கும்பகர்ணனின் உள்பகை

”ஆர்டர் போயிருச்சா?” என்றேன் நம்பமுடியாமல். ஜேக்கப் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். மூன்று கோடி, கையில் வந்த வாழைப்பழம்… வாயில் விழுமுன் வழுகிக் கீழே…

“ எப்படி ஜேக்கப்? எல்லாம் நமக்குச் சாதகமாத்தானே வைச்சுட்டு வந்தோம்?”

”நேத்திக்கு சாயங்காலம் ஏழுமணிக்கு சன்யால் கூப்பிட்டார். உடனே அவர் ஆபீசுக்கு வரச்சொன்னாரு. இறுதியான விலை கொடுங்க’ன்னார். நேத்திக்கே முடிவெடுத்து டெல்லிக்கு அனுப்பணுமாம். நாம, ஐ.எஃப்.ஸி ரெண்டு பார்ட்டி மட்டும்தான். கடைசி விலை கொடுக்கறப்போ, இன்னும் 2% கொடுங்கன்னாரு. நான் கேட்டுச் சொல்றேன்னு சொன்னேன்”

“ஸோ?”

“ஐ.எஃப்.ஸில விக்ரம் சிங் வந்திருந்தான். அவன் விலை நம்மளவிட அதிகம். அவன் உள்ள போய் என்ன சொன்னான் தெரியாது. அஞ்சு நிமிசத்துல ஆர்டர் அவன் கையில”

“என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?”

“கூப்டிருக்கலாம். இன்னும் 2% தள்ளுபடி.. நீங்க கொடுக்க மறுத்திருக்கலாம். அப்படியே கொடுத்திருந்தாலும் ஆர்டர் கிடைச்சிருக்குமா சந்தேகம்தான்”

ஜிவுஜிவுவெனக் கோபம் ஏறியது எனக்கு. வெற்றியிலக்கினை எட்ட ஒரு மீட்டர் தூரத்துல, ஓடுபவன் நிற்பதைப் போன்ற மூடத்தனம். இது முதல்தடவையில்லை ஜேக்கப்பிற்கு.

மிகவும் புத்திசாலி, கடுமையான உழைப்பாளி. ஆனால் வெற்றி மட்டும் விலகிச் சென்று கொண்டே இருக்கிறது அவனுக்கு.

அன்று மதியம் சங்கரநாராயணனைக் காணச் சென்றிருந்தேன். போட்டிக் கம்பெனியில் பணிபுரிந்து தன்விருப்ப ஓய்வு பெற்றிருந்த, நண்பர். ஜேக்கப் அவரது சிபாரிசில்தான் கம்பெனியில் சேர்ந்தான்.
“என்ன சார், இந்த ஜேக்கப்?” என்றேன் விரக்தியில். மூன்று கோடி.. தலைவர்கள் சும்மா விடமாட்டார்கள். அடுத்த வார மீட்டிங்கில் தோலுரித்துவிடுவார்கள். சங்கரன் ஏறிட்டார். சுருக்கமாகச் சொன்னேன்.

சங்கரன் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தார் “ அவனுக்கு ஒரு பயம் இருக்கிறது. உங்கள் கம்பெனியை விட அவனது முந்திய கம்பெனியில் கெடுபிடிகள் அதிகம். மேலிட உத்தரவு இல்லாமல் அவனால் முடிவெடுக்க முடியாது. அந்த அனுபவம் தயக்கத்தைத் தருகிறது என நினைக்கிறேன். எதற்கும் ஒரு முறை தனியாக விசாரியுங்கள்”

”இதெல்லாம் சும்மா சார். அவனுக்கு ஆர்டர் இல்லாவிட்டாலும், ஓரளவு ஒப்பேத்திவிடலாமென எண்ணம் போல. தைரியமா முடிவெடுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு ரொம்ப நாள் இப்படிப் போக முடியாது”

“தன் இரக்கம், சுயச் சந்தேகம் மனிதனை உள்ளிருந்து கொல்லும் சுதாகர். நீங்கள் ஒரு வாளைக் கொடுத்திருக்கிறீர்கள். அவனுக்கு அது அட்டைக் கத்தியாகத் தெரிகிறது. இதைச் சுற்றினாலும் சுற்றாவிட்டாலும் தோல்விதான் என்பது மனதில் பட்டிருக்கும்”

”அப்படிப்பட்டவன், உண்மையாக, கடுமையாக ஏன் உழைக்கிறான்? வெற்றி கையில் கிடைக்கும்போது தளர்வது.. ஏதோ மனநோய்”

”சுயச் சந்தேகம் கரையான் புற்று போல், மறைவாக உள் வளர்ந்து அடிக்கும். பெரிய பெரிய ஆட்களெல்லாம் இதற்கு அடிபட்டிருக்கிறார்கள். ஆர்மி ஆபீஸர்கள் முதல், விளையாட்டு வீர்ரகள், பங்குச் சந்தை விற்பன்னர்கள் வரை. இதற்குத்தான் போட்டி விளையாட்டுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தவேண்டுமென்கிறது. தன்னிடமும், பிறரிடமும் போட்டியிடுபவன் வெற்றியைத் தவிர வேறொன்றும் நினையான். அவனுக்கு சுயச் சந்தேகம் வராது”

யோசித்தேன் “ நீங்க சொல்றது சரிதான். வெற்றி பெற்ற பலரையும் பாருங்கள். ஏதாவது சவாலான விளையாட்டுகளில் இருப்பார்கள். மலையேறுதல், ஆழ்கடலில் செல்வது, பாராசூட், பங்கீ ஜம்ப், மராத்தான்..”

”அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு அட்ரினலின் ஹார்மோனைச் சுரக்கும். அபாயத்தை எதிர்நோக்கிய வாழ்வில் அவர்களால் , பிசினஸை அதே வேகத்தில், உறுதியில் செலுத்த முடியும். சுயச் சந்தேகம் வந்தால் அவர்கள் தொலைந்தார்கள்.”

“ஆனால், வெற்றி கையில் இருக்கும் நேரத்தில் இப்படி சந்தேகம் வருமா?” என்றேன் கவலையோடு. இந்த ஜேக்கப்பை என் துறையிலிருந்து மாற்றவேண்டியதுதான்.

”ஏன் வராமல்? இராமாயணத்திலேயே இருக்கே?”

“எதைச் சொல்றீங்க?” திகைத்தேன். இதை நான் அறியவில்லையே?

“கும்பகர்ணன் இராமன் போர். யுத்தகாண்டம் முதல் பாகம். கும்பகர்ணனுடன் இராமன் பெரிதாகப் போர் செய்கிறான். ஒரு கணத்தில், கும்பகர்ணனின் வலதுகையை வெட்டி வீழ்த்துகிறான் இராமன். கும்பகர்ணன், விழுந்த கையை இடது கையில் எடுத்தப்டி சுழற்றி அடித்து வானரசேனையை தாக்குகிறான். இராமன் அவனது இடது கையினை வீழ்த்துகிறான். சூலமும், தண்டாயுதமும் போன நிலையில், வானில் குதித்தெழுந்து கும்பகர்ணன் ராமனை நோக்கி வேகமாக ஓடி வருகிறான். இராமன் இப்போ, அவனது வலது காலை வெட்டுகிறான். கும்பகர்ணன் இடது காலால் குதித்து குதித்து, ராமனைத் தாக்க வருகிறான். இடது காலையும் வெட்டுகிறான் இராமன்”

சுவாரஸ்யமாக க் கேட்டுக்கொண்டிருந்தேன்.

”கும்பகர்ணன், அசரவில்லை. ஒரு மலையைத் தன் வாயால் கடித்துப் பறித்து வீசி, ஊதி இராமன் மேல் செலுத்துகிறான். ரெண்டு கை, ரெண்டு கால் போன நிலையிலும் இப்படி ஒரு வேகம். இராமன் அதிர்ந்து போகிறான். அவன் கோதண்டம் பிடித்த கை தடுமாறுகிறது.

//தீயினாற் செய்த கண்ணுடையான் எழுஞ்சிகையினால் திசைதீய
வேயினால் இணிவெற்புஒன்று நாவினால் விசும்புற வளைந்தேந்திப்
பேயினால் புடைப்பெருங்களம் எரிந்தெழப் பிலம்திறந்தது போலும்
வாயினால் செல வீசினன். மன்னனும் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்.//

இராமன் அதிர்ந்து நிற்கிற நேரம், அவனுடைய பலவீனமான சமயம். கும்பகர்ணன் அதே வேகத்தில் தொடர்ந்து போரிட்டிருந்தால், இராமனுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டம் கும்பகர்ணன் பக்கம் வர எத்தனித்த தருணம்.

திடீரென கும்பகரணனின் மனத்தில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. ‘என் கை போச்சு, கால் போச்சு, ஆயுதம் இல்லை. இனி என்ன செய்வேன்?” இந்த சுயச் சந்தேகம் தீப்பொறியாகத் தோன்றி உள்ளே வேகமாக சுவாலை விட்டு வளர்கிறது. அடுத்ததாக, ஒரு சுயஇரக்க உணர்வும், கவலையும் தோன்றுகிறது “ என் அண்ணன் இராவணனை எங்கனம் இனிக் காப்பேன்?”

//ஐயன் வில்தொழிலுக்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ!யான்
கையும் கால்களும் இழந்தனன் வேறினி உதவலாம் துணை காணேன்;
தையல்நோய்கொடு முடித்தவா தானென்றும் வரம்பின்றி வாழ்வானுக்கு
உய்யும் ஆறு அரிது என்று தன்னுள்ளத்தில் உணர்ந்து ஒரு துயருற்றான்//

அவ்வளவுதான். கும்பகர்ணனின் வேகம் குறைகிறது. கொல்லும் உணர்வு அடங்க, தெளிவாகச் சிந்திப்பதாக அவன் மனம் மாறுகிறது. தன் முடிவை எதிர்நோக்கியபடி இராமனிடம் “ என் தம்பி விபீஷணன் உன்னை நம்பி வந்திருக்கிறான். அவனைக் கைவிடாது காப்பாற்று. என் தலையை அறுத்து கடலுள் எறி” என்கிறான்.

சங்கரன் நிறுத்தினார். அவர் கண்கள் எங்கோ நிலைத்திருக்க, கும்பகர்ண வதம் நடந்த இலங்கைக்கே சென்றுவிட்டார். “ வெல்லும் நேரத்தில், சுய சந்தேகம், தன்னாற்றலைக் குறைக்கிறது. தோல்வியை எதிர்நோக்க வைக்கிறது. விதித்த து இதுதான் என நினைக்கவைக்கிறது. Fatalism. கும்பகர்ணனின் மனம் இராமபாணத்தை விடக் கொடியது. ஆற்றல் மிக்கது

ஜேக்கப்பிற்கும் இந்த சுயச்சந்தேகம் இருக்கும். வெல்லும் நேரத்தில் பின்வாங்க வைப்பது அதுதான். அவனிடம் இதுபற்றிப் பேசு. வெல்லவே நீ விதிக்கப்பட்டாய் என அறிவுறுத்து. பத்தாங்கிளாஸ் படிக்கும் பையனுக்கும், 55ம் வயதில் பாட நினைப்பவனுக்கும் சுயச் சந்தேகம்தான் உள்ளிருந்து கட்டிவைக்கும் இரும்புச்சங்கிலி”

ஜேக்கப்பிடம் சொல்லவேண்டும். போருக்குச் செல்கிறாய். நீ கொல். இல்லையென்றால் கொல்லப்படுவாய். சில தருமங்களுக்குச் சில உணர்வுகளே விதிக்கப்படுகின்றன.

உள்பகை கொடிது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s