அக்காவின் சொதிச்சோறு

”நீ வாரது சந்தேகந்தான் மழை கொட்டுதுல்லா?ன்னாரு அத்தான். நாந்தான் ‘ அவன் வருவான். வாய வச்சிகிட்டு சொம்ம கிடங்க”ன்னேன்” அக்காவின் குரல் அந்த அடுக்குமாடிக் கட்டடத்திலிருக்கும் அனவருக்கும் கேட்டிருக்கும்.

நீலப்பின்னணியில் வெள்ளைச் சதுரங்கம் இருந்த கைலியில் அத்தான், வாயெல்லாம் பல்லாக ’வாடே’என்றார்
“ சொம்மாத்தான் கிடக்கேன்’ இவகிட்ட மாரடிச்சு ஜெயிக்கமுடியுமாடே?”

’இருவத்தஞ்சு வருசமிருக்குமால?” என்றாள் இன்னும் வியப்பு அடங்காமல் அக்கா. என் நண்பனின் அக்கா என்றாலும், அவனையும் என்னையும் சேர்த்தே திட்டும் உரிமை வாய்ந்தவள். சில வாரங்கள் முன்பு மும்பை வந்ததில் என்னைப் பார்க்க வரச்சொல்லியிருந்தாள்.

“முப்பதுக்கா. நீ மதுரை போனதும் ரெண்டு தடவதான் வந்திருக்கேன்”
“ஆங்! பழங்கானத்தம் ஸ்டாப்புல உன்னை ஸ்கூட்டர்ல பிக் அப் பண்ணி அத்தான் கொண்டுவந்தார்லா? பர்ஸை எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டான்னு…” அனைத்தும் அவளுக்கு நினைவிருக்கிறது.

”பையன் என்ன செய்தான்? ( செய்கிறான் என அர்த்தம்). பி.ஈ முடிச்சிட்டாம்லா? பின்னேன்ன? காலாகாலத்துல கழுதய ஒரு கலியாணம் கட்டிப் போடு. சொல்லுதேன்னு நினைக்காதல. இப்ப பொன்ணுங்க கிடைக்கறது கஸ்டம் தெரிஞ்சுக்க”

“யக்கா, அவன் இன்னும் வேலைக்கே போகல”

“இந்தா, ஒங்கத்தானைக் கட்டறப்ப்போ எதோ கிராம வங்கில என்னமோ வேலைல இருந்தாரு. மாசச் சம்பளம் என்னங்க? நானூறு. எத்தன? நானூறு”

“நானூத்தம்பது ”என்றார் அத்தான் தீனமான குரலில் அவமானமாக உணர்து.

”அந்த அம்பதுதான் குறைச்சல் இப்ப. மாட்டுக்கு லோன் போட்டு, நாந்தான் தொழுவம் வச்சி, பால் கறந்து… கிராமத்துல என்ன பெருசாக் கிடைச்சிரும்? பஸ்ல கொண்டுபோயி… அப்புறம் பாங்க்ல வேலை. என்ன குறைச்சல்ங்க? நல்லாத்தான் இருந்தோம். இருக்கம். ரொம்பப் பாக்காத. நல்ல பொம்பளப்பிள்ள, நல்ல குடும்பம்னா சட்டுப்புட்டுன்னு..”

“ஏட்டி. சளம்பாக இருக்கியா?” என்றார் அத்தான் எரிச்சலில் ” ஒன்றரை மணிநேரம் அலைஞ்சு வந்திருக்கான். ஒரு காப்பித்தண்ணி கொடுப்பமேன்னு தோணுதா ஒனக்கு?”

’அச்சோ” என்றாள் அக்கா, வாயைப் பொத்தியபடி “ கேக்காம என்னமோ பேசிட்டிருக்கன் பாரு. காபி குடிக்கியாடே?”

“ஒன்றரை மணிக்கு காபியா? அப்படியே பஸ் ஏத்திவிட்டறணும்னு ப்ளான் போல” என்றேன்.

“ வாரியக்கட்ட பிஞ்சிறும். மரியாதைக்கு ஒக்காந்து தின்னுட்டுத்தான் போணும் வெளங்கா? ஒனக்குன்னு சொதி வச்சிருக்கன்”

”ஆகா “

“தேங்காப்பால் எடுத்தது எல்லாம் நான் டே. ரிடையர் ஆனா, நாயைக் குளிப்பாட்டி விடறதுலேந்து ,நாள்காட்டி கேலண்டர் தாள் கிழிக்கர வரை நாமதான்” அத்தான் முந்தினார்.

“தே.. அடங்கி இரிங்க.சொல்லிட்டேன். என்ன செஞ்சீங்கன்னு அவங்கிட்ட சொல்லவா?”

அத்தான் சட்டென எழுந்து இல்லாத பால் பாக்கெட்டை எடுத்துவருவதாகக் கிளம்பினார்.

“பொண்ணு எப்படி இருக்கா?” என்றேன் உணவின்போது. அத்தான் எதோ சொல்லவர, அக்கா பேச்சை மாற்றினாள். ”அதெந்த ஊரு சொல்வீங்க. வில்லனா, வில்லியா என்னமோ வரும்லா”
”ஒம் மறதியை ஒடைப்புல போட… நாஷ்வில்.. இவ நாஷ்வில்லின்னு சொல்லிச் சொல்லி..”

”ஆங்! அங்கிட்டுதான் நிக்கா. அடுத்தாப்புல அமெரிக்கா போனேன்னா சொல்லு. வந்து பாக்கச் சொல்லுதேன்”

“அமெரிக்கா என்ன தூத்துக்குடியா? ஜெயிலானி தெருவுல வந்தவா, ரெண்டு எட்டு வைச்சி சார்ல்ஸ் தியேட்டர் போறமாரி, சொல்லுதீங்க? நாஷ்வில் பக்கம் போனாச் சொல்றேன்.”

கிளம்பும்போது அத்தானை வரவேண்டாமெனth தடுத்தவள் கேட் வரை தானே வந்தாள்.

வாரேங்க்கா ’

“ சொல்லுதேன்னு நினைக்காதல. பெரியவ கலியாணம் முறிஞ்சிட்டு. அங்கிட்டு ஏதோ பொண்ணோட அவனுக்கு சகவாசம்… என்ன சொல்ல? இவ இங்கயும் வரமாட்டேக்கா. தனியா பிள்ளையோட இருக்காடே. பயம்மா இருக்கு. அங்க போனேன்னா, பக்குவமா எடுத்துச் சொல்லு. இன்னொரு கட்டு கட்டிரு.. காலம்பூர இப்படி நிக்க முடியாதுட்டீன்னு எடுத்துச் சொல்லு. சொல்லுவியாடே?”

ட்ரெயினில் வரும்போது ஏதோ நெஞ்சைக் கரித்தது. அசிடிட்டி?

சொதியில் இப்போவெல்லாம் ஏதோ சரியில்லை, நல்ல காய்கறிகள் இருந்தும்.

1 thought on “அக்காவின் சொதிச்சோறு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s