சிவகாமி

“என்னங்க”

ஆரம்பித்து விட்டாள். எரிச்சல் மெல்லக் கிளம்பியது நடராசனுக்கு. எத்தனை தடவைசொல்வது?

“என்னடி.? பம்பாய் போணும், டிக்கட் போடுங்க.. அதானே?”

சிவகாமி மவுனித்தாள்.

“ஒன்னு தானாத் தெரியணும். இல்ல சொன்னாப் புரியணும். ரெண்டும் கிடையாது ஒங்கிட்ட.”

“பொண்ணப் பாக்கணும்னு சொல்றது தப்புங்க்கறீங்க. என்ன மனுசனோ. கட்டிட்டு மாரடிக்கறேன்”

“பல்லு பேந்துடும். சவமே. மாரடிக்காளாம். நான்ல இங்க ஒன்னோட நாளொரு வியாதி, பொழுதொரு வைத்தியன்னு ஆடிட்டிருக்கேன். என் நிலையில வேறெவனாச்சும் இருந்தா , எப்பவோ இழுத்து தெருவுல போட்டிருப்பான். “ நடராசன் சீறினார்.

கேவல் ஒலி கேட்டது. அதன் பின் அழுகையோடு கீச்சிட்ட குரலில் அவள் புலம்பத் தொடங்கினாள்.

நடராசன் வெளியே வந்தார். இனி ஒரு மணி நேரம் எங்கயாவது போயே ஆகணும். அதுவரை புலம்பித் தள்ளிவிடுவாள்.

ஒரு வருடம் இருக்குமா? போன ஆடியில விழுந்தாள். ஆடி அமாவாசையில் எதோ கோயிலுக்குப் கிளம்பும்போது, பாத்ரூமில் வழுக்கி காலில் அடிபட்டதுதான் ஆரம்பம். அதிலிருந்து, கால் வீக்கம், சுகர், ப்ளட் ப்ரஷர் எஇன்று ஒன்றுபின் ஒன்றாக எல்லாம் வந்து, இப்போது…

நடராஜனுக்கு சட்டென சிவகாமி மீது ஒரு இரக்கம் மேலெழுந்தது “ அவளும் பாவம் என்னதான் செய்வாள்? நாமாவது வெளியே காலாற நடந்து, முருகன் டீ செண்டரில் ஒரு காபி உறிஞ்சிவிட்டு, பொது நூலகத்தில் அன்றைய பேப்பர்களைப் புரட்டிவிட்டு “ இந்த நாடு வெளங்குமாவே?” என்று தொடங்கும் அந்தோணி நாடாரின் மரக்கடையில் கொஞ்சம் இருந்து, அவரது கணக்குகளைச் சரி பார்த்துக் கொடுத்துவிட்டு, மெல்ல நடந்து மேலக்கரை வழியே முருகன் கோவிலுக்குப் போய் விட்டு வீட்டிற்குப் போக முழுசா ரெண்டு மணி நேரம் ஆகும். அவள் கொட்டு கொட்டென்று அதே ரூம், அதே படுக்கையென்று இருப்பதில் மனசு பேதலிச்சுத்தான் போகும்.

அவள் பம்பாய் போணுமென்று கேட்பது தவறு என்பதை எப்படிச் சொல்ல?” தன்மீதே ஒரு குழப்பத்திலும், சுய பச்சாதாபத்திலும் உச் கொட்டினார். அருகில் நடந்து சென்றவர் வினோதமாகப் பார்த்ததைக். கவனியாது போல தலை குனிந்து நடராஜன் நடந்தார்.

”அகிலா பி.ஈ படிக்கும்போதும் சரி, டி.சி.எஸ்ல வேலை பாக்கும்போதும் சரி, சிவகாமி கூடவே இருந்தா. அது சரி.” முன்னே வந்த மோட்டார் சைக்கிளின் பளீரென்ற விளக்கொளியில் வெலவெலத்துச் சற்றே கண் சுருக்கினார். “ பாடையில போறவன், இப்படியா மேல முட்டறமாதிரி வண்டியோட்டறது?” திட்டிக்கொண்டே சிந்தனையைத் தொடர்ந்தார்.

அகிலாவுக்கு திருமணம் நடந்தபின் மும்பையில் அந்தேரி பக்கம் மாப்பிள்ளை வாங்கியிருந்த வீட்டில் இருவரும் சென்று ஒரு மாதம் பெருமை பொங்க இருந்துவிட்டு வந்தனர். கிட்டத்தட்ட ஒரு கோடி விலை. என்ற போது நடராஜன் வாயைப் பிளந்தார். “ எல்லாம் இ.எம்.ஐ தான் மாமா. மாசாமாசம் சம்பளத்துலேர்ந்து நேரா கடனடைக்கப் போயிறும். தவிரவும், இன்கம் டாக்ஸ்ல வீட்டு வட்டிக்குத் தள்ளுபடி கிடைக்குது” என்ற விவரங்கள் அவருக்குப் புரிந்தாலும், கோடியில் இருக்கும் சுழிகளின் எண்ணிக்கை அவரை பயப்பட வைத்தது. அது ஒரு வருடம் முன்பு. இப்போதைய நிலை?

வீட்டிற்குள் நுழைந்ததும், நேராக சிவகாமியின் படுக்கைக்கு அருகில் சென்றார். அவள் எழுந்தூ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அருகே, நாலு சிறு கால்களுடைய நடைக்கழி.

“ஏட்டி, சொல்றதக் கேளு. இப்ப அவங்க அந்தேரில இல்ல. எங்கிட்டோ தூரமாப் போயி இருக்காங்க. அதான் நாலு மாசமுன்னாடி லெட்டர் போட்டிருந்தாள்ளா,ஒம்பொண்ணு?”

“எங்கிட்டு இருந்தா என்ன? நாம போயி காலம்பூராவுமா இருக்கப்போறாம். ஏதோ பிள்ளத்தாச்சிப் பொண்ணுக்க்ய் ஒரு கஞ்சித்தண்ணி வைக்க, பிள்ளையப் பாத்துகிட , கூட மாட இருந்தா நமக்கும் சந்தோசமா இருக்கும்லா.” என்றவள் சட்டென உணர்ந்து அழ ஆரம்பித்தாள்.

“நான் ஒன்னும் செய்ய முடியாதுன்னு தான இப்படி சொணங்குதீங்க? ஒக்காந்த மேனிக்கே எல்லா வேலையும் செஞ்சுருவேன். பொண்ணு மொகத்தைப் பாத்தாலே ஒரு தகிரியம் வந்திரும் பாத்துகிடுங்க”

“அட அது இல்லட்டீ..” நடராஜன் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் நிற்க, வாசலில் செருப்பை அவிழ்க்கும் சத்தம் கேட்டது.“யாரு?” என்றார் நடராஜன்.

“நாந்தான் . விஜயா”

“ஒந்தங்கச்சி வந்திருக்கா. இந்தா, அவ முன்னாடி அழுவாச்சிய வைக்காத, கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்” மிரட்டியபடியே வெளியேறினார் அவர்.

“யக்கா, நான் பம்பாய் போப்போறேன்” என்ற குரல் அவரை வாசலில் நிறுத்தியது. இவ எதுக்கு போறா?

“கார்த்தி புது வேலை போப்போறான். பம்பாய்ல ஆறுமாசமா இருக்காம்லா?இனிமே துபாய்லயாம். சரி, அங்கிட்டுப் போறதுக்கு முந்தி கொஞ்ச நாள் அவங்கோட இருந்துட்டு வாறன்னு அவருகிட்ட சொன்னேன். சரின்னுட்டாவ. அடுத்த புதங்கிழமைக்கு டிக்கட் போட்டிருக்கம்”

“ஏட்டி விசயா” முன்னே குனிந்தாள் சிவகாமி “யாத்தீ, முதுகுல நங்கு நங்குன்னு யாரோ குத்துத மாரி வலிக்கே?”விஜயா அவள் முதுகை ஆதரவுடன் தடவிக்கொடுத்தாள்.

“ஏட்டி” வலியில் கண் சுருக்கியபடியே சிவகாமி தொடர்ந்தாள்” அங்கிட்டு அகிலா வீட்டுல ஒரு பார்வை பாத்துட்டு வரியா? நாந்தான் எளவு போகமுடியல.”

“என்னக்கா இப்படி கேட்டுட்ட?” என்றாள் விஜயா “ நான் வளத்த பொண்ணுல்லா? நாம் போயிப் பாக்கமாட்டனா? அவளுக்கு பிடிக்குமேன்னு சீடைக்கு மாவு அரைச்சுட்டுத்தான் இங்கிட்டு வாரன்.”

நடராஜன் தயங்கினார். சொல்லலாமா இவளிடம்? விஜயாவுக்கு வாய் நீளம். எதுவும் தங்காது. ஊரெங்கும் சொல்லித் தொலைவாள். போய் விட்டு வரட்டும். என்ன ஆனாலும் வந்தப்புறம் பாத்துக்கலாம்.

தனது அலமாரியைத் திறந்து மடித்து வைத்திருந்த வேட்டிகளின் இடையே இருந்த ஒரு காகிதத்தை எடுத்தார். அகிலா நாலு மாதம் முன்பு எழுதிய கடிதம் அது. “இவருக்கு கம்பெனியில வேலை போயிருச்சு. புது வேலை கொறஞ்ச சம்பளத்துலதான் இருக்குப்பா. வீட்டுக்கடன் அடக்க முடியலை. வித்துட்டு, குறைவான விலையில் ஒரு பெட்ரூம் கிச்சன் வீடு டோம்பிவில்லி ஏரியாவுல வாங்கிட்டுப் போயிருக்கம். விஷால் இன்னும் என்னை விட்டுட்டு இருக்க மாட்டேங்கறான். இன்னும் ஒரு வருஷம் போயிட்டுன்னா, அவனை டே கேர் செண்டர்ல விட்டுட்டு நானும் எதாவது வேலைக்குப் போலாம்னு இருக்கேன். அதுவரை கொஞ்சம் வாயைக் கையைக் கட்டித்தான் இருக்கமுடியும். இந்த வருசம் ஊருக்கு வரமுடியாது. செலவு அதிகமாகும். உங்ககிட்ட நான் சொல்ல முடியும். அம்மாவுக்கு புரியற மாதிரி நீங்கதான் எடுத்துச் சொல்லணும்”

மேற்கொண்டு படிக்க மனமில்லாமல் அதனை மீண்டும் வேட்டிகளுக்குள் மறைத்து வைத்தார். இவளிடம் எப்படி இதைச் சொல்வது? ”எம்பொண்ணு எப்படி இருக்காளோ?”ன்னு அழுது ஊரைக்கூட்டுவாளே? டோம்பிவில்லி பகுதியில் ஒரு பெட்ரூம் கிச்சன் வீட்டில் இருப்பதைப் பார்த்தால் இவள் அங்கேயே ஒப்பாரி வைப்பாளே? இதன் காரணமாகவே பம்பாய்க்கு ஒரு டிக்கட் போடத் தான் தயங்குவதை அவள் புரிந்துகொள்ளவில்லையே? அலமாரியைப் பூட்டிச் சாவியைப் பத்திரமாக ஜன்னலின் சட்டத்திற்கும் சுவற்றிற்கும் இடையே இருந்த விரிசலில் ஒளித்து வைத்தார்.

இரு மாதங்கள் கழித்து ஒரு மாலையில் நேரே கோவிலுக்குப் போய் சீக்கிரமே வீடு திரும்பியவர், வாசலில் செருப்பு கிடப்பதைப் பார்த்தார். விஜயா வந்துவிட்டாளா? யார் கதவைத் திறந்து விட்டது? சற்றே வியப்புடன் உள்ளே நுழைந்தவர், கேட்ட உரையாடலில் தயங்கி நின்றார்.

“அகிலா புள்ளக்கு எம்புட்டு தலைமுடிங்கே? கையை விட்டா விரலை எடுக்க முடியாது பாத்துக்க. அத்தன அடர்த்தி, சுருட்டை. அதான் அடிக்கடி சளி பிடிக்கி”

“அங்?” என்றாள் பூரிப்பில் சிவகாமி.

“நல்லா சிரிக்கான் வேத்து முகம் கிடையாது கேட்டியா? கைய நீட்டினா, ஒடனே தாவிட்டான். வெளிய ஊர் சுத்தப் போணும்.”

“ஊர் சுத்திக் கழுத , என்னா?” சிரிப்புடன் சிவகாமி கையைக் கொட்டினாள்.

“ஆமாக்கா. கார்த்தி இருக்கற இடத்துலேந்து அவங்க ஊரு தூரம். சரின்னு ரெண்டு நாள் அவங்க வீட்டுலயே நின்னேன். சத்துமாவு, நீ கொடுத்த சாம்பார் பொடி, ரசப்பொடி எல்லாம் பதமா எடுத்து வைச்சுக் கொடுத்துட்டுத்தான் வந்துருக்கேன். நல்ல காத்து வருது. தண்ணி நல்லா வருது. ஆனா…”

“என்னட்டீ?”

“இடம் சின்னது. அவங்க பெட்ரூம்ல படுத்துக்காக. நான் ஹால்ல படுத்தேன். ராத்திரி பாத்ரூம் போணும்னா அவங்களத் தாண்டிப் போணும் பாத்துக்க. இந்தா இங்கன..” என்று விஜயா கையால் இடம் காட்டினாள்.

“ இங்கிட்டு படுத்திருக்காங்கன்னு வையி. நாம இப்படி ஓரமா நடந்து போவணும். அதுல நீ பாக்கணும்..” விஜயா சற்றே நிறுத்தினாள்.

ஒரு நிமிட உள் ரசிப்ப்பின் பின் தொடர்ந்தாள் “ ஒரு பக்கம் இது குஞ்சக் காட்டிட்டுப் படுத்திருக்கு. அதைக் கட்டிகிட்டு அகிலா படுத்திருக்கா. அவரு ரெண்டுபேரையும் கையால அணைச்சுகிட்டுப் படுத்திருக்காரு. பாக்கயில, அகிலா சின்னப்பிள்ளயா ஒங்கிட்ட பால்குடிக்கப் படுத்திருக்கும்லா, அது மாரி அவளை ஒட்டிட்டுப் படுத்திருக்கு. எங்கண்ணே பட்டிருக்கும்க்கா. எதுக்கும் கண்ணெச்சி போகறதுக்கு ஒரு கண்ணு வாங்கி அம்மனுக்குப் போட்டுறுதேன்”

“அட, விடுறீ. அவள வளத்தது நீயி. அம்மா கண்ணு படுமாட்டீ பொண்ணுமேல?. புத்தி கெட்டவளே”

நடராசன் மெல்ல எழுந்து வெளியேறினார். அரைமணி கழிந்து மீண்டும் அவர் வந்தபோது விஜயா போயிருந்தாள்.

“என்னாட்டி? ஒந்தங்கச்சி வந்திருந்தாப்புலயா? என்ன சொன்னா?”

“ப்ச்.” என்றாள் சுருக்கமாக.

“தங்கச்சி வந்து சொன்னதுல ஆசை கிளம்பிருச்சோ? பம்பாய்க்கு டிக்கட் போடணுமா?” என்றார் கிண்டலாக.

“வேண்டாம்”

“வேண்டாமா?” வியந்தார் அவர். இது என்ன? அவள் சொன்னதுல எனக்கே பேரனைப் பாக்கப்போகணும்னு தோணுதே?

” அவங்க படுத்திருக்க இடத்துல இவளுக்கு என்ன பார்வை? புத்தி கெட்ட சிறுக்கி, அவ்வளவு அந்தரங்கம் இல்லாத இடம்னா நாம பெரியவங்க பாத்து நடந்துக்க வேணாம்? அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்வளவு சங்கடப்படும்? இதுல நான் வேற போய் நிக்கணுமா?”

அயர்ந்து போனார் நடராஜன். எவ்வளவு நாசூக்கான நிலையை அழகாக அவள் சொல்ல, இவளும் புரிந்துகொண்டுவிட்டாள்? இவளுக்கா புத்தியில்லை என்று நினைத்தேன்?

மறுகணம் சிவகாமி கேவினாள். “ முடி நிறைய இருக்குங்காளே? சாம்பிராணி புகை போடணும்னு அகிலாவுக்குத் தெரியுமோ தெரியலையே? ஏங்க, அவளுக்கு ஒரு போன்போட்டுக் குடுங்க, நான் பேசுதேன்”

பனித்த கண்களினூடே, சிரமப்பட்டு நம்பரைத்தேடி பெண்ணை அழைத்தார் நடராஜன்.

ஆயிரம் வருடங்கள் முன்பு, தான் வளர்த்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்து அதன் நிலையை செவிலித்தாய் , நற்றாய்க்குச் சொல்லுகிறாள்.

“புதல்வற் கவைஇய தாய்ப்புறம் முயங்கி

நசையினன் வதிந்த தடக்கை, பாணர்

நரம்புளர் முரற்கை போல

இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே”

ஐங்குறு நூறு ,முல்லை செவிலி கூற்றுப் பத்து 402.

” மகனைத்தழுவிக் கிடக்கும் தன் மனைவியின் முதுகில் ஒருங்கி இருவரையும் தழுவி உறங்கும் கணவன் எனக் காணும் காட்சி, தேர்ந்த பாணர்கள் நரம்புகளை மீட்டி இசைக்கும் இனிய இசை போல் இனியது மட்டுமல்ல, இல்லறப்பண்பின் செவ்வியையும் காட்டுகிறது, தாயே!”

2 thoughts on “சிவகாமி

 1. சீதாபதி ஶ்ரீதர் (ஶ்ரீதர் ட்ராஃப்கோ)

  சொல்ல முடியாத சமாசாரத்தை நாசூக்காக சொல்லி என்ன அழகாக புரிய வைத்துவிட்டார் அந்தப்பெண்!
  நீங்களும் நாசூக்காக எங்களுக்கும் சொல்லி விட்டீர்கள்…
  டாப் க்ளாஸ் கதை..
  நடுத்தர குடும்பங்களின் நிலையை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் சுதா…
  Hats off

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s