கார் ஓட்டக் கற்றுக்கொள்ளச் செல்கிறீர்கள். ஆக்ஸிலரேட்டர், ப்ரேக், க்ளட்ச் இருப்பதையும், க்ளட்ச்சை அழுத்தி, கியரைப் போடவும் சொல்லிக்கொடுக்கிறார்கள். இருநாட்கள் உய்ங்க்க், என்று திமிறி, கார் முன்னே பாய்ந்து ஒரு குலுக்கலோடு நிற்கிறது. எளிதாக கியர் போட்டுச் செல்லும் சிறு பெண்ணைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள். “ எனக்கு வர்றதுக்கு நாளாகும்” என்றும் தோன்றுகிறது. மெல்ல மெல்ல பழக்கமான பின்பு, கியரோ, க்ளட்சோ, ப்ரேக்கோ, எதுவுமே நீங்கள் உணர்ந்து செயலாற்றுவதில்லை. தானாக ,ஆக்க நிலை அனிச்சைச் செயலாக வந்துவிடுகிறது. இதுவேதான் நீச்சலுக்கும், ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கும்.. ஏன் எந்த பயிற்சி மூலம் வரக்கூடிய புதிய திறன்களுக்கும் இதேதான். எது கடினமாகப் படுகிறதோ, அதுவே பழக்கத்தில், விடா முயற்சியில், வழக்கமாக மாறுவதில், கவனமற்று செயல்படும், ஆக்கநிலை அனிச்சைச் செயலாக மாறுகிறது. இது ஏன்?
சிந்திக்கும் மூளைப்பகுதி, தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்ளவே அதிகம் எத்தனிக்கிறது. எனவே, பழகிய செயல்களை, தானியங்குநிலையில் விட்டுவிடுகிறது. இந்த நிலையில் மூளையின் வேலை இருப்பினும் அது குறைவாகவே இருக்கும். அனுபவசாலியொருவர் கார் ஓட்டும்போது, அவர் மூளை வேலை செய்யாமலில்லை. அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அமைக்டிலா, அடங்கிக்கிடக்கிறது. பெருமூளையின் சிறுபகுதியே வேலை செய்கிறது. மூளை, சி.டியைப் போடுவது, ஏஸியைக் கூட்டுவது போன்ற பிற வேலைகளில் ஈடுபட்டுவிடுகிறது..
ஒரு வேலையைத் திறம்பட, தானியங்கு நிலையில் செய்ய 10000 மணிநேரப் பயிற்சி தேவை என்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 10000 மணி நேரப் பயிற்சி மட்டும் போதாது. தவறான பயிற்சியாக இருந்தால், தவறான ஒரு திறமையாளராகவே அவர் உருவாக முடியும். எனவே, பயிற்சி – பின்னூட்டம்- மாற்றுதல் – பயிற்சி –பின்னூட்டம் என்றே ஒரு சுழற்சி, நல்ல திறமைசாலியொருவரை உருவாக்க முடியும்.
தானியங்கு நிலையில் மூளையின் வேலையை அதிகம் நம்பிவிடமுடியாது. பழக்கங்கள் கிட்ட்த்தட்ட 80 சதவீதம் நமது இயக்கங்களைத் தீர்மானிக்கின்றன. இது நம்பமுடியாத ஒன்று. நாம் என்னமோ, திறமையாக , தருக்க ரீதியாக, சிந்தித்து மட்டுமே செயல்ப்டுவதாக ந்னைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் பழக்கங்கள் நம் இயக்கங்களையும், சிந்திக்கும் வித்த்தையும் பெருமளவு தாக்கியிருக்கின்றன.
இந்த நிலையில் நமது யோசிப்பைப் பற்றி யோசிப்போம். நமது பழக்கங்களின் அடிப்படை ஒன்றில் “ உன்னைப் பற்றி கிண்டலாகப் பேசினால் இந்த கெட்டவார்த்தை சொல்லு” என்று அழுத்தமாக இருந்தால். இண்டெர்வியூ ஒன்றில், வேண்டுமென்றே கேட்கப்பட்ட நக்கலான கேள்விக்குப் பதில் அந்த கெட்டவார்த்தை இயல்பாக வந்துவிழும். (வந்திருக்கிறது. கேட்டிருக்கிறேன்). டேனியல் கானேமான் என்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர் இந்த இருவகையான மனத்தினை கிட்டத்தட்ட தானியங்கியான சிஸ்டம்1, தருக்க ரீதியான சிஸ்டம் 2 எனப் பிரித்தார். சிஸ்டம் 1 என்பது மிக்க் குறைவான நேரத்தில் எதிர்வின செய்வது. சிஸ்டம் 2 என்பது சற்றே பின்னடைந்து, சிந்தித்துச் செயலாற்றுவது. பழக்கங்கள், சிஸ்டம் 1ன் செயல்பட்டை முன்வைக்கின்றன.
இது போன்றே இயல்பு வாழ்க்கையில் நம் பதில் பழக்கத்தின் வகையில் அமைகிறது. சிலர் பேசும்போது “ஐ மீன், .. யு நோ” என்று அடிக்கடி சொல்வது அவர்களுக்கே தெரியாத ஒன்று. பதில் சொல்லாக மட்டுமே இருக்கவேண்டுமென்பதில்லை. உடல் மொழியாகவும் இருக்கலாம். அது இன்னும் மோசம்.
நம் சிந்தனை , பழக்கங்களினால் தாக்கப்படுகிறபோது, சிந்தனை மொழியும் தாக்கப்படுகிறது. ஒரு செயலின் எதிர் வினையாக “ நம்மைப் பத்தி தப்பாத்தான் சொல்கிறார்கள்”என்பது பல முறை மனதில் தோன்றும்போது, அது பழக்கமாகிறது. சந்தேகம் என்பதும் ஒரு சிந்தனைப் பழக்கம். இது பெரிதாகும்போது டெல்யூஷனாக delusion மாறும்.
உடல் இயங்கும் பழக்கத்தை மாற்ற சார்லஸ் டுஹிக் ஒரு உத்தி சொல்கிறார் . எந்தப் பழக்கத்திற்கும் தூண்டுகோல், நமது எதிர்வினை, அதன் முடிவாக்க் கிடைக்கும் பயன் என்பன அவசியம். சிகரெட் என்பதைப் பார்த்தால், நம் எதிர்வினையாக சிகரெட்டை எடுக்கிறோம். அதன் முடிவாக ஒரு நிறைவு கிடைப்பதை உடல் எதிர்பார்க்கிறது.
அதே முடிவிற்கு , நம் எதிர்வினையை மாற்றிப் பார்த்தால்? அதாவது, சிகரெட் புகைப்பதன் முடிவான நிறைவை,மற்றொரு வினை தருமானால்?
இப்படித்தான் நிக்கோடின் பட்டையின் பயன்பாடு புழக்கத்திற்கு வந்த்து. சிகரெட் என்ற தூண்டுதலுக்கு, நிறைவைத் தரும் நிகொட்டின் பட்டையை அணிவது என்ற எதிர்வினை, மெல்ல மெல்ல, புகைக்கும் பழக்கத்தை மாற்றிவிடுகிறது.
தூண்டுதல் – எதிர்வினை –முடிவு என்பதில் நடுவிலிருக்கும் எதிர்வினையை மாற்றுவது போல் , ஒரு தூண்டுதலுக்கும், நமது பதிலான எதிர்வினைக்கும் நடுவே, நமது கிரகிப்பு , சிந்தனை என்பதை மாற்றிப் பார்த்தால்?
ஆக்க நிலை அனிச்சைச்செயல்கள் இதனை எளிதில் செய்ய விடாது. எனவே, ஒரு தூண்டுதல் கிடைத்த்தும், அது மூளையில் எதனால் கிரகிக்கப்படுகிறது என்பதை கண்டு, அதனை மாற்ற முயற்சிக்கப் பழக வேண்டும்.
பயப்படும்படியான ஒரு உருவம் முன்னே வந்தால், அமைக்டிலா பணி செய்துவிடும். கவலையில்லை. ”உனக்கெல்லாம் மூளையே கிடையாதாடா?” என்ற கேள்விக்கு. “இப்படி எவனாச்சும் கேட்டான்னு வையி.. பிச்சிறுவேன்” என்று பலகாலமாகச் சொல்லி வந்திருந்தால், கைதான் பேச வரும். இது தானாக வரும் எதிர்வினை என்றால், எப்படி இதனைத் தடுப்பது?
எனவே, ஒரு சிறு விதியைக் கவனமாக உள்வாங்குவோம்.
ஒவ்வொரு தூண்டுதலுக்கும், பதிலுக்கும் நடுவே, ஒரு இடைவெளி இருக்கிறது. அது சிந்திக்க வேண்டிய கால இடைவெளி. அதனைப் பயன்படுத்தி, அதன்பின் பதில் சொல்லவேண்டும்.
இதன்படி, யதார்த்த கால அவகாசமாக 5 நொடிகள் என்பதை கணக்கில் வைக்கலாம்.
“உனக்கு மூளையே கிடையாதாடா?” என்று கேள்வி வருகிறது. 1-2-3-4-5 என்று மனதில் கணக்கிட்டு அதன்பின் பதில் சொல்லிப் பாருங்கள். உங்கள் பதில் வேறாக இருக்கலாம்.
இந்த கால அவகாசத்தில் மூளை தன்னில், எந்த உறுப்பு பதில் சொல்லவேண்டுமென்பதைத் தீர்மானிக்கிறது. இதன் விளைவு, பெரும்பாலும், பெருமூளையின் நடுப்பகுதி, முன்பகுதி பதில் சொல்வதில் ஈடுபடுகிறது. இந்த கால அவகாசம் மிக முக்கியம்.
சில நேரங்களில், கால அவகாசத்துடன், இரத்த அழுத்த்த்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் நேரிடுகிறது. மூச்சை மெதுவே இழுத்து, அடக்கி,மெல்ல வெளியிடுவது நல்ல பயனைத் தரும். சிறு சிரிப்பு, அனைவரையும் சுற்றி மெல்ல நோட்டமிடுதல், போன்றவையும், பயனளிக்கும். சிலருக்கு இரு நொடிகள் போதும்., சிலருக்கு பத்து நொடிகள் தேவைப்படலாம்.
இந்த கேள்வியை விட சில மோசமானவை சமூக வலைத்தளங்களில் வரும் சில வீடியோக்கள், புகைப்படங்கள், உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட பதிவுகள். இவற்றிற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தோன்றினால், மேலே சொன்ன உத்தியைப் பயன்படுத்துங்கள்.உணர்வைத் தவிர்க்க, அடுத்த பதிவிற்குச் செல்லுங்கள். தூண்டுதல் மாறும்போது, பதிலும் மாறும். பல கம்பெனிகள், தங்கள் பணியாளர்களின் சமூக வலைத்தள இயக்கங்களைக் கவனிப்பதற்குக் காரணம், அவர்களது உணர்வு எதிர்வினைகளை அறியும் நோக்கமும்தான்.
சில நொடிகள் நேர அவகாசம் நேரே யோசிப்பதை வலுப்படுத்தும். சிஸ்டம் 2க்கு நமது எதிர்வினையாற்றல், சிந்தனைகளைக் கொண்டுவர சற்றே முயல்வது நல்லது.