செங்கால் நாரை

செங்கால் நாரை
————————–

“ஹை! அது என்ன அங்கிள்? பெரிசா ஒரு க்ரேன்?” வைஷ்ணவி துள்ளிக் குதித்தாள்.

“ஸ்… கார் ஓட்டும்போது மாமாவைத் தொந்தரவு செய்யாதே”பின்னாலிலி
ருந்து அவள் அம்மா ப்ரேமா அடக்கினாள்.

சாலையோர மைல்கல்,காருகுறிச்சி இரண்டு கிலோமீட்டர் என்றது. எனது மாருதி அம்பாசமுத்திரம் நோக்கி விரைந்துகொண்டிருந்தது.சிங்கப்பூரிலிரிந்து குடும்பத்தோடு வந்திருந்த நண்பன் சுந்தரம், குலதெய்வத்திற்கு வழி பாடு செய்யவேண்டுமென்று சொன்னதால், எனது காரிலேயே கிளம்பியிருந்தோம்.

“கேட்கட்டும். விடும்மா. குழந்தைகளுக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்”

“அது கொக்கு இல்லேம்மா. நாரை. செங்கால் நாரை.”

சாலையிலிருந்து சுமார் ஐம்பதடி தூரத்தில் இருந்த நீர்த்தேக்கத்தில் நாரைகளும் இதர தொலைதூரத்திலிருந்து வந்திருந்த பறவைகளும் சோம்பலாக மீன்பிடித்துக்கொண்டிருந்தன.

“அங்கிள்.கொஞ்சம் பக்கத்துல போய்ப் பார்க்கலாமா?” வைஷ்ணவி கெஞ்சினாள்.

“ரொம்பத்தான் செல்லம் இவளூக்கு… காலாகாலத்துல கோயிலுக்குப் போனோமா,
வந்தாமான்னு இல்லாம.. இதுவரை கொக்கே பாக்காத மாதிரி” பொருமிய பிரேமாவை சுந்தரம் எரிச்சலாகப்பார்த்தான்.

காரிலிருந்து வைஷ்ணவியை இறக்கினேன். ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று முகத்தைத் தாக்கியது.
“ரொம்பத் தள்ளிப் போகாதே, வைஷ்ணவி.. கண்ட கண்ட தண்ணில எல்லாம் கால் வைச்சு, காய்ச்சல் வந்துடப் போகுது”

பறவைகளீன் வினேதமான சப்தங்களும்,ஒரு விதமான துர்நாற்றமுமாகப் பரவியிருந்த,பாசி நீர்ப்பரப்பில் மெதுவாக நடந்தோம்.

வைஷ்ணவியைப் பறவைகளுக்குப் பிடித்துவிட்டது போலும்.. அனாவசியாமாக ஒன்றும் பறந்து சலசலப்பை உண்டாக்கவில்லை.
ஒரு பெரிய நாரை எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்தது. வைஷ்ணவி பிரமித்தாள்.” இதுவா அங்கிள்,நீங்க சொன்ன நாரை?”

“ம்.. இதுதான் . அது காலைப்பாரு.. செகப்பாஇருக்குல்ல. அதுனாலதான் அந்தப்பேரு”

பக்கத்தில் வந்த நாரை,கழுத்தை வளைத்து எங்களைப் பார்த்தது. மெதுவாக தண்ணீரில் அலகு ஆழ்த்தி மீன் பிடிப்பது போல் பாசாங்கு செய்தது.
“அதுக்குப் பயமா இருக்காது? நம்ம எதாவது செய்திடுவோம்-னு”?
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..

” இல்லேம்மா. செங்கால் நாரைக்கும் மனுசனுக்கும் ரொம்ப காலமா நெருங்கின சினேகிதம்.அதுக்கு தாராள மனசு. அது கிட்டே எதாவதுஉதவி கேட்டேன்னா, செய்துட்டுதான் கிளம்பிப்போகும்”

வைஷ்ணவி நம்பாமல் என்னைப் பார்த்தாள்” சும்மா சொல்றீங்க. பறவைக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது”

” செங்கால் நாரைக்குத் தெரியும் வைஷ்ணவி. அது கிளி,புறா மாதிரி புத்திசாலிப் பறவையில்ல. ஆனா அதுக்கு ஈரமான இதயம் உண்டு.அதுனாலதான் அந்தக் காலத்துல, ஒரு புலவன் நாரை விடு தூது-ன்னு செங்கால் நாரைகிட்டே தன்னோட கஷ்டம் பத்தி, மனைவிக்குச் சொல்லறதுக்கு கவிதை பாடி அனுப்பினான்”

“நாரை போய் சொல்லிச்சா அங்கிள்?”

“அது தெரியாதும்மா. ஆனா,நெஞ்சு நிறைந்த அன்பாலேயே உயிரை விட்ட நாரையை எனக்குத் தெரியும்”
நினைவுகள் பின்னோக்கி ஓடின.

தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன், யதேச்சையாக, எதிரில் வருபவரைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குள் நோக்கிக் கத்தினேன்.

“அம்மா, மாமா வந்தாச்சு.ஹைய்யா… மாமா வந்தாச்சு” ஓடிப்போய் அவரது கையைப் பிடித்துத் தொங்கினேன்.

தோதாத்திரி மாமா எனது சொந்தத் தாய் மாமா இல்லை. அம்மாவிற்கு, ஒன்று விட்ட தம்பி. ஆயினும், மாமா என்றாலே எங்கள் வீட்டில் நினைவிற்கு வருபவர் தோதாத்திரி மாமாதான்.

குட்டையான் உருவம். பின்னால் வழித்து வாரப்பட்ட தலைமுடி. வாயில் எப்பவும் மணக்கும் வெற்றிலை. . கையில் மடக்கப்பட்ட “கிளி மார்க் டீ வாங்கிடுவீர்”. என்னும் மஞ்சள் பை. எப்போதும் சிரித்த முகம்.தீர்க்கமான நெற்றியில் பாதி கலைந்த ஸ்ரீ சூர்ணம்… இவைதான் மாமாவின் அடையாளங்கள். எப்பவும் சிகப்பாகவே இருக்கும் அவர் நாக்கைப் பார்த்து எனக்கும் பெரியவனானதும் அப்படி வரவேண்டுமென்று நினைத்துக் கொள்வேன்.

“டேய்,,டேய்.. விடுடா…” அட்டகாசமாகச் சிரித்தார் மாமா.

“குரங்கு மாதிரி கையைப் பிடிச்சு தொங்காதே-ன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?” என்னும் மற்றவர்களிடமிருந்து மாமா மிகவும் விலகித் தெரிந்தார்.

உள்ளே வந்தவர், அம்மாவை “அக்கா, செளக்கியமா?” என்றார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவித்தார்.

“நன்னா இரு.. ருக்மிணி வரலையா?”

“இல்லேக்கா. பரீட்சையெல்லாம் நடந்துண்டிருக்கு. யாராவது ஒருத்தர் காருகுறிச்சியிலே இருந்தாகணும்”

மாமாவும், அக்காவும் ஒரே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள்.
“என்ன தோதாத்திரி இந்தப்பக்கம்?” என்றர் அப்பா.”ஒண்ணுமில்லே அத்திம்பேர். ஊர்க்காரன் ஒருத்தனுக்கு கிணறு வெட்ட கடன் பத்திரம் எழுதணும்னான். நம்ம சரவணன் தான் பொறுப்புல இருக்கான். அதான் நேர்ல வந்து சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். உங்களையும் பாத்துட்டுப்போலாம்னு எட்டிப்பார்த்தேன். உம்மோட ப்ரஷர் எப்படியிருக்கு? திருநெல்வேலி போயிட்டு வந்தீராமே..உடம்பு முடியலைன்னு? நாணா சொன்னான். உடம்பைப் பாத்துக்கும்”

தோதாத்திரி மாமாவுக்கு சொந்தமாக ஒரு வேலைன்னு வரவேமாட்டாரோன்னு தோன்றும்.

“மாமா, எனக்கு லீவு விட்டாச்சு. உங்ககூட காருகுறிச்சி வரட்டா?”ஆர்வமாகக் கேட்ட என்னை,அண்ணன் முறைத்துப் பார்த்தான்.”யாரும் வீட்டுக்கு வந்துடக்கூடாதே.. நான் வரட்டா-னு முந்திரிக்கொட்டையா கேட்டுறவேண்டியது. மூதேவி” அவன் கடுகடுப்பது தெரிந்தது.மனதுக்குள் அலட்சியமாக” போடா” என்றேன்.’

” வாயேன். அக்கா.. இவனைக் கூட்டிண்டு போறேன். கொஞ்ச நாள் மாறுதலாக இருக்கட்டுமே”

“அவன் ராத்திரி அழுவான் தோதாத்திரி. போனதடவை இப்படிதான் தூத்துக்குடி கூட்டிண்டு போயிட்டு,வரதன் அடுத்த நாளே கூட்டிண்டு வந்துட்டான். ராத்திரி பூரா ஒரே அழுகை”

“நான் ஒண்ணும் அழ மாட்டேன்” என்றேன் வீராப்பாக.”சரி அக்கா. இங்க இருக்கிற காருகுறிச்சிதானே. எதாவது ஏக்கமாயிருந்தான்னா ஒரு மணி நேரத்துல கொண்டு வந்துடலாம். என்னடா அழுவியா ?

“மாட்டேன் மாமா” என்றேன் உறுதியாக.

” மாமா, அங்கே பாருங்க. ஒரு பெரிய கொக்கு” மாமாவின் சைக்கிளில் முன் பாரில் உட்கார்ந்திருந்த எனது கத்தலில், சில பறவைகள் பயந்து பறக்க முயன்றன. மாமா ஒரு கல் மேல் கால்வைத்து, சைக்கிளை நிறுத்தினார்.

” அதோ ஒரு பழுப்பு கலர்ல தெரியறது பாரு… அது செங்கால் நாரை” என்றார் மாமா.

” அது ஏன் மாமா அசிங்கமா இருக்கு?”

“அசிங்கமா இல்லேடா. அது ரொம்ப நல்ல பறவை. மனுசங்க கிட்டே ரொம்ப பிரியமா இருக்கும். பாசமா இருக்கற பறவை அழகா இல்லேன்னா என்ன? ”

ஒரு நாரை தாழப் பறந்து,எங்களருகே சாலையோரம் தண்ணீரில் இறங்கியது. தண்ணீரில் அலைமோதும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.மாமா மெதுவாகப் பாடினார்

“நாராய் நாராய். செங்கால் நாராய்.
பனம்படுபனையின் கிழங்கு பிளந்தன்ன கூர்வேல்வாய்
செங்கால்நாராய்”

“என்ன மாமா சொன்னீங்க?”

“இந்த நாரையைத்தான் ஒரு ஏழைப் புலவன் தன் பொண்டாட்டிகிட்டே தூது அனுப்பினான். இந்த நாரையோட அலகு ‘பனங்கிழங்கு பிளந்தமாதிரி இருக்கு’-ன்னு சொன்னான். எவ்வளவு அழகான உவமை பாரு..” மாமா தனக்குள் பாடி ரசித்தார்.உற்றுப்பார்த்தேன்.

அலட்சியமாகப் பார்த்துவிட்டு நாரை எங்கள் அருகே வந்து கழுத்தை உயர்த்தி போஸ் கொடுத்தது.

“இதுக்குக் கொஞ்சம்கூட பயமே கிடையாதா மாமா?”

” மனுசங்க ஒண்ணும் பண்ணமாட்டாங்க-ன்னு ஒரு நம்பிக்கைதான். சரி போவமா?”

மீண்டும் அடுத்தநாள் அந்த நாரை குளக்கரையோரம் தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில்
நானும் அதுவும் மிகவும் பழகி விட்டோம். அதன் குச்சி கால்களும், பெரிய சிறகுகளும், சற்றும் பொருந்தாத மிகப்பெரிய அலகும் எனக்கு அசிங்கமாகத் தெரியவில்லை. ஒரு முறை,சிறகு விரித்து அலகு பிளந்து காட்டியது. சிவப்பாகத் தெரிந்தது.. அதுவும் வெற்றிலை போடுமோ?

ஒருவாரத்தில் எல்லாப் பறவைகளும் திரும்பிப் பறக்கத் தொடங்கின. எனது நாரை மட்டும் குளத்திலேயே திரிந்தது. மும்முரமாக மீன் பிடித்துக்கொண்டிருந்தது.

“இது ஏன் மாமா இங்கேயே இருக்கு? எல்லாம் பறந்து போயிட்டிருக்கு?”

“எதோ ஏழைப் புலவன் தூது இன்னும் கொடுக்கலை போலிருக்கு..” மாமா காவிப்பற்கள் தெரியச் சிரித்தார். இந்த முறை நான் நம்பினேன்.

நான் அம்பாசமுத்திரம் போகும்நாள் வந்தது. மாமா சைக்கிளில் முன் பாரில் இருந்து சாலையோரத்தில் பார்த்துக் கொண்டே வந்தேன்.நாரையைக் காணவில்லை.
மாமா சட்டென்று சைக்கிளை நிறுத்தினார். சாலையோரம் அவசரமாகச் சென்று தண்ணீரில் பார்த்தார்.
” அடப்பாவமே”
தண்ணீரில் அரைகுறையாக மூழ்கி மங்கலாக ,பிளந்த அலகுகள் தெரிந்தன. சில இறகுகள் மிதந்துகொண்டிருந்தன. கால்கள் சிவப்பான சாயம் பூசினது போல சிதறிக்கிடந்தன. வேதனையில் வளைந்திருந்தன.

“எவனோ அடிச்சிருக்கான். சே.. பாவம்.”
எதிரே வந்த ஒருவன் மாமாவை நெருங்கினான்” என்னாச்சு வாத்தியாரைய்யா?”

“நாரையை எவனோ அடிச்சிருக்காம்பா.. ஒரு வாரமா கரையோரமா நின்னிட்டுருந்தது.. பாவம்”

“கொன்னவன் நம்ம ஊர்க்காரனா இருக்கமாட்டான்யா. எவனோ வெளியூர்க்காரன் வேலை… எப்ப பார்த்தீங்க?”

“இப்பத்தான். எடுத்து அடக்கம் பண்ணிருவோம். எடு முருகேசா”

முருகேசன் தண்ணீரில் இறங்கி, அலகுகளைப் பற்றி இழுத்தான். தண்ணீர் வழிய சாலையில் போட்டபோது, அதன் ஓரங்களில் ரத்தச்சிவப்பு தெரிந்தது…

இரண்டு நாட்கள் நான் சரியாகத் தூங்கவில்லை. அம்மா,”எதையோ பாத்து பயந்திருக்கான்” என்றாள். விபூதி பூசினார்கள்.கோயில்யானையிடம் தும்பிக்கையில் தண்ணீர் கொடுத்து முகத்தில் பீச்சினார்கள்.எட்டாம் வகுப்பில் தாமஸ் சார் – “இருனூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதுக-“எனக்குப் பிடித்த விலங்கு அல்லது பறவை”” என்று கட்டுரைப்போட்டி வைத்தபோது எழுதினேன். “எனக்குப் பிடித்த பறவை அழகாகப் பேசும் கிளியோ, ஆடும் மயிலோ அல்ல.எனக்குப் பிடித்தது செங்கால் நாரை. ஏனெனில் அது மனிதர்களை நேசிக்கிறது, நம்புகிறது, உதவுகிறது. நாம்தான் நன்றி மறந்து அதனைக் கொல்கிறோம்”

காருகுறிச்சிக்கு அதன்பிறகு நான் போகவில்லை.

கோயிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. சுந்தரம் குடும்பம் உள்ளே நின்று கொண்டிருக்க, நான் காரில் அருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“யாரு,சீனுவா? எப்படா வந்தே?”- கேட்டவனைப் பார்த்ததும் ஒரு கணம் குழம்பி னேன். இவன் கண்ணன்தானே?

தோதாத்திரி மாமாவோட மூத்த பையன். இங்கே எப்படி? “இப்பத்தான் கண்ணா. சினேகிதன் குடும்பத்தோட வந்தேன். எப்படிடா இருக்கே? அம்மா அப்பாவெல்லாம் எப்படியிருக்காங்க?”

கண்ணன் ஒரு கணம் மொளனமனான்.” அப்பா ஒரு மாசம் முன்னால இறந்துட்டார். .டெலிகிராம் அடிச்சோம். அப்புறம்தான் தெரிஞ்சது
உனக்கு மாத்தலாயிருச்சுன்னு..”

நான் உறைந்தேன் ” எப்படா? எப்படியாச்சு?”

“நன்னாத்தான் இருந்தார். ரிடையர் ஆனதும், முத மாசப் பென்ஷன் வாங்கிட்டு
வர்றேன்னு போனார். ,
இன்னொருத்தருக்கு பிராவிடண்ட் •பண்ட் •பாரம் வாங்கிண்டு வர்றதுக்கு நேரமாயிருச்சு. சாயங்காலம் ரொம்ப இருட்டிண்டு வந்ததுல எதிர்த்தாப்பல வந்த லாரி தெரியலை.அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்.

ரோட்டிலேயே ரத்தவெள்ளத்துல கிடந்திருக்கார். ஒருத்தரும் உதவிக்கு வரலை. விஷயம் தெரிஞ்து.நாங்க போறதுக்குள்ள உயிர் போயிருச்சு”

கண்ணன் மேலே சொன்னது எதுவும் கேட்கவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

ரோட்டில் ஒரு பெரிய நாரை இறக்கை விரித்துக் கிடந்தது. அதன் அலகுகள் பிளந்து ரத்தச் சிவப்பாக .. வெற்றிலை போட்டு உமிழ்ந்தது
போல்….நாரையின் உடலுக்குப்பதில் மாமா தெரிந்தார். கைகளில் பி.எ•ப் பாரம் சுருண்டிருக்க, சட்டைப்பையில் நூறு ரூபாய் நோட்டுகள்
மடக்கி வைக்கப்பட்டிருந்தன..

காரில் செல்லும்போது வைஷ்ணவி கேட்டாள்.
“அங்கிள், ‘காட்டுல இருக்கிற நல்ல மிருகங்களெல்லாம், மனுசங்களாயிடும்’-ன்னு எங்க பாட்டி
சொன்னாங்க. அப்போ, நல்ல மனுசங்களெல்லாம் என்னவா ஆவாங்க? இப்ப பாத்த சாமி மாதிரி ஆயிடுவாங்களா?”

“நல்ல மனுசங்களெல்லாம் நாரை ஆயிடுவாங்கம்மா. அதுவும் செங்கால் நாரை ”

சொன்ன எனது கண்கள் நிறைந்ததில், எதிரே சாலை மங்கலாகத் தெரிந்தது

2 thoughts on “செங்கால் நாரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s