நட்புகளும் ந்யூட்டன் வளையங்களும்.

மழை எப்ப வேணும்னாலும் வரலாமென பயமுறுத்திக்கொண்டிருந்தது. இருநாட்களாக , நகரை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு இப்போதுதான் அடங்கியிருக்கிறது. சிறு சாரல்கூட அச்சத்தைத் தரும் சூழல் இது.

அர்விந்த் , தலைகுனிந்து அமர்ந்திருந்தான். காபி காபி டே இல்லாது போனாலும், Aromas & More என்று ஒன்று எங்கள் ஆபீஸ் அருகே , நல்ல சேவையைத் தருகிறார்கள்.

அமைதியாக அமர்ந்திருந்தேன். அழைத்தவன் அவன் தான். அவனே ஆரம்பிக்கட்டும்.

“எங்க காலேஜ் get together இப்ப நடந்திச்சு. 20 வருஷம் ஆச்சுன்னு. அதுல என் நண்பர்களையெல்லாம் பாத்ததுல ஒரு உற்சாகம். காலேஜ்ல என் உற்ற தோழி, ஸ்வேதா ஜெர்மனிலேர்ந்து வந்திருந்தா. காலேஜ்ல அவளை எப்பவுமே சீண்டுவேன். நண்பர்களோட ஒரு நாள் முழுசும் போனதே தெரியல.

ஒரு வாட்ஸப் க்ரூப், ஈ மெயில் க்ரூப் ஆரம்பிச்சிருந்தோம். அதுல அவளச் சீண்டினேன். ரொம்ப எளிமையான ஜோக்.
சட்டென கோபமாயிட்டா “ நீ ஜொள்ளு விடறே. உன் மணவாழ்க்கை சரியில்ல. You are a faiilure in your marital life ; dont cross the line.”

“ஆ!” என்றேன் என்னை மறந்து.

“ஷாக் ஆயிட்டேன். நான் அப்படிக் கனவுல கூட நினைச்சதில்லை. என் திருமணம் ஒரு காதல் மணம். வீட்டுல ஒத்துகிட்டு மணமுடிச்சு, எல்லாரும் நல்லா இருக்கோம். இவளுக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது.” அவன் கண்களில் லேசாக நீர் கோர்த்திருந்ததோ? மங்கள் ஒளியில் தெரியவில்லை, ஆனால் பளபளத்தது போல ஒரு நினைவு.

“ஏன் இப்படிச் சொல்லணும்னு ஒரே மன உளைச்சல். என் மனைவிகிட்ட சொன்னேன். அவ, விடுங்க. உங்களைப்பத்தி எனக்குத் தெரியும்.”னா. ஆனாலும் எனக்கு மனசு அடங்கலை. ஏன் அவ இப்படிச் சொல்லணும்?”

“அர்விந்த்” என்றேன் மெல்ல. இது உணர்வு கொந்தளிக்கும் நேரம். உடைந்துவிடுவான். “ பெண்களுக்கு இயல்பாகவே ஒரு எச்சரிக்கை உணர்வு உண்டு. அது குகை மனிதன் காலத்திலிருந்தே வந்த ஒன்று. ஆணென்பவன் அவன் இனப்பெருக்கத்தை விழைபவன் என்றே அவர்களது குறக்களி மனதில் அடிக்கும். அது தவறல்ல. அந்த எச்சரிக்கை, எதிரே இருப்பவனை நாகரிகமாக நடக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. இது குகை மனிதன் காலத்தில் மிகத் தேவையாக இருந்தது.

இன்றைய சூழலில் அவ்வளவு அபாயமில்லை என்றாலும் நம் மூளை எச்சரிக்கையாக இருக்கிறது. . அன்றைய சர்க்யூட் இன்றும் தொடர்கிறது. சில நேரங்களில் தவறான எச்சரிக்கை மணி அடிப்பது நேரிடும். துரதிருஷ்டவசமாக, நாம் மாட்டிக்கொண்டால், நாம்தான் வருத்தப்படுவோம்.

இப்போது நீ அந்த போலி எச்சரிக்கை மணியால் தாக்கப்பட்டிருக்கிறாய். இது இயல்பு எனத் தெரிந்துகொண்டால், சற்றே குழப்பம் தவிர்க்கலாம்.”

“ஆனா, அவ எல்லாருக்கும் தெரியற மாதிரி எழுதிட்டாளே? அவ்வளவு பேர் முன்னாலயும் என் மரியாதை, மானம்…”

“ஒண்ணும் போகாது” என்றேன் திடமாக “ உன்னைத் தெரிந்த்வர்களுக்கு இது ஒரு விபத்து அவ்வளவுதான். உன்மீது அனுதாபம் வருமே தவிர ஆத்திரம் வராது. இப்படி வைச்சுக்கியேன்.. இது புரிந்தவர்கள் உன் நண்பர்கள். இல்லாதவர்கள் ரெயில் சினேகம். Those who know you, know you. Those who don’t , have just spent two years with you warming the bench. They are at best, acquintances, at worst ,a familiar faces”

“இல்லைங்க. ஏன் இப்படிச் சொன்னா?”

“நீ என்ன படிச்சே?”

”இயற்பியல் முதுகலை”
“ஆ! நம்ம ஆள்! லேசர் படிச்சிருப்பியே?”

“யெஸ்” என்றான் தலையாட்டியபடி.

“ஒரே அலைநீளமும், அதிர்வு எண்ணும் கொண்ட இரு ஒளி அலைகள் ஒரேஇடத்திலிருந்து புறப்படுதுன்னு வைச்சுக்குவோம். ரெண்டும் வேற வேற பாதைல போகுது. பாதையின் நீளம் மாறும். நடுவுல வேற ஊடகங்கள் வரும். அதுல புகுந்து வரணும். ரெண்டும் ஓரு இடத்துல சேரும்போது, கிளம்பின மாதிரி இருப்பதில்லை. ”

“தெரியும் ந்யூட்டன் வளையங்கள் உருவாகும். வெள்ளை, கருப்புன்னு மாறிமாறி வட்டம்”

“அதேதான். ரெண்டும் ஒண்ணா இருக்கிற நேரம் பிரகாசமான ஒளி. ரெண்டும் மாறுதலா இருக்கறச்சே, இருள். ரெண்டும் மாறி மாறி வரும். இது இயற்கை.
இதேதான் வாழ்க்கையில, ரெண்டுபேரும் வேறு வேறு பாதை. வேறு பயணம். ஊடக மாற்றம். சேரும்போது ஒரே மாதிரி இருக்க மாட்டீர்கள். இந்த வேற்றுமையைப் புரிஞ்சவன் ‘ என் நண்பன் மாறிட்டான்”ன்னு புலம்ப மாட்டான். அவ ஏன் இப்படிச் சொன்னான்னு நீயும் புலம்ப மாட்டே”

“உங்களுக்கு இப்படி நடந்திருக்கா ?”

“ம்” என்றேன் சுருக்கமாக.

“இதே மாதிரிதான் சிந்திச்சு சுதாரிச்சுகிட்டீங்களா? உடனே சரியாகிட்டீங்களா””

மவுனமாக வெளியே வெறித்தேன். சாரல், திடீரென அடர் மழையாக மாறியிருந்தது

Image courtesy : Wikipedia.org

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s