நேரா யோசி _3

எதிரி  3  : சுயக்கற்றலும் சாய்வு நிலைப்படுகளும்.
தினசரி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் ‘ போதைப்பொருட்களுடன் சென்னை விமான நிலையத்தில் இருவர் சிக்கினர்” மேற்கொண்டு வாசிப்பதை இப்போது நிறுத்துங்கள்.
அந்த நபர்கள் குறித்துக் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலை அனுமானியுங்கள்.
  1. இவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்? இந்தியராக இருந்தால், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்?
  2. அவர்களது பாலினம் என்ன?
  3. அவர்களது வயது என்ன?
உங்கள் பதில் கீழ்க்கண்டவற்றில் எத்தன சரியாக இருந்தன?
  1. வெளிநாட்டவராக இருந்தால், ஆப்பிரிக்க நாட்டவர், அவர்கள் கறுப்பர்கள் . இந்தியராக இருந்தால் வடகிழக்கு மாநிலத்தவர்.
  2. ஆண்கள்.
  3. இளைஞர்கள் 20-30 வயதிற்குட்பட்டவர்கள்.
இதில் பெரும்பாலும் சரியாக இருந்தால் சற்றே உண்மைச்செய்திகளைப் பார்ப்போம்.
  1. கடத்துபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் .அந்நிய நாட்டவர்களில் பெரும்பாலோர் நேபாளிகள், நைஜீரியர்கள் , பர்மாக்காரர்கள்.
  2. பிடிபட்டவர்களில் 25% க்கு மேல் பெண்கள் ( பஞ்சாப் மாநிலம்).
  3. 30% க்கு மேல் இருப்பவர்கள் , 40-50 வயதினர். போதைக்கும்பல் ராணிகளாக இருப்பவர்கள் பலர், அதிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 50%.
நமது அனுமானத்திற்குக் காரணம், இதுவரை நாம் படித்து, பார்த்து வந்த செய்திகள். மீண்டும் செய்திகள் காணக்கிடைக்கும்போது ,பழைய செய்தியை மனம் நிகழ்காலத்திற்கு நீட்டுகிறது. இந்த தன் அனுபவ ரீதியான சுயக் கற்றல், Heuristic எனப்படும். இது போல, தீவிரவாதிகள் என்றாலே குறிப்பிட்ட சமூகத்தினர் உங்கள் மனதிற்கு வருமானால், அதுவும் தன்னனுபவக் கற்றலின் நீட்சியே.
சாய்வுநிலை என்பது, இக்கற்றலின் வழியே நிகழ்வுகளைக் குறித்த, மக்களைக் குறித்த அனுமான்ங்கள். அமெரிக்காவில் , தாடி வைத்திருந்த ஒரேகாரணத்திற்காக தீவிரவாதி எனத் தவறாக எண்ணப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சீக்கியர்கள் பற்றி வாசித்திருக்கிறோம். நம்மூரில், சற்றே மூக்கு சப்பையாக, கண்கள் இடுங்கி இருந்தால் சீனாக்காரன் என்கிறோம். உண்மையில் அவர் சுத்த இந்தியனான அஸ்ஸாமியோ, மிஸோரக்காரனாகவோ இருக்கலாம். உடனே நாம் அவர்களை நம்பகமற்ற கண்கொண்டு பார்க்கிறோம். இது சாய்வு நிலை.
வெள்ளைக்காரனெல்லாம் அறிவாளி என்பதாக நம்மூரில் இன்றும் பல கம்பெனிகளில் பார்க்கிறோம். நாம் சொல்வதைத்தான் அவர்களும் சொல்வார்களென்றாலும், அவர்கள்  வந்தால், அதீத உபசரிப்பு, மரியாதை, அவர்கள் சொல்வதை அப்ப்டியே நம்புவது என்பது இன்றளவும் நீடிக்கிறது. இதெல்லாம். ”வெள்ளையாயிருக்கறவன் பொய் சொல்லமாட்டான்” என்பது அப்பட்டமான சாய்வுநிலை வெளிப்பாடு.
தருக்கத்துடனான சிந்தனை, மூளையின் முன்பக்கத்திலிருந்து வருமுன்னரே இந்த வெளீப்பாடு வந்துவிடுகிறது. இவை, உணர்ச்சிகளின் மூலமான அமைடிலாவின் பணி மட்டுமல்லாது, தவறான செய்திகளை மூளை எடுத்து முன்வைப்பதன் விளைவும்தான்.
டேனியல் கானேமான் என்ற நோபல் பரிசுபெற்ற உளவியலாளர் எழுதியிருக்கும் Reading Fast and Slow என்ற புத்தகத்தில் தன்கற்றலும்,சாய்வுநிலைப்பாடுகளும் பற்றி தெளிவாக்க் குறிப்பிடுகிறார். துரிதமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டியவேளையில் தருக்கத்திற்கு அதிக இடமில்லை. கார் ஒன்று முன்பு வேகமாக வரும்போது, இது எத்தனை கிமீ/மணி வேகத்தில் வருகிறது? நான் வலப்புறம் ஒடவேண்டுமா? அல்லது இடபுறமாகவா? என்றெல்லாம் சிந்திக்காது, உடனே ஒரு முடிவை நாம் எடுக்கிறோம். இந்தக் கண நேர முடிவுகளை எடுப்பது மூளையின் நடுப்பகுதி. அது பிற உணர்வுகளின் செய்திகளை உள்வாங்கும் பகுதிகளிலிருந்து வரும் செய்திகளுக்கு ஏற்ப , தனது நினைவுக் கிடங்கில் இருக்கும் செய்திகளைக் கொண்டு முடிவெடுக்கிறது. இது துரித சிந்தனை.
45லட்சம் பெறுமான நிலப்பகுதியை 20 லட்சத்தில் ஒருவர் தருகிறார். அதுவும் ஐந்து நிமிடத்தில் பதில் சொல்லவேண்டும்’ என்று ஒரு செய்தி வந்தால், உடனே நாம் முடிவெடுப்பதில்லை. ஒரு சந்தேகம் வருகிறது. ஏன் இப்படி அடிமட்ட விலையில் விற்கிறான்? ஏதோ வில்லங்கம் இருக்கு. மேற்படித் தகவல்களை சேகரிக்கிறோம். அல்லது விலகிப் போகிறோம். இது மெதுவாகச் செயல்படும் சிந்தனை. இதனை முடிவெடுப்பது… மூளையின் முன்புறப் பெருமூளைப் பகுதி.
குறிப்பிட்ட பண்புகளை ஒரு சமூகத்திற்கே பொதுவானதான பண்பாக ஏற்றிச் சொல்லும் profiling என்பதும் தன்கற்றலும், சாய்வுநிலைப்படுளுமான  சிந்தனையின் வெளீப்பாடுதான். ”பஞ்சாபிகள் எல்லாருமே  தண்ணியடிப்பார்கள். பெரிதான குரலில் பேசுவார்கள். ஏமாற்றுக்காரர்கள், ஆடம்பரமான வாழ்விற்காக அலட்டிக்கொள்வார்கள்”என்று பரவலான ஒரு கருத்து உண்டு. இதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதை டில்லியிலும், பஞ்சாபிலும் வாழ்ந்தவர்கள் தன் அனுபவமாகச்  சொல்லட்டும். ஆச்சரியப்படுவோம். பொதுவான கருத்தாக அதனை ஒத்துக்கொள்பவர்கள் “ஆனா, எங்க வீட்டுக்கு மேலே ஒரு சர்தார்ஜி இருந்தான். நம்பமாட்டே, அமைதியா, மரியாதையாப் பேசுவான். எக்ஸாம் இருக்குனா, காலேல வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போவான்” இது போன்றவற்றைப் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. ஏன் , எனக்கே அனுபவம் உண்டு.
ஆக, நம் சுயக்கற்றல் , சாய்வு நிலைப்பாடுகள் பொய்யானவையா? அப்படியானால், இவை ஏன் வளர்ந்து வந்திருக்கின்றன? சுயக்கற்றல் தவறல்ல. ஆனால் நாம் அதனை எல்லாவற்றிற்கும் நீட்டிப்பதுதான் தவறாகிவிடுகிறது. எங்கோ நடந்த நிகழ்வுகளை அடிக்கடி நினைத்துப் பொருத்திப் பார்ப்பது, எச்சரிக்கைக்காக மூளை கொண்டுவரும் செய்திகளை இயங்குதளத்தில், அமைக்டிலா மூலம் செயல்பாட்டாக இறக்கியதுதான் தவறு.
ஸ்டீஃபன் கோவே Seven Habits of Effective People என்ற புத்தகத்தில் எழுதுகிறார் “ ஒரு தூண்டுதலுக்கும், அதன் எதிர்வினைக்கும் நடுவே, எவ்வகையான எதிர்வினையை நான் ஆற்ற வேண்டும் என்று தீர்மானிக்கும் இடைவெளி இருக்கிறது. அதில் பொருத்தமான எதிர்வினையைத் தீர்மானிக்கும் அறிவும், உரிமையும் நம்மிடம் இருக்கிறது”
இதுதான் அமைக்டிலாவின் எதிர்வினைக்கும், பெருமூளையின் முன்புறப்பகுதியின் எதிர்வினைக்கும் நடுவே நாம் தேர்ந்தெடுக்கும் முதிர்வின் அறிமுகம். இந்த உரிமையை நாம் எப்போதும் தன்னுணர்வாகக் கொண்டிருந்தால், அதுவே சரியான எதிர்வினையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிவிடும். சரியான மன ஆளுமைக் குவியம், தன்னுணர்வுடன், தன் எதிர்மறை இயக்கத்தைச் சரியான தோற்றுவாயிலிருந்து (அமைக்டிலா, பெருமூளையுன் முற்பகுதி) வெளிக்காட்டும். இது நேராக யோசிப்பதன் அடையாளம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s