இரு வருடங்கள் முன் நண்பர் ஒரு மொபைல் வாங்கினார். ₹13000 ஆச்சு. ஆன்லைனில் அதே மாடல் ₹12000, இரு வாரங்களில் கிடைத்தது. நண்பர் வயிறெரிந்தார். ஆயிரம் ரூபாய் போச்சே… ரெண்டே வாரம் பொறுத்திருந்தா…. புலம்பல் பல நாட்கள் நிற்கவில்லை.
அதே ஆன்லைன் தள்ளுபடி விற்பனையில் ஒரு ஃப்ரிட்ஜ் பார்த்தார். ₹23000. வந்து கொடுக்கும் செலவு ₹1000. தெருவோர ஓபராய் மாலில் அதே ஃப்ரிட்ஜ் விலை ₹23000 . கொண்டுவந்து வைப்பது இலவசம். மொத்தத்தில் ₹ 1000 லாபம் , மற்ற ஆன்லைன் விற்பனையுடன் பார்த்தால்.மனிதர் ஆன்லைனில் வாங்கினார். அது ஆயிரம் ரூபாய் கூடுதல் ஆச்சே ? என்றால் , போகட்டும்’ ஆயிரம்தானே? 23000ல் அது ஒண்ணுமேயில்லை. என்றார்.
இரு வாரமுன் ₹ 1000 க்கு அழுதவர், இப்ப அது பரவாயில்லை எங்கிறார். எப்படி ? என்றால், ரூ 23000ல ஆயிரம் கொஞ்சம்தான் தாக்கம் என்று சொல்லிக்கொண்டேன். ஏன் இப்படி நினைக்கிறோம் என்பது புரியவில்லை
நமது மூளை லாகரிதம் வழியில் சிந்திக்கிறது’ என்கிறார் சுபஸ்ரீ , தனது வலைத்தளம் Mathyarn.com -ல் ஒரு பதிவில். இரு எண்களை அதனதன் லாகரிதம் அடிப்படையில் கணக்கிடுங்கள். இரண்டின் படிமத்தின் வேறுபாட்டைக் கணக்கிடுங்கள். அது சிறியதாக இருப்பின், எண் எத்தனை சிறியதாக இருக்கிறதோ, அதன் அடிப்படையில், வேறுபாடு பெரிதாகத் தெரியும். எத்தனை பெரியதாக இருக்கிறதோ, அதன் வேறுபாடு சிறியதாகத் தெரியும். ( வலைப்பதிவில் லாகரிதம் பற்றிய செய்தியைப் பார்க்கவும்).
இப்படி நாம் அறியாமல் கடந்துபோன கணித முறைகள் ஏராளம். லாகரிதம், கால்குலஸ் , காரணிகள், HCF, LCM வர்க்கம், வர்க்க மூலம், exponential , கற்பனை எண்கள்….இதற்கெல்லாம் எதாவது பயன் உண்டா? இருக்கிறது எங்கிறார் சுபஸ்ரீ. அவர் சிறுவர்களுக்காக , இன்றைய எடுத்துக்காட்டுகளுடன் அடிப்படைகளை விளக்குவதை, வெட்கத்தை விட்டு நாமும் பயிலலாம்.
ஆங்கிலத்தில் இருக்கிறது. எளிய மொழியைத்தான் கையாளுகிறார். மிக நேர்த்தியாக , நம்முடம் பேசுவது போல் உரையாடலாக விளக்குகிறார். அருமை. இன்றைய குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்.
நானெல்லாம் ‘ வெண் படம் வரைக” என்று லடிஸ் சார் , பெரியதாக வட்டங்கள் வரைந்து விளக்கியபோது தூங்கிக்கொண்டிருந்தேன். லாகரிதம் கொண்டு பெருக்குவது என்பது 5 மார்க் கணக்கு. லாகரிதம் டேபிள் அந்த பள்ளி வகுப்போடு சரி. கால்குலேட்டர் இருக்கையில் எவன் லாகரிதம் போடுவான்?
மூளையே லாகரிதத்தில் சிந்திக்கிறது என்பது பொட்டில் அறைந்து விளக்கிய உண்மை. நன்றி சுபஸ்ரீ.மேற்கொண்டு விவரங்களை www.mathyarn.com ல் காணவும். குழந்தைகளுக்குக் காட்டவும் என அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன்.
