காவல் மீன்கள்

                                       

வானம் மந்தமாக , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாமெனப் பயமுறுத்தியது. பேராசிரியர் அழகர்சாமி,  ஆய்வு மாணவி தயமந்தியை ஏறிட்டார். ”வீட்டுக்குக் கிளம்பும்மா. மழை பெருசா வரும்போல இருக்கு” 

“வணக்கம் சார்”. ஜோசப் வாசலில் நின்றிருந்தான்.“கிளம்பிட்டீங்களா ப்ரொபஸர்? அப்ப நாளைக்கு வர்றேன்” .

 “ வராதவன் வந்திருக்க. சொல்லு. பேசிக்கிட்டே போலாம்” மூவரும் பல்கலை இயற்பியல் துறையின் நீண்ட தாழ்வாரத்தில் நடந்தனர்.

“நீங்க போனவாரம் ‘அறிவியல் அறிவோம்’ கழகத்துல பேசினது மனசுல ஓடிட்டிருக்கு சார். ஒவ்வொரு செயலிலும் அறிவியல், தொலைநோக்குப் பார்வைன்னு பாக்கணும்னு சொன்னீங்க.”

ஜோசப் தொடர்ந்தான். “எங்க கிராமம்… சொல்லியிருக்கேன்… தூத்துக்குடி பக்கம் கடலோரப் பகுதி. கடல்ல காவல் மீன்கள்ன்னு  இருக்குன்னும், அது  இருக்கறதுனாலதான், எங்கள்ள பலரும் பிழைச்சிருக்காங்கன்னும் ஊர்ல ஒரு கதை உண்டு.  அதுல என்ன அறிவியல்?னு பாத்து ஊருக்குச் சொல்லணும் சார்.  குறைஞ்ச பட்சம், எங்க ஊர்ல இருக்கற இந்த மூட நம்பிக்கையை உடைக்கணும்.”

அழகர் சாமி நின்றார்.  நெல்லைப் பாணன் பாட்டு… லேசாக நினைவில் ஓடியது. கடல் ஒருவனை உள்ளே இழுக்கிறது. அப்போது…

“முன்னே திரையிழுக்க, பின்னே நினைவிழுக்க

நெஞ்சடங்க, நினைவடங்க, நீஞ்சுவது தானடங்க…

அஞ்சாமே சென்றிடடா. அருங்காவல் மீனிருக்கும்.

மச்சமது  நின்றிடவே , கச்சிதமாய்த்  திரும்பிடுவாய்”

“அங்! அப்படித்தான் பாட்டு போகும் சார்! உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஜோசப் வியக்க, அழகர்சாமி, தான் உரக்கப் பாடியதை நினைத்து ஒருகணம் வெட்கினார்.

“ரொம்ப வருசம் முந்தி, நெல்லைப்பாணர் -நு ஒருத்தர் வீட்டுல குடியிருந்தோம். அவருக்கு அப்பவே எழுவது வயசிருக்கும். அவர் தாத்தா வைச்சிருந்த ஓலைச்சுவடியெல்லாம் காட்டுவார். அதுல இருந்த ஒரு பாடல் இது. சரியா நினைவில்லை. இது காவல் மீன் பத்தின பாட்டு-ந்னுவார்”

ஜோசப். “நீங்க  நேரடியாகப் பாத்து இதுல இருக்கற அறிவியல் என்னன்னு சொல்லுங்க.  சமூக வலைத்தளத்துலன்னு பெருசா பரப்பிடலாம். நீங்க எப்ப வரமுடியும்?” என்றான்

“சனிக்கிழமை?”.தயமந்தி, அன்னிக்கு  உனக்கு வேற வேலை ஒண்ணுமில்லையே?”

அது கிராமமல்ல. குக்கிராமம். கடற்கரையை ஒட்டிய சில தெருக்கள். நூறு குடும்பங்கள் இருந்தால் பெரிது.  ஒருபுறம் கடல் அலைகள் சோம்பலாக அடித்துக் கொண்டிருக்க, சற்று தொலைவில் தென்னை மரங்கள் , பாறைகள் என பசுமையாக இருந்தது.

சில ப்ஸாஸ்டிக் நாற்காலிகளை ஒரு குடிசையின் வாசலில் இட்டிருந்தார்கள். வயசான ஒருவர் வணக்கம் என்றார். “ நான் அந்தோணி. இவன் ஜெரால்டு.“ அழகர்சாமி , தன் வரவால் அவர்கள் உள்ளூடும் ஒரு பதட்டத்தைக் கவனித்தார்.

“காவல் மீனு பத்தியா? லே, ஜெரால்டு, இப்போதைக்கி நீதான் பாத்திருக்க. சாருகிட்ட சொல்லு”

ஜெரால்டு எழுந்தான். “ஒரு வாரம் முந்தி… கொஞ்சமா ஃபாரின் சரக்கு அடிச்சிருந்தேம்லா? வடக்கால இறங்கிட்டேன். போட்-ல சட்டுனு ஒரு ஆட்டம். விழுந்துட்டேன்.

இழுத்துச்சு பாருங்க, ஒரு இழுப்பு… காலு சதை பிடிச்சிருச்சு. சுர்ருனு ஒரு வலி. நீஞ்ச முடியல. கரைக்கு வர திரும்புதேன். தண்ணி கடலுக்குள்ள இழுக்கு. சரி.. இன்னிக்கு செத்துட்டோம்னே நினைச்சிட்டேன். திரேசம்மா முகம் கண்ணுக்குள நிக்கி. சின்னப் பொண்ணு மூஞ்சி தெரியுது. மன்னிச்சுக்க புள்ள-னுகிட்டே இழுப்புல போயிட்டிருக்கேன்.கொஞ்ச தூரத்துல அது தெரிஞ்சிச்சி”

“எது?” என்றார் அழகர் சாமி

“காவல் மீனு. கருப்பா நிழல் மாரி… தட்-னு ஒரு மீன்மேல இடிச்சிருக்கேன். குறைஞ்சது ஆறு ஏழு இருக்கும். சின்னதும் பெரிசுமா.. “

“எவ்வளவு பெரிசு?”

“ஒரு சாண்லேர்ந்து, ரெண்டடி வரை.  நடுவுல ஒண்ணு ரொம்பப் பெரிசு. சரியாப் பாக்கல.” ஜெரால்டு ஒருகணம் நிறுத்தித் தொடர்ந்தான்.

“காவல் மீன் கண்டா, வலப்பக்கம், இடிச்சா இடப்பக்கம்னு நீஞ்சணும்,  கேட்டிருக்கம்லா? இடது பக்கமா திரும்பி நீஞ்சுதேன். தண்ணி உள்ள இழுக்கு. இப்ப திரும்பவும் ஒரு இடி.. ஒரு பெரிய மீன் நான் ,கடலுக்குள்ள இன்னமும் போகாம தடுத்துக்கிட்டு  நீஞ்சுது. கொஞ்ச தூரம் வந்ததும், நின்னிட்டு. நான் கரைப்பக்கமா மெல்ல மெல்லத் திரும்பி நீஞ்சி வந்துட்டேன். என்னைக் கரைப்பக்கமாத் தள்ளின மீன் மட்டுமில்லைன்னா, ஹார்பர் பக்கம் பொணமா ஒதுங்கியிருப்பேன்.”

 “அந்த இடத்தைக் காட்ட முடியுமா?” அழகர் சாமி எழுந்தார்.

கடற்கரையில் ஜெரால்டும், அந்தோணியும் தமயந்தியும் அவருடன் நின்றிருக்க, இரு இளைஞர்கள், வீடியோ கேமிராவும் கையுமாக அதனைப் படமெடுத்துக் கோண்டிருந்தனர்.

அந்தோணி, கடலை நோக்கிக் கை காட்டினார்” தெக்கால அங்கிட்டு ஒரு பாறை மாரித் தெரியுது பாருங்க, ஆங்! அதுக்கு அங்கிட்டு ஒரு இன்னொரு பாறை இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல தான் இழுப்பு போகும்.  இதேமாரி, வடக்காம ரெண்டு மேடு இருக்கு. ரெண்டுக்கும் நடுவுல இழுப்பு. மணல் மேடு பாருங்க… அது இடம் மாறிட்டே இருக்கும். அதுனால, இழுப்பு  இடத்த கரெக்டா சொல்ல முடியாது.”

“இதுக்கு ஒரு பாட்டு உண்டுல்ல?” என்றார் அழகர்சாமி.

 சிரித்தார் அந்தோணி“நெல்லைப்பாணன்னு ஒருத்தரு இருநூறு வருசத்துக்கு முன்னாடி ஓலைல எழுதி வைச்சு, அதை அவர் பேரன் புத்தகப்பதிப்புல போட்டாருன்னுவாங்க. அது , “ மச்சமது கண்டிட்டால், வலப்புறமா கைபோடு; இச்சையுடன்  தீண்டிட்டா, இடப்புறமாக் கைபோடு” -னு போவும். இதான் சூச்சுமம். இங்கிட்டு எல்லாப் பயலுவளுக்கும் இது தெரியும். ஜெரால்டு பொளைச்சதுக்கும் இதான் காரணம்”

“தெக்கால,  எப்படிப் போக?” என்ற அழகிரிசாமியை நிறுத்தினார் அந்தோணி “அய்யா, இங்கிட்டு மோட்டார் போட், வலை போட அனுமதி கிடையாது. சமூக உத்தரவு. ஒரு பய இந்த எல்லைக்குள்ள மீன் பிடிக்க முடியாது. நம்ம படகுல  கூட்டிட்டுப் போறேன். “

படகில், திடீரென கடலை நோக்கிய இழுப்பை உணர்ந்தார் அழகர்சாமி.  இருபுறமும் நுரைப்படுகைகள் வளைந்து கடல் நோக்கி விரைந்ததைக் கண்டார். இரண்டு நுரைகளும் இணையுமிடத்தில் மீன்கள் நிற்குமென்றார் அந்தோணி. அவைகளைக் காண முடியவில்லை. கடின முயற்சியின்பின், பக்கவாட்டில் திரும்பி, மெல்ல, வெகு தொலைவு வந்து, கரையை நோக்கித் திரும்பினர்.  பின், ஆறு வாரங்கள் தொடர்ந்து வார இறுதிகளில் அவரது ஆய்வைத் தொடர்ந்தார்.

முடித்து விடைபெறும்போது, அந்தோணி “இங்கிட்டு கிடைச்ச கோரல், சாமி. வச்சிகிடுங்க”. என்றார். தூத்துக்குடி விடுதியில் அன்றிரவு, வெகுநேரம் அழகிரிசாமியின் அறையில் விளக்கெரிந்து கொண்டிருந்தது.

மறுநாள், தொலைக்காட்சி,  வீடியோ காமெராக்கள் சூழ நடுவே அழகர்சாமி அமர்ந்திருந்தார்.

“எனது அனுபவத்திலும், இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இதனைப் பகிர்கிறேன். இந்த மீன்களின் செயல்  புதிராகவே இருக்கிறது.  பல நூறு ஆண்டுகளாக இந்த நிகழ்வு  கவனிக்கப்பட்டு, பதியப்பட்டிருக்கிறது. மீன்கள் ஏன் காலம் காலமாக அங்கு நிற்கின்றன? என்பது எதிர்காலத்தில் விளக்கப்படலாம்.”

கையில் இருந்த ஒரு கோரல் துண்டை நீட்டினார் “ இங்கு கிடைத்த இந்தக் கோரல் மிக அபூர்வமானது. ஆஸ்திரேலிய கோல்ட் கோஸ்ட் அருகே கிடைக்கும் கோரலின் வகையிது. இந்தப் பகுதி, மீன் பிடித்தல், டைவிங் போன்ற மனித இயக்கங்களிற்கு அப்பாற்பட்டது எனவும் ,காக்கப்பட்ட பகுதியெனவும் அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”

மறுநாள், “ஸார்” என்ற தமயந்தி குரலில் நிமிர்ந்தார் அழகர்சாமி.  “ நீங்க டி.வில காட்டின கோரலும்,  அந்தோணி கொடுத்த கோரலும் ஒரே வகையில்லையே சார்? அவர் கொடுத்தது சாதாரண கோரல்”

அழகிரிசாமி புன்னகைத்தார் “தெரியும்.”

“அப்புறம் ஏன் சார்?” திகைத்தாள் தயமந்தி.

“இரு பாறைகள் நடுவே வேகமாக நீர் செல்லும்போது, நடுவே குறுகிய இடத்தில் அழுத்தம் குறைந்த பகுதி உருவாகும். இது பெர்னூலி ப்ரின்ஸிபிள். அங்கு சரியாக நடுவில் முன்னோக்கி நீந்தியபடி நிற்கும் மீன்கள் முன்னும் செல்லாது பின்னும் செல்லாது  நிற்கமுடியும். அந்த இடத்தில் அவற்றைப் பிற மீன்கள் தாக்க முடியாது. எனவே இங்கு சில மீன் கூட்டங்கள் இயற்கையான இழுப்பின்போது நிற்கின்றன என்பது என் ஊகம்.  டால்ஃபின்கள் போல், அவை இங்கிருக்கும் மனிதர்களோடு இசைந்து வாழக் கற்றுக்கொண்டுவிட்டன. ஸிம்பயாசிஸ். எனவே , அகப்படும் மனிதர்களை வலப்பக்கம் இடப்பக்கம் விலக்கி நீந்த வைத்து காப்பாற்றுகின்றன. அடிப்படை அறிவியல்”

அழகிரிசாமி தொடர்ந்தார் “ இதைச் சான்றுகளோடு நிறுவலாம். அதன்பின் என்ன ஆகும்? மர்மம் ஒன்றுமில்லை என அறிந்தால், விசைப்படகுகளும், வலைப்பிடிப்பும் அங்கு வரும். மீன் இனம் அழியும். பவழப்பாறைகள் சிதையும். ஒரு மர்மம் குறித்த நம்பிக்கை காலம் காலமாக இயற்கையைக் காக்கிறது என்றால், அறிதல் அதை அழிக்கிறது என்றால், எது நல்லது? என்பதைக் காட்டுவதுதான் அறிவியல் கண்ணோட்டம். அதற்கு அறிவியல் மட்டுமல்ல, தொலை நோக்குப் பார்வையும் வேணும்.”

வெளி வந்த தமயந்தியை ப்ரொபஸர் வசந்தி அழைத்தார் “தயமந்தி, ஆண்டு மலர்ல, டாக்டர் அழகர்சாமி பத்தி நாலு வார்த்தை எழுதணும். சொல்லேன். அவர் ஒரு சிறந்த….”

“மனிதர்” என்றாள் தமயந்தி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s