மாத்ரு யோனிப் பரீட்சை

தெற்குமாட வீதியின் கடைசி வீட்டைத் தாண்டித் திரும்புகையில் ஆறுமுகம் நடை தளர்ந்தார். மெல்ல இதயம் அழுத்துவது போலிருந்தது.

“ நேத்திக்கு ராத்திரி எட்டுமணிக்குப் பாத்தேன்.”கட எப்படிப் போயிட்டிருக்கு?”ன்னாரு. நல்லாத்தான் இருக்குன்னேன். காலேல இசக்கி பேத்தி வந்து சொல்லுதா ‘ அய்யா போயிட்டாரு’. யாருக்கு என்ன எழுதியிருக்குன்னு எவங்கண்டான்?” ஆறுமுகம் பொருட்படுத்தாது, ஆச்சி வீட்டுக்கு முந்திய வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டினார். ஆச்சி வீட்டு வாசல்ல மலை கணக்கா செருப்பு குமிஞ்சிருக்கு. எவனாச்சும் நம்ம செருப்பைப் போட்டுப் போனா?

”பாலாவுக்கு போன்போட்டுச் சொல்லிட்டம். அவன் மூணுமணிக்கே கிளம்பிட்டான். கோயில் நடை சாத்தியாச்சி. சாயங்காலத்துக்குள்ள எடுத்துருவம். என்ன சொல்லுதீய?”

ஆறுமுகம் கவனியாது தலையாட்டி உள்ளே நுழைந்தார். அந்த நெடிய உருவத்தை தெற்கு வடக்காகக் கிடத்தியிருந்தார்கள். ஆறுமுகம் தன்னையறியாது கைகூப்பினார்.
ரத்த சொந்தம்… உண்மைதான். அதனை விட , உள்ளத்தில் சொந்தம் அதிகம். பவளவல்லியைக் காதலித்தபோது “அவ வேணாம்டே” என்று அறிவுறுத்திவர், ஆறுமுகம் கோபத்தில் செவிட்டில் அறைந்தபோதும் பொறுமையாக அந்தக் காதலை விலக்கிவிட்டவர், புதுத்தெரு பசங்க நாலுபேர் அடிக்க வந்தபோது, வேட்டியை உருவி கையில் சுற்றிக்கொண்டு, அருவா வெட்டுகளை வாங்கியபடி, நாலுபேரையும் துவைத்து எடுத்தவர், பசியென எப்ப வந்தாலும் சோறிட்டவர் எனப் பல உருவங்கள் இன்று ஒன்றில் அடங்கி, அசையாது கிடக்கின்றன.

ஆச்சி ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். ஆறுமுவம்… என்றவள் மீண்டும் அழ முயன்று தோற்று, ஆயசமாகச் சாய்ந்தாள். ஆறுமுகம் அவள் எதிரில் அமர்ந்தார். “என்ன செய்ய? எப்பவும்போல முந்தியே போயி, சொர்க்கத்துல உனக்கு வீடு பாத்து வைக்கானோ என்னமோ? ஆச்சி,அவனைத் தெரியும்லா? அப்படித்தான்”

ஆச்சி விரலை மூக்கில் வைத்துக் குலுங்கினாள். ” இனிமே, இந்த வீட்டு நிலையில இடிச்சுக்கிட்டு வர்ரவா யாரு இருக்கா? ’ஏத்திக்கட்டுங்க’ண்ணேன். எங்க தாத்தா, என் தலையில குட்டுற செல்லக்குட்டு இதெல்லாம். இப்படியே இருக்கட்டும்டீன்னுடாரு. ” ஆறுமுகம் நிலைக்கதவைப் பார்த்தார். ஆறு அடி உயரம். அதனைத் தாண்டிய உயரம்… தரையில் கிடக்கிறது.

’ஐயா மீசையை முறுக்கிக்கிட்டு நடக்கறச்சே அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம். கச நடைல்லா?’ கஜம் – யானை என்பது கசவானது எப்போது? தெரியாது. ஐயாவுக்குத் தெரிந்திருக்கும்.

”வெள்ளத்துல தேரடி மண்ணு சரிஞ்சிருக்கறச்ச, ஆம்பள யாரு இருந்தா?” இந்து ஆரம்பப் பாடசாலை வாத்தியார் சொக்கலிங்கம் மெள்ள முணுமுணுத்தார். ஆறுமுகம் திரும்பிப் பார்த்தார். ’74லாடே ஆறுமுவம்? ’ ஆமென ஆறுமுகம் தலையசைத்தார்.

தேரடியில் மண்ணரிப்பு ஏற்பட தேர் நிலை சாய்ந்திருந்தது. இப்போது போல் பொக்லேன், ஜேஸிபி, க்ரேன் எதுவுமில்லாத காலம். நாப்பது பேர் ஒரு புறம் இழுக்க, இருபது பேர் மறுபுறமிருந்து தள்ள, சக்கரத்தினடியில் மண்ணைப்போட்டு , அதில் சறுக்கான மரத்துண்டுகளை வைத்து தேரை உருட்டி, அதன்பின் தேர் நிலை சரியமைக்கப்பட்டது. திட்டமிட்டு, வடக்கயிறு , ஆட்களென அனைத்தையும் கொண்டு வந்தது ஐயா. ’ஊர்ல இருந்த ஒரே ஆம்பள நீதாம்ல,ஐயா!’ என்றார் தர்மாதிகாரி நல்லசிவம் செட்டி. அதிலிருந்து ஐயா, ஆம்பள ஐயா எனவே அழைக்கப்பட்டார்.
’ஒரே ஒரு தடவதான் ஐயா சறுக்கினாருன்னு சொல்லக்கேள்வி. ஆச்சியக் கலியாணம் கட்டி ஆறுமாசத்துல வீட்டைவிட்டு ஓடினாராம்லா?’ கேட்ட பரமசிவத்தைப் பலர் கோபத்துடன் பார்க்க அவன் வெலவெலத்தான். பந்தல் காண்ட்ராக்டு போயிருமோ? வாய வச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம்.

“லே,பரமு. தெரியாம உளறப்படாது.இவரு கிழக்காம இருக்கற நிலத்துல நாத்து நட்டுறக்கச்சே, பெரியய்யா, அத மூத்தய்யாவுக்குக் கொடுத்துட்டு, தெக்கால இருக்கற வயலப் பாருலன்னு என்னமோ சொல்லிட்டாரு. வார்த்தை முத்தி, இவரு வீட்டை விட்டுப் போயிட்டாரு. அப்ப ஆச்சி கர்ப்பம். அவ அழுது ஆர்ப்பாட்டம் வைக்க, மூத்தையா கிளம்பிப் போனாரு. இவரு அடுத்தாப்புல ரெண்டு வாரத்துல வந்து நின்னாரு. இதான் நடந்திச்சி. பொணம் கிடக்கறச்சே அதுக்கொரு மருவாதி வேணும்”

’மூத்தவரு எங்க போனாரு? ’

’எவங்கண்டான்? சரி, வண்டிய எடுத்துட்டு சீனிவாச ராவ் கடைல அய்யா சைஸ்ல வேட்டி வேணும்னு சொல்லு. அவருக்குத் தெரியும்.சந்தனம், சாம்பிராணி… மாலை? லே, மால வந்திட்டா?’

ஆறுமுகம் மெல்ல வெளியேவந்தார். மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த இளைஞன் எழுந்து மரியாதையாக அவரை இருக்குமாறு சைகை காட்டினான். “லே, நல்லமுத்து பேரனா நீயி?”
ஆமென அவன் தலையசைத்தான்.” ஒங்கப்பனெங்க?”

“பாளையங்கோட்டை போயிருக்காரு. நில விசயமா வக்கீலப் பாக்கணும்னு..”

“அவன வெரசலா வரச்சொல்லு. அவன் தாயதி தெரியும்லா? பொறுப்பு இருக்கு”

ஆறுமுகம் திரும்பி உள்ளே பார்த்தார். ஆச்சி அழுகையை நிறுத்தி எவளிடமோ பேசிக்கொண்டிருந்தாள்.

பாலா காரில் வந்து இறங்கினார். அவர் மனைவி, கைகளை விரித்தவாறே ஓலமிட்டு உள்ளே ஓட, அவரது மகள், என்ன செய்வத் எனத் தெரியாது, மலங்க விழித்து கார் அருகே நின்றிருந்தாள். குழந்தைகளுக்கு மரணச் சூழலில் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென எந்தப் பள்ளியும் சொல்லிக்கொடுப்பதில்லை.

ரோட்டோரத்தில் வருவது யாரு? ஆறுமுகத்தின் கண்கள் விரிந்தன.

”மூத்தய்யா! இதெல்லாம் நீரு காங்கணுமா?” அரற்றியவாறே அந்த முதியவரின் கைகளைப் பிடித்து விசும்பினான் பாலா. ஆறுமுகம் தடுமாறி எழுந்தார்.

“இதையெல்லாம் நான் பாக்கணும்னு என்ன வச்சிருக்காளே கோமதியம்மை? என்ன செய்ய? எல்லாம் கொடுப்பினை” முதியவர் குலுங்கினார். ஆறுமுகம் ஓரமாக நின்றுகொண்டார். எத்தனை வருடங்கள்?! பாலாவுக்கு இவரைத் தெரிந்திருக்கிறதே? அப்போ….

” பாலா. ஒங்கம்மையைப் பாத்துட்டுப் பொறவு மத்ததெல்லாம்” எவரோ அறிவுறுத்த, பாலா வீட்டினுள் சென்றார். ஓலம் பெரிதாக ஒலித்தது.

மூத்தைய்யா வாசலிலேயே அமர்ந்துகொண்டார். “வேணாம். என்னப் பாத்தா, அவன் வேட்டியை இறக்கிவிட்டுகிட்டு, சொல்லுங்கண்ணேம்பான். இப்ப நாம்போவ, எழுந்திக்க முடியாம அவங்கிடக்கான்னா, அவன் மனசு நோவும்”

”மூத்தைய்யா, மூணுமணிக்கு எடுத்துறலாமா? எல்லாரும் வந்தாச்சில்லா?”

“பாலாகிட்ட கேட்டுக்க. அவந்தான் கருமாதி செய்யணும்”

“குளிப்பாட்டணும். பொம்பளேள்ளாம் வெளிய போங்க” பெண்கள் வெளியேறி ஓரமாக நின்றனர். ஆச்சி திகைத்தாள். “ஏ, இவனே,பாலா”
பாலா குனிய , ஆச்சி காதில் ரகசியமாகச் சொன்னாள் “ அப்படியே எடுத்துறுங்க. உடுப்பு களையவேண்டாம்.”
“அதெப்படி? முறைன்னு ஒண்ணு இருக்குல்லாச்சி?” என்றான் பரமு.
“நாலு குடம் அப்படியே ஊத்தி, புது வேட்டிய கட்டிவிட்டுறு. பழசு களையவேண்டாம். ஆறுமுகம் அண்ணனைக் கூப்பிடு”

ஆறுமுகம் உள்ளே வர “ ஏ, ஆறுமுவம்.” என்றாள் ஆச்சி தீனமாக
“ அவங்கிட்ட சொல்லு. உடுப்பு எடுக்காதீய”

“ ஏன் ஆத்தா?”

அவள் கைகூப்பினாள் “ முந்தி பிள்ளை இல்லேன்னு ஒரு மாதிரியான பேச்சி, அவமானம். மலடின்னு பேச்சு தாண்டி ஒண்ணு பெத்தேன். இப்ப, இன்னொரு அவமானம் வேண்டாம்.”

ஆறுமுகம் அவளை ஒருகணம் பார்த்தார்.“ பாலா, டே, பரமு, ஆச்சி சொல்றதக் கேளு. அவ ஆசை. அப்படியே இருக்கட்டு”

”வே, ஒமக்கும் புத்திகெட்டுப் போச்சா? அவருக்குக் கலியாணச் சாவு. மணக்க மணக்க புதுசு உடுத்தி, மேளங்கொட்டி ஜம்முனு கொண்டு போய்ச் சேத்துருவம். அதுக்குக் குளிப்பாட்டணும்லாவே?”

“அப்ப” என்றார் ஆறுமுகம். ”நானும், நல்லமுத்துவும் நிக்கோம். நீங்க வெளிய போங்கடே”

நல்லமுத்து வரத் தாமதமானதில், ஆறுமுகம் தானே குளிப்பாட்டுவதாகச் சொன்னார். அனைவரும் வெளியேறக் கதவை அடைத்தார். ஐந்து நிமிடத்தில் கதவு திறக்க, வெள்ளைவேட்டியில் ஜொலித்தார் ஐயா.

மயானத்திலிருந்து திரும்பி வருகையில் நல்லமுத்து ஆறுமுகத்தை நிறுத்தினார் “ இப்படி வாரும்வே. ஒருவிசயம் கேக்கணும்”

“கடைசி நிமிசத்துல ஒம்ம உள்ளே விட்டது என் தப்பு. சோப்பு எல்லாம் போட்டுக் குளிப்பாட்டக் கூடாது. அப்பவே சொன்னேம்லா?”

“அதில்லவே. ஐயாவுக்கு… அங்க…”

ஆறுமுகம் ஒரு நிமிடம் மௌனித்தார்.” ஆச்சி ஒம்பிள்ளைக்குரெண்டு பவுன்ல செயின் போட்டுக் கலியாணம் கட்டி வச்சா. அந்த உப்பு ஒன் உடம்புல இன்னிக்கும் ஓடணும்”

’அய்யோ!’ என்றார் நல்லமுத்து பதறி “ அவுக, அம்மால்லா எங்களுக்கு?”

“அப்ப ஒருகேள்வியும் கேக்கப்படாது. வெளங்கா?”

”நாங்கேப்பனா? நாக்கு அழுகிப் போவும்”

”இதத்தான் அன்னிக்கு நம்ம ஐயரு சொன்னாரு. சில நம்பிக்கைகளை அப்படியே கொண்டுட்டுப் போவணும். கேள்வி கேக்கப்படாது. ஒங்கம்மா, ஒங்கப்பனுக்குத்தான் ஒன்னைப் பெத்தாளா?ன்னு கேக்கறகேள்வி இருக்குபாரு, அது தாயின் யோனியை சோதிக்கிற மாதிரி. இத மாத்ரு யோனிப் பரீட்சைன்னு சொல்லுவாங்க. உலகத்துலயே பெரிய பாவம் எதுன்னா அதுதான்”

நல்லமுத்து கைகூப்பினார் கண்களில் நீர் கசிய “ நாங் கேக்கலசாமி. தப்புத்தான் இனிமே இப்படி கனவுல கூட கேக்கமாட்டேன்”

ஆறுமுகம் விலகி நடந்தார். பின்னே, நல்லமுத்துவிடம் பரமு கேட்டுக்கொண்டிருந்தான்.

“பாலாவும், ஐயாவும், மூத்தய்யாவும் ஒரே சாடை என்ன?”

“வாய மூடுல மூதி”

3 thoughts on “மாத்ரு யோனிப் பரீட்சை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s