“தமிழ் எதுக்குக் கத்துக்கணும்? அதான் பேச வருது, எழுத்துக்கூட்டி வாசிக்க வருது. டி.வில சொல்றது புரியுது. இதுக்கு மேலே எதுக்குத் தனியாக் கத்துக்கணும்கறீங்க,அங்கிள்?”
நண்பரின் மகள் சொன்னதில் ஒரு கணம் அமைதியாக இருந்தேன். ஒரு மொழி வெறியனாக, அல்லது குருட்டுத்தனமான அடையாளக் காப்பு என்ற பெயரில் தமிழைக் கற்றுக்கொடுக்க முடியாது. எதிர்மறை விளைவுகளே ஏற்படும் சாத்தியம் உள்ளது.
“இப்படிப் பார்ப்பமே?” என்றேன். “ஐரோப்பிய நாடுகள்ல இப்ப,லத்தீன் படிக்கத் திடீர்னு நிறையபேர் ஆர்வம் காட்டறாங்க. இறந்த மொழின்னு எல்லாராலும் அடக்கம் செய்யப்பட்ட ஒரு மொழி இப்ப எதுக்குத் திடீர்னு தூக்கிப் பிடிக்கறாங்க? ஒரு குழுவும் லத்தீன் என் தாய்மொழி, என் குழுவின் அடையாளம்னு கொடி பிடிக்கலை. ஆனாலும் ஏன் இந்த ஆர்வம்?”
“ஓரு சவால் என்பதால்?” என்றாள் அவள் சற்றே யோசித்து. ” லத்தீன் மொழியின் இலக்கணம் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று, அதுல கவிதை எழுதுவது என்பது அழகான, சிக்கலான ஒரு கணக்கைப் போட்டுப் பார்ப்பது போல். நல்ல தர்க்கத்தைக் கேட்பது போல்”
“இதைத்தான் பாரதி ” இது இரு பண்டிதர்கள் தர்க்கம் செய்வது போல் இருக்கிறது” என்றான் , பாம்புப் பிடாரன் குழலூதுகிறான் என்ற பாட்டில்.” என்றேன் சிரித்து. அவள் ‘ஓ” என்றாள் சற்றே வியந்து. ‘இது கேட்டதில்ல. தேச பக்திப் பாடல்கள், பெண் விடுதலை, ஞானப்பாடல்’நு கேட்டிருக்கேன்’ என்றாள்.
“இதுக்குத்தான் தமிழ் படிக்கணும்கறது. தமிழ் தெரியற எல்லாருக்கும் பாரதி தெரியாது. பாரதி படிச்ச எல்லாருக்கும் பாம்புப்பிடாரன் பாடல் தெரிந்திருக்காது. அது தெரிந்த எல்லாருக்கும் இந்த வரி ஈர்த்திருக்காது. ஒரு நிகழ்தகவின் அடிப்படையில பார்த்தால், இந்த கவிதை உணர்வு வருவதற்குக் கண்டிப்பாத் தமிழ் தெரிந்திருக்கணும்னு சொல்லலாமா?”
“You can” என்றாள் சிந்தனை வயப்பட்டு. ” ஆனா, இன்னும் லத்தீனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு படுத்தறீங்க்கன்னு தெரியலை”
“நீ சொன்ன த்ரில், சவால் தமிழ்ல அதிகம். தமிழ் இலக்கணம் லத்தீன் இலக்கணத்திற்கு நிகரா, ஏன், ஒரு படி அதிகமாகவே அழகா வடிவமைக்கப்பட்டு, அதுல எழுதறவனுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும். எப்படி ஒரு ஜிம்ல, முப்பது கிலோ எடையை பத்து தடவை தூக்கும்போது, வியர்வை பொங்க, அதை ஒரு வெற்றிக் களிப்புடன் பார்ப்பமோ, அதுமாதிரி, தமிழ் மரபுக்கவிதை புரியறப்போ, எழுதறப்போ ஒரு நிறைவு இருக்கு. அட்ரினலின் சுரப்பதை உணர முடியும். ஒரு நிறைவு, மகிழ்வு, வெற்றியின் களிப்பு”
“It is an opiate” என்றாள் சிரித்து. ” லெட் மி ட்ரை . ஆனா ஒரு உத்திரவாதமும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்;படிச்சா சொல்லுவேன்”

“சொல்ல வேண்டாம். நானே வாசிச்சுத் தெரிஞ்சுக்கறேன்” என்றேன். நண்பரின் வீட்டில் இருக்கும் கம்பராமாயணம் என்றாவது ஒரு நாள் அவள் விரல்களால் புரட்டப்படும்.
காத்திருப்போம், நம்பிக்கையோடு.
என் பேரன் நானும் என் பெண்ணும் பொன்னியின் செல்வனை வரிவிடாமல் வாசித்து ரசித்துப் பேசுவதைப் பல தடவை கேட்டு என்னிடம் ஒருநாள் என்ன கதை கொஞ்சம் சொல்லேன் என்றான். நீங்கள் சொன்னதையே நானும் சொன்னேன். தமிழ் கற்றுக் கொள் என்று. அவனும் ஒருநாள் பொன்னியின் செல்வன் படிப்பான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கைகள் பலிக்கட்டும்.
LikeLike