நேரா யோசி _4

எதிரி  4 :  குறுக்கான இடையாடல்கள்.
”’பட்டுக்கோட்டைக்கு வழி சொல்லுடா’ன்னா, ’கொட்டைப் பாக்கு பத்து பணம்’ங்கான்”  என்று ஒரு பழமொழி உண்டு. கேள்வி ஒன்றுக்குச்  சம்பந்தமில்லாத பதில் வருவதில் உண்டான எரிச்சலை இது போன்ற பழமொழிகள் வெளிக்காட்டுகின்றன. ஏன் எரிச்சல் வரவேண்டும்? அவர் காதில் பட்டுக்கோட்டை என்பது , கொட்டைப்பாக்கு என்று கேட்டிருக்கலாம். அல்லது அவர் வேறு சிந்தனையில் இருந்திருக்கலாம். இது அவரது புரிதலில் தவறு. பிறரின் தவறான புரிதல் நமக்கு ஏன் எரிச்சலை மூட்டுகின்றது?
உங்கள் வீட்டில் விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள். ஏ.டி.எம்ல் பணம் எடுக்கவேண்டுமென்பது நினைவில் வரும்போது யாரோ ஒருவர் ‘காபி வேணுமா?’ என்கிறார். நீங்கள் ஆமாம் எனத் தலையாட்டிவிட்டு, காபி வருகையில் “யார் கேட்டது?” என்கிறீர்கள்.. உரையாடலில் தவறுதலான புரிதல் இல்லை. ஆனால் பதில் தவறு. ஒரு உரையாடலில் நாம் ஈடுபட்டிருக்கும்போது கவனம் சிதறும் வாய்ப்புள்ளது.
கவனம் என்பது குவியத்தின் ஒரு படிநிலை. ஒரு செயல்பாட்டில் ஒரு நிலையை மூளை தானியங்கி நிலைக்குக் கொண்டுசெல்வதில் வரும் பிழையில் உரையாடல் பிழைகள் ஏற்படுகின்றன. குவியம் என்பது, கவனம் என்பதோடு, அவயங்களின் உள்வாங்குதலும் கவனத்தோடு இயைந்து இயங்கும் ஒரு நிலை. குவியத்தில் இருநிலைகளைச் சொல்ல்லாம். ஒன்று தற்காலிக்குவியம். அந்த நேரத்தில் மட்டும் மீண்டும் நமது உடலுறுப்புகளையும், மனத்தையும் ஒருங்கிணைக்கும் இயக்கம். மற்றது நீண்டகாலக் குவியம். நாட்களாக, வருடங்களாகத் திறனுடன் ஒரு செயலைச் செய்யும் ஆற்றல்.
உரையாடலில், கேள்வி கேட்டவர் நீங்களென எடுத்துக்கொள்வோம். உங்களுக்குத் தவறான பதில்களால் எரிச்சல் வருகிறது. ”எங்கயோ நினைச்சுகிட்டு பேசக்கூடாது. சொல்றது காதுல விழுதா?” நாம் ஒழுங்காகத்தான் கேட்டோம்.
நமது எதிர்பார்ப்பு என்பது வேறு வகையானது.” நான் சொல்வதைச் சரியாகத்தான் சொல்கிறேன். கேட்பவருக்கு மிகச்சரியாக அது புரியும்வகையில்தான் சொல்கிறேன். எனவே எனக்கு வேண்டிய பதில் வரவேண்டும்” இதுதான் நமது அச்சமய, தற்காலிகக் குவியத்தின் எதிர்பார்ப்பு. இந்த தற்காலிகக் குவியத்திற்காக உடல் செலவிடும் சக்தி , நீடித்த நேரத்திற்குத் தேவைப்படும் ஆற்றலை விட அதிகமானது. எனவே, சரியான பதில் கிடைக்காதபோது , ஏமாற்றங்கள் எரிச்சலைத் தோற்றுவிக்கின்றன. கேள்வியின் நேரமும், பதிலின் அவகாசமும் மிகக் குறுகிய காலகட்டத்தவை.  ஏமாற்றத்தின் ஆழம் அதிகம்.
நீடித்த காலத்தின் குவியம், ஆயத்தங்களைக் கொண்டு துவங்குவது. என்ன செய்யவேண்டுமென்பதையும், எப்படிச் செய்ய வேண்டுமென்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்கிறோம். அதன்படி நடக்க எத்தனிக்கையில், வரும் இடையூறுகளையும் மனம் எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப தன் பதில்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்கிறது.
இரண்டு மணி நேரம் தொடர்ந்து படிக்கப் போகிறோம் என உறுதி எடுத்துவிட்டால், ” அம்மா, படிக்கப் போறேன். அக்கா கிட்ட சொல்லிவை. அத எடுக்க வர்றேன், இதை எடுக்க வர்றேன்னு ரூம்ல அனாவசியமா தொல்லை பண்ணக்கூடாது” என்றோ, அம்மா பத்து தடவை கூப்பிட்டபின் “ம்” என்று பதில் சொல்லவோ நாம் ஆயத்தப்படுத்திக் கொள்கிறோம் எதிர்பார்த்த விளைவுகளை நாம் நோக்கியிருப்பதால், நமது தேவைகளும் அதற்குள் அடங்கிப் போகின்றன.
இடையூடல்கள் என்பன பரிமாற்றத்தைச் சேர்ந்தவை. பரிமாற்ற பகுப்பாய்வுகள் நாம் மூன்று நிலைகளில் இருப்பதாகச் சொல்கின்றன. பேரண்ட், அடல்ட் , சைல்டு என அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாமாக அனுமானித்துக் கற்றவற்றை பேரண்ட் எனற நிலையாகவும்  உணர்ச்சி வயமான தகவல்நிலைகள் சைல்டு என்பதாகவும், இவை இரண்டையும் சரிதூக்கிப் பார்த்து , எந்த இட்த்தில் எது தேவையோ அவ்வாறு பரிமாற்றம் செய்வது அடல்ட் என்ற நிலையாகவும் பரிமாற்ற பகுப்பாய்வு வரையறுக்கிறது.  இதில் ஒரு நிலையில் இருந்து பேசி, வேறொரு நிலையிலிர்நுது பதிலை எதிர்பார்க்கையில், சம்பந்தமேயில்லாமல் வேறொருந் நிலையிலிர்நுது பதில் வரும்போது எதிர்பார்ப்பு சிதைகிறது. ஏமாற்றம், கோபம் எரிச்சல் பொங்குகிறது.
உதாரணமாக, “ இன்னிக்கு ரஜினி படம் ரிலீஸு. ப்ரெண்ட்ஸோட பாத்துட்டு வரட்டுமா?” என்று ஆசையுடன் ( சைல்டு – உணர்ச்சி) கேட்கையில் , “ அடுத்த மாசம் செமஸ்டர் . படிக்கற வழியப் பாரு” என்று பதில் ( பேரண்ட்- முன்முடிவு) வருகையில் எரிச்சல் வருகிறது.
சைல்டு எதிர்பார்த்தது, போயிட்டு வா” என்ற அல்லது “ இன்னிக்கு செம கூட்டமா இருக்குமே? இன்னொருநாள் நாமெல்லாரும் போவமா?” என்ற அடல்ட் நிலை பதில். வந்ததோ, பேரண்ட்டில் இருந்து… இது குறுக்கான இடையூடல். ஈடுபட்டோர் அனைவருக்கும் ஏமாற்றம். எரிச்சல்.
இந்த குறுக்கான இடையூடலைத் தவிர்க்க வழியென்ன? நாம் எப்படிக் கேட்டாலும், எதிரே இருப்பவரின் மன நிலையல்லவா , இடையூடலை வழி நட்த்துகிறது? என்பது  சரியான கேள்விதான். ஆனால், நமது எதிர்பார்ப்பு என்பது ஏமாற்றமாக விரியாமல், ”சரி, இவங்க மன நிலைமை வேற” என்ற புரிதல், வேறுவகையில் கேள்வியையோ, அல்லது உரையாடலையோ நகர்த்திவிடும். எதிர்பார்ப்பின் பதில் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், பதிலை உள்வாங்க சில நொடிகள் எடுத்துக்கொள்வது பெரும்பலனைத் தரும்.
இதனால்தான் குழந்தைகளின், “ அம்மா, அப்பாகிட்ட கேட்டு சொல்லேன்” என்பது ஒரு நல்ல உத்தி. அம்மாவுக்கு , அப்பாவின் உடல் மொழியும் தெரியும். எது நல்ல நேரமென்பதை அவள் சரியாகக் கணக்கிட்டுக் கேட்பாள். தெரிந்தோ தெரியாமலோ, உடல்மொழியின் அவசியத்தை, வீட்டிலிருப்போர் கவனித்து உள்வாங்கி விடுகிறார்கள்.
நேராக யோசிப்பதில் நமது பரிமாற்றங்களின் விளைவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நமது இயக்கங்களை மாற்றியமைப்பதும் அடங்கும். எதை யோசிக்கிறோம்? என்பதுடன், இதன் ஆக்கத்தின் விளைவிற்கு என் சிந்தனை, எப்படி இருக்குமென்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாம் விழையும் விளைவுகளுக்குச் சாதகமாகவோ, எதிராகவோ வரும் வினைகளை முன்கூட்டியே எதிர்பார்த்து,ஏற்கவோ,   தவிர்க்கவோ இயலும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s