“இது என்ன விலை?” முன்னும்பின்னும் அந்த செண்டுபாட்டிலை நகர்த்தி, கண்களை இடுக்கி விரித்து, ஏதோ கதகளி அபிநயம் பிடித்துக்கொண்டிருந்தான் நண்பன் கிரீஷ்.
“கொடு”என்று பிடுங்கி வாங்கினேன். ”பன்னிரெண்டு யூரோ”
”அப்ப..” மனதுள் நூறால் பெருக்கி, 12ஐ 82ஆல் பெருக்கி ஏதோ செய்துவிட்டு “ ஆத்தீ. இவ்வளவா,? நம்மூர்ல பாதிவிலைக்கு வாங்கலாம்” என்று கீழே வைத்தான். இதேபோல் சில பொம்மைகளையும் எடுத்து, திகைத்து திருப்பி வைத்த வண்ணம் இருந்தான்.
முப்பத்தி ஐந்து வயது, கிரீஷுக்கு. ஏழு வயதில் ஒரு பெண். ஐந்து வயதில் ஒரு பையன். அரசு வேலைக்குப் போகும் மனைவி. சொந்த வீடு. சொர்க்க வாழ்வு..
”ரூம் வரை நடந்துட்டோம்னா, டாக்ஸி செலவு மிச்சம், வர்றீங்களா?” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் நடக்கத் தொடங்கினான்.. மூச்சிரைக்க அருகில் நடந்து வருகையில், கேட்டு விட்டேன். “கிரீஷ்,பைசா கொண்டுவந்திருக்க.ஆனா ஒண்ணும் வாங்கவும் இல்ல. வாங்கணும்னு ஆசையுமிருக்கு. என்ன ப்ரச்சனை?”
வேகத்தைக் குறைத்தான் கிரீஷ் “ என்ன சொல்ல? செண்ட்டு வாங்கிட்டு வாங்க-ன்னா மனைவி. பையனுக்கு ரிமோட் கார். இது மட்டுமே கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய். இன்னும் மத்ததெல்லாம் சேத்தா, பத்தாயிரம் துண்டுவிழும். அடுத்தமாசம் ஈ.எம்.ஐ கட்ட உதவுமேன்னு தோணுது.”
“ரொம்ப கணக்குப் பாக்காத” என்றேன். ‘வாழ்க்கையில கணக்குப் பாக்க முடியாத சந்தோசம் நிறைய இருக்கு”
அவன் நின்றான் . குளிரில் வாயிலும் மூக்கிலும் புகை பறந்தது “ எனக்கு வாங்கணும்னும் ஆசை இருக்கு. அதே நேரம் இருக்கிற கடனெல்லாம் பாக்கறச்சே, பயமாவும் இருக்கு. அனுபவிப்பதைத் தள்ளிப்போடுவோம்னு தோணுது. ஆனா வீட்டுல இதைப் புரிஞ்சிக்க மாட்டாங்க. நான் கஞ்சப்பிசிநாரின்னுதான் என் மனைவி அவ வீட்டுல சொல்லியிருக்கா”
சட்டென அவன்மீது அனுதாபம் எழுந்தது.. ஆசைகளற்ற ஜடமல்ல அவன். ஆசைகளோடு, அதீத யதார்த்த கவலைகளும் ஒருசேரப் பொங்கி , பொருள் வாங்கும் நேரத்தில் அவனைத் தடுக்கிறது. பொறுப்புகளுள்ள ஒரு கணவன், தந்தை அங்கு தனியாக பிளவுபட்டு நிற்கிறான்,தடுமாறுகிறான். ஆண்களின் உலகம் பலநேரங்களில் இப்படியான பிளவுகளின் நடுவில்தான் இருக்கிறது.
ஊருக்கு வந்ததும். இரு வாரங்களில் அவன் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. கிரீஷின் குழந்தைகள் புதுமுக வெட்கத்தில் பேச மறுத்து,சிறிது நேரம் கழித்து தங்களது பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்துவந்து காட்டி, கவனத்தை ஈர்க்க முயற்சித்தன. உணவிற்குப்பின் அனைவரும் அமர்ந்திருக்கையில் “ இவருகிட்ட கொஞ்சம் தாராளமா இருக்கச் சொல்லுங்கண்ணே” என்றாள் அவன் மனைவி. ”எதுக்கெடுத்தாலும் கணக்கு பாக்கறாரு. எனக்கு வாங்கறத விடுங்க. பிள்ளைங்களுக்கு வாங்கறதுக்குக்கூட ஒரு கஞ்சத்தனம். என்னத்த சேத்துவைக்கப் போறோம்?”
அவன் சற்றே நெளிந்தான். குழந்தைகள் டிவியில் ‘டோராவின் பயணங்கள்’ பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளறைக்குப் போனோம். ”பண நிலமை பத்தி இவங்க கிட்ட பேசியிருக்கியா?” என்றேன் அவனிடம்.
“ஆமா” என்றவன் சற்றே தயங்கி “ அது பத்திப் பேசறதே அவளுக்குப் பிடிக்கல. நீங்க பாத்துக்கோங்க என்கிறாள்.”
“என் வருமான வங்கிக்கணக்கு யூஸர் நேம், பாஸ்வேர்டு கூட இவர்கிட்டத்தான் கொடுத்துவச்சிருக்கேன். எனக்கு தனியா சேத்துவைச்சுக்கணும்னு எல்லாம் கிடையாது” என்றாள் பெருமையுடன்.
“இது ஒரு பெருமையா? உனக்கு அக்கறையே கிடையாது. அவ அக்கவுண்ட்லேர்ந்து ஒரு ம்யூச்சுவல் ஃபண்டு , எஸ்.ஐ.பி போட்டுக்கொடுத்தேன் சார். அதுல இப்ப என்ன லாபம் வந்திருக்குன்னு கேளுங்க, தெரியாது அவளுக்கு.” என்றான் சூடாக.
“எனக்கு ஏன் தெரியணும்? உங்க வேலை அது. உங்க கஞ்சத்தனத்துக்கு சப்பக் காரணம் கட்டாதீங்க.”
”சரி, வீட்டுக்கடன் எவ்வளவு பாக்கி, தெரியுமா உனக்கு?” நான் இருப்பதை மறந்து இருவருக்கும் உரையாடல் சூடாகத் தொடங்கியது.
“அதான் ஃபினான்ஷியல் மேட்டர் எல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டீங்கல்ல? கலியாணத்தும்போது என்ன சொன்னீங்க?”
“அட, அதுக்காக ஒண்ணுமே தெரியாம இருக்கறதா? கடனை விடு, உன்னோட ஃபார்ம் 16 இன்னும் வரலை..,. எதாவது யோசிச்சியாடி நீ?”
பிரச்சனை என்னைத் தாண்டி இருவரின் குரலிலும் உயர்ந்தது. குழந்தைகள் எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் டி.விக்கு போய்விட்டன. பத்து நிமிடத்தில் இருவரும் அமைதியாக, விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். சுரத்தே இல்லாமல் விடைகொடுத்தனர். ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே, சாலை முடிவு வரை, நடந்தேன். குல்மோஹர் பூக்கள் மவுனமாகச் சொரிந்துகொண்டிருக்க, மாலை இதமாக இருக்க,மனம் பாரமாக இருந்தது.
இருவரும் அன்பும் பொறுப்பும் உள்ளவர்கள்தாம். ஆனால் பங்கிட்டுக் கொள்வது என்பதன் பேரில் , ஒருவர் மீது மட்டும் முக்கியமான பொறுப்பு ஒன்றை முழுமையாகச் சுமத்திக்கொண்டு, இப்போது அதனைக் குற்றப்படுத்துகிறார்கள். பொறுப்பு என்பது இருவருக்கும் பொது என்று இருவரும் உணரவில்லை. ஆரம்பகால உணர்ச்சிவசப்படுதலில் செய்த தவறுகள் பலவற்றில் ஒன்று இது.
பெண்களில் பலருக்கு நவீன முதலீடுகள், வீடு வாங்குவது, லாப நட்டங்கள், கடன் வழிமுறைகள் பற்றித் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள விருப்பப்படுவதில்லை. ‘அதெல்லாம் அவரு பாத்துக்குவாரு. எனக்கு ஒன்னுமே தெரியாது’ என்று பெருமையாகச் சொல்வது இருபது வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் சாத்தியப்படலாம். இன்றைய நிலை வேறு. படித்த பெண்களே பலரும் செல்வ ஆளுமை, வருமான ஆளுமை,முதலீட்டு ஆளுமைகளில் அக்கறை செலுத்துவதில்லை. இதெல்லாம் ஆண்களின் தளம் என விட்டுவிடுகிறார்கள்.
எதிர்பாராது எதாவது நடந்துவிட்டால் எப்படி ஆயுள் காப்பீட்டைப் பெறுவது, கணவன் எங்கெங்கெல்லாம் முதலீடு செய்து வைத்திருக்கிறான்? என்பதை அறிந்து வைத்திருத்தல், வங்கிக்கணக்கில் பணம் பெறும் உரிமை தனக்கு இருக்கிறதா?என்று அறிதல், இவையெல்லாம் அடிப்படை அறிவு. இதில்லாமல், ஒரு அசம்பாவிதம் நேர்ந்தால், குடும்பம் திணறும். திணறுகின்றன.
இந்த முக்கியமான விஷயங்கள் ஆரம்பகாலத்திலேயே தெளிவாகப் பேசப்படவேண்டும். இதற்கென ஒரு நேரம் செலவிடுவது , ரொமாண்ட்டிக்காக சினிமா போவதை விட அவசியம். சேமிப்பு, காப்பீடு, முதலீடு முதலியவற்றில் இருவருக்கும் பங்கு இருப்பது அவசியம். “உனக்கு ஒன்னும் தெரியாது, நான் பாத்துக்கறேன்’ என்பதும் “ அவருதாங்க எல்லாமே பாக்கறது’ என்று பெருமையாகச் சொல்வதும் ஆபத்து.
திருமணத்தின் பின் ஆண்களுக்குப் பேச்சு என்பது வீடுகளில் கணிசமாகக் குறைகிறது. முதலில் இருந்த ஆர்வம், கரிசனம், நகையுணர்வு , திருமணமான சில மாதங்களில் பிசுபிசுத்துப்போவதை அதிர்ச்சியுடன் , மனைவி கவனிக்கிறாள். அவனைப் பொறுத்தவரை, “அதான் கலியாணம்தான் ஆயாச்சே? நடக்கவேண்டிய வேலையப் பார்ப்போம்’ என்று யதார்த்தமெனும் போர்வையுள் நுழைகிறான். அவளுக்கு ‘இந்தாளு, கலியாணத்துக்கு முந்திப் பேசின பேச்சு என்ன? இப்ப இருக்கற இருப்பென்ன?” என்று அதிர்ச்சியும், ஏமாற்றமும் பொங்குகிறது. முதல் விரிசல் இந்த ஏமாற்றங்களில் உருவாகின்றன. ஆலோசகர்கள், ’இதை முன்னிட்டேனும், லாப்டாப், மொபைல் சாட், டி.வி போன்றவற்றை ஒரு மணி நேரமேனும் மூடிவைத்துவிட்டு, அரட்டை அடியுங்கள் ‘ என்கிறார்கள்.
இந்த பேச்சுக்குறைவெனும் பிளவில் நழுவி விழுந்து தொலைந்து போகும் பலவற்றில் ஒன்று குடும்ப ஆதாரம் பற்றிய செய்திகளும், திட்டங்களும்.ஆண்கள் இதெற்கெனப் பேச முயலவேண்டும். அது இல்லாத பட்சத்தில், மனைவி, ‘நம்ம வீட்டுக்கடன் என்னாச்சு?’என்றாவது கேட்டுத் தூண்ட வேண்டும். ம்யூச்சுவல் ஃபண்டுகள், டெப்பாஸிட்டுகள், பி.பி.எஃ என்றால் என்ன? என்பதன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும்.உரையாடல்களில் அன்பு வளர்வதோடு, வீட்டின் நிதி ஆரோக்கியமும் வளரும்.
சப்தமற்ற , அதிசய மாலைப்பொழுது அது. ஸ்கூட்டரைக் கிளப்பும் ஓசையைக்கூட தவிர்க்க விரும்பினேன். மவுனம் நல்லதுதான். ஆனால் இயற்கை கூட தனது நிசப்த்தின் மூலம் நம்மிடம் பேசத்தான் விழைகிறது.