கிளிப்

தூத்துக்குடி செல்ல எனக்குப் பெரிதாக ஆர்வம் ஒன்றும் இருந்ததில்லை. 1998ல் தாத்தா வீட்டுக்கு முதன்முறையாகத் தனியாகச் சென்றிருந்தேன்.

தாத்தா கட்டில் மெத்தை இன்னும் சூடாகவும், அந்த அறை புழுக்கமாகவும் இருக்கிறது எனச் சொல்லியும், பாட்டி ஒவ்வொரு நாளும் அப்படுக்கையறையையே காட்டிக்கொண்டிருப்பாள். பேரனை ஹாலில் தரையில் கிடத்துகிறோமே என்ற வருத்தம் அவளுக்கு. கோடையில் தூத்துக்குடி வீடுகளில் அறைகள் எரியும் அடுப்புகளாக இருப்பினும், ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு அறை , அப்போதுதான் அணைந்த அடுப்பாக சற்றே இதமாக…

சென்னையில் போரடிக்கிறது, தண்ணீர்க் கஷ்டம் என்பதாக அப்பா எப்போதாவது ஒரு மாசம் தூத்துக்குடிக்கும் அனுப்பிவைப்பார்.இங்கும் போரடிக்கிறது, தண்ணீர்க் கஷ்டம்…என்றெல்லாம் சொல்லிவிட முடியாது அவரிடம்.

இருக்கும் ஒரே ஆறுதல் தாத்தாவின் டி.வி.எஸ் 50 . அதனைச் சுத்தப்படுத்தி, காற்று அடைத்து, பெட்ரோல் நிரப்புகையில், பின்னால் நின்றிருந்த கைனடிக் ஹோண்டாவில் இருந்த பெண் என்னைப் பார்த்துப் புன்னகைப்பது போல் இருந்தது.

ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை இல்லாது, பம்ப் இளைஞன், ‘கொஞ்சம் நில்லுங்க, அடுத்தவங்க்க கிட்ட இருக்கான்னு பாப்பம்’என்றபோது, சினேகத்துடன் அப்பெண்மணி நிஜமாகவே புன்னகைப்பது தெரிந்தது.

“ஏங்கிட்ட இருக்கு; ஜெரால்டு,” என்றவர் அவனிடம் நூறு நூறாக ஐந்து தாள்களைக் கொடுத்தார். ” தம்பி, தெரிஞ்ச முகமா இருக்க. எங்க வீடு?”

சொன்னேன். இந்திரா நகர்னா… அவர் யோசித்துக் கொண்டிருக்கையில் ஜெரால்டு ” டீச்சர், நம்ம சகாயராஜ் மாமா கட போட்டிருந்தார்லா, அங்… ரெண்டாம் கேட்டுக்கு அங்கிட்டு… புதுசா இதயம்னு ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் போனவருசம் வந்துச்சில்லா”

ஆவர் புரிந்துகொண்டார் ” ஆங்! அங்க யார் வீட்டுல வந்திருக்க?” தாத்தா பேர் சொன்னதும் அவர் யோசனையுடன் புரிந்து கொண்டதாய்த் தலையாட்டினார். ” பாட்டிகிட்ட சொல்லு. பாரதி டீச்சரைப் பாத்தேன்னு. உங்க சித்தி பேரு கமலாதானே? இப்ப எங்கிருக்கா?”

பாட்டியின் முகம் சற்றே கருத்தது. ‘லே, பாத்த சரி. ரொம்பப் பேசிக்க வேணாம் கேட்டியா? இருவது வருசம் முந்தி,நமக்கும் அவங்க வீட்டுக்கும் ஒரு சண்டை.அதுல கொஞ்சம் பெரிசாப் போக, நாம விட்டுட்டு, இங்க வீடு வாங்கி வந்துட்டம்..”

“சண்டைன்னா?”

“உங்கப்பாவை ஆள் வைச்சு அடிச்சிட்டாங்க”

“பாரதி டீச்சரா?”

“மூதி” பாட்டி சிரித்தாள் ” அவங்க வீட்டு ஆள்க.பழய கதையெல்லாம் உனக்கு வேண்டாம். போயி எதாச்சும் படி. இல்ல டி.வி பாரு”

நல்லதம்பி மாமாவின் பழரசக்கடை பூக்கடைத் தெருவின் கோடியில் இருந்தது. வெயிற்காலம் என்பதால் சாயங்காலம் நல்ல விற்பனை. எடுபிடியாக நானும் சற்று வேலை செய்தேன். ஒருவாரம் சென்றபின், இரவு 9 மணிக்குக் கடையடைத்து பூட்டு போட நிற்கையில், நினைவு வந்தது. ” மாமா, யாரு அந்த பாரதி டீச்சர்?”

நல்லதம்பி மாமா, சட்டை பட்டனைப் போடுவதை நிறுத்தி என்னைப் பார்த்தார். “வண்டிய முன்னால எடு” என்றார். உந்தியபடியே வண்டியை முன்செலுத்த, அவர் சாவியைப் பெற்றுக்கொண்டு, “செல்வா, டே, நாளைக்கு அஞ்சுமணிக்கு பஸ்ஸ்டாண்டுல, ரத்னா சர்வீஸ்ல சரக்கு எடுக்கணும் கேட்டியா? நம்ம லாசரஸ் அண்ணந்தான் ட்ரைவர். தெரியாட்டி, எம்பெயரைச் சொல்லு. சரக்க நேரா வீட்டுக்குக் கொண்டாந்திரு. ஆட்டோ இருவது கேப்பான்” என்றபடியே ரோடு வரை வந்தார்.

“லே நில்லு” என்றார் இறுக்கமாக. “யாரு சொன்னா, பாரதி டீச்சர் பத்தி?”

“நாம் பாத்தேன் மாமா”

“என்ன சொன்னா?”

“ஓண்ணுமில்ல. வீட்டுல எல்லாரையும் கேட்டாவ. என்ன எப்படி அடையாளம்
கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை”

‘அதான் மூஞ்ச்சில எழுதி ஒட்டிருக்கே? சம்முவம் பையன்னு.”

“அப்பாவை அவங்களுக்குத் தெரியுமோ?” கேட்குமுன்னே, உள்ளூற ஒரு சந்தேகம் வந்தது.

“பாரதி அப்பத்தான் டீச்சர் வேலைக்குப் படிச்சிருந்தா. உங்க சித்திக்கு ட்யூசன் எடுக்க வருவா. சண்முகம் அப்ப இன்னும் வாட்ட சாட்டமா, அழகா இருப்பாம் பாத்துக்க. ரெண்டு பேருக்கும்…”

புழுக்கம் தாளாமல், நானும் சட்டையைக் கழற்றி, முன் கொக்கியில் மாட்டி, வண்டியை உயிர்ப்பித்தேன். மாமா பின்னால் அமர்ந்துகொண்டார். தூத்துக்குடியில் அப்போதெல்லாம், வேட்டிகூட இல்லாமல் வண்டியோட்டலாம். கிப்ஸன்புரம் தாண்டி இடது புறம் விலகி, கனரா வங்கி எதிரில் வண்டியை நிறுத்தினேன். காற்று ஜிலுஜிலுவென வந்தது.

மாமா இறங்க்கிக்கொண்டார். அங்க்கிருந்து சிறிய சந்தில் ஒரு நிமிட நடை அவர் வீட்டிற்கு. வண்டி உள்ளே சென்றால் ஒலிஎழுப்பும்.

“ம்.. ரெண்டுபேரும் காதலிச்சது ரெண்டு வீட்டுலயும் பிடிக்கல. நம்ம சாதிதான். என்ன, அவ அப்பாவுக்கும், உங்க தாத்தாவுக்கும் தொழில்முறைத் தகறாரு. வீம்புக்கு நின்னாவோ.

ரெண்டு பேரும் ஓடிப்போகத் திட்டம். நாந்தான் ரேணிகுண்டாவுக்கு டிக்கட் போட்டுக் கொடுத்தேன். அங்கிட்டேர்ந்து திருப்பதி…கலியாணம் முடிச்சி வீட்டுக்கு வர்றதாப் ப்ளானிங்கு.

கிளம்பறதுக்கு மூணு நாள் முந்தி, ரெண்டுபேரும் சைக்கிள்ல டபுள்ஸ் போறதை அவ அண்ணன் பாத்துட்டான். தடுத்து நிறுத்தி.. அதுல அவ முடியைப் பிடிச்சு இழுத்ததும், உங்கப்பன் பொங்கிட்டான். கை கலப்பு. அவ ரத்தம் தேய்ந்த முடிக் கொத்தோட உங்க்கப்பன் அவ வீட்டுக்குப் போய்ப் பேச, அவங்க பதிலுக்குப் பேச.. விடு. பெரிய விசயமாயிட்டு.

நான் டென்ஸனாயிட்டேன். சாயங்க்காலம் ஏழு மணிக்கு மணியாச்சில போயி ஏறணும். அவ வீட்டுல அடைஞ்சி கிடக்கா. இவன் மத்தியானம் சைக்கிள வச்சிகிட்டு அவ வீட்டுப்பக்கம் போயிருக்கான். அவ அண்ணன் பாத்துட்டான். அடிக்க வர, இவன் சைக்கிள்ல இருந்து விழுந்து,சரியா கண்ணு பக்கம் அடி . எங்கிட்டேர்ந்தோ அவ ஓடி வந்து அடிக்காதீயன்னு அலர்றா. அவனா…ஆத்திரம் தீர அடிச்சிருக்கான். ஒருமணி நேரம் கழிச்சி, தருமாஸ்பத்திரியில கிடக்கான் உங்கப்பன். எங்க ஓடிப்போக?

ரெண்டு வீட்டுலயும், சமூகத்துப் பெரியவங்க கூடிப்பேசி, கலைச்சு விட்டுறுவம்னு தீர்மானமாயிருச்சி. சமூகத்தைப் பகைச்சிகிட்டு கலியாணமெல்லாம் அப்பப் பேசவே முடியாது. தொழில் படுத்துரும். வீடு கலைஞ்சிரும்.

சம்முவம் சென்னைக்குப் போனான். இவளைப் பாக்கக் கூடாது ; பேசக் கூடாதுன்னு கட்டளை. அதுக்குப் பொறவுதான உன் சித்திக்குக் கலியாணம் ஆச்சி?

இத்தன வருசம் கழிச்சு அவளைப் பாக்க நீ; உங்கப்பன் ஜாடை தெரிஞ்சிருக்கு. பழசைக் கிளறாதல. பேசாம ஊர் போய்ச்சேரு”

சர்ரக் சர்ரக் என செருப்பு தேயும் சத்தத்துடன் மாமா தெருக்கோடியில் மறைந்தார்.

பத்து வருடங்களின் பின் தூத்துக்குடி சென்றபோது, தாத்தாவும், மாமாவும் இல்லை. மாமா கடையிலிருந்த மூத்த கணக்கரிடமிருந்து நாங்கள் முன்பு வசித்த தெருவைக் கண்டறிந்தேன். பாரதி டீச்சர் வீடு எனக் கேட்டு கண்டடைந்தபோது மாலை நாலுமணி.

ஓரு கணம் தடுமாறினாலும், அவர் அடையாளம் கண்டுகொண்டார் ” யே! இங்க யாரைக் காங்கேன்?” என்று ஆச்சரியப்பட்டு, “வாடே” என்றழைத்து ஒரு கால் சாய்த்து, தேய்த்து உள்ளே நடந்தார். சாப்டுட்டுத்தான் போவணும் என்றவர், தடுமாறித் தானே சமைத்தார். ” உங்க பாட்டி வெங்காய சாம்பார் வைச்சா நாலூருக்கு மணக்கும். கைமணம் அவிங்களுக்கு. அந்த கைப்பக்குவம், உங்க அத்தைக்கு, சித்திக்குக் கிடையாது பாத்துக்க”

அப்பாவைப் பற்றி எப்படிக் கேட்பது? கேட்கவேண்டுமா?

உணவருந்திவிட்டு,உள் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ” அந்தா தெரியுதுல்லா, ஒரு பச்சை ட்யூப்லைட்டு? அங்.. அதுக்கு அடுத்தது உங்க வீடு. இங்கிட்டேர்ந்து முடுக்கு வழியா ரெண்டு நிமிச நடை”

“அப்பாவும் நீங்களும் ஏன் அப்புறம் சந்திக்கவில்லை?”

சட்டென மவுனமானார் ” சில கேள்விகளுக்குப் பதிலில்ல இவனே. நினைச்சிருந்தா, ரெண்டுபேரும் இன்னும் கொஞ்ச வருசம் கழிச்சி மீண்டும் முயற்சி செய்திருக்கலாம். வீடுகள்ல பகை ஆறியிருக்கலாம். என்ன, உங்கப்பா ஒரு சத்தியம் செஞ்சிட்டாரு உங்க சித்தி கலியாணத்துக்கு.. ‘அவ நம்மவீட்டு மருமவளா வரமாட்டா ன்னு சொன்னாத்தான் கமலிக்கு கலியாணம் நடக்கும்லே’ந்னு உங்க பாட்டி அழுதது எனக்குத் தெரியும்.

இந்த குருவியை எடுத்துக்க. அதன் சிறகை வெட்டிட்டா, உயிர் இருக்கும். ஆனா இல்லாத மாதிரிதான். Clipping the wingsந்னு சொல்லுவாங்க பாரு. அதான் எங்களுக்கு. ரத்தம் தோய்ந்த என் முடிக்கொத்து வச்சுகிட்டு அவரு பேச வந்தது முத தப்பு.

சைக்கிள்ள அவர் பெல்பாட்டம் க்ளிப் சிக்கி அவரு விழுந்ததும் அடிச்சான் பாரு எங்கண்ணன், அது இன்னொரு தப்பு.”

“பெல்பாட்டம் க்ளிப்?”

“அப்பெல்லாம் பெல்பாட்டம்னு பெரிசா கணுக்கால் பக்கம் விரிஞ்ச பேண்ட் போடுவாங்க. அதான் ஸ்டைல். அது சைக்கிள்ல மாட்டிறக்கூடாதுன்னு, ஒரு u ஷேப்புல ஒரு கிளிப்பை கணுக்கால் மேல மாட்டுவாங்க. அது லூசாகி, சைக்கிள் செயின்ல மாட்டி, உங்கப்பா விழுந்துட்டாரு. மணியாச்சிக்குக் கிளம்பிட்டிருந்தவ, அதுனாலதான திரும்பி வந்தேன், மாட்டிக்கிட்டேன்?”

பாரதி டீச்சர் மெதுவே உள்ளே சென்றார். திரும்பிவரும்போது அவர் கையில் துருப்பிடித்த உலோகக் கம்பி. என்னிடம் கொடுத்தவர், மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். “நல்லா இருடே என்ன? காதல்னா, ஓடிப்போகாம, நிதானமா வீட்டுல சொல்லி, முடிவெடு. க்ளிப்புகள் எங்களோட போகட்டு”

அம்மாவின் மறைவுக்குப் பின் அப்பா அதிகம் பேசுவதில்லை. பாரதி டீச்சரைப் பார்த்ததைச் சொன்னேன். ஒரு நிமிடம் என்னை நேராகப் பார்த்தார். ‘அவரைப் பார்க்கணுமாப்பா?’ என்றேன். தலையாட்டி இல்லை என்றார்.

இரவில் அவர் அறையில் விளக்கு எரிந்ததைக் கண்டு எச்சரிக்கையானேன்.மீண்டும் நெஞ்சுவலியா? கதவை மெல்லத் திறந்த போது, அவர் பீரோவிலிருந்து எதையோ எடுத்துப் பார்த்துக்கொண்டிருப்பது போலிருந்தது. அடுத்தநாள் காலை ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டபின், வீட்டில் அவர் துணிகளை எடுத்து வைக்க பீரோவைத் திறந்தேன். இரண்டாம் அடுக்கில் இருந்த,நிறம் மங்கிய, இற்றுப்போன மகளிர் கர்ச்சீப் ஒன்றில் புதைந்திருந்தது அது.

முடிக்கற்றையுடன் ஒரு ஹேர்க்ளிப்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s