பேசத் தெரியாதவள்

‘சங்கர ராமனின் பெண் வீட்டுக்கு வந்துவிட்டாள் ‘ என்று அடுத்த அபார்ட்மென்ட் வித்யா சொன்னபோது, பெரியதாக ஒன்றும் நினக்கவில்லை. மிளகு ரசம் காரமாக இருந்ததில் , நாக்கில் பெரிதாக நீர் ஊற, உஸ் உஸ் என்றிருந்தேன். மாலையில் சங்கர ராமனின் போன் வந்தபோது, நினைவு வரவே கேட்டேன்.

‘ம்’ என்றார் சுரத்தில்லாமல். ஒரே பெண். எப்பவும் அவளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர், திருமணமாகி இரண்டு வருடத்தில் பெண் வீட்டுக்கு வருவதில் இப்படி உற்சாகமின்றி இருக்கிறாரே? கேட்டுவிட்டேன்.

“கொஞ்சம் பல்லவி ஓட்டல் பக்கம் வர்றீங்களா? அஞ்சு நிமிசம் பேசணும்” என்றார். மனதில் ஏதோ குறக்களி அடித்தது. பதினைந்து நிமிடத்தில் வந்தவர், ஒரு காபி ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக இருந்தார். ” என்ன விசயம்?’ என்றேன்.

“ராகினிக்கு டைவர்ஸ் ஆயிருமோன்னு தோணுது”

அமைதியாக இருந்தேன். தொடர்ந்தார் ” ரெண்டுபேருக்கும் அதிகம் பொறுமை கிடையாது. வள் வள்னு அப்பவே வீட்டுல சத்தம் போட்டு சண்டை போடுவாங்க. அடுத்த நிமிசம் சமாதானமாயிருவாங்க. சரி, சிறுசுங்க. பொறுப்பு வரலைன்னு கமலாவும் நானும் சொல்லிக்கிட்டோம். மாப்பிள்ளை தங்கமான மனுசர். சும்மா சொல்லக் கூடாது. இதுக்கு கூறு கிடையாது.”

“அப்படி ஒட்டுமொத்தமா முடிவுக்கு வர்றது சரியில்ல சங்கரா. என்னன்னு பொறுமையா கமலாவை விட்டுக் கேக்கச் சொல்லு”

“கேட்டாச்சு. இவ , அவனுக்கு என்மேல அன்பு இல்ல, எரிஞ்சு விழறான். ஆனா, அவன் ப்ரெண்ட்ஸ் வந்தா அப்படி சிரிச்சு பேசறான் எங்கிறாள். என்ன சொல்ல? நாமளும் அப்படித்தான்”

“இத கமலா சரியா எடுத்துச் சொல்லிருவா. கவலைப்படாத”

“அவனும் போன் பண்ணி , அங்க்கிள் அவளுக்கு என் மேல பிரியமே இல்ல. எப்பப் பாத்தாலும் சீரியல் பத்திப் பேச்சு. அன்னிக்கு ஆபீஸ்ல நடந்தது பத்தி.. இதேதான். வேற ஒண்ணுமே அவளுக்கு லைஃப்ல முக்கியமில்ல’ ங்கறான். என்ன சொல்ல?”

‘இதுக்கா டைவர்ஸ்? உனக்குக் கூறு இருக்கா? பேசிப் புரிய வைப்பியியா? அதை விட்டுட்டு”

“பேசற மாதிரி அவங்க இல்லை. இன்னியோட ரெண்டு மாசமாச்சு , அவ வந்து. ஒருதடவ கூட போன்ல் இவளும் பேசல, அவனும் பேசல”

கவலையானேன். இது லதாங்கி மாமியிடம் செல்லவேண்டிய கேஸ். “யாரு? அந்த லதாங்கி மாமியா? வேண்டாம்ப்பா. எடக்கு மடக்கா எதாச்சும் கேப்பா. போன தடவை, எங்க வீட்டு நாய் அவளைப் பாத்து அதிகமாக் குரைக்கறதுன்னு ஊரெல்லாம் சொல்லி… ஏற்கனவே வீடு ஒரு மாதிரியா இருக்கு..” சங்கரன் மறுத்தார். ஒரு மாதிரிப் பேசிப் புரியவைத்தேன்.

லதாங்கி மாமி, மாஸ்க்கின் பின் பூதகரமாயிருந்தாள் ” சிரிக்காதடா. கட்டையில போறவனே. நான் மூஞ்சிய மூடினப்புறம்தான் பாக்கற மாதிரி இருக்கறதா, மாமா சொல்றார். என்ன விசயம் சொல்லு”

சிரிக்காமல், சொன்னேன். மாமி ஒரு நிமிடம் காலண்டரைப் பார்த்தாள். “நாளைக்கு அமாவாசை. கமலாவாத்துக்குப் போயிட்டுவந்து சொல்றேன். இன்னும் அந்த எளவெடுத்த நாய் இருக்கா? குரைச்சுத் தொலைக்கும்”

இருவாரங்களில் சங்கர ராமன் போன் செய்தார். ‘மாப்பிள்ளை வந்திருக்கார். நாளைக்கு ரெண்டுபேரும் கிளம்பறா. ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்”

ராகினியும், கணவனும் வணங்கினார்கள். இருவரின் கண்களிலும் புதுக்காதல், புதுமணத் தம்பதியரின் ஒளி. சங்கரன் வாசல் வரை வந்து வழியனுப்பினார் ” ரொம்ப தாங்க்ஸ்டா, நீ சொல்லி அந்த மாமி வந்தா பாரு, அதுக்கப்புறம்தான் எங்களுக்கு மூச்சு வந்தது. “

‘லதாங்கி மாமியா?’ என்றேன். நாய் அன்றும் குரைத்துக்கொண்டிருந்தது.

“ஒண்ணு சாப்டாச்சு. போறும்” என்றாள் லதாங்கி மாமி, உறுதியாக. ” உனக்கு டயாபடீஸ். ஞாபகம் இருக்கில்லியா? ம்… ஒரு ஜாங்கிரியே பயந்துண்டேதான் கொடுத்தேன். மாத்திரை மறக்காமப் போட்டுண்டுடு”

“என்ன சொன்னீங்க?” என்றேன், மற்றொரு ஜாங்கிரியை எடுக்க முயன்றபடி. பேச்சு சுவாரஸ்யத்தில் மாமி மறந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில்.

ஜாங்கிரித் தட்டை மறுபுறம் நகர்த்தியபடி மாமி தொடர்ந்தாள் ” அந்தப் பொண்ணுக்கு அவன் மேல ஆசை இல்லாமலில்லை. என்ன … ஒரு வீம்பு, ஈகோ-ம்பாளே, அதுமாதிரி. போன ரெண்டு நிமிஷத்துல தெரிஞ்சு போச்சு. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். ப்ரச்சனை புரிஞ்சு போச்சு’

“என்ன ப்ரச்சனை?” ஜாங்கிரித் தட்டு உள்ளே சென்றுவிட்டது. இனி, பேச்சு மட்டும்தான்.

” அதுக்கு பேசத் தெரியலைடா. ஒருத்தர் வந்தா, அவாளை பத்திக் கேட்கணும். நமக்குச் சொல்லவேண்டியதை, அவாளைத் தானா கேக்க வைச்சு, அப்புறம் சொல்லணும். அதுலதான் மதிப்பு இருக்கும். இல்லேன்னா, அவாத்து நாய் குலைக்கற மாதிரி ஒரு மதிப்பு இருக்காது. குரைக்கற நாயை யாருக்காவது பிடிக்குமோ? அது நல்லதுக்குக் குரைச்சாகூட ” ஷட்அப்”னுவா. அப்ப புருஷன் கேப்பனோ?”

விழித்தேன்

“ஆபீஸ் போயிட்டு அசந்து வர்றான். அனுசரணையா ரெண்டு வார்த்தை முத ரெண்டு நிமிசம் கேக்கறதுல தப்பில்லையே? வந்ததும் வராததுமா , இன்னிக்கு எனக்கு என்ன நடந்தது தெரியுமா?ண்னு ஆரம்பிச்சா, அவனுக்கும் ‘ ஷட் அப்”தான் மனசுல வரும். ஒரு பேச்சுன்னா, எதித்தாப்புல இருக்கறவா மேல ஒரு கரிசனமா இருந்தாத்தான் அதுல ஒரு பிடிப்பு, ஈர்ப்பு இருக்கும்.

அந்தப் பேச்சே, நம்மைப் பாத்து, அவாளே, ‘நீ எப்படி இருக்காய்?’நு கேக்க வைக்கும். வைக்கணும். அதுக்கப்புறம் உன்னோட ப்ரச்சனை என்னன்னு சொன்னா, அவனுக்கும் அதுல ஒரு கவனம் இருக்கும். தன்னைக் கவனிக்கறவ கிட்ட அவனுக்கும் ஒரு கிடப்பாடு – மாரல் ஆப்ளிகேஷன் இருக்குமே? “

அசந்து போனேன். ‘சரி மாமி, இதை எப்படி அவளுக்குப் புரிய வைச்சீங்க? நீங்க சொன்ன மாதிரி ஒரு ஈகோ…”

“சொல்லற விதத்துல சொன்னா, கேக்கற விதத்துல கேக்கும்கள் ,குழந்தேள். அது கேக்கலைன்னா, நீ சொல்ற விதத்துல தப்பு இருக்குன்னு அர்த்தம்”

“சரி. என்ன சொன்னீங்க?”

” இன்னிக்கு அமாவாசை. நிறைஞ்ச நாள். இப்பவே அவனுக்கு ஒரு போன் போட்டுப் பேசு-ன்னேன். தயங்கித்து. போனை நீ போடு. அவன் பேசுவன். நான் கியாரண்டின்னேன்’

சிரித்தேன்” அதெப்படி, அவன் பேசுவான்னு நீங்க சொன்னீங்க?”

மாமி டம்ளரில் தண்ணீர் கொடுத்தாள் ” பேசறப்போ, கேள்வி மட்டும் கேளு, அதுவும் அவனைப்பத்தி, அவன் ஆபீஸ் பத்தி, மாமனார் மாமியார் பத்தி மட்டும் கேளு. நீ எப்படி இருக்கை?ண்னு அவன் கேக்கற வரை அவன் சொன்னதிலேயே திரும்பிக் கேளு-ன்னேன்” நாலே கேள்வி இவ கேட்டா, அஞ்சாவது, அவன் கேக்க ஆரம்பிச்சுட்டான் ” நீ எப்படி இருக்கே? நீ இல்லாம எப்படி போர் அடிக்கறது தெரியுமா? அது இதுன்னு…”

மவுனமானேன். அதன் பின் ” மாமி, இது செயற்கையா இல்லையா? “

“எதுடா செயற்கை? புருஷன் எப்படி இருக்கான்?ணு கேக்கறதா? இல்ல மாமியார் ப்ளட்ப்ரஷர் எப்படி இருக்குன்னு கேக்கறதா? உனக்கு அவாளைப் பிடிச்சிருந்தா இந்த கேள்வியெல்லாம் வருமா வராதா?”

“வரும்.. ஆனா”

“என்ன ஆனா? அத முதல்ல கேட்டுட்டுப் போ. அது அவனோட அக்கறையைத் தானும் பகிர்ந்துக்கிறது. அப்புறம், உன்னோட விருப்பத்தைச் சொல்லு. அவன் பகிர்ந்துகட்டும். சாப்பிடறவன் இலைல இடம் இருந்தான்னா, சாதம் சாதிக்க முடியும்.? அவன் உக்காரவேயில்லை. அதுக்குள்ள சாதத்தை வாயில திணிச்சா? அதும்பேரு போஜனம் போடறதா?”

மாமி தொடர்ந்தாள் ” ஒவ்வொருத்தர் மனசும் எப்பவும் சிந்தனைல நிறைஞ்ச்சிருக்கும். பிறத்தியார் சொல்லறதைக் கேக்கத் தோணாது. தன்னோட சுமையை இன்னொருத்தன் வாங்கிண்டான்னா, ஒரு கைம்மாறா, அவனோட சுமையைத் தானும் வாங்கிப்பன். இதுதான் பரஸ்பர மரியாதை. பேச்சு இப்படி இருக்கணும். அப்ப பேச்சுல , ஒரு பிடிப்பு, உசிர் இருக்கும்.”

இரு’ என்றவள் ஒரு சம்புடத்தை நீட்டினாள். ” இது மங்கைக்கு. நான் போன் கேட்டு அவகிட்ட கேப்பேன். உள்ள இருக்கறது எதுவும் குறைஞ்சிருந்ததுன்னு தெரிஞ்சது, உன்னை அப்புறம் இந்தாத்துக்குள்ள விடமாட்டேன். ஆமா”

மாமா ” நீ கண்டுக்காதே. பேசத் தெரியாது அவளுக்கு” என்றார் வாசலில்.

முத்துச்சிப்பி வெளியே கரடுமுரடாகத்தான் இருக்கும்.

2 thoughts on “பேசத் தெரியாதவள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s