ஐந்து குண்டுகள் -1

அத்தியாயம் -1

 

“சித்தியோடுமவந்தானும்வீட்டுள்ளேகிடக்கையிலே
பத்தியமா
மவராசன்தெருவில்கிடந்தானே– மவராசா
தெருவில்
கிடந்தானே

முத்துக்குமார் ஆயாசமாக நாற்காலியில் சாய்ந்தான். இதென்ன, காலையிலிருந்து செல்லியாத்தாவின் பிலாக்கண வரிகள் நினைவில் ஓடிக்கொண்டிருக்கின்றன? ஆடிட்டிங்கில் ஆழ்ந்திருந்தபோது மறைந்திருந்தது, வீட்டில் வந்ததும் மீண்டும் நினைவில் வந்துவிட்டன. செல்லியாத்தா கிழவி பல வருடங்கள் முன்பு ஊரில் பாடின வரிகள்… யாருக்குப் பாடினாள்? நினைவில்லை. இப்போது என்ன திடீரென்று? தலையை உலுக்கியபடி, முன்னே கணனியின் திரையைக் கவனிக்க முயன்றான்.

“50% தள்ளுபடி விற்பனை” என்று கத்திக்கொண்டிருந்த ஆன்லைன் விற்பனை மின்னஞ்சல்களிலிருந்து விலகித் தனியாக “எனது-உங்களது பரம்பரை வரலாறு” என்று வந்திருந்த அந்த அஞ்சல் முத்துக்குமாரின் கவனத்தை ஈர்த்தது. ரத்னச் சுருக்கமாக, ‘உங்களது பரம்பரையும் எனது வம்சமும் நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியில் குவிந்திருந்தன. மேற்கொண்டு நீங்கள் அறிய விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளவும். பி.கு: இது ஒரு கற்பனை நைஜீரிய அத்தையின் சொத்தைப் பங்கு போடுவதற்கான அழைப்பு விடுப்பு அல்ல – லிண்டா ஜோன்ஸ், யார்க்‌ஷைர், எனது பேஸ்புக் ப்ரொஃபைல்…’

லிண்டா ஜோன்ஸ்? முத்துக்குமாருக்கு யோசித்துப் பார்த்துப் பிடிபடவில்லை. ஒரு ஆங்கிலேயப் பெண்ணிற்கும் எனக்கும் என்ன குடும்பத் தொடர்பு இருந்துவிடமுடியும்? பேஸ்புக்கில் லிண்டா ஜோன்ஸ். ப்ரொஃபைலைத் தேடினான். போட்டோவில் நடுத்தர வயதில் ஒரு பெண்மணி, தனது நாய், கணவன் மற்றும் ஒரு இளம்பெண்ணுடன்…

நட்பு இணைப்பிற்கு செய்தி அனுப்பிவிட்டு பிற நிலைத்தகவல்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், உள்பெட்டி உயிர்த்தது. முத்துக்குமார் எதுவும் எழுதுமுன்னே, பெரிதாக ஒரு செய்தி உடனே வந்தது. முன்பே எழுதி வைத்து , வெட்டி ஒட்டியிருக்கவேண்டும். தயாராக இருந்திருக்கிறாள். யார் இவள்?

‘நமது குடும்பங்களுக்குள் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும் என்று நீங்கள் வியக்கலாம். சுமார் 115 ஆண்டுகள் முன்பு கேட்டிருந்தாலும் அவர்களும் வியந்திருப்பார்கள். ஆனால் அன்றைய சூழல் அவர்களை ஒருங்கே கொண்டு வந்தது. எனது குடும்பத்தின் விவரம் ஒன்று உங்களிடம் இருக்கிறது அல்லது இருக்கலாம். அதனை அறிய விரும்புகிறேன். நாம் மேற்கொண்டு பேசலாமா?’

‘எனது இமெயில் ஐடி… எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு? யார் நீங்கள்?’

‘பத்து வருடங்களாகத் தேடிவருகிறேன்’ என்றது மறுமுனை. ‘மாவட்ட கெஜெட்களை ஆராய்ந்து, உங்கள் பெயரில் முன்னூறுக்கும் மேலாய் ஆட்களைத் தொடர்புகொண்டு, இப்போதும் நாலு முத்துக்குமார்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்கள் குடும்ப வரலாறு குறித்து சில கேள்விகள் கேட்கலாமா?’

அவர் கேட்ட கேள்விகளில் சிலவற்றிற்கு பதில் தெரிந்தது. அப்பாவிடம் போனில் கேட்டு, தட்டச்சினான். ஐந்து நிமிடங்களின் மவுனத்தின் பின் ஒரு கேள்வி வந்தது.

‘உங்கள் பரம்பரையில் யாரிடமாவது பழைய கைத்துப்பாக்கி ஒன்று இருக்கிறதா? ’

‘லிண்டா, இந்தியாவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு லைசன்ஸ் வேண்டும். ஆதார் அட்டைக்கு அலைவதற்கே இங்கு நாக்கு தள்ளுகிறது. இதில் கைத்துப்பாக்கி லைசன்ஸுக்கு அலைவதற்கு நிச்சயம் எங்கள் குடும்பத்தில் எவருக்கோ பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் அல்லது அவர் குடித்திருக்க வேண்டும்’

‘ஹா’ என்றது மறுமுனை ‘பயன்படுத்தும் அளவில் இருக்காது அந்த ரிவால்வர். கிட்டத்தட்ட நூறு வருடப் பழமை வாய்ந்தது அது. இன்னும் சவப்பெட்டிக்குள் சென்றடையாத முதியோர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்கள்’.

பெரியப்பாவை எப்போதோ சிதை மூட்டியிருக்கலாம் என்ற நினைப்பை அந்த ஒரு கணம் கைவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்குப் போன் செய்தான்.

‘தெரியலையேய்யா. ஒங்க தாத்தாவோட ஒரு வாளு இருந்துச்சி. மனுச ரத்தம் கண்ட வாளு, வீட்டுல வைக்கேண்டாம்னு கருப்பண்ண சாமி கோயில் வச்சுட்டோம்னுவா ஆத்தா. அவருக்கு மூத்தவரு எல்லாத்தையும் விட்டுட்டு சன்யாசியால்லா இருந்தாரு?’

பெரிய தாத்தாவுக்கு பிள்ளைகள் என யாரும் கிடையாது. ஒருவர் இருந்ததாகவும் விஷக் காய்ச்சலில் இளம் வயதிலேயே மாண்டுவிட்டதாகவும் கேட்டிருக்கிறான். மொத்தத்தில் ரிவால்வர் ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ’இல்லை’ என்று தட்டச்சினான் முத்துக்குமார்.

சிறிது தயக்கத்தின் பின் உள்பெட்டி மீண்டும் உயிர்த்தது.

‘நான் இன்னும் பதினைந்து நாட்களில் இந்தியா வருகிறேன். சென்னையில் ஒருநாள்… அதன்பின் திருநெல்வேலியில் இரு வாரங்கள். நீங்கள் வரமுடியுமா?”

என்ன பெண் இவள்? முத்துக்குமாருக்கு கோபம் எழுந்தது. முதலில் பெண் தானா? பேஸ்புக்கில் பெண் என அடையாளம் வைத்திருப்பவரெல்லாம் பெண்ணாயிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அந்த குடும்பப் போட்டோ.. உண்மையாயிருக்கும் எனத் தோன்றியது.

‘ஓகே’ என்றான் முத்துக்குமார். எப்படியும் ஊருக்குப் போக வேண்டும். அம்மாவைப் பார்த்து நாளாகிவிட்டது. அவளும்,கோயில் கொடை வருகிறது என்று தொணதொணத்துக்கொண்டிருந்தாள்.

‘நன்றி’ சட்டென இணைப்பு அறுத்தாள். முத்துக்குமாருக்கு ஏதோ நெருடியது. அப்படி என்ன அத்துப்பாக்கியில் இருக்கிறது? முதலில்… துப்பாக்கி இருக்கிறதா?

தொலைபேசி கிணுகிணுத்தது. ‘ஏல முத்து. பெரியப்பாதான் பேசுதேன். பெரிய தாத்தாட்டேர்ந்துதான் அந்த வாள் வந்திச்சு கேட்டியா? வயசாயிட்டே வருதா, எல்லாம் மறந்துபோவுது. பெரிய தாத்தா, சன்யாசியா ஆகறதுக்கு முந்தி, பெரிய வேட்டைக்காரனா இருந்திருக்காரு.. ஆமா, என்ன திடீர்னு கேக்கே?’

‘சும்மாத்தான், அவருக்கும் வெள்ளைக்காரனுக்கும் என்ன தொடர்பு, பெரீப்பா?’

‘அவரு ஒரு வெள்ளக்காரனக் கொன்னுட்டாரு. அதுவும் ஒரு ஆஃபீஸரை…’

தொடரும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s