கொங்குச் சகோதரிகள் நிஜமாகவே கொங்குநாடுதானா? என்பது இன்றும் சந்தேகம்தான். 1937ல் தென்காசியிலிருந்து பாஷ்யம் அய்யங்கார் குடிபெயர்ந்தபோது அவர் வீட்டோடு சீதை கோதை இருவரும் வந்தார்கள் என்று பெரியநாயகிப் பாட்டி சொல்லக் கேள்வி. அவர்கள் இரட்டையர் எனவும், சீதை மூத்தவள் எனவும் கொங்கு நாட்டில், அய்யங்காரின் நெருங்கிய நண்பரின் குழந்தைகள் எனவும் பாஷ்யம் அய்யங்காரின் மனைவி சொன்னதாகப் பெரியநாயகிப் பாட்டி சொல்லிக்கொண்டிருப்பாள்.
”அதுகளை வையாதீங்கோடி. பகவான் குழந்தைகள் ரெண்டும். வந்த நேரத்தில தாயாரைக் கரையேத்திடுத்துகள். பாஷ்யம் ஆத்துக்காரிக்குக் கொடுத்து வைச்சிருக்கு” . நாயகிப் பாட்டியை அதிகம் எவரும் கண்டுகொள்வதில்லை.
சன்னதித் தெருப் பெண்களில் , இரட்டையர் பற்றி இருவிதமான கருத்து இருந்தது. அவர்களின் மொழி அப்படி. எல்லாவற்றையும் பச்சையாக, சற்றே கலவி கலந்த அர்த்தத்தில் பேசுவது அவர்களின் தனித்தன்மை. சில இளம்பெண்கள், அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கிளுகிளூப்பாகச் சிரிப்பார்கள். “ டீ, கோதை, செல்லமணி வாத்யார் அன்னிக்கு என்ன சொன்னார்?” என ஒருத்தி தூண்டி விட, அதன் பதிலில் கலகலவென அனைவரும் சிரிப்பார்கள். அதிகம் இதெல்லாம் பேசமுடியாத காலம் அது.
மற்றொரு குழு, முகம் சுளித்து அவர்களை நிராகரித்தது. “என்ன கேவலமான பேச்சு இதுகளுக்கு? காலாகாலத்துல ஒரு பிள்ளையைப் பெத்திருந்ததுகள்னா, இப்படி மனசு போகாது. எது எவனோட ஓடிப்போகப்போறதோ?”
இரட்டையருடன் தங்கள் குடும்பப் பெண்கள் பேசுவதைப் பலர் தடுத்தார்கள். இருந்தாலும், சீதை கோதை பிரபலமாவதை எவராலும் தடுக்க முடியவில்லை.
முன் ஜாமீன் நரசிம்மன், சில பெண்கள் முன்பு, வேண்டுமென்றே தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டுகிறார் என அரசல் புரசலாகப் பேச்சு அடிபட்டது. நரசிம்மனின் மனைவி வெகுண்டு “ எங்காத்துக்காரர் கோமணமெல்லாம் நானாக்கும் தோய்ச்சுப் போடறேன். அவர் ஒண்ணும் காட்டிண்டு திரியலை” என்று சண்டைக்கு வந்தாள்.
சீதையிடம், பஞ்சாமி மாமாவின் பெண் அழுதுகொண்டே “ அந்த மாமா, திரும்பி நின்னு, குனிஞ்சுண்டு, ”கோந்தை ! மாமாவைப் பாரு” -ன்னு சொல்றார். எல்லாம் உள்ளே தெரியறது. பயந்து ஓடிவந்துட்டேன்” என்று முறையிட்டது , சன்னதித் தெருவில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. வக்கீல் சபேச ஐயர், நரசிம்மனை பார் கவுன்ஸில் அறையில் அழைத்து மென்மையாகக் கண்டித்தார் எனவும், அவர் அறைவாசலின் நடுவே, குனிந்து நின்று , தன்னைப் பார்க்குமாறு நரசிம்மன் சொன்னார் எனவும் வதந்தி பரவியது.
கோவில் விழா தொடங்கி , குதிரை வாகன ஊர்வலத்தன்று , கோவில் வாசலில் சீதை சில பெண்களுடன் நின்றிருந்தாள். நரசிம்மன் ஒரு புன்சிரிப்புடன் அங்கு தன் குடும்பத்துடன் வந்தபோது, கைக்குழ்ந்தையோடு இருந்த ஒரு பெண்ணிடம் சீதை கேட்டாள் “ஏண்டி, ஒங்குழந்தையா இது?”
”ஆமாக்கா. “ குழந்தையை சீதையிடம் நீட்டினாள் “ ஆனியோட எட்டு மாசம் முடியறது”
சீதை காத்திருந்தாள். முன் ஜாமீன் நரசிம்மன் மிக அருகே வந்ததும், மேள நாயனம் ஒரு கணம் நிற்கையில், உரத்த குரலில் சீதை சொன்னாள் “ ஏண்டி, இதுக்கு ஏன் இம்புட்டு சின்னதா இருக்கு, நரசிம்மனோடது மாதிரி?”
மயான நிசப்தம். நரசிம்மன் தடுமாறினார். அவர் மனைவி முகம் சிவந்து, புடவையை தோளில் இழுத்துவிட்டுக்கொண்டு முன்னே விறுவிறுவென நடந்தாள்.
அடுத்த நாள், நரசிம்மன் வீட்டுக் கதவின் மேல் , நுனியில் கல் கட்டப்பட்டு ஒரு புடலங்காய் தொங்கிக்கொண்டிருந்தது. நரசிம்மன் பாஷ்யம் அய்யங்காரின் வீட்டிற்குச் சென்று “ ஐ வில் ஸ்யூ யூ இன் கோர்ட் ஆஃப் லா” என்று கத்திவிட்டு வந்தார். பெரியவர்கள் அழைத்து விசாரித்ததில், யார் அதனைச் செய்தார்கள் என அறியாது, வெறுமென சீதை , கோதை மீது பழிபோடக் கூடாது என்றார் சபேச ஐயர். அதோடு விடாமல் “ இவர் காட்டாமல் அவளுக்கு எப்படித் தெரியும்?” என்றாராம்.
அதன்பின் சன்னதித் தெருவில் புடலங்காய் வாங்குவது என்பது ஒரு நமட்டுச் சிரிப்பை வரவழைக்கும் செய்தியாக இருந்தது. ”உங்காத்துல இன்னிக்குப் புடலங்காய்க் கறியா?” என்று நரசிம்மன் காதுபட உரக்கக் கேட்டார்கள். இருநாட்கள் நரசிம்மன் கோர்ட்டுக்குப் போகவில்லை. அதன் பின் வேஷ்டியை அடிக்கடி இழுத்துவிட்டுக் கொள்வார். தெருவில் போகும்போது எதிரில் வருபவரை நிறுத்தி “ அம்பி, என் வேஷ்டி சரியா இருக்கில்லையோ? சொல்லு” என்பார். வேஷ்டிக்கு மேல் ஒரு துண்டு கட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போனபோது நீதிபதி கண்டித்தார் எனச் சொல்லப்படுகிறது. அவ்ர், கிட்டத்தட்ட ஒரு மன ரோகியான பின், நரசிம்மன் குடும்பம், களக்காட்டிற்குக் குடி பெயர்ந்தது.
வெங்கடசாமி நாயக்கரின் மகள் திருமணத்தில் சீதை கோதையின் முகம் சிரித்தபடி இல்லை என மில் மேனேஜரின் மனைவி பெரியநாயகிப் பாட்டியிடம் சொன்னாள். “அப்ப, என்னமோ சிக்கல் இருக்குடீ. இதுகளுக்கு அசுர மூளை”
அடுத்த நாள் அதிகாலையில், பெண்ணை அழைத்து வரச் சென்றவர்களில் கோதை இருந்தாள். வெளி வந்த மாப்பிள்ளையிடம் “ என்ன மாப்ளை, பொண் நன்னா நடந்துண்டாளா?” என்றாள். அவன் விதிர்விதிர்த்துப் போய் “ என்ன கேள்வி?”என முகம் சிவக்க , கோதை கேள்வியை மாற்றினாள் ” எல்லாம் நன்னா முடிஞ்சதான்னேன்” அவன் மற்றும் மணப்பெண்ணின் முகத்தை மாறி மாறிப் பார்த்த கோதை , மணப்பெண்ணிடம் கேட்டாள் “ ஏண்டி, அவர் நன்னா நடந்துண்டாரா?”
மாப்பிள்ளை வீட்டில் சிறு சலசலப்பு உண்டானது. வெங்கிட சாமி மன்னிப்புக் கேட்டு, கோதையை அழைத்துக் கண்டித்தார். “ நாக்கு அடக்கணும் புள்ளே. யார்கிட்ட என்ன பேசறதுன்னு விவஸ்தை கிடயாது உனக்கு?”
மணப்பெண் , இரு நாட்களில் வீட்டுக்கு வந்து, ஒரே அழுகை. திரும்பிப் போக மறுத்துவிட்டாள். பெண்கள் எத்தனையோ பேர் ஆறுதல் சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோதை அவளிடம் , ஒரு அறையில் தனித்துப் பேசினாள். “நாயக்கரைக் கூப்பிடுங்க” என்றாள் வேலம்மா ஆச்சியிடம்.
கோபத்துடன் நுழைந்தார் நாயக்கர் “ என்ன அழுகை? புகுந்த வீட்டுக்குப் போக வேண்டியதுதான பொட்டப்பிள்ளைக்கு அழகு? என்ன குறை வைச்சேன்? எல்லாந்தான் நடக்கவேண்டிய முறையில நடத்திட்டோமே?”
கோதையின் குரல் உயர்ந்தது “ எல்லாம் நடக்க வேண்டிய முறையில நடந்திருந்தா பேச்சுக்கே இடமில்லை நாயக்கரே.”
நாயக்கர் திகைத்தார் “ இவ என்ன சொல்றா?” என்றார் அருகிலிருந்த மனைவியிடம். அவர் த்டுமாற ,கோதை மீண்டும் குரல் உயர்த்தினாள் “ ஆம்பள ஆம்பளையா நடந்துகிடணும்வே.”
சில மாதங்களில், நாயக்கரின் பெண் சித்தூருக்கு , அத்தையுடன் சென்றுவிட்டாள். அங்கு அவளுக்கு மறுமணம் செய்தார்கள் எனப் பேச்சு அடிபட்டது. நாயக்கரிடம் இதுபற்றிப் பேச அனைவருக்கும் பயம் என்பதால், அவையெல்லாம், வீட்டில் உறங்குமுன்னான வதந்தியாக அடிபட்டு மறைந்தது.
”ஊர் தெளிவாகப் பேசத் தயங்கிய விசயங்களை அவர்கள் பேசினார்கள் “ என்றார் செங்கோட்டை டாக்டர் சாமா. “ சிக்மண்ட் ஃப்ராய்டுன்னு ஒருத்தன் சொல்றான். மனசுக்குள்ள இந்த நிறைவேறா பாலுணர்வு சிந்தைகள் வேறு வடிவம் எடுக்கும், செயல்பாடாக வெளிவரும்ங்கறான்.திருமணம் ஆகாத இந்த இரட்டையர், தங்கள் ஆசைகளை பேசியே தீர்த்துக்கொண்டிருக்கலாம். அது ஒரு வடிகாலாக இருந்திருக்கலாம். பிறரது பாலுணர்வுப் பிறழ்வுகளை அவர்கள் துல்லியமாக அடையாளம் காண்பது, இதனால்தான்” சாமா, இரட்டையர் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யப்போவதாகச் சொன்ன இரு மாதத்தில் , ” Why do I exist?” என்று பத்து பக்கங்களில் பிழையில்லா ஆங்கிலத்தில் எழுதி வைத்து, குற்றாலத்தில் தேனருவி போகும் வழியில் இறந்து கிடந்தார்.
திடீரென ஒரு விஷக் காய்ச்சலில் கோதை இருநாட்கள் படுத்து, மூன்றாம்நாள் தூக்கத்திலேயே இறந்துபோனாள். அதன்பின் சீதை பேசுவதையே நிறுத்திவிட்டாள். கொடியேற்ற நாளுக்கு முந்திய நாள் திருநெல்வேலி போகப்போவதாக ஒரு மூட்டையோடு கிளம்பியவளை, நாராயண ஐயங்கார் ஊர் எல்லையில் , குளக்கரைப் படியினருகே பார்த்ததாகச் சொன்னார். அதுதான் அவளை எவரும் இறுதியாகப் பார்த்த சாட்சி.
சித்தூரில் ஒரு பெரிய மாளிகை வீட்டில் இரு பெண்களின் நெஞ்சுயர சிமெண்ட் சிலைகள் இருப்பதாகவும் அதில் தெலுங்கில் சீதாம்மா,கோதாம்மா என எழுதியிருப்பதாகவும் பாஷ்யத்தின் பேரன் சொன்னார். நாயக்கர் வீட்டில் சீதை கோதைக்கென்று இரட்டை விளக்கு பலகாலம் ஏற்றி வந்தனர். இன்று இரு எல். ஈ.டி பல்புகள் அவ்வீட்டின் உள்ளறையில் எரிகின்றன.
கி. ராஜநாராயணன் கதைகள் படித்த அனுபவம்!
LikeLike
மிக்க நன்றி!
LikeLike