான் சேகர்.

“யானைப் புணர்வு, மான் புணர்வுன்னு சொல்லிப் போயிருக்கலாம். கரடி? அது பாடல்கள்ல வர்றது அரிது. அதோட ஆச்சரியம், அது கூடியிருக்கிற நிலையைப் பத்திச் சொல்றது. கரடியிருக்கே?, அது இனப்பெருக்க காலத்துல, பெண்கரடியோடு அடிக்கடி புணரும். சில நேரம் ஒரே நாள்ல இருபது தடவை… அன்றில்,அன்னம் போல காதல்னு சொல்லமுடியாது. தீராக் காமம். அடித்தள உணர்வான, வெக்கமற்ற காட்டுவெறி காமம். அதுமட்டும்தான். ’அதுமாதிரியான காமத்துல ஒரு பெண்ணோடு, அனைவரும் காண அவன் இருந்தான்’ங்காரு. இது ஒழுக்கமற்ற நிலைன்னு இல்லாம, கீழான ஒழுக்க நிலை-ன்னு எடுத்துக்கணும்.”

“சாதுவனுக்கு என்னாச்சு?” என்றான் ஜேம்ஸ், கதைகேட்கும் ஆர்வத்தில்.
” அவன் கடல்ல செத்துப்போயிட்டான்னு தப்பி வந்தவங்க சொல்ல, ஆதிரை தீக்குளிக்கப் பாக்கறா. தீ அவளச் சுடாம இருக்கு. சாதுவன் இன்னொரு கப்பல்ல ஊருக்கு வந்து சேர்றான். இப்படி திரும்பி வர்றதுக்கு ஆதிரையோட கற்பு நெறி காரணம்ங்கறாரு புலவர்”

எஸ்தர் அழைக்க, ஜேம்ஸ் எழுந்து போனான். ‘”என்னமோ மெட்ராஸ்ல பிலிம் எடுக்கப் போறேன்னு சொல்லிட்டுத் திரியறாம்பா இந்த ஜேம்ஸு. நீயாச்சும் சொல்லிப் பாரு. நாஞ்சொன்னா கேட்கமாட்டான்” என்றார் வேதநாயகம்.

ரசூல் இரு வாரங்கள் கழிந்து வந்தபோது ‘ஜேம்ஸ், குடும்பத்தோட மெட்ராஸ் போயிட்டான் ”என்ற செய்தியைச் சொன்னான்.

ஆறு மாதம் கழிந்தபின், ஒரு மாலையில் அலைபேசி சிணுங்கியது. ரசூல் “ சேதி தெரியுமா? ஜேம்ஸ் ஓடிப்போயிட்டானாம்”

”என்ன?” திகைத்தான் சேகர் “மெட்ராஸ்லதான இருந்தான்.?”

”கடன் தொல்லை. எல்லார்கிட்டயும் பத்தாயிரம், ஐம்பதாயிரம்னு வாங்கி ஒரு பிலிம்ல போட்டிருக்கான். படம் முடங்கிப்போச்சு. ஆட்கள் பைசா கேக்கறாங்க. வேலைய எப்பவோ விட்டு நின்னாச்சு அவன். ஸோ..”

”அப்ப அவன் மனைவி? பிள்ளைங்க?”

“பிள்ளைங்க ஏது? எஸ்தர் அங்க ஏதோ ட்ராவல்ஸ் கம்பெனியில வேலை பாக்கறதாச் சொன்னாங்க. தெரியாது”

இருநாட்கள் கழித்து, உரையாடலை முடித்துக் கிளம்பும்போது வேதநாயகம் அவனை நிறுத்தினார்.

“ஜேம்ஸு, எங்கிட்ட இருபதினாயிரம் ரூபாய் வாங்கிட்டுப் போயிருக்கான். நீ மெட்ராஸ் போனேன்னா, அவங்கிட்ட அனுப்பிவைக்கச் சொல்லு, அந்தப் பொண்ணுக்குத் தெரியவேண்டாம், என்ன? எஸ்தர்,கண்ணகி மாதிரி. செயினைக் கழட்டிக்கொடுத்தாலும் கொடுத்துறும். மானஸ்தி.”

“சரி”என்று தலையசைத்து வந்தான் சேகர். இவருக்கு ஜேம்ஸ் பத்தின உண்மை தெரியாதோ? சொல்லவேண்டாம்.

ஒரு வாரம் கழித்து அவன் சென்னை போக நேர்ந்ததில், ஜேம்ஸ் நினைவு வந்தது. அவனது பழைய அலைபேசி எண்ணுக்கு எங்க இருக்கப்போறான்? என்ற அவநம்பிக்கையிலேயே அழைத்தான்.

“ஹலோ” என்றது ஒரு பெண்ணின் குரலில். சேகர் தயங்கி “ இது ஜேம்ஸ் நம்பரா? நான் மதுரைலேர்ந்து சந்திரசேகர் பேசறேன்.”

தயங்கியது மறுமுனை “ நான் எஸ்தர். அவர் இல்ல. என்ன வேணும்?”

“இல்லம்மா” அவனும் தயங்கினான்… எப்படிச் சொல்ல? அவளே கேட்டாள்.“உங்ககிட்டயும் பணம் வாங்கியிருக்காரா?”

.”இல்ல, வேதநாயகம் சார்கிட்ட”

“சார்கிட்டயா?” அவள் திகைத்தது தெரிந்தது.அவன் சொல்லச் சொல்ல அவள் அமைதியாகக்கேட்டாள். “ வீட்டு அட்ரஸை எஸ் எம் எஸ்ல நாளைக்கு காலேல அனுப்பறேன். சாயங்காலம் நாலு மணிக்கு வாங்க. வேதநாயகம் சார் பைசாவை கொடுத்திடறேன் “

”இன்று இனிமே என்ன செய்யலாம்?”என்று சிந்தித்தபோது, ஹைதராபாத்தில் இருக்கும்போது கூட வேலை பார்த்த பவன் குமார் நினைவுக்கு வர, அலைபேசியில் அழைத்தான்.

“வீட்டுக்கு வந்துரு சேகர். ராத்திரி டின்னர் எங்கவீட்டுல”

பவன்குமாருடன் கதைகள் பேசி , காலாற நடை செல்லலாமென லிஃப்டில் இறங்கியபோது, யாரோ இடிக்க, தள்ளாடி நிலைகுலைந்தான்.

“ஸாரி” என்ற அந்த மனிதன், தள்ளாடி லிப்டில் நுழைந்தான்..ஒரு பெண்ணை அணைத்தபடி. லிஃப்டின் கதவுமூடும் போது கண நேரம் பார்த்ததில்..இவள் ..இவள் ?

“பேரு தெரியாது. வீட்டு ஓனர் இவன். அவ இங்க தங்கியிருக்கா” கண் சிமிட்டினான் பவன்.

“என்ன வேலை தெரியாது. நேரம் காலம் இல்லாம வருவா, போவா. இவன் மட்டும் இங்க வருவான். ஒண்ணு கீப்பா இருக்கணும். இல்ல அயிட்டம் கேஸ்-ஸா இருக்கும். நமக்கென்ன, இந்த அபார்ட்மெண்ட்ல யார் யார் என்ன செய்ய்யறாங்க?ன்னு பாக்கறதா நம்ம வேலை?”

பவன்குமாரிடம் விடைபெற்றுக் கிளம்புகையில் மணி பத்தாகி விட்டிருந்தது.காவலாளியிடம் துருவிக்கேட்டு, அவள் வீட்டை அறிந்தான். கொசுக்கடியைப் பொறுத்துக்கொண்டு பூங்காவின் பெஞ்ச்சில் காத்திருந்தான்.
பதினோரு மணியளவில் மேலும் பொறுக்கமுடியாமல், வீட்டின் கதவைத் தட்டினான்.
கதவைத் ஒரு பாதி திறந்தவள் முகம் சுருக்கினாள் “யெஸ்? யாருவேணும்?”

“நான் சேகர், எஸ்தர்”

வீட்டின் வரவேற்பறையில் ஐந்து நிமிடம் இருவரும் பேசாது அமர்ந்திருந்தனர்.
“கடன் நெருக்கடி, அதோட வீட்டுல வந்து அவங்க கேட்க ஆரம்பிச்சாங்க. என் நகை, அவரு பைக்கு…எல்லாத்தையும் வித்தாரு. அப்படியும் முடியல.வீட்டு வாசல்ல நின்னு கத்த ஆரம்பிச்சாங்க. அவமானம் பொறுக்க முடியாம, ஒருநாள் என்னையே அடமானம் வச்சுட்டேன்… வைக்க வச்சுட்டாங்க”

சேகர் பேசாது அவளை வெறித்துப் பார்த்திருந்தான்.
“வேற வழியில்ல. மானத்தைக் காப்பாத்த மானத்தை விக்கத்தான் வேண்டியிருந்துச்சு. விசயம் தெரிஞ்சு போய் ஜேம்ஸ் சொல்லிக்காம எங்கயோ போயிட்டாரு. அவரை நான் குத்தப்படுத்தல. எனக்கு அவர் நிலமை புரியுது” குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டு பேசியவள், நிமிர்ந்து அவனை நோக்கித் தொடர்ந்தாள்.

“கடன் இன்னும் இருந்துச்சு. பெரிய அமவுண்ட். ஏதோ ஒரு அழுகிய பொணத்தைக் காட்டி, இதுதான் ஜேம்ஸுன்னு என்னைச் சொல்லச்சொன்னாங்க. இன்ஷ்யூரன்ஸ் கொஞ்சம் வந்துச்சு. அதுல கடனை அடைச்சுட்டேன். ஆனா, மேற்கொண்டு வாழ்க்கைக்கு?. “

“ஜேம்ஸ் இன்னும் உயிரோட இருக்கானா?”

“ராஜமுந்திரி பக்கம் பாத்ததா யாரோ சொன்னாங்க. என்னைப் பொறுத்த வரை அவர் செத்திருந்தா நல்லது. எவன் எவனோட காமத்தீக்கெல்லாம் என் உடம்பு இரையாக ஆயாச்சு. இனிமே அவரு வந்தாக்கூட வாடிக்கையாளராத்தான் வரணும்.” எழுந்து “வாங்க” என்றபடி உள்ளே போனாள்.

சேகர் வீட்டின் உட்புறம் புகுந்தான். திறந்திருந்த அறையொன்றில் மங்கலாக ஒளி படர…படுக்கையறை.. குப் என்ற மது நெடி. மெத்தையில் பீங்கான் தட்டுகள் பரந்து கிடக்க, அதில் இறைச்சி கடித்து எடுக்கப்பட்ட, மீதி எலும்புத்துண்டுகள் நிறைந்து கிடந்தன. மெத்தையில், கரிய உருவமொன்று, தொப்பை மேலெழ மூச்சு விட்டு உறங்கிக்கிடந்தது..கரடி ”.எண்கு தன் பிணவோடு இருந்தது போல..”

”கள்அடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கை”

கள்ளும், இறைச்சியும், பெண்ணும் நுகர்வதற்கே என்பதான கரடிக்காமத்தில், கற்புக்கு என்ன அடையாளம்?

”நான் சீதையோ, கண்ணகியோ, சார் அடிக்கடி சொல்கிற ஆதிரையோ இல்ல. “ எஸ்தரின் கிசுகிசுத்த குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தான். அவளது நீட்டிய கையில் பருமனான ஒரு தங்கச்சங்கிலி.

“இத வித்து, நாளைக்கு சாரோட பணத்தைக் கொடுக்கலாம்னு இருந்தேன்.”
அவன் கையில் சங்கிலியைத் திணித்தாள். “சார்கிட்ட , நான் நல்லா இருக்கேன்னு சொல்லி வைங்க. அவர் நினைப்புல நான் ஆதிரையாகவே இருந்துட்டுப் போறேன். புருசன் செத்துப்போனான்னுகேட்டு தீயைச் சுட்டா அவ. சாகாத புருசன்,செத்துட்டான்னு, காமத்தீயில சுட்டு கருகறேன் நான். ஒற்றுமை ரெண்டுபேருக்கும் ஒண்ணுதான் – புருசன் சரியில்ல”

“ஜேம்ஸ் வெளிய போயிருந்தான், பணத்த எஸ்தர் கொடுத்தா” என்றான் சேகர் சுருக்கமாக வேதநாயகத்திடம்..

”அட! எஸ்தரைப் பாத்தியா? எப்படியிருக்கா?”என்றார் வேதநாயகம் ஆர்வமுடன்.
”காப்பியங்கள்ல வர்ற தம்பதிகள் மாதிரி “ என்றான் சுருக்கமாக.

“அஹ்! கோவலன் கண்ணகி துன்பமா முடிஞ்சுபோச்சு. அவன் சாதுவன் இல்ல. ஆனா அவ ஆதிரைதான். அவ போட்ட அட்சயபாத்திர பிச்சையா இத எடுத்துக்கறேன்” என்றார் வேதநாயகம், ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்தபடி.

சேகர்,கண்கள் கலங்கத் திரும்பி நின்றுகொண்டான்.. இருபதாயிரத்துக்கு ஒரு மொபைல் வாங்கித் தொலைத்தாக கல்யாணியிடம் சொல்லிக்கொள்ளலாம். சங்கிலி எஸ்தர் வீட்டுப் பூஞ்சாடியில் பத்திரமாக இருக்கும்.

நிறக்குருடுகள்

வினய் குப்தாவின் கார் தூரத்தில் வருவதைப் பார்த்துவிட்டு நிழற்குடையை விடுத்து மழையில் முன்சென்றேன். பின்னால் அலறும் வண்டிகளின் ஹார்ன் ஒலியில் எரிச்சலடைந்தோம். எரிச்சலை மாற்றப் பேச்சை மாற்றினேன்

“அந்த ராபர்ட்…அவனுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க ஹவுசிங் சொசய்ட்டி கடைசில அனுமதிச்சதா  இல்லையா?”

வினய்  சற்று மவுனத்தின் பின் “எங்க?”என்றார்.

இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும். வினய் குப்தாவின் வீட்டிலிருந்து  ஒரு ஆபீஸ் பொருளை எடுத்து வர வேண்டியிருந்தது. அதற்காக அங்கு போயிருந்தபோது, சொசயிட்டி காரியதரிசி  ரங்கனேக்கர் லிஃப்ட்டிற்கு நின்றிருந்தார். குப்தாவிற்கு இரு வீடுகள் அங்கிருந்தன. ஒன்றை வாடகைக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்.

”யாருக்கு கொடுக்கறீங்க குப்தாஜீ? பாச்சலர் இல்லையே?” என்றார் ரங்கனேக்கர்.

“அவர் பேரு ராபர்ட். ஒரு ஆப்பிரிக்கர். அவரும் அவர் மனைவியும் இருக்காங்க.. டாக்குமெண்ட்ஸ்  எல்லாம் கரெக்ட்டு…அதான் சரின்னு…”

ரங்கனேக்கர் இடைமறித்தார் “ சொல்றேனேன்னு நினைக்காதீங்க. நம்ம சொசயிட்டில இருக்கறதுக்கு அவங்கெல்லாம் சரி கிடையாது. “

கோபமாக இடைமறிக்கப் போன குப்தாவை அலட்சியப்படுத்தினார் ரங்கனேக்கர் “ சமத்துவம், நிறவெறின்னு ஆரம்பிக்காதீங்க. எனக்கும் தெரியும். நான் ப்ராக்டீஸிங் லாயர். பின்னால வரப்போற ப்ரச்சனைகளை நினைச்சுப் பாத்தீங்கன்னா, நீங்க வாக்குக் கொடுத்திருக்க மாட்டீங்க”

“அப்படி அந்தாளு என்ன செஞ்சுடுவாருன்னு நீங்க மறுக்கறீங்க?” என்றார் குப்தா. அவர் தர்மசங்கடத்தில் இருந்தார். அட்வான்ஸ் வேறு வாங்கிவிட்டார். இப்போ புதுத் தலைவலி, ரங்கனேக்கர் உருவில்.

“மும்பையில இருக்கற ஆப்பிரிக்கர்கள்ல தொண்ணூறு சதவீதம் போதைப்பொருள் கடத்தல், ஆன்லைன் பைனான்ஸ் ஏமாற்று வேலை, ஏ.டி.எம் ஃப்ராடுன்னுதான் இருக்காங்க. இவங்களைத் தட்டிக்கேட்க போலீஸ் போனா, எம்பஸி வந்துடும். இங்க வந்து ட்ரக்ஸ் வித்தான்னு போலீஸ் உங்க வீட்டுக்கு வந்தாங்கன்னு வைங்க…என்ன சொல்வீங்க?”

வினய் சற்றே சிந்தித்தார் “ அவர் ஒரு ஆப்பிரிக்க ஷிப்பிங் கம்பெனியில வேலை பாக்கறார்., நாம கேக்கிற ஆவணங்கள் எல்லாத்தையும் தந்திருக்கார். போலீஸ்ல போட்டோ கொடுத்து என்.ஓ.ஸி வாங்கிட்டேன். இனிமே மாட்டேன்னா நல்லாயிருக்கமா ரங்க்னேக்கர் சார்?”

ரங்கனேக்கர் சிரித்தார். “உங்களுக்கு மன அமைதி வேணுமா, இன்னிக்கு கொடுத்த வாக்கு , புல்ஷிட் முக்கியமா? வீட்டுக்கு அவன் குடி வந்தப்புறம் சுலபமாக் காலி பண்ண வைக்க முடியாது. அவங்க திருமணம்..அதுவேற தலைவலி.. நீங்களும் அடுத்த டவர்லதான் இருக்கீங்க. சொசய்ட்டி மக்கள் உங்களை ஒதுக்கிருவாங்க. பாத்துக்குங்க” நாலாம் மாடியில் ரங்கனேக்கர் சென்றுவிட, நாங்கள் அமைதியாக ஆறாம் மாடி வரை சென்றோம்.

குப்தாவின் மனைவி சாக்‌ஷி “ அவங்க ரெண்டுபேரும் மீரா-ரோடு ஸ்டேஷன்ல ராத்திரி 11.05 வண்டில வருவாங்க. ட்ரெயின்லயே ஆட்கள் அவங்களை ஒரு மாதிரித்தான் பாப்பாங்க.”

”ஏன் ?”என்றேன் டீயை உறிஞ்சியவாறே.

“அந்தப் பெண் இந்தியர். அந்தாளு ஆப்பிரிக்கர். ”

வியந்துபோனேன். இதுவரை மும்பையில் அப்படி ஒரு ஜோடியை நான் கண்டதில்லை.

குப்தா. மனைவியைப் பார்த்து “ இப்ப எப்படி அந்த ராபர்ட் கிட்ட சொல்றது?” என்று  சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் அழைப்புமணி ஒலி கேட்டது. காவலாளி  “ சார் , இவர் உங்களைப் பாக்கணும்னு சொன்னார். சந்தேகமாயிருந்தது. அதான் நானே கூட வந்தேன்:” என்றபடி சற்றே விலகினான். பின்னால் ஒரு ஆப்பிரிக்கர் வெள்ளைப் பற்களைக் காட்டி சிரித்தபடி நின்றிருந்தார்.

“ஹலோ, நான் ராபர்ட்” என்றார் கனமான ஆங்கிலத்தில்.

“உள்ளே வாங்க” என்றார் குப்தா. மீண்டும் டீ ஒரு ரவுண்டு வர, தயங்கித் தயங்கி குப்தா மெல்லத் தொடங்கினார் “ ராபர்ட் , தப்பா எடுத்துக்க்க் கூடாது.”

ராபர்ட்டின் புருவங்கள் உயர்ந்தன “ ஓ, வீடு கொடுக்க சொசயிட்டி மறுத்துவிட்டதா?”

குப்தாவின் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தது “ஆ…ஆம்மா..அதுவும் உங்க திருமணம் பற்றித் தெரியாம, குடும்பம் என்று சொல்லிவிட முடியாதுன்னு ஒரு எதிர் வாதம். இதற்கு நான் உங்ககிட்ட ஆவணம் கேட்க முடியாது.. இல்லாம நிரூபிக்கவும் முடியாது. சட்டப்படி திருமணமானவர்களுக்கு மட்டுமே வீடு கொடுக்கலாம். சொசய்ட்டி ரூல்ஸ்”

ராபர்ட் தனது தாடியைச் சொறிந்தார் “இதே கேள்வி, நான் வெள்ளையாக இருந்திருந்தால் வந்திருக்காது இல்லையா?”

கனத்த மவுனம் நிலவியது.

ராபர்ட் எழுந்தார் “ தாங்க்ஸ். பரவாயில்லை. பலதடவை இதக் கேட்டிருக்கேன். பழகிப்போயிருச்சு.. கொஞ்சம் டீஸண்ட்டா இடம் வேணும். என் மனைவிக்கு இப்ப இருக்கிற இட்த்துல ப்ரச்சனை. எல்லாம் எங்க நிறம் படுத்தற பாடு.”

அவர் சென்றபின்னும் பல நிமிடங்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். இனம்புரியாத உணர்ச்சிகள். அவமானமாக இருந்தது.

”நம்ம பெண்கள் ஒரு வெள்ளைக்காரனைப் பிடிச்சிருந்தா,  மக்கள் அதனை ஒன்றும் சொல்லமாட்டாங்க.. இந்தாளு கறுப்பர். அதான் ப்ரச்சனை. நமக்கும் நிறவெறி இருக்கு சுதாகர். மத்த நாட்டுக்காரங்களைக் குறை சொல்றதுல அர்த்தமே இல்லை”

“ஆமா” என்றேன் எழுந்தவாறே.. அந்த ஆப்பிரிக்கர் என்ன பதவியில் இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார் என்பதெல்லாம் தெரியாமல், அவரையும், அவருடன் வாழ்வதால் அப்பெண்ணையும் குறைகூற நமக்கென்ன உரிமை? என்றெல்லாம் கேள்வி எழுந்தாலும், ரங்கனேக்கர் சொன்னதில் நியாயமான பயம் இருக்கத்தான் செய்த்து. நாளை ஒரு ப்ரச்சனை என்று வந்தால் யார் நிற்பது? யாருக்காக நிற்பது?

வினய் குப்தாவை அதன்பின் இன்றுதான் சந்திக்கிறேன். லேசாகச் சாரல்…

“ராபர்ட்டின் மனைவி , சாக்‌ஷி வேலைபார்க்கும் வளாகத்தில் ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறாள்.. “

”அவங்களுக்கு வீடு கிடைச்சிருச்சா?” என்றேன் ஒரு குற்ற உணர்வு மேலோங்க.

“ கிடைச்சுருச்சு, விரார் மேற்குல. திடீர்னு ஒரு நாள் ராபர்ட் காணாமப் போயிட்டான். ஆபீஸ்லேர்ந்து மத்தியானம் வெளிய போனவன் திரும்பி வரலை. மாலையில இந்தப் பொண்ணு அவன் ஆபீஸ்ல தேடி, ரயில்வே ஸ்டேஷன்ல தேடி…ஒரு வாரமாவுது. இன்னும் அவன் வரலை. சொசயிட்டில அவளை வீட்டைக் காலி பண்ணச் சொல்றாங்க.”

“அடப்பாவமே” என்றேன் அதிர்ந்து.

“ அவளோட குடும்பம் மாலேகான்வ் பக்கத்துல இருக்கு. அவங்க மத உணர்வுல ரொம்ப ஊறினவங்க. இப்பத்தான் அவங்களுக்கு பொண்ணு இப்படி ஒரு கறுப்பரோடு வாழ்ந்திருக்கா-ன்னு தெரிய வந்திருக்கு. அவளைத் தலை முழுகிட்டாங்க. இவளுக்கு இப்போ போக்கிடம் இல்லை. நேத்திக்கு சாக்‌ஷி அவள ஆபீஸ் வளாகத்துல பாத்துப் பேசியிருக்கா. பாவம் கதறி அழுதுட்டாளாம்”

“இருக்காதா பின்னே?” என்றேன்.

“ ஏன் இப்படி உன் வாழ்வைச் சீரழிச்சுக்கிட்டே? -ன்னாளாம் சாக்‌ஷி. அதுக்கு அவ சொன்ன பதில்தான்..”

நான் மவுனமாக்க் கேட்டிருந்தேன். மழைச்சாரலுக்கு, கார் கண்ணாடியின் வைப்பர்கள் உயிர்த்திருந்தன.

“ ராபர்ட் என்னை விட்டுட்டுப் போகலை மேடம். அவனை நார்க்கோடிக்ஸ் , ட்ரக்ஸ் கேஸ்ல வேணும்னே பிடிச்சுப் போட்டிருப்பாங்க. அதுக்கு எம்பஸிலேர்ந்து ஆளுங்க வர்றதுக்குள்ள மிரட்டி ஒப்புக்க வைச்சு, ஊருக்குத் திரும்பி அனுப்பிருவாங்க. இல்ல…அடிச்சு ரயில் ட்ராக்ஸ்ல போட்டுருவாங்க”ன்னாளாம். அவ உடம்பு நடுங்கிச்சு-ன்னா சாக்‌ஷி.”

நான் முன்னே வெறித்திருந்தேன். மழை மெல்ல வலுத்திருக்க, வைப்பர்கள் மேலும் வேகமாக பக்கவாட்டில் அலைந்தன.

“ ஒருவருஷம் முந்தி வரை அவன் யாருன்னே எனக்குத் தெரியாது. என்னை யாருன்னு அவனுக்குத் தெரியாது. அவன் குடும்பம் என் குடும்பம்..சந்திச்சது கூடக் கிடையாது. ஆனா மனசு இணைஞ்சு போச்சு. எங்க கண்ணுக்குத் தெரியாத தோல் நிறம்  ரெண்டுபேருக்கும் நடுவுல பெருசா வந்துபோச்சு. எங்களுக்கு நிறக் குருடா, இல்ல இந்த சமூகத்துக்குத்தான்  நிறக் குருடா…தெரியலை. எனக்குக் கவலையுமில்லை. அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணறேன். ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு டெல்லி போறேன். அங்கேர்ந்து ராபர்ட்டைத் தேடப்போறேன். நிச்சயம் கிடைப்பான் மேடம், நீங்களே பாருங்க”

மழை ஒரு தகடு போலக் கொட்டிக்கொண்டிருக்க, வைப்பர்கள் வெறிபிடித்த மாதிரி வீசி ஆடின. க்றீச் க்றீச் என்ற் ஒலியுடன் அவை மழைப் படுகையைத் தள்ளத் தள்ள, முன்னே காட்சி , சற்றுதெளிவாகத் தெரிந்து பின் மழைத்திரையில் மங்கியது. மண்ணில் நீர் வீழ்ந்து, கலங்கி கருப்பாக , சில இடங்களில் சிவப்பாக சாலையோரத்தில் ஓடி வழிந்தது.

யார் யாருடன் இணையவேண்டுமென்பதை நிறமோ, மதமோ, மொழியோ தீர்மானம் செய்வதில்லை. எப்படி எந்த மழைத்துளி எந்த நிலத்தில் விழுந்து எந்த நிறச் சகதியை உண்டாக்குமென்பது மண்ணுக்கும் மழைக்கும் தெரியாதோ அதைப்போல…

குறுந்தொகையில், காதலன் , தான் சற்றும் அறியாத பெண் காதலியானதை வியந்து சொல்கிறான்.

”யாயும் ஞாயும்   யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

– செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை.

”எனது தாயும் , உனது தாயும் எவ்வகையில் உறவு ? எனது தந்தையும் நின் தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நானும் நீயும் இதன்முன் எவ்வாறு அறிந்தோம்? இவையெல்லாம் ஒன்றுமில்லாதபோது நமது நெஞ்சங்கள். செம்மையான நிற மண்ணில் மழைபெய்து தானும் மண்ணின் நிறம் கொண்டு, இரண்டும் ஒன்றையொன்று பிரித்தறிய முடியாதது போல ஒன்றாய்க் கலந்துவிட்டன. ”

லாரா கோம்ஸ்

குஜராத் எக்ஸ்ப்ரஸ் ப்ளாட்பார்ம் நாலுக்குப் பதிலாக இன்று ப்ளாட்பார்ம் ஆறில் வருகிறது. பயணிகளுக்கு…” இயந்திர கதியில் போரிவல்லி ரயில்வே நிலையத்தில்  ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருக்க, நான் வேகமாக படிகளில் ஏறினேன். ஆறாம் ப்ளாட்பார்ம் அடுத்ததுதான் என்றாலும், இந்த வேகம் இல்லாவிட்டால், அடுத்த லோக்கல் ரயிலில் வரும் கூட்டம் , சிதறிய நெல்லி மூட்டையைப் போல் ப்ளாட்பாரத்தில் வழிந்து, முழு படிக்கட்டையும் ஆக்ரமித்துவிடும். அதற்குள் நாம் ஏறாவிட்டால் நமது ரயில் போவதைப் பார்க்கலாம். மும்பையில் எதையெல்லாம் கணக்கிட்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டியிருக்கு?

லேசான மூச்சிரைப்புடன் எனது கம்ப்பார்ட்மெண்ட் வரும் இடத்தருகே நிற்கையில். ‘எக்ஸ்க்யூஸ்மி, 3rd AC இங்கதான வரும்?” என்றது ஒரு சன்னமான குரல். “ ஆம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே தலையசைத்துவிட்டு அதன் பின் நிதானமாக யார் என்று பார்த்தேன்.

இவள்…?

“நீங்க, நீங்க லாரா… லாரா கோம்ஸ் தானே?”

அவள் கண்களை இடுக்கி என்னைப் பார்த்தாள். சற்றே புஜங்கள் பெரிதாகியிருக்கின்றன. முகம் சற்று ஊதியிருக்கிறாள். ஆனால் என்னை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை என்பது புரிந்தது. அறிமுகப்படுத்தியும் தெரியவில்லை. இறுதியில் அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினேன்.

முகம் மலர “ மை காட்… நீங்க..” என்றவள் வியப்பில் விரிந்த வாயைக் கைகளால் பொத்திக்கொண்டாள்.

”இப்பவும் கால் வலிக்குது” என்றேன் புன்னகைத்தபடி.

“ ஹ ஹா… Wow, so sorry, though fifteen years late” என்றாள் லாரா பெருத்த சிரிப்பினூடே.

பதினைந்து வருடம் முன்பு, நானும் என் நண்பனும், அந்தேரி ஸீப்ஸ் அருகே இருக்கும் துங்கா ரெஸ்டாரண்ட்டில் ஒரு மாலையில் நுழைந்து கொண்டிருந்தோம். சட்டென அவன் யாரையோ பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றான்.

“ தோஸ்த், பொறுங்க”

புரியாமல் அவனருகே நின்றேன். “ என் பைக் -ஐ எடுத்துட்டு சக்காலா சிக்னல் வந்துடுங்க. அங்கயே வி.ஐ.பி ஷோரூம் பக்கம் நில்லுங்க. நான் பதினைஞ்சு நிமிசத்துல வந்துடறேன்” என்றவன் நான் மேற்கொண்டு எதுவும் கேட்குமுன், சாவியை கையில் திணித்துவிட்டு சாலையின் மறுபுறம் கடந்து ஸாங்கி ஆக்ஸிஜன் கம்பெனி வளாகத்துள் நுழைந்தான்.

விழித்தபடி நின்றிருந்த நான் பைக்-ஐ கிளப்பும்போதுதான், அந்தப் பெண் அவனருகே வந்து நின்றாள். இருவரும் வளாகத்தின் உட்புறம்  மரங்கள் அடர்ந்த கார் பார்க்கிங் பகுதியில் சென்று மறைந்தார்கள்.

லாரா என்பது அவள் பெயர் என்று அவன் சொல்லியிருக்கிறான். அவள் மும்பையின் வஸாய் என்ற புறநகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள். எங்கள் அலுவலகத்தை அடுத்த ஒரு நடுத்தர அளவிலான மருந்து உற்பத்திக் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தாள் என்ற அளவில் எனக்குத் தெரியும். ஒரு முறை அலோ என்றிருக்கிறோம். அவ்வளவுதான்.

எனது நண்பன் வேறு மதத்தைச் சார்ந்தவன். உத்தரப் பிரதேசத்தில் அவனது பெற்றோர், விரிவான , வசதியான குடும்பம். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து இரு வருடங்களாயிற்று .இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கிறது  என்றான் ஒரு முறை

பைக்-கில் சக்காலா சிக்னல் சேரும்போது, போலீஸ் “தாம்பா ( நில்லு)” என்ற போதுதான் நினைவு வந்தது. ஹெல்மெட் போடவில்லை. நாசமாப் போனவன் ஹெல்மெட் தர மறந்திருக்கிறான்.

போலீஸ் “இன்ஸ்யூரன்ஸ் குட்டே(எங்கே)?” என்றபோது இன்னும் விழித்தேன். அனைத்து பேப்பர்களும் அவனது பையில். திருட்டு பைக் என்று பிடித்து வைத்தார் அவர். நண்பனின் வண்டி என்று விளக்கியும், கெஞ்சியும் பார்த்துவிட்டேன். மசிவதாகத் தெரியவில்லை.

அப்போதெல்லாம் செல்போன் பரவலாகக் கிடையாது. அவனை எப்படி அழைப்பது? அங்கேயே வண்டியோடு கால் கடுக்க நின்றிருந்தேன். ஒரு மணி நேரமானது, இரண்டு மணி நேரமானது. அவனைக் காணவில்லை.

போலீஸ்காரர் முகத்தில் இப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அங்கிருந்து மெல்ல அவரோடு வண்டியை உருட்டியபடியே காவல் நிலையத்துக்குச் சென்றேன். கால் விண் விண் எனத் தெறித்தது. பசியும் கோபமும் சேர்ந்து சற்றே அழுகையும் வந்தது.

இருட்டிய பின்  நண்பனும் அவனோடு அந்தப்பெண் லாராவும் நுழைந்தனர். “சார் இது என் வண்டி. இது என் நண்பன்” என்று அவன் விளக்கி, படிவங்களைக் காட்டி நூறு ரூபாய் கொடுத்தபின்னே என்னை விட்டார்கள்.

‘சாரி, சாரி” என்றான் பலமுறை. கோபத்தில் ஒன்றும் பேசாதிருந்தேன்.

அவள் “ என் சார்பிலும் ஸாரி”என்றாள். அருகே ஒரு ஓட்டலில் அமர்ந்தோம்

“லெட் மி எக்ஸ்ப்ளெய்ன். லாராவுக்கு திருமணம் நிச்சயித்திருக்கிறார்கள். அவள் வீட்டில் காதலைச் சொல்லிவிட்டாள். அண்ணன்கள் மதம் மாறி கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்ளவில்லை. வேற வழியில்லை. நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ்..”

வியப்புடனும் ஆயாசத்துடனும் அவனை ஏறிட்டேன். “ நோ வொர்ரிஸ். நான் எங்க அண்ணனை சரிக்கட்டி வைச்சிருக்கேன். அவர் பாத்துக்குவார். “

இரு வார விடுப்பின் பின் ஆபீஸில் சேர்ந்த நண்பன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தான். ‘துபாய்ல வேலை கிடைச்சிருச்சு, லாராவுக்கு கொஞ்ச நாளாவும்” என்றான். அன்று போன அவனும், லாராவும்  மெல்ல மெல்ல நினைவிலிருந்தும் தேய்ந்து போனார்கள்.

ரயில் விரார் தாண்டி , பெரிய பாலத்தில் தடங் தடங் என்று சென்றுகொண்டிருக்க, சன்னலோரம் அமர்ந்திருந்த லாரா வெளியே பார்த்தபடி இருந்தாள். அவள் அருகே  இருக்கை காலியாயிருக்க, ’அமரலாமா?’ என்று கேட்டு அமர்ந்தேன்.

“ அவன் எங்கே? “ என்றேன்.

”மும்பையிலதான். எதோ ஒரு அமெரிக்கன் கம்பெனி பேரு” என்றாள். விசித்திரமாகப் பார்த்தேன்.

என்னை ஏறிட்டாள் “ நாங்க  பிரிஞ்சுட்டோம். டைவர்ஸ் இன்னும் வாங்கலை”

திகைத்துப்போனேன். எத்தனை சிரமப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பொசுக்கென்று ‘ பிரிஞ்சுட்டோம் ’ என்றால் ?

லாரா இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.

“துபாய்ல அவன் போனப்புறம் நான் அங்க போய்ச் சேர்றதுக்கு  ஒரு வருசம் ஆயிருச்சு. கல்யாணம் ஆனவுடனேயே என்னை வீட்டுல துரத்திட்டாங்க. ஒரு ப்ரெண்டு வீட்டுல ஒரு வாரம், அப்புறம் லேடீஸ் ஹாஸ்டல்…னு ஒரு பாதுகாப்பில்லாத  வாழ்க்கை.ரொம்பக் கஷ்டப்பட்ட காலம் அது.

அவங்க விட்டுக்காரங்க வந்து மிரட்டினாங்க. விவாகரத்து பண்ணிரு.இல்லேன்னா கொன்னுருவோம்னாங்க. எல்லாம் தாண்டி ஒரு வருசம் கழிச்சு அவன்கூடப் போயி சேர்ந்துட்டேன்.

முதல்ல ரெண்டு வருசம் நல்லாத்தான் இருந்தான். எங்கயோ மதப் ப்ரச்சாரம் கேட்டவன், மெல்ல மெல்ல அதுல ரொம்ப ஈடுபாடு கொள்ள ஆரம்பிச்சான். முதல்ல நானும் அத ரொம்பக் கண்டுக்கலை. எனக்கு மத ஈடுபாடு எல்லாம் கிடையாது. அது அவங்க அவங்க பெர்ஸனல் விஷயம்னு விட்டுட்டேன்.அவன்  கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டே வந்ததை கவலையோடு பாத்துட்டிருந்தேன். ஒரு நாள் “ நான் தப்புப் பண்ணிட்டேன். உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டது என் மதக் கொள்கைக்கு மீறினது.” ன்னான். திடுக்கிட்டுப்போயிட்டேன். அதுக்குப் பரிகாரமா என்னை மதம் மாறச் சொன்னான். முடியாது ன்னுட்டேன். ஒருவரின் மத நம்பிக்கைக்கும் , காதலுக்கும், குடும்பத்துக்கும்  சம்பந்தமே இல்லைன்னு என் எண்ணம். கொஞ்சம் கொஞ்சமா சண்டை வர ஆரம்பிச்சது. அடிக்க ஆரம்பிச்சாரு.

பொறுத்து பாத்து, ஒரு நாள் கிளம்பி மும்பை வந்துட்டேன். வீட்டுல ஏத்துக்க மாட்டேன்னுட்டாங்க. திரும்ப லேடீஸ் ஹாஸ்டல். வேலை தேடல். இப்ப ஒரு மருந்து கம்பெனியில தர நிர்ணயத்துறையில இருக்கேன். கம்பெனி ஆடிட்க்குத்தான் வாபி போயிட்டிருக்கேன்.”

லாரா சற்றே நிறுத்தினாள். சூரியன் கீழ்வானில் செஞ்சாந்தைத் தீற்றியிருந்தது. ஒளிதான் எவ்வளவு அழகு? அனைத்து இருட்டையும் அழித்து விடுகிறது, ஒரு கணத்தில்.

லாரா தொடர்ந்தாள்.

”அப்புறம் அவனும் மும்பைக்கு வந்துட்டான்னு கேள்விப்பட்டேன். இப்ப அவங்க மத்த்துலயே ஒரு பெண்ணைக் கட்டி வைச்சிருக்காங்க. நல்ல சம்பளம், ஊர்ல சொத்து, பணக்கார பொண்டாட்டி. அவன் உண்டு, அவனை வாழ வைச்ச மதம் உண்டுன்னு இப்ப அவனும் நிம்மதியா இருக்கான்.

நானும் இப்ப நிம்மதியா இருக்கேன் சுதாகர். யோசிச்சுப் பாத்த்துல , எனக்குமே அது காதல்தானான்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு. மெல்ல மெல்ல என் அன்பும் அவன்மேல குறைஞ்சுகிட்டே வந்துருச்சு. இப்ப ஒண்ணுமே இல்லை. அவனும், இந்த ரயில்ல வர்ற ஏதோ ஒரு சக பயணிபோல,முகமறியாத ஒருவன் இப்ப, அவ்வளவுதான்.”

இருவரும் வெளியே பார்த்தபடி இருந்தோம். காலை சூரியனை மேகம் சூழ , கம்பார்ட்மெண்ட் சற்றே இருண்டது.

சூரியன் என்னதான் ஒளி பொருந்தியதாக இருந்தாலும், மேகங்கள் பூமிக்கு அதனை மறைத்துவிடுகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தன்னைக் காதலித்தவன், காதலை விடுத்து, தீவிரமாக வேறு ஒன்றில் ஈடுபடுவது போன்று வாழ்ந்திருப்பதைக் கண்டு வெதும்பி, தன் காதலை அழித்தவாறே ஒரு பெண்  சொல்கிறாள்.

”மலை இடைஇட்ட நாட்டரும் அல்லர்

மரம் தலை தோன்றா ஊர்ரும் அல்லர்,

கண்ணில் காண நண்ணுவழி இருந்தும்.

கடவுள் நண்ணிய பாலோர் போல

ஒரீஇ ஒழுகிய என்னைக்குப்

பரியிலமன் யான் பண்டொரு காலே”

– நெடும்பல்லியத்தனார்,  குறுந்தொகை

”என்னைச் சேர்ந்தவன் மலைகள் சேர்ந்த மலைநாடனும் அல்லன். மரங்கள் அடர்ந்து செழித்த காடுவளமுடைய ஊரனும் அல்லன். இந்த ஊரிலேயே, என்னைக் கண்ணில் காணும் வழியிருந்தும், கடவுள் சிந்தனை பெருகிய ஒருவன் எவ்வாறு பிறரைக் காணாது தனது வழிபாட்டில் குறியாயிருப்பது போல, என்னை அறியாது போல பாசாங்கு செய்து வருகின்றான். அவன் மேல் நான் கொண்டிருந்த காதலும் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது”

பெத்த மனம்

அருண் குமார் திவாரி என்றால் மும்பையில் அவரைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. MH 02SA 67XX என்ற ஒரு ஆட்டோ ஓடுவதும் ஓடாததும் யாருடைய ப்ரச்சனையாகவும் மும்பையில் இருந்திராது – அலகாபாத்திலும், ரூர்க்கியிலும், டெல்லியிலும் வாழும் சிலர் தவிர.

அந்த ஆட்டோவின் ஓட்டுநர் திவாரி. இன்று மாலை போரிவல்லியிலிருந்து அந்த ஆட்டோவில் ஏறினேன். மனிதர் ஒரு நிமிடம் நிறுத்தி கீழே இறங்கி இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி நின்றார். ஒரு வேதனையை உள்வாங்கி செரிப்பது போன்றிருந்தது. அவசரமாக இறங்கி, தண்ணீர் வேணுமா? என்றேன். வேண்டாம் என்று தலையசைத்து மீண்டும் வண்டியில் ஏறி ஓட்டத்தொடங்கினார்.
“கடந்த பதினெட்டு மணி நேரமா ஒட்டிட்டிருக்கேன். இன்னிக்கு ஒருவேளைதான் சாப்பிடக் கிடைச்சது. 5000 ரூவா ஊருக்கு அனுப்பணும். அவசரமா.” என்றார்.

ஒரு நிமிட மவுனத்தின் பின் தொடர்ந்தார் “ வண்டி என்னதில்லை சாப். முதலாளிக்கு 500 ரூபாய் போக மிச்சம்தான் எனக்கு. நேத்திக்கு மால்வாணி பக்கம் ராத்திரி ஷிப்டு அடிச்சேன். நாலு பேர்.. ஏத்தமாட்டேன்னு சொல்லச் சொல்ல பிடிவாதமா ஏறி, இறங்கறபோது, அடிச்சுப் போட்டுட்டு, பையில இருந்த ரூவாயை வேற பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. முதுகுல வலி.. அதோட வண்டி ஓட்டற வலி வேற…” நான் சற்றே சீரியஸாக அவரை பார்த்தேன். நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கிழக்கு உ.பி பக்கம் போல ஜாடை. பேச்சு.

“ உடம்பு வலி தாங்கிடலாம் சாப். என்ன..சிலது தாங்க முடியலை. இருவது வருசமா ஓட்டிட்டிருக்கேன். உடம்பு, மனசு எதாவது ஒண்ணு முதல்ல உடையணும் இல்லையா?”

“என்ன ஆச்சு ?” என்றேன்.

“ மனசுதான் உடைஞ்சு போச்சு . ரூவா போனது வலிக்குது. 5000 அனுப்பணும் அவசரமா , ஊருக்கு. ECS கூட அடுத்த நாள் தான் போவும், ஹே நா சாப்?”

டெலிக்ராம் மனி ஆர்டர் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது தொடர்ந்தார்.

“ என் பையன் பி.ஈ படிக்கறான். ரூர்க்கியிலே. பொண்ணு சி.ஏ பண்றா, டெல்லியில். என்னமோ B க்ளாஸ்ங்கறா புரியலை. ரெண்டு தங்கச்சிங்க. ரெண்டும் கிராமத்துலேர்ந்து அலகாபாத் போய் படிக்கறாங்க. நாலு பேர் படிக்கறதுக்கும், எட்டு பேர் சாப்பிடறதுக்கும் நான் இங்க வண்டி ஓட்டறேன்”

“ரூர்க்கி? ஐ.ஐ.டியிலயா?” என்றேன் ஆச்சரியத்துடன். “ ஆமாம் “என்பது போலத் தலையசைத்தார். குடைந்து கேட்டதில் அவருக்கு பி.டெக், பி.ஈ என்பதின் வேறுபாடு தெரியவில்லை. பி.ஈ என்றார் நிச்சயமாக. வேறு கல்லூரியாக இருக்கவேண்டும். ஆனால் ரூர்க்கியில்?

”பசங்க என்ன மாதிரியில்லை. எம் பொண்டாட்டி 12ங்கிளாஸ் . நான் 5ம் கிளாஸ் பெயில். அவ படிக்க வைக்கணும்னு உறுதியா நின்னா. அதான் இதுங்களும், என் தங்கச்சிகளும் படிக்குதுங்க. என் கிராமத்துல படிக்கறத விட கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிச்சாங்க. நான் விடலை. பொண்ணுங்க படிக்கணும் சார். அதுங்கதான் குடும்பத்தை நடத்தும். என் வீட்டையே எடுத்துக்குங்க..பையன் ஆட்டோ ஓட்ட வேண்டாம், படிக்கட்டும் என்று முந்தியே தீர்மானிச்சிட்டேன்.”

நான் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

” முந்தாநேத்து பையன் போன் பண்ணினான். 5000 ரூவாய் , புத்தகம் வாங்கறதுக்கும், ஏதோ பீஸ் கட்டறதுக்கும் வேணுமாம்.’ ஏண்டா , லைப்ரரியில எடுக்கமுடியாதா?”ன்னேன். அதுக்கு அவன்..” நிறுத்தினார். முகத்தைத் துடைத்தார்.

“ நீ படிச்சிருந்தா புத்தகம்னா என்ன விலைன்னு தெரிஞ்சிருக்கும். உனக்கு இதெல்லாம் புரியாதுப்பா” என்கிறான். சட்டென்னு அழுகை வந்துருச்சு சாப். இவ்வளவு உழைக்கறதுக்கு கேக்கற வார்த்தைதான் ரொம்ப வலிக்குது. ரவுடிங்க முதுகுல அடிச்சாங்க. வண்டி ஓட்டறது தோள்பட்டையில அடிக்குது. பையன் நெஞ்சுல அடிக்கறான். சரி, ஓட்டுவோம்.. ஓடற வரைக்கும்தான் வண்டி. கேஸ் தீர்ந்தா நின்னு போகும். அது வரை ஓடத்தான செய்யணும்? ஓடறதுக்குத்தானே வண்டி இருக்குது? .” சட்டென கலங்கிய கண்களை, முகத்தைத் துடைப்பது போல பாவனை செய்து துடைத்தார்.

ஆட்டோவின் ஒலியை மீறி, ரோட்டின் போக்குவரத்து ஒலிகளை மீறி அவர் சொன்னது என்னுள் பதிந்தது.

பின்னொருநாள் அந்தப் பையன் ப்ரபலமாகலாம். “ எங்கப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர்தான். நான் என் சொந்த முயற்சியால முன்னுக்கு வந்தேன்” என்று பேட்டி கொடுக்கலாம். அந்தக் கற்பனையில், அவனது கன்னத்தில் அறைந்தேன்.
‘உன்னை விட , முயற்சி செஞ்சு தேஞ்ச ஒரு உடல், மும்பையில் இருக்கிறது, முட்டாளே” என்றேன்.

இறங்கியதும், கூடவே ரூ 20 கொடுத்தேன். ‘இங்க ஒரு பன்னும், சாயும் குடிச்சுட்டு வண்டி ஓட்டுங்க, போதும்” என்றேன். அவர் கண்களை மூடிக்கொண்டு, கை கூப்பினார். இருவது ரூபாய் பெரிதல்ல., ஒரு மனிதனின் உணர்வுகளைப் பகிர ஒரு தளம், காலம் கிடைத்த நிம்மதி.

வீட்டு வளாகத்தின் கேட்-டை அடைந்தபோது திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் ஏறிக்கொண்டிருக்க, திவாரி வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.. சாப்பிடாமலேயே.

ஆயிரம் வருடம் முன்பு, . தலைவன் செருக்கால் தன்னைச் சேர்ந்தவர்களை எள்ளி , குத்திப் புண்படும்படி பேசுகிறான். அதனைக் கண்டித்து தலைவி/தலைவியின் தோழி சொல்கிறாள்.

”அரிகால் மாறிய அஙகண் அகல் வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர!

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தன் செய்வினைப் பயனே!

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் , செல்வம் என்பதுவே.”

– மிளை கிழான் நல் வேட்டனார், நற்றிணை.

“ நெல் அறுத்த வயலிடத்து மீண்டும் உழுது பயிரட்வும், பல வகை மீன்களும் கொண்டு புது வருவாய் உடைய ஊரை உடையவனே!
நீ பெரிய ஊர்திகளில் பயணிப்பதும், பெருமை சேருமாறு அழகாகப் பேசுவதும் செல்வமல்ல. அது உன் செய்வினையின் பயன் மட்டுமே.
சான்றோர்கள் செல்வமென்பது, தன்னைச் சேர்ந்தோர்கள், எதன் பொருட்டு வருத்தம் கொள்கிறார்களோ, அதனை போக்குமாறு இனிய மரியாதை மிகுந்த வார்த்தைகளைப் பேசும் பணிவு கொள்வது மட்டுமே.

அதில்லாத நீ, எத்தனை புகழ் பெற்றிருந்தாலும், பணம் பெற்றிருந்தாலும், வறியவனே.”

லூர்துவின் லிரில் சோப்பு

கே.வி.ஆர் ட்ரவெல்ஸ்ஸின் புக்கிங் ஆஃபீஸ் பாரத் பெட்ரோல் பம்ப்பின் அருகில் இருப்பது, பலருக்கும் வசதி. “ஒரு லிட்டர்” என்று சொல்லியபடி ஒரு கத்து கத்தி எப்ப வண்டி வரும்? என்று கேட்டால், தெரிந்துவிடும்.

சூசை அப்படி அன்று குரலெடுத்துக் கேட்கவில்லை. மாறாக, புல்லட்டை உருட்டிக்கொண்டே கடை வாசல் வரை வந்தான். ஈரமான வாசல் மண்ணில் , டயர் தடம் பதிய, போட்டிருந்த கோலத்தின் ஒரு பகுதி லேசாக சிதைந்தது.
“அரைமணி லேட்டு சூச.. கோயில்பட்டி ரோட்டுல ட்ராபிக்னாங்க. இப்பத்தான் ட்ரைவரு போன் பண்ணாரு”
வண்டியை வேப்ப மர நிழலில் நிறுத்திவிட்டு, லுங்கியை நெகிழ்த்துக் கட்டினான் சூசை. அரை நாள் லீவு போட்டாச்சு. அரைமணி கூட குறைய ஆனா என்னா? வர்றது லூர்து. அவனுக்காக மாசக்கணக்காவே லீவு போடலாம்.

நாலு வருசமிருக்குமா? லூர்து ,தூத்துக்குடி பெரியகோயில் திருவிழா தொடங்க ரெண்டு நாள் முன்னாடி மும்பைக்கு ரயிலேறினான். அப்புறம் நாலு மாசம் கழிச்சு துபாயி. இப்பத்தான் முத தடவையா ஊருக்கு வர்றான்.
“லூர்து எங்கே?’ எனத் தேடுபவர்கள், ’சூச எங்கே?’ எனத் தேடினாலும் சரிதான். இருவரும் ஓரே இடத்தில்தான் இருப்பார்கள். லூர்தின் வீட்டில் அவனோடு சேர்த்து, அவன் தங்கை, அம்மா என்று மூன்றுபேர்கள். சூசையின் வீட்டில், அவன் பெற்றோரோடு தங்கை மேரியும், தம்பி இன்ஞாசியும் இருக்கிறார்கள். எப்போதும் மோதிக்கொள்ளும் குழுக்கள் இருக்கும் பகை கொண்ட இரு தெருக்களில் இரு நண்பர்கள்.

லூர்து பத்தாவது படித்த்தோடு நிறுத்திக்கொண்டான். இல்லை, நின்று கொண்டான். தையல்கார்ரான அப்பா மாரடைப்பில் போனபின், வீட்டைத் தூக்கி நிறுத்துவது அவன் தலையில் விடிந்தது. சூசை பி,காம் வரை படித்தபின், தூத்துக்குடியில் ஒரு ஷிப்பிங் ஏஜெண்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சிறுவயது நண்பர்கள். தெருக் குழுக்களிடையே பெரிய அளவில் சண்டை வந்து, போலீஸ் படை குவிக்கப் பட்டபோதும், இருவரும் ஒரு பயமுமின்றி ஒருவர் தெருவுக்கு மற்றொருவர் போய்வந்தனர். அவர்களைத் தெரிந்தவர்கள் , அவர்கள் நட்பைத் தெரிந்தவர்கள் எவரும் குறுக்கே வந்ததில்லை.

சூசை தெருவின் மறுபுறத்தைப் பார்த்தான். வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் பஸ் வரவில்லை. ஒரு பெண் விரைவாக புதுத்தெருவில் நுழைவது தெரிந்தது. ஒரு நொடியில் சூசை அடையாளம் கண்டுகொண்டான். மேரிதான்.. யார் வீட்டுக்குப் போகிறாள்?

சட்டென நினைவு வந்து, உஷ்ணமானான். அங்கதானே கிருஷ்ணன் வீடு இருக்கிறது? அவந்தான் மெட்ராஸ் போயிட்டானே? அடிச்ச அடிக்கு இனிமே வரவே மாட்டான். அவன் வீட்டுல இவளுக்கு என்ன வேலை?
அது நாலு வருசம் முன்பு…அப்போது லூர்து ஊரில் இருந்தான். மேலக்கரை தொம்மைதான் சொன்னான் “ லே சூச, ஒந்தங்கச்சி அந்த கிருஷ்ணனோட நின்னு பேசிக்கிட்டிருக்கா. ரெண்டுதடவ பஸ்ஸ்டாண்டுல வச்சிப் பாத்துட்டன். நல்லதுக்கில்ல, சொல்லிட்டேன்.”

லூர்துவும், சூசையும், கிருஷ்ணனை அன்று இரவு இடைமறித்து, அவனை முள்ளுக்காட்டில் புரட்டி எடுத்தார்கள். மேரி இருநாட்கள் அழுது கொண்டிருந்தாள்.

’அத்தோடு முடிஞ்சுபோச்சுனுல்லா நினைச்சிருந்தேன்? இது எத்தனை நாளா நடக்கு? ’ ஒரு வேளை கிருஷ்ணன் தங்கச்சிகிட்ட பேசிட்டிருப்பாளோ? அவளும் இவளுக்கு கூட்டாளியோ, அண்ணங்கிட்ட பேச வைக்க? . இன்னிக்கு மேரியைக் கேட்டுவிட வேண்டியதுதான்.’ சூசை நினைத்துக் கொண்டிருக்கும்போதே பஸ் புழுதியைக் கிளப்பி வந்து நின்றது.

லூர்து என்னமா மாறிட்டான்? வியந்தான் சூசை. தலை செம்பட்டை யாயிருச்சே? ஒல்லியாப் போயிட்டான்? சூசையை அணைத்துக் கொண்ட லூர்து விம்மினான். சூசையின் கண்களும் பனித்தன. இருவரும் ஏன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. இருவருக்கும் அழுகை இயலாமையால். ஒன்று வரமுடியாத இயலாமை, மற்றொன்று, கண் முன்னேயே, நண்பனின் காதலி கலியாணம் செய்து கொள்வதைக் கண்டும் ஒன்றும் செய்ய முடியாது நின்ற இயலாமை.

“ஏலெ, புல்லட்டுல இம்புட்டு சாமான் ஏத்த முடியாது சூச. ஒரு ஆட்டோ வச்சிருவம். வண்டிய இங்கனக்குள்ளயே விட்டுட்டு வா.” சூசை மறுக்காமல் புல்லட்டை நிறுத்திவிட்டு ஒரு ஆட்டோ பிடித்தான்.

இருவரும் ஊர் வரும்வரை மற்ற விசயங்களைப் பேசிவந்தனர். ’துபாய்ல என்ன திங்கே? அங்கிட்டு மாதா கோயில் இருக்கா? ஏப்பா, ஒரு வேளை துண்ணனும்னா 250 ரூவாயாவுமா? என்னலே, எப்படி கட்டுப்படியாவும்? ’
முக்கியமான ஒரு விஷயத்தை இருவரும் தவிர்த்தனர் – சில்வியா தாமஸ்.

லூர்துவின் எதிர் வீட்டு வரிசையில் இருந்த தாமஸ்ஸின் இரண்டாவது மகள் சில்வியா காலேஜ் படித்துக் கொண்டிருந்தாள். தாமஸின் பலசரக்குக் கடை லூர்துவின் வீட்டுக்கு நேர் எதிரே இருந்தது. அவர் இல்லாதபோது, சில்வியா கடையைக் கவனித்திருந்தாள். லூர்து, வாசலில் இரண்டு மெஷின் போட்டு தையலை தொடங்கியபோது, மெல்ல இருவருக்கும் காதல் துளிர் விடத் தொடங்கியது. சூசைதான், செயிண்ட் மேரீஸ் காலேஜுக்கும், லூர்து கடைக்கும் தூது போனவன். திருமணம் பத்தி பேசவும் லூர்துவுடன் சூசைதான் தாமஸிடம் போனான்.

“ஒங்கம்மா வராம நான் எப்படி பேசமுடியும்?” என்றார் தாமஸ். அதுவும் சரிதான் என்று நினைத்தார்கள் இருவரும்.

“லூர்து. ஒங்குடும்பம் எனக்குத் தெரியும். ஆனா, ஒஞ்சம்பளம் போதாது பாத்துக்க. அவ படிக்கணுங்கா-ன்னு வை. ஒங்கிட்ட பணமிருக்கா? சரி, வேற வீடு போகணுங்கா-ன்னு வை.சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.

போகமுடியுமா? முதல்ல சம்பாரி தம்பி. அப்புறம் பேசலாம்”

“சார்” லூர்து எழுந்து கை கூப்பினான். “ கொஞ்ச நாள் டயம் கொடுங்க. நான் சம்பாரிச்சுக் காட்டுதேன். அதுவர எனக்காக காத்திருங்க”

“பாப்போம். நீ சம்பாரிக்கற வழியப் பாரு” என்றார் தாமஸ்.

சூசையும், லூர்துவும் தீவிரமாக யோசித்தனர். தாமஸ் இருவதாயிரம் ரூபாய் கொடுத்தார். “எதுக்கு ?” என்ற லூர்துவிடம் “ துபாய்ல டெய்லர் வேணும்னு ஒரு விளம்பரம் வந்திருக்கு, இன்னிக்கு தினமலர் பாரு. போயி பணம் கட்டிட்டு சேர்ற வழியப் பாரு. அதுவரை, நீ சில்வியாகிட்ட பேசவோ, லெட்டர் எழுதவோ கூடாது, என்னா?”

லூர்து கிளம்பி பம்பாய் சென்றான். அதன் பின் மூன்று மாதம் தொடர்பு இல்லை. திடீரென அவனிடமிருந்து போன் வந்தது. “ஏமாத்திட்டானுவ சூச. நான் இங்க செத்து சீரழிஞ்சு, ஒரு மாதிரியா, இப்ப ஒர் ஏஜெண்ட் மூலமா துபாய் போறேன். நாளைக்கு காலேல ப்ளைட்டு. ஒரு வருசம் கழிச்சி லீவு கிடைக்கும். தாமஸ் ஸார், சில்வியாகிட்ட சொல்லிடுடே.”

தாமஸ் வீட்டில் , லுங்கி மட்டும் கட்டியபடி ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். “சொல்லுடே” என்றார்.

”லூர்து இன்னிக்கு போன் பண்ணான். துபாய் போறானாம் நாளைக்கு. ஒரு வருசத்துல வருவானாம்.”

“லேட் ஆயிட்டப்பா” என்றார் தாமஸ் போலியாக வருத்தப்பட்டபடி..

“இவன் எங்க திரும்பி வரப் போறான்னு, சில்வியாவுக்கு ஒரு சம்பந்தம் சரி பண்ணிட்டேனே? அவளும் சரின்னுட்டா”

சூசை இடிந்து போனான்.”என்ன சார் சொல்லுதிய? அப்ப லூர்து?”

“நாங்க காத்துகிட்டிருந்தோம். அவரு வரலேல்லா. எத்தனை நாள் இருக்கறதுன்னு அப்பா , வரனை முடிச்சிட்டாரு. என்ன மறந்திரச் சொல்லிருங்க” சில்வியாவின் குரல் திரைக்குப் பின் தழுதழுத்தது.

“இங்கேருடே, நானும் பொண்ணு நிலமையப் பாக்கணும்லா? நாளைக்கு எனக்கு ஒன்னு ஆயிட்டுன்னா அவளுக்கு யாரிருக்கா? அதான்…. லூர்தோட தங்கமான மனசுக்கு ஏசு காப்பாத்துவாரு. அவனுக்கு நல்ல பொண்ணா நானே பாத்து முடிக்கேன்ன்னு சொல்லு, என்னா?”

சூசை அன்றிரவு லூர்துவிடம் சொன்னபோது , அடுத்த முனையில் ஒரு நிமிடம் மவுனம். அதன்பின் லூர்து பேசினான் “சரி. நான் கிளம்புதேன். வீட்டுல , அம்மா தங்கச்சிய பாத்துக்கடே சூசை. எனக்கு நீ மட்டுந்தான் இருக்க”
அதன்பின் இன்றுதான் அவர்கள் பேசுகிறார்கள்.

லூர்துவின் வீட்டில், சூசையின் தங்கை மேரியும், தம்பி இஞ்ஞாசியும் முன்னே வந்து காத்திருந்தனர். பத்து நிமிட உணர்ச்சி பிரவாகத்தின் பின், லூர்து, தனது பெரிய சிகப்பு சூட்கேஸைத் திறந்தான். இஞ்ஞாசிக்கு கூலிங்கிளாஸ், சூசைக்கு ஒரு தங்க வாட்சு, மோதிரம்… பெட்டிக்குள் துபாயே இருந்தது.

“யம்மா, ஒனக்கு தங்க செயினு.”

“எனக்கு எதுக்கடா ராசா? ஒன் தங்கச்சிக்கு போடு,. கலியாணத்து ஒதவும்”

”ரெண்டு தங்கச்சிக்கும் வாங்கியாந்திருக்கேன். ரெண்டு பவுனு செயினு” சூசை திகைத்துப் போனான்.

”டே, லூர்து. மேரிக்கு எதுக்கு?. வேணாம். விக்டோரியாக்கு வச்சிக்க.”

‘லே, நீ யாருல அவளுக்கு வேணாம்னு சொல்ல? அவளும் எந்தங்கச்சிதான். விக்டோரியாவுக்கு என்ன உண்டோ, அது மேரிக்கும் உண்டு. நீ இதிலெல்லாம் இடபடாதே,கேட்டியா?”

“போட்டும்டே மக்கா. சம்பாதிச்சு என்ன கிழிச்சேன்? எதுக்குப் போனேனோ அதுவே இல்லேன்னு ஆனப்புறம், எந்த அன்பு உண்மையோ அதுக்குதானெ செஞ்சிருக்கேன்?. நிறைவா இருக்கு மக்கா.”

சூசை பேச்சைத் தவிர்த்தான். என்ன சொல்லமுடியும்? அதே சில்வியா இப்போது , அடுத்த தெருவில்தான் இருக்கிறாள் என்பதையா ? இல்லை, ஒருமுறை அவளை மறித்து “இப்படி ஏமாத்திட்டயே?” என்று பொருமினபோது “ அவரு கிட்ட பணம் ஒண்ணுமே இல்லயே? அந்தாளக் கட்டிக்கிட்டு என்ன வாழுறது?”என்று எகத்தாளமாகச் சொன்னதையா?

“குளிச்சிட்டு வர்றேன்மா.” லுங்கியோடு கிணற்றங்கரைக்கு போனான் லூர்து.

“சரிய்யா. சோறு எடுத்து வக்கேன்.. சூசை நீயும் தின்னுட்டுத்தான் போவணும். எப்பிள்ளே விக்டோரியா, கோளி கொளம்பு ஆயிட்டான்னு பாரு. ”

கிணத்தருகே சாய்வாக இருந்த துணி தோய்க்கும் கல்லில் சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு , வாளியை கிணற்றில் தள்ள, தொபுக்கடீர் என்ற சத்தமும், களக் களக் என்று அது நீர் மொள்ளும் ஒலியும் கேட்ட்து.
“ஐ, என்ன சோப்புண்ணே இது?” இஞ்ஞாசி , பெரிதாக இளம் பச்சையிலிருந்த அந்த சோப்பை ஆர்வமுடம் எடுத்தான்.

“லே ,அத வையி. எடுக்காத”

இஞ்ஞாசி கவனிக்கவில்லை. கையிலெடுத்து மூக்கில் வைத்து உரக்க முகர்ந்தான். “ய்ய்யா! என்ன வாசனை?”

பளேரென அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்த்து. “ எடுக்கதலே, எடுக்காதலேன்னு சொல்லிட்டிருக்கேன். அதென்ன எடுக்கறது?” லூர்துவின் கோபத்தில் , கண்கள் வலியில் துடிக்க, வீங்கிய கன்னத்தை பிடித்தவாறு இஞ்ஞாசி சிலை போல் நின்றான்.

துண்டு கொண்டு வந்த மேரியும், அவள் பின் சப்தம் கேட்டு ஓடிவந்த விக்டோரியாவும் திகைத்து நின்றனர். இஞ்ஞாசி , வீறிட்டுக்கொண்டே “சூசை அண்ணே,” என்று அலறி வாசலுக்கு ஓட, விம்மல்களுக்கிடையே அவன் சொன்ன கதையை ஓரளவு புரிந்துகொண்ட சூசை பின்பக்கம் விரைந்தான். அவன் கண்கள் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.

”லே, லூர்து, எந்தம்பி இங்க வர்றது பிடிக்கலேன்னா சொல்லியிருக்கலாம். அவன வீட்டுக்குப் போயி திங்கச் சொல்லியிருப்பேன். ஏன் கைய நீட்டுனே? “

லூர்து துணி தோய்க்கும் கல்லில் சிலை போல் அமர்ந்திருந்தான்.

“சொல்லுலே, நாதியத்துப்போயி ஒன் வீட்டுல கோளி திங்க வரலைடே நாங்க. ஏட்டி மேரி, தம்பியக் கூட்டிட்டு வீட்டுக்குப் போ”

திரும்பிய சூசை, வெடித்துக் கதறிய கேவல் ஒலியில் திரும்பினான்.

“என் புத்திய செருப்பால அடிக்கணும்லே. புத்தியத்துப் போயி பிள்ள கன்னத்துல எவம்மேலயோ இருக்கிற கோவத்துல அறைஞ்சிட்டேன்.

ஊருக்குப் பொறப்பட நாளு, சில்வியா வந்து ஒரு லிரில் சோப்பு கொடுத்தா.”என் ஞாபகமா வச்சிக்க”ன்னா. முதல் தடவையா அவ உள்ளங்கையை மோந்து பாத்தேன். லிரில் சோப்பு வாசனை. சிரிச்சுகிட்டே போயிட்டா. லிரில் சோப்பை பத்திரமா வச்சிருந்தேன்.

மும்பையில என்ன மாதிரி நாலு ஆளுங்கள ஒரு ரூம்புல போட்டு அடைச்சு வச்சிருந்தானுவ. பைசா எல்லாம் பிடிங்கிட்டாங்க. தாராவியில ஒரு லெதர் கம்பெனியில தோல் பை தைச்சேன். அங்கிட்டு பொம்பளைகளும் உண்டு அதுல நஸ்ரின்னு ஒருத்திக்கு என்மேல ஆசை. எங்கூட வந்திரு-ன்னா. நான் மயங்கல. தினமும், அந்த லிரில் சோப்பு வாசத்துலயே எதிர்காலத்தை முகர்ந்துகிட்டிருந்தேன். சில்வியா கூட , மணமா வாழற ஒரு கற்பனை வாழ்க்கை. லிரில் சோப்பு எப்பவும் எங்கூட இருக்கும். அதுல மணம் போனப்புறம் இன்னொரு லிரில் சோப்பு. அது இருக்கற வரைக்கும் எப்படியும் துபாய் போயிறணும்னு வெறியில வேலைபாத்தேன். நாயா அலைஞ்சேன்.

நாலுமாசம் கழிச்சு வேலை கிடைச்சிச்சி. சில்வியா கலியாணம் பண்ணிக்கிட்டான்னு நீ சொன்னதும் உடஞ்சு போனேன். முத வேலையா சோப்பை முகந்தேன். லிரில் வாசனை , முன்னே போக உந்திச்சு. துபாய்ல லிரில் கிடைக்கல. அங்க ஃபா(Fa)ன்னு ஒரு சோப்பு, லிரில் மாரியே இருக்கும். அத வாங்கி வச்சிருந்தேன்.எப்பெல்லாம் சில்வியா நினைவுக்கு வர்றாளோ, அப்பெல்லாம் ஃபா சோப்பு எடுப்பேன். இன்னும் முன்னேறணும்னு தோணும்.

அந்த சோப்பைத்தான் ஒந்தம்பி எடுத்து மோந்து பாத்தான். பொறுக்கலடே எனக்கு.. இன்னும் எத்தன லூர்து, எத்தன சில்வியா, எத்தன லிரில் சோப்பு இருக்கோ? இவனாச்சும் நல்லாயிருக்கணும்டே. இவனுக்காச்சும் நல்ல சோப்பு கிடைக்கணும்”

முகத்தில் அறைந்து அறைந்து அழும் நண்பனைக் கண்ணீர் மல்கப் பார்த்த சூசை ஒன்றும் பேசாமல் வெளியேறினான்.

புதுத் தெருவில் கிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளி வந்த மேரி, வாசலில் புல்லட்டின் மேல் ஆரோகணித்திருந்த சூசையைப் பார்த்து விக்கித்து போனாள்.

“கிருஷ்ணனுக்கு விசுவாசமா காத்திருட்டி”

உயிர்த்த புல்லட், திரும்பி வேகமெடுத்து, படபடவென ஒலியெழுப்பி மறைந்தது.

பல நூறு ஆண்டுகள் முன்பு, காதலியைப் பிரிந்து பொருளீட்டச் சென்றவன், வழியில் வந்த துன்பத்தையெல்லாம் எவ்வாறு அவள் நினைவால் கடந்தான் என்று கண்ணீருடன் சொல்கிறான். பிற நாடு சென்று வாழும் ஒரு மனிதனின் உணர்வுத் தவிப்பினை படம்போட்டுக் காட்டிய குறுந்தொகைப் பாடல் இது.

சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடம் சுரக்கும்
இறப்பு அருங்குன்றம் இறந்த யாமே
குறுநடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச்சினை வெட்கித்
தளை அவிழ் பல்போது கமழும்
மைஇருங் கூந்தல் மடந்தை நடப்பே
– பாலை பாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.

”சுரவழியில் (போகின்ற கொடிய வழியில்) காணப்பட்ட நெல்லிக்காய்கள் கிடக்கின்ற இடத்தில் பதுங்கிக் கிடக்கின்ற புலிக்குட்டிகள் இருக்க, கடப்பதற்கரிய மலைபோன்ற கடின வழிகளில் நான் சென்றேன். அங்கு சற்றே ஆறுதல் தரும் இனிய குரலுடைய, த்த்தி நடக்கின்ற அழகிய பறவைகளின் ஒலியில் மயங்காது, என் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்த, காட்டின் வெட்சிப் பூ போல் மணம் கமழும் என் காதலியின் கூந்தலையும், அவள் காதலையும் மட்டுமே நினைத்திருந்தேன்.”

செல்லத்தாயி

”இதுங்க சரிவரும்-ங்கறே? “ நல்லமுத்து , செல்லத்தாயிக்காக சற்றே நடை வேகத்தைக் குறைத்தார்.

“எல்லாம் சரியா வரும். கொஞ்சம் விட்டுப் பாப்பம்” செல்லத்தாயி , தனது ஆர்த்த்ரிடீஸ் கால்களில் இட வலமாக ஆடியபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னே நடந்தாள். வெயில் மாலையிலும் தீவிரமாக இருந்தது.

“ஊர்லேந்து வர்றப்போவே சொன்னேன். அந்த டாக்டரு வெளங்காதவன். அவன் சொன்னான்னு ஒரு புது செருப்பு.. இப்ப காலைக் கடிக்கி, கையக் கடிக்கின்னு சொல்லிட்டே நடக்கே. ஒனக்கெல்லாம் அந்த ரப்பர் செருப்புதான் சரி, செல்லி”

“சரி வுடுங்க. என்னமோ. செருப்பு வாங்கியாச்சு. ரொம்ப கடிச்சா, இங்கனக்குள்ள எதாச்சும் வேலைக்காரிக்கு கொடுத்துடுவம். சரி, இன்னிக்கு காலேல மருமவ முகம் அப்படியே வாடிக்கடந்துச்சு பாத்தியளா? ”

“ரெண்டு பேரும் இப்படி உம்-முனுதான, நாம வந்தன்னிலேந்து இருக்காவ? இன்னெக்கென்னா புதுசா வாடுதா, சாடுதான்னு கிளப்புற?” நல்லமுத்து குரலில் ஏமாற்றமும், விரக்தியும் , அடித்த வெயில் தாங்காது வெளிப்பட்டன.

மும்பைக்கு ஒரு மாதம் முன்பு பையன் முத்துக்குமார் வீட்டுக்கு வந்து இறங்கிய நல்லமுத்து, செல்லத்தாய் அம்மாள், போரிவல்லி பகுதியில் இரண்டு படுக்கையறை வீட்டில் இரு நாட்களில் இருக்கப் பழகிவிட்டனர். தூத்துக்குடியிலிருந்து வந்தவர்களுக்கு வெயிலும், வியர்வையும் பழகியிருந்தாலும், வீட்டில் மகனும், மருமகளும் பேசாமலேயே இருப்பது தர்ம சங்கடமாக இருந்தது.

முத்துக்குமார் ஒரு தனியார் வங்கியின் கிளை மேலாளர். மருமகள் லட்சுமி ஒரு மென்பொருள் உருவாக்கும் பெரிய கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள். சம்பளத்துக்கு இருவருக்கும் குறைவில்லை. அடித்துப் பிடித்துக்கொண்டு காலையில் கிளம்பிப் போவார்கள். மாலையில் வந்ததும், லாப்டாப்பும், மொபைலுமாக ஆளுக்கு ஒரு அறையில் அமர்ந்துவிடுவார்கள். ஹாலில் டி.வி யாருக்கோ வந்த வாழ்வாக ஓடிக்கொண்டிருக்கும்,. என்ன சேனல், யார் பார்க்கிறார்கள் என்பது இருவருக்கும் தெரியாது.

இது ஒரு மாதமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதில் நல்லமுத்துவின் கோபம் எகிறத் தொடங்கியது. “இதென்னா, வீட்டுக்கு அம்மையும் அப்பனும் வந்திருக்காவ? அவங்க கிட்ட ‘என்ன, சாப்டீயளா, எதாச்சும் வேணுமா?;ன்னு ஒரு வார்த்தை கேக்கப்படாது? ரெண்டும் அந்த பொட்டி முன்னாடி விடிஞ்சதுலேந்து கிடக்குதுவோ.” செல்லத்தாயிடம் பொருமினார். அவர்கள் வரும் நேரமாதலால், செல்லத்தாயி, அவரை மெல்லக் கிளப்பி வெளியே கூட்டி வந்துவிட்டாள்.

“இந்தாருங்க. சிறுசுங்க. கல்யாணமாயி ரெண்டு வருசம்தான் ஆவுது. என்ன சண்டையோ என்னமோ? இவனும் உச்சாணிக்கொம்புல ஏறி நிக்கான் -ஒங்கள மாரி. அவளும் இத்தனை ராங்கித்தனம் செய்யேண்டாம். சம்பந்தியம்மாவுக்கு ஒரு போன் போடுங்க. நான் பேசுதேன்”

“ஒனக்கு, என்னச் சொல்லலேன்னா தூக்கம் வராதே? அந்தம்மா என்ன செய்யும்?. ”நானுஞ்சொல்லுதேன். நீங்களும் மாப்பிளைக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க’ங்கும். இங்கிட்டு வந்தால்லா பொண்ணு வண்டவாளம் தெரியும் அவியளுக்கு?. நான் முடிவு பண்ணிட்டேன், செல்லி. செல்லி, கேக்கியாட்டி?”

“சொல்லுங்க. நல்லாத்தான் கேக்கு.” என்றாள் செல்லி, மூச்சிறைத்தபடி. நடக்க முடியவில்லை. செருப்பினுள் பாதம் வீங்குகிறது. உப்பைக் குறைக்கணும்.

“ நாளைக்கு நான் இங்கிட்டு போரிவல்லி ஸ்டேஷன்ல போயி ஊருக்கு டிக்கட் போட்டுடுதேன்.  இங்க இருந்தா நமக்கும் செரிப்பட்டு வராது, அதுக, தலைவிதி, என்னமோ அடிச்சிக்கட்டும், பிடிச்சிக்கட்டும், என்ன சொல்லுத?”

“க்கும். இப்படி விட்டேத்தியா சொல்லத்தான் நீரு இங்க வந்தீரோ? இல்ல கேக்கேன். அதுக பாட்டுக்கு விடறதுக்கு நாம என்ன சொல்லவேண்டியிருக்கு? கொஞ்சம் பாப்பம். பொறவு பைய்ய, ரெண்டுபேருக்கும் சொல்லுவம்”

“கோட்டி பிடிச்சுருச்சாட்டீ ஒனக்கு? என்னத்தன்னு சொல்லுவே? இதுகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு தெரியாம என்ன ராம கதை சொல்லச் சொல்லுத? போம்வே-ன்னுட்டான்னு வச்சிக்க… என் மூஞ்சிய எங்கன கொண்டு வைக்க? “

செல்லி கால் அகட்டி நின்றாள். மூச்சிரைக்க பேசினாள் “ இந்தாரும். சொல்லுதேன்னு நினைக்கப்படாது. இத்தன நாளு இருந்தீயளே, அதுகளுக்கு என்ன மனஸ்தாபம்னு ஒரு வார்த்த கேட்டிருப்பீயளா? இல்ல, நீங்களா கண்டுபிடிக்க பாத்திரிப்பீயளா? ஒண்ணும் செய்யாம, ஆ, ஊன்னு குதிச்சா எப்படி? எல்லாம் ஒங்கம்மா குணம்.. குத்தம் மட்டும் பாக்கத் தெரியும்.”

நல்ல முத்து வாய்க்குள் “ முண்ட, ஒன்ன  எப்பவோ கொன்னு போட்டிருக்கணும், எங்கம்மாவையா சொல்லுத?” என்று திட்டியபடி, அவளுடன் திரும்பி வீடு நோக்கி நடந்தார். நாளை எப்படியும் டிக்கட் எடுதுறணும். சீனியர் சிட்டிசன் -ன்னா தனி கவுண்ட்டர் உண்டுமா? கேக்கணும். இந்த நாய்ப்பய ஊர்ல எல்லாத்துக்கும்லா க்யூ-ங்கான்?

லட்சுமியும், முத்துக் குமாரும் வழக்கம்போல தனித்தனி அறையில் லாப்டாப்பில் முழுகியிருந்தனர். பாத்தியா? என்பது போல் ஒரு சிரிப்புடன் நல்ல முத்து ஹாலின் சோபாவில் அமர்ந்தார். “ஏட்டி, அது என்னா சீரியலு? அன்னிக்கு பாத்தமே? தாடிக்காரன், பொஞ்சாதிய விட்டுட்டு ஒரு பொண்ணோட இருக்கான்…அப்புறம்?”

“எல்லாம் ஒரே மாரித்தான் இருக்கும். சும்மா இரிங்க. நான் பாத்துட்டிருக்கேன்லா? தொணதொணங்கக் கூடாது, ஆமா.”

தனக்குள் முணுமுணுத்தவாறே புத்தக அலமாரியைத் தேடிப்போனார் நல்ல முத்து.

சாப்பிடும் நேரத்தில் நால்வரும் மேசையில் அமர்ந்திருந்தனர். லட்சுமி தனது மொபைலில் யாருக்கோ  செய்தி அனுப்பியபடி இருக்க, முத்துக்குமார் தனது ஐ பேட்-ல் ஏதோ படித்து சிரித்துக் கொண்டிருந்தான். நல்ல முத்து இருவரையும் பார்த்து தன் மனைவியைப் பார்த்தார். “ இதுக வெளங்குமா?” என்றது அவர் முகம். செல்லத்தாயி, இருவரையும் ஒரு முறை பார்த்தாள். மவுனமாக சோற்றைப் பரிமாறினாள்.

அடுத்தநாள், சனிக்கிழமை காலையில் லட்சுமி சமையலறையில் நுழைகையில் ஆச்சரியமானாள். “அத்தே, நீங்க என்ன செய்யறீங்க? உங்களுக்கு ஏன் சிரமம்?”

“இருக்கட்டும்மா. மாமாவுக்கு இன்னிக்கு பொறந்தநாள். வைகாசி விசாகம்”

“அட! மாமா சொல்லவே இல்ல பாருங்க! “

“அவருக்கே தெரிஞ்சிருக்காது. ஒரு பாயாசம் செஞ்சுருவம், என்னா?”

“ம்ம்ம். அவருக்கு ஷுகர் இருக்கே அத்தே.? “

“இருந்தா என்னா? ஒரு நாளு கொஞ்சம் குடிச்சா ஒன்னும் ஆவாதுட்டீ. மாத்திரை ஒன்னு கூடப் போட்டுகிடச் சொல்லுதேன். நாளைலேந்து திருப்பி கஞ்சி, நாலு நாளைக்கி”

டிக்கட் வாங்கி வந்த நல்ல முத்து, மதியம் சாப்பாட்டில் திகைத்தார். “ஏ, என்னா இன்னிக்கி? பாயாசமெல்லாம் தடபுடலா இருக்கு? இவனுக்கா, இவளுக்கா, யாருக்கு பொறந்த நாளு?”

“வெளங்கிச்சி. ஒங்களுக்குத்தான் இன்னிக்கு பொறந்தநாளு.”

“அங் “ வியந்தார் நல்ல முத்து. பாயாசத்தை கண்கொட்டாமல் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு பார்த்தார். “ நம்மூர் மண்டை வெல்லம் கிடைக்கா இங்க? இன்னொரு  டம்ப்ளர் ஊத்துட்டீ” என்றார் டம்ப்ளரை ஏந்தியபடி.

“ கால்வாசிதான் தருவேன். ஒடம்புக்கு ஆவாது.” என்ற செல்லத்தாய் இரு கரண்டி பாயாசத்தை அதில் ஊற்றினாள். லட்சுமி ஒரு சிரிப்போடு அந்த நாடகத்தைப் பார்த்திருந்தாள். முத்துக் குமார் மெல்ல தலையை நிமிர்த்தினான்.

“ஏட்டி, இதென்னா? கையில கட்டு? சுட்டுகிட்டியோ?” நல்ல முத்து சற்றே பதறி செல்லத்தாயியின் கையைப் பற்றினார்.

“அட , வுடுங்க. மண்டைவெல்லம் தட்டிப் போடப் போனேனா? ,கண் மறைச்சிட்டு… வெரல்ல நசுக்கிட்டேன். “

“ இதென்னா, புடவையில ரெத்தம்? என்னத்துக்கு  இப்படி கொலை வெறியில பாயாசம் செய்யோணும்? லே,முத்து , டாக்டரு இருப்பாரா? போவம்”

“அய்ய, அதெல்லாம் வேண்டாங்கேன்லா? வேணும்னா நானே சொல்லுவேன்.  புது எடம் பாத்தீயளா.? சில சாமான் எங்க இருக்குன்னு தெரிய மாட்டேங்கு. அதான். அவசரத்துல வெல்லம் தட்டிப் போடயிலே, கையில நசுக்கிட்டு. நீங்க குடிங்க.”

நல்ல முத்து எழுந்தார் -பாயாசம் குடிக்காமலே. உள்ளே சென்று டெட்டால் எடுத்து வந்தார். ”கையக் காட்டுட்டீ. கண்ணு மண்ணு தெரியாம எதாயாவது செஞ்சு தொலைக்கவேண்டியது. தானாவும் தெரியாது.சொன்னாலும் வெளங்காது உனக்கு.”

“ஒரு எழவும் இல்ல. அடிபட்டு ரெண்டு மணி நேரமாச்சு. இப்ப வந்து டெட்டால் போடுதாராம்!. அப்பவே, மஞ்சத்தூள் வச்சு , ரத்தம் நின்னுட்டு”

லட்சுமி அந்த பாசத்தின் வசை மொழிகளைக் கேட்டு நின்றிருந்தாள். இது நாள் வரை இந்த குமார் ஒரு முறையாவது கிச்சனில் என்ன செய்கிறாய்?  என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பானா?

சட்டென அவளுக்குள் ஒன்று உறைத்தது. முத்துக் குமாரின் பிறந்த நாளன்று கேக் வாங்கி வெட்டியிருக்கிறோமே தவிர, ஒரு முறையாவது நானாக ஒரு இனிப்பு தயாரித்ததுண்டா? இந்த அத்தை, முடியாத வயதில், சர்க்கரை கூடுதலாப் போட்டு, சாதம் கரிய விட்டு என்று ஏதோ செய்து, பாயாசம் என்று ஒன்று உண்டாக்க, அதனை ரசித்து குடித்து விட்டு “இன்னோன்னு கிளாஸ்” என்கிறாரே மாமாவும்? இந்த வசவுகளின் உள்ளிருக்கும் வாசம் என்ன?

சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் வந்தவள், லாப்டாப்பை மூடி வைத்தாள். கண்களை மூடி சிந்திக்கலானாள்.

முத்துக்குமாரும்,  நல்லமுத்துவும் போரிவில்லி காய்கறி மார்க்கெட் அருகில் நிறைந்த  காய்கறிப் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். ஆட்டோ இன்னும் வரவில்லை.

“லே முத்து. இங்கன பக்கத்துலதான் மீன் மார்க்கெட் இருக்கோ? கருவாடு வாடையடிக்கே?”

“ஆமா. ஆனா,ஒங்களுக்கும் அம்மாவுக்கும் ஒத்துகிடாதுல்லா? வேணாம்”

“எனக்கு பிடிக்காதுல. ஒங்கம்மாவுக்கு பிடிக்கும். ஆனா தனக்குன்னு வாங்கி,செய்ய மாட்டா. எனக்கு வேணும்னா செய்வால்லா? அதுல ரெண்டு மூணு துண்டு அதிகம் திம்பா. பாவம், அவளுக்கு வேற என்ன ஆசை இருக்கு? ஆச்சி, இன்னும் ரெண்டு வருசம் போச்சுன்னா,  என்னை, ’இதெல்லாம் நீரு திங்கவே கூடாது’ன்னு திட்டுவான், அந்த எழவெடுத்த டாக்டர். சரி, அதுக்குள்ள எதாச்சும் அவளுக்கு பிடிச்ச மாரி இருக்கட்டும். என்னா?”

ஒரு வாரத்தில் அம்முதியவர்கள் கிளம்பிப் போனபின், லாப்டாப்புகள் அதிகம் அந்த வீட்டில் திறக்கப் படவில்லை. சில நாள்களுக்குப் பின் ஒரு அறை அடைந்தே கிடந்தது.

பல நூறு வருடங்கள் முன்பு ஒரு பெண், கைவிட்டுப் பிசைந்த சோற்றில், புளியைக் கரைத்து விட்டு, புளிசாதமாக்க் கிளறி, அடுப்புப் புகை கண்ணில் ஏறி, முகமெல்லாம் வியர்க்க, சோற்றுக்கையை, தனது சேலையில் துடைத்து, அந்த நாற்றத்தோடே, கணவனுக்குப் பரிமாற, அவன் அந்த புளிச்சோற்றை “இனிது”என்று பாராட்டியபடி உண்கிறான். அதுகண்டு, அவள் நெற்றி, மகிழ்வின் நிறைவால் ஒளிர்ந்தது.

”முளிதயிர் பிசைந்த காந்தல் மெல்விரல்

கழுவுறு கலிங்கம்,கழாஅது, உடீஇ

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தன்றுழந்து அட்ட தீம்புளிப் பாகர்

“இனிது” எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”

 – கூடலூர் கிழார்,  குறுந்தொகை.

சிகப்பு இன்னோவா

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

நான் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தேன். என்ன சொல்வது இவளுக்கு? இவளது தாய் சுஷ்மாவுக்கு?

சுஷ்மா என்ற பெயர் சொன்னால், நீங்கள் அவள் ஏதோ கால் செண்ட்டரில், ஏதோ பன்னாட்டு நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீ அல்லது ஃபிலிம் ஸிட்டியில் ஒரு துணை நடிகை என்ற அளவிலாவது எதிர்பார்த்திருப்பீர்கள்.

சுஷ்மா எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டுப் பணியாளர். வட பிஹாரில் ஏதோவொரு கிராமத்தில் கோசி நதி வெள்ளத்தில் வாழ்வாதாரம் அடித்துச் செல்லப்பட, மஹாநகர் மும்பைக்கு வந்து தனக்குத் தெரிந்த ரொட்டி , சப்ஜி செய்வது, வீட்டை பெருக்கி மொழுகுவது என்று உபரி வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, தாக்கரேக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் வட நாட்டு முகமற்ற அகதிகளில் ஒருத்தி.

பிஹாரி உச்சரிப்பில் ’நமக்’ ( உப்பு ) என்பதற்கு நிம்பாக்கு என்று சொல்வதில் ஆரம்பித்து, அனைத்திற்கும் ஏதோவொரு புதுப் பெயர் சூட்டினாள். இரண்டு வீடுகளில் வேலையை ஆரம்பித்து மெள்ள மெள்ள ஐந்து ஆறு வீடுகளில் அமர்ந்தாள். இடுப்பில் பல வீடுகளின் சாவிகள் தொங்க, அவள் கிலுங்க் கிலுங்க் என்ற ஒலியோடு சப்பாத்தி இடுவது ஏதோ மாட்டுவண்டியில் இரட்டை மாடுகள் ஒலியெழுப்பி ஓடுவது போலிருக்கும்.

இரு மாதம் முன்பு ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். பதினாறு பதினேழு வயதிருக்கும். கருத்த , சற்றே குண்டான உடல்வாகு. மிரண்ட கண்களுடன் அவள் அப்போதுதான் பிடித்து அடைக்கப்பட்ட கரடி போல் பயந்திருந்தாள். “பைட் ரே பேட்டியா” என்று அவளை ஹாலில் அமர வைத்து விட்டு, உள்ளே சப்பாத்திக்கு மாவு பிசையச் சென்றவள் வேலைமுடிந்ததும் ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள்.

அது அவளது இரண்டாவது பெண்ணாம்” என்றார் 304லிருக்கும் பாஸ்கர் ராவ். ”கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைப் பழக்கிக் கொடுக்கப்பார்க்கிறாள். என் மனைவி சொல்லிவிட்டாள் ‘சிறுமிகளை வேலை வாங்காதே. செஞ்சே, நானே போலீஸ்ல சொல்லிடுவேன்.’ அதுலேந்து வர்றதில்லை. படிக்க வைக்காதுகள் இதுகள்”

அந்தப் பெண் , சுஷ்மா வராத நாட்களில் வந்து வீட்டு வேலை செய்து போனாள். சிறுமி என்பதால் பாவமாக இருந்தது. எங்கள் ஓரிருவர் வீடுகள் தவிர பிறர் ‘ வேலை நடந்தால் போதும்’ என்று விட்டுவிட்டனர். மராட்டி வேலைக்காரிகள் சுஷ்மாவின் வளர்ச்சியில் கொதித்தனர்.

ஒரு மாதமுன்பு, திடீரென சுஷ்மா வரவில்லை. வீடுகளில் ரெண்டு வேளை பாத்திரங்கள் அப்பப்படியே கிடந்து நாறின. வீட்டு எஜமானிகள் போனிலும், கீழே பார்க் பெஞ்சுகளிலும் ஆத்திரத்தோடு அவள் சொல்லாமல் கொள்ளாம போனதைக் கடுமையாக விமர்சித்து, அரைப்பதற்கு அடுத்த அவல் வந்ததும் சுஷ்மாவை மறந்தனர். ’பையாணிகளை (பிஹார், உ.பி பெண்களை) வேலைக்கு அமர்த்தினால் இப்படித்தான்’ என்று சில தீவிர மராட்டியர்கள் சொசைய்ட்டி மீட்டிங்கில் பேச, புதிய மராட்டிய வேலைக்காரிகள் அமர்த்தப் பட்டனர். சுஷ்மா மறைந்து போனாள்.

ஒரு வாரம் முன்பு பெங்களூர் நிம்ஹான்ஸ் மன நல மருத்துவமனையில் ஒரு கருவியின் டெக்னிகல் மீட்டிங்கிற்காக நானும் என் தென்னிந்திய ப்ராந்திய கிளை மேலாளரும் போயிருந்தோம். வேலையை முடித்துக் கொண்டு காருக்குக் காத்திருக்கும் வேளையில் மரத்தடியில் ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் பிசிறியடித்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணின் கோபக் குரலும், யாரோ கையால் அடிக்கும் ஒலியும் கேட்டது. வேடிக்கை பார்க்க மெதுவே கூடிய கூட்டம், காவலாளி விலக்க, அசட்டுச் சிரிப்புடன் கலைய, அசுவாரஸ்யமாக திரும்பிப் பார்த்தேன்.

தலையைச் சுற்றி புடவையால் முட்டாக்கு அணிந்தவாறு சுஷ்மா நின்றிருந்தாள். அருகில் குந்தி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கையால் முதுகில் கோபத்தில் அறைந்து கொண்டிருந்தாள். “சனியனே. செத்துப் போயிருக்க வேண்டியதுதானே? என்னையும் சேத்துக் கொல்லு”

சுஷ்மா என்று நாலு முறை அழைத்தபின்னரே அவள் திரும்பிப் பார்த்தாள் “சாஹீப்” என்றவள் கை கூப்பினாள். “ மாஃப் கரியே.: காலில் விழப்போனவளை நிறுத்தினேன். “மேரி பேட்டிக்கோ தேக்கியே சாஹப்” ( என் பெண்ணைப் பாருங்கள்) என்று அழ ஆரம்பித்தவளை நிச்சலனமாக அண்ணாந்து வெறித்த அந்தப் பெண்ணை எளிதில் அடையாளம் கண்டு கொண்டேன்.

“இவள்.. உன் பெண்தானே?”

”இவளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம். கட்டிக்கப் போறவன், டெல்லியில கட்டிடம் கட்டற ஒரு கம்பெனியில இருந்தான். இவகிட்ட அடிக்கடி போன்ல பேசியிருக்கன். இதெல்லாம் கூடாதுன்னு எச்சரிச்சு வச்சேன். இவளும், சரி கட்டிக்கப் போறவந்தானேன்னு, எனக்குத் தெரியாம நிறைய தடவ பேசியிருக்கா. ஒரு மாசம் முன்னாடி, டெல்லியில, அவங்க பாட்டி பொண்ணைப் பாக்கணும்கறான்னு, இவளை டெல்லி கூட்டிட்டுப் போனேன். ” ஒரு நிமிடம் நிறுத்தினாள். அவளது பெண் மெல்ல முணுமுணுத்தாள் “ கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த இன்னோவா வண்டி சாட்சி. வண்டியில ஏ.ஸி இருந்துச்சு.”

“என்ன சொல்கிறாள்?”

சுஷ்மா பெருமூச்சுடன் தொடர்ந்தாள் “ கலியாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க காஃபர் கான் மார்க்கெட்டுக்கு போயிருந்தோம். அங்க குஜ்ரால்ஸன்ஸ் கடைப் பக்கம் மாப்பிள்ளைப் பையனும். அவங்கூட மாமா மகன், சித்தப்பா பையன், நண்பன்னு மூணுபேரும் சந்திச்சாங்க. இவள வெளிய அவங்கிட்ட பேசவிட்டுட்டு, நான் ஒரு கடையில துணி பாத்திட்டுருந்தேன். மாப்பிள்ள, இவ கிட்ட வெளியெ பேசிட்டிருந்தது கேட்டுச்சு. கேக்காத மாதிரி உள்ளே புடவை பாத்திட்டிருந்தேன்.

“எங்கூட வர்ரியா ? உனக்கு நான் ஒரு புடவ எடுத்துத் தர்றேன்”

“அய்யோ, அம்மா இருக்காங்க. ”

“பத்தே நிமிசந்தான். மெட்ரோ ஸ்டேஷனுக்குப் பக்கத்துலதான் இருக்கு.”

”நஹிஜி. நான் வரலை. கல்யாணம் ஆனப்புறம்தான்”

“சரி கல்யாணம் பண்ணிடுவோம்”

“ஆ?”

“நிஜமாத்தான்”

ஒரு நிமிஷம் புடவை பாக்கறதுல லயிச்சிட்டேன். திரும்பிப் பாக்கறேன். இவளக் காணோம்.”

சுஷ்மா சற்றே மவுனித்தாள். அந்தப் பெண் மரத்தடியில் இருந்த புல்லைப் பிடுங்கி தூக்கிப் போட்டபடியே பேசினாள் “ மந்திர்ல சிந்தூர் எடுத்தியே? நெத்தியில குங்குமம் வச்சு நமக்கு கல்யாணம் இப்ப ஆயிட்டுன்னு சொன்னியே?”
சுஷ்மா தொடர்ந்தாள்.” அப்புறம், ஒரு புடவையையும் வாங்கிக் கொடுத்துட்டு “கல்யாணம் முடிஞ்சாச்சு. சாட்சிக்கு என் அண்ணன், தம்பி, நண்பனெல்லாம் இருக்காங்க பாரு. இப்ப உங்கம்மா இருக்கற கடைக்குப் போவோம்.”ன்னு சொல்லியிருக்கான்.”

“மெட்ரோ, ஆங், கரோல்பாக் மெட்ரோ ஸ்டேஷன்தான்.. அது தாண்டி, சிகப்பு கலர் இன்னோவா வண்டில ஏறினோமே? மறந்துடுச்சா?” அந்தப் பெண் மீண்டும் திடீரென பேசவும் சற்றே திடுக்கிட்டேன்.

”இவளும் அவனும் ஏறினதும் வண்டிய எங்கயோ கொண்டு போயிருக்காங்க. ஓடற வண்டியில இவள….” சுஷ்மா முடிக்கமுடியாமல் திணறினாள்.

“ இன்னோவா நின்னிட்டிருந்துதே? கல்யாணம் முடிஞ்சுபோச்சு. அம்மா கிட்ட போவோம்.ஏய். ஏன் தொடற? நீயும் ஏண்டா தொடறே? ஏய். நான் கத்துவேன். சில்லாவுங்கீ..ஈஈஈஈ”

“ கடையில இவளைக் காணாமத் தேடி , எங்க வீட்டுக்கு, அவங்க வீட்டுக்குன்னு போன் மேல போன் பண்ணி, ஆட்கள் டெல்லி முழுக்கத் தேடித்தேடி, குர்கான்வ் தாண்டி மனேஸர் போற வழியில ரோடு ஓரமா இவ கிடந்ததை ராத்திரி எட்டு மணிக்கு கண்டு பிடிச்சோம். சஃபதர்ஜங் ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு ஒருவழியா இவ கண்ணு தொறந்தப்போதான் இவளுக்கு சித்தம் கலங்கியிருக்கறது தெரிஞ்சுது.

மாப்பிள்ளப் பையன், இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா மானக்கேடு-ன்னு ’நான் செய்யலே”ன்னு சொல்லிட்டான். அவங்க வீட்டுலயும் ’உங்க பொண்ணு எவன்கூடயோ ஓடிப்போனதுக்கு என்வீட்டுப் பையனச் சொல்லாதீங்க’ன்னு சண்டைக்கு வந்தாங்க. இவ இப்படி உளர்றதைத் தவிர, அவந்தான் இவளைக் கெடுத்தான்னு நிரூபிக்க ஒரு ஆதாரமும் இல்லே. நிம்மான்ஸ்க்கு வந்து பாத்தா எதாவது தெரியுமான்னு பாக்கறோம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காரு பெரிய டாக்டர். “

“அவன் மாமா மகன், சித்தப்பா மகன்.. அந்த இன்னோவா? அதெல்லாம் சாட்சியா பிடிக்கலாமே? போலீஸ்ல சொன்னியா?“

“ அவங்க எல்லாரும் நாங்க யாரும் இவன்கூட அங்க வரவேயில்லங்கறாங்க. அதுக்கு பொய்யா சில ஆதாரங்களும் வச்சிருக்காங்க. அவங்க ஆட்கள். விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அந்த சிவப்பு இன்னோவா.. அது பொய் சொல்லாது சாஹேப்.. அது கிடைக்கணுமே சாஹிப்.?”

”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.

அழுதவாறே சுஷ்மா, ‘எழுந்திரு” என்று ஜடமாக அமர்ந்திருந்த அவளை எழுப்பி நடத்திச் செல்வதை சில நிமிடம் பார்த்து நின்றேன்.

ஜடப் பொருட்கள் பொய் சொல்வதில்லை.

பல நூறு வருடங்களுக்கு முன் , தன்னை மணமுடிப்பதாக ஏமாற்றிய ஒருவனைக் குறித்து ஒருத்தி திகைப்பில் பாடுகிறாள்.

”யாரும் இல்லை, தானே கள்வன்:
தான் அது பொய்ப்பின் , யான் எவன் செய்கனோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்காலின்
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டே, தான் மணந்த ஞான்றே?”
– குறுந்தொகை.
“என்னை ஏமாற்றியது நீயன்றி வேறொருவரில்லை. திருமணம் செய்து கொள்வதாகச் சொன்ன உனது வார்த்தைகளை நீயே பொய்த்தால், நான் என்ன செய்வேன்? யாருமற்ற பொழுதில், நீ என்னைத் திருமணம் புரிந்த போது, தினைப்பயிரின் மெல்லிய இலை போன்ற மெலிந்த பசுமையான கால்களை உடைய , நாரை ஒன்று , ஓடிக்கொண்டிருந்த நீரில், ஆரல் மீன்களை உண்ணக் காத்திருந்ததே? அதுவே சாட்சி. ”

அஜிதா – காதல் என்ற கிறுக்குத் தனம்.

” இன்னிக்கு சாயங்காலம் மீட்டிங் அஞ்சு மணிக்கு. வரியா?” கேள்வியில் சற்றே பரபரப்பானேன். நண்பர்கள் குழுவின் அடுத்த சந்திப்பு. விட மனமில்லை.

“யாரு பேசறாங்க? என்ன தலைப்பு?”

“சங்ககாலக் காதல் உணர்வும், புதுக்கவிதைகளில் காதலும்”னு ரெண்டு பேர் பேசறாங்க. ஒருத்தர் எம்.கே.தாமஸ் இன்னொருத்தர்.. அப்புறம் சொல்றேன்” நிர்மலா வெங்கெட்ராமன் மெல்ல பீடிகை போட்டார்.

“தாமஸ்? போனதடவை மைக்கைப் பிடிச்சுட்டு முடிக்க மறந்தே போனாரே? அவரா?”

“டோண்ட் பி க்ரூயல். அவருக்கு மெதுவா சொல்ற விதத்துல சொல்லிட்டோம். இந்த தடவை கடிகாரம் பாத்துத்தான் பேசுவார். அடுத்த ஆள் யாருன்னு தெரிஞ்சா, நீங்க கண்டிப்பா வருவீங்க. செல்வன் வேலாயுதம்”

செல்வன்? வியப்பு மேலோங்கியது எனக்கு. பல வருடங்களாக பழக்கம் என்றாலும், அதிக நெருக்கமில்லை. அருமையாகப் பேசுவான். ஆழமான அலசல்கள் , தெளிவான சிந்தனை. மிகச் சுருக்கமாகப் பேசிவிட்டு, கேள்வி பதில்களில் நேரம் செலவிடுவான்.

“ரைட்டு. கண்டிப்பா வர்றேன். நிர்மலா. எங்க வரணும் சொல்லுங்க.”

நிர்மலா வெங்கட்ராமனின் அலுவலக கருத்தரங்க அறையை, வெள்ளிக்கிழமை மாலை, சனிக்கிழமை மதியத்திலிருந்து மாலை வரை  தமிழ் நண்பர்கள் தமிழ்ப் புத்தகம், இலக்கியம் என்று பேசுவதற்கு பெரியமனத்தோடு ஒதுக்கித் தருவார். எப்போதெல்லாம் முடியுமோ அப்போது கூடுவோம். மிஞ்சிப் போனால் பத்து பேர் இருப்போம். ஆனால் தரமான, கண்ணியமான  விவாதங்களாக இருக்கும்.

அன்று அவர் அழைத்தது ஒரு கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு. ‘இத்தனை பெரிய நிகழ்ச்சியா?” என்று கேட்டேன்.

“செல்வம் வழக்கமா  வெள்ளிக்கிழமை இன்னொரு குழுவுல பேசுவாராம். அவங்க எல்லாரையும் இங்க அழைச்சிருக்கார். அறுவது பேர் இருப்போம் மொத்தமா பாத்தா”

நிர்மலா என்னை விட இரண்டு வருடம் , பல்கலைக்கழகத்தில்  சீனியர். அப்போதெல்லாம் அவரைத் தெரியாது. அவர்  எம்.பி.ஏ படித்துவிட்டு சிங்கப்பூரில் இருந்துவிட்டு, இங்கு சொந்தமாக ஆலோசனை வழங்கும் நிறுவனமொன்றை நடத்திவருகிறார். பைசாவுக்குக் குறைவில்லை எனினும் இலக்கிய அறிவுக்கும் ஒரு குறையுமில்லை. பேஸ்புக் மூலம் எதிர்பாராவிதமாகக் கிடைத்த நட்பு அவர்.

சீக்கிரமாகவே போய்விட்டேன். நாற்காலிகளை அடுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து எடுத்துப் போட்டு, வரிசையாக வைத்துக்கொண்டிருந்த தன்னார்வலர்களோடு சேர்ந்து நானும் நாலு நாற்காலிகளை இழுத்துப் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து அமரத் தொடங்கினர். பலரும் தெரியாதவர்கள்.

“உங்களத்தான் தேடிக்கிட்டிருந்தேன். “ நிர்மலாவின் குரலில் திரும்பினேன். “மீட் டாக்டர். அஜிதா.”  அறிமுகம் செய்யப் பட்ட பெண்மணி நடுத்தர வயதினர். கருத்த மெலிந்த உடல். கோபிப்பொட்டு அணிந்த , பெரிய நெற்றி. டிப்பிக்கல் தென்னிந்தியப் பெண் என்று சொல்லிவிடலாம். ஏதோ வங்கி மேலாளர், ரயில்வேஸ் ஆபீஸர் போன்ற மாற்றல்கள் உள்ள வேலையில் இருப்பார் எனத் தோன்றியது.

“அஜிதா எனது க்ளாஸ்மேட். எம்.பி.ஏ முடிச்சப்புறம் தவறாக ஆராய்ச்சி வழியில் செல்ல முட்டள்தனமாக முடிவெடுத்த புத்திசாலி. “ அஜிதா புன்னகையுடன் ஏதோ குறுக்கிட ,நிர்மலா தொடர்ந்தார் “ ஒரு சின்ன ஹெல்ப் வேணும் அஜிதாவுக்கு சில தமிழ் சொற்றொடர்கள் புரியாது. தாமஸ் வேணும்னே தன் மொழி வளத்தைக் காட்டணும்னு பேசுவார். நீங்க அஜிதாவுக்கு எளிய தமிழ்ல விளக்கணும். ப்ளீஸ்”

வியப்புடன் நான் அஜிதாவை ஏறிட்டேன். அவர் எப்போதும்போல புன்னகை பூத்து நின்றார். “ சரி. ஆனா, வளவளன்னு நடுவுல நான்  பேசினா, இடைஞ்சலா இருக்குமே ?”  “ ஒரு ஓரமா ஒக்காந்துக்கோங்க. எப்பவாவதுதான் அவங்களுக்கு உங்க விளக்கம் தேவையிருக்கும்.”

வலது புறம் தூணுக்கு மறுபுறம் இரு நாற்காலிகளை இட்டு அமர்ந்தோம். மேடை தெளிவாகத் தெரிந்தது. முதலில் தாமஸ் ஏறினார். நிர்மலா  சிரித்தபடி ஒரு மேசைக் கடிகாரத்தை உயர்த்திக் காட்டினார். தர்மசங்கடமாகச் சிரித்த தாமஸ் முதலில் தன் உரையைத் தொடங்கினார்.

மூன்று நிமிடங்களின் பின் பக்கவாட்டில் பார்த்தேன். அஜிதா.. நம்மூர்ப் பெயர் மாதிரி இல்லை. மலையாளப் பெயர். இந்தப் பெண் நாயர், மேனன் , குறுக்கில் என்று ஒரு இரண்டாவது பெயரும் வைத்துக்கொள்ளவில்லை. கருத்த , சற்றே மெலிந்த கையில் ஒரு தங்கவளையல் கோணலாக மணிக்கட்டில் சற்றே மேலெழுந்திருந்த எலும்பில் தட்டி நின்றிருந்தது. அதே சிரிப்பு மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரேஒரு முறை என்னை நோக்கி சற்றே சரிந்து “ குரீஇ-ன்னா என்ன?” என்றார். “அது,குருவி-ங்க.” “ ஓ. தான்க்ஸ்” என்று மீண்டும் கவனிக்கத் தொடங்கினார்.

செல்வம் மேடையேறியதும் அரங்கில் , நாற்காலிகள் முன்னோக்கி இழுபடும் சப்தம் கேட்டது. பல சங்ககாலப் பாடல்களிலிருந்தும் , சிலம்பு , மணிமேகலையிலிருந்தும் அவன் வார்த்தைஜாலத்தை நிகழ்த்தினான். கேள்வியுடன் அஜிதாவைத் திரும்பிப் பார்த்தேன். இவருக்கு குரீஇ புரியாதபோது நள்ளி, என்பது பெண் நண்டு என்ற பொருள் விளங்கியிருக்குமா? அவர் மேற்கொண்டு ஒரு கேள்வி கேட்கவில்லை. முடியுமுன்னரே, எழுந்து, மெதுவான குரலில் “நன்றி” என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து, ஓரமாய் நகர்ந்து, வெளியேறினார்.

நிர்மலாவிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொள்ளவில்லை? எதாவது குடும்ப காரணங்களால் வெளியேறுகிறாராயிருக்கும் என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி முடிந்தபின், ஆடிட்டோரியத்தின் செலவுக் கணக்கை முடித்துக் கொண்டிருந்தபோது நிர்மலா வந்தார்.

“ரொம்ப தாங்க்ஸ். அஜிதா போன் பண்ணினாள். அவருடைய உதவிக்கு நன்றி சொல்லிடுன்னா சொல்லிட்டேன். ”

“என்ன உதவி செஞ்சேன்னு தாங்க்ஸ் சொல்றாங்க? குரீஇ -குருவின்னேன். அவங்களுக்கு எப்படி மத்த சொற்கள் புரிஞ்சது? “

“அவளுக்குப் புரிஞ்சிருக்காது. புரியவும் முடியாது. அவ மலையாளி. தமிழெல்லாம் சுத்தமா படிக்கலை”

அவரை ஏறிட்டேன். இன்னும் பில் ரெடியாகவில்லை.
“ அஜிதா, செல்வம் , நான் எல்லாரும் எம்.பி.ஏ க்ளாஸ்மேட்.  செல்வத்தை அவ காதலிச்சா. சொல்ல சங்கடப் பட்டா. நான் போய் அவங்கிட்ட சொன்னேன். அவன் நான் அவளை காதலிக்கலை-ன்னான். ஆனா அதுக்கு அப்புறமும் நண்பனாகவே நடந்துகிட்டான்.  ஆனா இவ தீவிரமாக் காதலிச்சா. ஒரு தடவை செல்வத்தோட அக்காவைப் போய்ப் பாத்தோம். ’நான் உங்க குடும்பத்துல நல்ல மருமகளா இருப்பேன்’னு திறந்து பேசினா அஜிதா. அவங்களுக்கு இவ ஜாதி , மொழி தடையா இருந்தது.  கல்ச்சரும் வேறு. செல்வத்தோட அக்கா , வீட்டுல மேற்கொண்டு பேசத் தயங்கினாங்க. அந்த முயற்சி அப்படியே நின்னு போச்சு.

“அப்ப அஜிதா,  செல்வம்கிட்ட இது பத்தி பேசவே இல்லையா? ”

“பேசினா. அவன் அவளை ஒரு காதலியா நினைக்கலைன்னு நேராவே சொல்லிட்டான். பெங்களூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டான். இவ அவனைத் தவிர யாரையும் நினைக்கவே மறுத்துட்டா”

“அப்போ.. இப்பவும்.. ?”

“யெஸ். இதுவரை கல்யாணமே பண்ணிக்கலை. ரிசர்ச்ன்னு அமெரிக்கா போனா. திரும்பி வந்து ஒரு பெரிய மேனேஜ்மெண்ட்  கல்லூரியில நல்ல பொஸிஷன்ல இருக்கா. செல்வத்தை அவ இன்னும் மறக்கல. எப்பவெல்லாம் அவன் நிகழ்ச்சி நடக்குதோ,அவனைப் பாக்கறதுக்கு வருவா. அவன் கண்ணுல படாம முதல்லயே போயிடுவா.”

“இதென்ன கிறுக்குத்தனம்?” திகைத்தேன் நான். ‘’அவங்க வாழ்க்கையையே வீணாக்கிட்டிருக்காங்க. அவங்களை விரும்பாத ஆளுக்கு, அவனுக்கே தெரியாம இன்னும் உருகறது, பைத்தியக்காரத்தனம். சினிமாவுல, டீன் ஏஜ் வயசுல இதுமாதிரி கேணத்தனம் சாத்தியம். அதோட விட்டுறணும்.”

“எவ்வளவோ சொல்லியாச்சு.  கேட்கலை.  ஒரு விதமான மாய மகிழ்வு. போதை. ஒரு பழமொழி சொல்வங்களே?.. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்ட மாதிரி. இவ முடவனும் இல்லை, செல்வம் கொம்புத் தேனும் இல்லை. ஆனா இவ அப்படி நடந்துக்கிறதுக்கு காதல் என்கிற பைத்தியக் காரத்தனத்தைத் தவிர எதுவும் எனக்குத் தோணலை. விடுங்க. யார்கிட்டயும் சொல்லவேணாம்.  ஓ.கே , ஃபைனல் அமவுண்ட் ஒரு தடவை செக் பண்ணிட்டு, பேமெண்ட் கொடுத்துருங்க. “

வெளிவரும்போது எல்லாரும் சென்றுவிட்டிருக்க, எனது வண்டி மட்டும் நின்றிருந்தது. படித்த, பொறுப்பான பதவியில், சமூகத்தில் உயர்தட்டில் வசிக்கும் பண்பான அஜிதாவின் இந்த செய்கைக்குக் காரணமென்ன. உள்ளிருந்தே அவரை மெழுகாக  உருக்கும் தீ.  அதன் ஒளி விரும்பப் படாதது. அதன் பயன் எவருக்குமில்லை.

குறுந்தொகையில், தன்னை ஏற்காத காதலனை விட்டுவிடுமாறு சொல்லும் தோழிக்கு ஒரு தலைவி சொல்கிறாள்.

“குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை

பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்

உட்கை சிறுகுடை கோலிக் கீழிருந்து

சுட்டுப நக்கி ஆங்கு காதலர்

நல்கார் நயவார் ஆகிலும்

பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே”

  –  குறுந்தொகை

“கூதளி மரத்தின் சிறிய இலைகள் ஆடும் பெருமலையிலுள்ள  மரத்தில் இருக்கும் தேன் கூட்டினடியே, கால் நடக்க இயலாது, இருக்கையில் இருக்கும் முடவனொருவன், உள்ளங்கையை, சிறு குடைபோல குவித்து, தேன் சொட்டைச் சேகரிப்பது போன்ற பாவனையில், கூட்டைக் கையால் சுட்டியபடி, கையில் இல்லாத தேனை நக்கிச் சுவைப்பது போல, காதலர் எனக்கு அன்பை தரமாட்டார், என்னோடு வாழமாட்டார் என்று தெரிந்திருந்தும், அவரை மீண்டும் மீண்டும் பார்த்திருப்பது ஒன்றே என் உள்ளத்துக்கு இனிதாயிருக்கிறது”

இந்த கேணத்தனத்தின் பேர் காதலா?