அத்தியாயம் – 2
”பத்தமடைப் பாயென்ன, பாலென்ன தேனென்ன
பத்திரமா வச்சிட்ட பொன்னென்ன, பொருளென்ன
பட்டுமெத்தை கட்டிலிலே பெண்ணொருத்தி இருக்கையிலே
விட்டுவிட்டு மவராசா வீதியில் கிடந்தானே,
ராசா வீதியில் கிடந்தானே”
24 செப்டம்பர் 1905, டாக்கா.
டாக்கேஷ்வரி கோவிலின் அருகே வெண்குதிரையின் மேலிருந்து இறங்கியவனைக் கண்டு போலீஸ் அதிகாரி, புன்னகைத்தார் ஆண்டர்சன், ‘எங்கே நேரமாக்கி விடுவாயோ என்று பயந்துபோனேன்’. சற்றே பழுப்பும் இள நரையுமான மீசை தூக்கலாக நின்றிருக்க, ஆண்டர்ஸனின் பச்சைவிழிகள் விளக்கொளியில் அசாதரணமாகப் பளபளத்தன.
‘28ம்தேதி அன்று மஹாலய அமாவாசை’என்றார் ஒரு அதிகாரி. ‘காளிக்கு உகந்த நாள். அன்று உக்கிரமான தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ சீனியர் இன்ஸ்பெக்டர் சற்றே குரல் தாழ்த்தினார். அன்று இரு தரப்பினரும் வன்மையாக மோதிக்கொள்ள வாய்ய்பிருக்கிறது. இருள் வேறு துணை நிற்கும். ரத்த ஆறு பெருக்கெடுக்கும். வைஸ்ராய் வன்முறையை எப்படியும் தடுக்கச் சொல்லியிருக்கிறார்.
‘கர்ஸன்-னுக்கு டாக்கா பற்றி என்ன தெரியும்?’ ஆண்டர்ஸன், தன் கைத்துப்பாக்கியை சரிபார்த்துக்கொண்டான்..
‘ஆண்டர்சன், என்ன துப்பாக்கி அது?’
ஆண்டர்சன் அதனை உறையிலிட்டான் ‘வெப்லி. சொந்தமாய் வாங்கினேன். நவாப் எத்தனை படை வீரர்களை அனுப்பி வைக்கப் போகிறார்?’
‘இருநூறு வீரர்களை மட்டும் கொடுத்திருக்கிறார், நவாப் ஸலிமுல்லா. ஆண்டர்சன், எதோ விபரீதம் நடக்கப்போகிறதாக உள்மனம் சொல்கிறது’
‘உளறாதே. நொர்சிங்காப்பூர் கும்பல் டாக்காவிற்கு உள்ளே வரட்டும். காத்திருப்போம்’
சீனியர் கடுகடுத்தார் ‘உனக்கென்ன பைத்தியமா? அவர்களும் வந்தால் இங்கேயே சிறு சிறு தெருக்களில் ரத்த ஆறு ஓடும். அவரகளைத் தடுப்பது எப்படி, இவர்களை சிறை பிடிப்பது எப்படி என்பது பற்றி உன்னிடம் ஆலோசனை கேட்க அழைத்தால்…’
‘ஏன் இவர்களை சிறை பிடிக்கவேண்டும்? ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்? சிறையெல்லாம் நிரம்பி வழியும். தடுக்கப்போகும்போது நமது ஆட்கள் அடித்துக் கொல்லப்படுவர். எனவே..’ ஆண்டர்ஸன் முகத்தில் ஒரு குரூர புன்னகை விரிந்தது. ‘நமது வீரர்களை குறுகலான சந்துகளை காப்பதை விட்டுவிட்டு , பெருவீதிக்கு மறுபுறம், மரங்களினூடே, பூங்காவினுள்ளே, போலீஸ் நிலையங்களினுள்ளே மறைந்து நிற்கச் சொல். நொர்சிங்கப்பூர் ஆட்களுக்கு , இவர்கள் இங்கே அடைபட்டிருப்பதாக தகவல் தெரிவித்துவிடு. இவர்களுக்கு , அவர்கள் வருவதை அறிவித்து விடு’
‘அதன்பின்?’
‘அதன்பின்.. உனது போலீஸ் படையை என் ஆணைக்குள் விட்டுவிடு. இருமணி நேரம் மட்டும்’ ஆண்டர்ஸனின் திட்டம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்க, சீனியர் இன்ஸ்பெக்ட்டருக்கு வியர்க்கத் தொடங்கியது.
‘ஆண்டர்சன். வேண்டாம்.. விஷப்பரீட்சை. இந்த இரு மதத்தவரும் மோதுவதை நீ பார்த்ததில்லை. அதன் நடுவே நமது வீரர்களை விடுவது சரியல்ல. வெறிகொண்ட யானைகளுக்கு இடையே எருதுகள் போவது ஆபத்து’

‘யானைகள் அடித்துக்கொண்டு பலவீனமானால், நரிகள் கூட கொன்றுவிடும். அவர்கள் ஆத்திரத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்து’ சீனியர் போலீஸ் அதிகாரி மிகவும் தயக்கத்துடன் அரை மனதாகச் சம்மதித்தார். அன்று இரவே, டாக்காவின் புற நகர்ப் பகுதியிலிருந்து மறைமுகமாக போலீஸ் வீரர்கள் நகருள் கொண்டு வரப்பட்டனர்.
செப்டம்பர் 28 வரை பதட்டம் காத்திருக்கவில்லை. 27ம் தேதி இரவு, டாக்காவின் பல பகுதிகளில் இருட்டடைப்பு செய்யப்பட, திடீரென ஆயுதங்கள் மோதுவதும், அலறல்களும் கேட்கத் தொடங்கின. ரைபிள்கள் , நாட்டுத் துப்பாக்கிகள் சிறு வீடுகளின் மேல் மாடிகளிலிருந்து தீப்பொறி பறக்க, சுட்டு அணைய , கந்தக நெடியில் மரணம் தோய அமானுஷ்ய நெடியில் அத்தெருக்கள் மணத்தன.
திடீரென பெரு வீதிப்பகுதியிலிருந்து குறுகிய சாலையின் எல்லைகளை அடைத்து நின்ற காவலர்கள் உள் நோக்கிச் சுட, மாடிகளை நோக்கி ஓடியவர்கள், மாடிகளிலும், வீடுகளிலும் இருந்தவர்களை வன்மையாகச் சுட, அவர்கள் பதிலுக்குத் தாக்கி, அனைவரும் தெரு விளிம்புகளை நோக்கி ஓடினார்கள். போராடும் இரு யானைகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு தப்பிக்க முயல, சாலையோரம் நின்றிருந்த நரிக்கூட்டமொன்று அவற்றைத்தாக்கின. வழிந்த குருதியைச் சுவைத்தன.
28ம் தேதியன்று அதிகாலையிலேயே, போலீசார், கிடந்த உடல்களை குப்பை வண்டிகளில் அள்ளியெடுத்துப் போய் எரித்தார்கள். மஹாலய பட்சத்தன்று இரவில் கல்கத்தா வன்முறையில் தகிக்க, டாக்காவின் பதட்டப் பகுதிகள் அமைதியாயிருந்தன.
ஆண்டர்ஸன் உடல்களை எரித்தது ஒரு தலைவலியாக வந்து விடிந்தது. மக்கள் உறவினர்களின் உடல்களைக் காணாது தேடி, அவை அனைத்தும் எரிக்கப்பட்டனவென்று பரவிய வதந்தியில் கொதித்தெழுந்தார்கள். கல்கத்தாவில் கர்ஸன் பிரபுவுக்கு, அன்று இரவு ரகசிய தந்தி எட்டியது. ‘டாக்காவின் மத உணர்வுகள் புண்படுமாறு ஆண்டர்ஸன் நடந்துகொண்டான். உடனடியாக அவனை வெளியேற்றவும், நவாப் ஸலிமுல்லா’ கர்ஸன், ஆண்டர்ஸனை வங்கத்திலிருந்து வெளியேற்ற ஆணையிட்டார். ஆண்டர்ஸன் புனேக்கு மாற்றப்பட்டான்.
வங்கப்பிரிவினை தொலைதூர மஹாராஷ்ட்ராவில் பல கலவரங்களை ஏற்படுத்தியது அவனுக்கு வியப்பை அளீத்தது. கலகம் செய்பவர்களின் பெயர்களை கவனமாக பட்டியலிட்டான். ‘பெர்கூஸன் கல்லூரி மாணவன்.. யார் இந்த சவர்க்கார்?’
மாணவன் என்பதால் ஆண்டர்ஸன் சவர்க்காரைக் கவனியாமல் , பால் என்ற பால கங்காதர திலக் மீது கண் வைத்தான். திடீரென்று ஆங்கிலேயத் தயாரிப்பு உடைகளை புனே சந்தையில் அம்மாணவன் எரித்ததையும், திலகர் அதனைப் பாராட்டியதையும் கேட்டு சற்றே கூர்மையானான். ஃபெர்கூசன் கல்லூரி முதல்வரைச் சந்தித்துப் பேசினான்.
அடுத்த நாள், சவர்க்கார் ரூ. 10 அபராதம் விதிக்கப்பட்டு, கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய வரலாற்றில், புரட்சிக்காக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட முதல் மாணவரானார் சவர்க்கார். ஆண்டர்ஸனின் அச்சுறுத்தலும் அதற்குக் காரணம் என்று போலீஸ் வட்டாரங்கள் மறைமுகமாகப் பேசிக்கொண்டன. அதிகாரம் மிகக்கொண்ட தனிப்படைப் பிரிவாக அவன் செயல்பட்டதால், அரசும், காவல்துறையும் கையைப்பிசைந்து தவித்தன.
‘ஆண்டர்ஸன் , பற்றி எரியும் வெடிகுண்டு, எத்தனை சீக்கிரம் அது பிற இடத்தில் விழுகிறதோ, அத்தனைக்கு நாம் பிழைத்தோம்’ என்றார் பம்பாய் மாகாண அதிகாரி ஒருவர். ‘இவன் சுதேசிகளை விடப் பெரிய தலைவலி’ என்றார் வைஸ்ராயின் ஆலோசகர்.. ஆண்டர்ஸன் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டான்,1908 பெப்ரவரியில் அவன் அதிகாரி அவனை கல்கத்தாவுக்கு திரும்பும்படி ஆணையிட்டார்.
‘ஆண்டர்சன், வங்கமும், பம்பாய் மாகாணமும் ஓரளவு கைக்குள் கொண்டு வரமுடியும். உனது தேவை இப்போது…’ வைஸ்ராயின் ஆலோசகர் முடிக்கவில்லை..ஆண்டர்ஸன் இடைமறித்தான் ‘வங்கம் இன்னும் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. சுதேசிகள் என்ற பூச்சிகள் அடியோடு ஒழிக்கப்படவேண்டும். அவர்கள் இருப்பது வங்கம், பஞ்சாப், பம்பாய் மகாணங்கள்’
‘தெரியும்’ என்றார் அவர் சுருக்கமாக“ உனது நடவடிக்கைகள் அத்து மீறியிருக்கின்றன. அதையும் மன்னித்து உனது கோபத்தையும், உக்கிரத்தையும் காட்ட மற்றோர் வாய்ப்பு தருகிறேன். சுதேசித் தலைவலி, இன்னொரு இடத்தில் தொடங்கியிருக்கிறது.’
‘பர்மா?’
‘மதறாஸ் மகாணம். தின்னவேலி. வி.ஓ.சி என்றொருவர்…’
தொடரும்…