இயற்கை மருத்துவமென்ற பெயரில்…

வெகுநாட்கள் பிறகு நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு “ஷுகர் எப்படி இருக்கு?” என்று தொடங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடமாக அது தொடர்பாக வேறுவேறு கேள்விகள். சற்றே வியப்பு மேலிட, “ என்னடா விசயம்?” என்றேன். அவனுக்கும் அதீதமான அளவு சர்க்கரை ஏறிக்கிடந்ததை அறிவேன்.
“இப்ப எனக்கு ஷுகர் நார்மல் ஆயிருச்சு. ஃபாஸ்ட்டிங் 89.” என்றான். “அட” என்றேன். 250க்கு குறைவில்லாமல் எண்கள் சொல்லுவான் முன்பெல்லாம்.
“ஒரு புக் படிச்சேன். இயற்கை முறையில் எல்லா வியாதியையும் தீர்க்கிற மாதிரி. அதுலேர்ந்து ஒரு மாசமா சரியாயிட்டேன்”
சற்றே எச்சரிக்கையானேன். “எப்ப டெஸ்ட் பண்ணினே?”

“அத விடு. மாத்திரையெல்லாம் நிறுத்திட்டேன். ஒரு மயிரும் வேண்டாம் கேட்டியா. இவனுக பைசா புடுங்க நம்ம பலியாடாக்குறானுவ. டாக்டரைப்பாத்து நாக்கைப்புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கணும்னு இருக்கேன்”
“லே. கிறுக்குத்தனமா எதாவது செய்யாதே.”
“விடு மக்கா. நல்லா மென்னு திங்கணும், தேவைப்படற அளவு திங்கணும், நொறுக்குத் தீனி நிறுத்தணும். நல்லா நடக்கணும். இவ்வளவுதான்”
“இதத்தான் உன் டாக்டரும் சொல்லியிருப்பாரே? அவரை ஏன் கொல்லணும்னு நிக்கே இப்ப?”
”கேளுடே. இயற்கைன்னா என்ன?” என்று தொடங்கி ஒரு லெக்சர் அரைமணி நேரமாக.
“ஆக, ஏஸி கூடாது. ஃபேன் காத்து சூடு -கேட்டியா. வேணும்னா ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்திரு. இயற்கைக் காத்து வேணும். தரையில படு”
“மக்கா நடக்கறதப் பேசு” என்றேன் பொறுமையாக.
“கேளுல, மூதி. சொல்லறப்ப நடுவுல பேசாத. ஃபில்ட்டர் தண்ணி குடிக்கக்கூடாது. மினரல் எல்லாம் போயிருது. நேரா குழாய் தண்ணிய, ஒரு காப்பர் பானை இல்லை வெள்ளி சொம்புல வச்சி குடிச்சேன்னா,அதுல இருக்கிற பாக்டீரியாவெல்லாம் செத்துரும். நான் இப்ப அப்பிடித்தான் குடிக்கேன்.”
“வெளங்கும்.”
“இதான்.. இதான்ல உங்க மாதிரி ஆட்கள்கிட்ட. டாக்டர் எதோ நமக்குத் தெரியாத மொழியில பேசி ஒரு மருந்தை காலாகாலமாத் தின்னுடேன்னு தருவான். நீயும் விசத்தை திம்பே. அவனுக்கு கமிசன் கிடைக்கி”
“இந்த ஆளு எந்த ஊர்  டாக்டர்?” என்றேன்.
“அத்த விடு. அவரு நம்ம பழைய அறிவுரையெல்லாம்தான் ஒரு புக்கா, நமக்குப் புரியற மாதிரி போட்டிருக்காரு. புதுசா அவரா ஒண்ணும் சொல்லலை கேட்டியா? இந்த புக் படி”
என்றவாறே ஒரு மென்பிரதியை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.
”திருமூலர், வள்ளுவர் பழைய நீதிநூல்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களே இவை” என்று அதில் போட்டிருந்தது. எந்த திருமந்திரம், எந்த திருக்குறள் என்று ஒரு ரெபரென்ஸும் இல்லை. அவர் சொல்லியிருப்பதற்கு அறிவியல் பூர்வமாக ஒரு நிருபணமும் இல்லை. நம்புங்கள், செய்யுங்கள்.இது மரபு என்பது போன்ற கருத்தமைவு.

வயிறு என்பது ஏதோ ஒரு ரியாக்டர் போலவும், அதில் உணவு என்ற கெமிக்கல்கள் விழுந்து, அமிலத்தில் கபகபவென குமிழித்து வருவது போலவும் சித்திகரிக்கப்பட்டு, மென்று முழுங்குவது ஏன் நல்லது என்பதை சொல்லியிருந்தார்கள். மென்று முழுங்குவது, உமிழ்நீர் சுரப்பது எல்லாம் வரையிலும் சரி. பயோ கெமிக்கல் ரியாக்‌ஷனுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ரியாக்‌ஷனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மேலெழுந்த வாரியாக இவற்றை “பூ” என்று சொல்லிவிட்டுப் போவது சரியாகாதே என்று கவலைப்பட்டவாறே முழுதும் வாசித்தேன்.

என்னளவில், இவை நற்பழக்ககங்கள் என்று கொள்ள முடியும். Lifestyle change என்பது மட்டும் டயாபடீஸையும், ரத்த அழுத்தத்தையும் நீக்கிவிடாது. குறைக்க உதவும். நாளடைவில் இவை கட்டுப்பாட்டிற்குள் வரும். அது “சரியாகி விட்டது” என்று கொண்டாடிவிட முடியாது. முதலில் டயாபடீஸ் ஒரு நோயல்ல, சமனிலி விளைவு என்பதை அறிவதே பெரும்பாடாக நம்மில் பலருக்கும் இருக்கிறது.

சில அதீத விதிமுறைகள் காலத்துக்கு ஒத்துவருமா? என்று சிந்திக்க வேண்டும். இயற்கை உணவு என்ற பெயரில் இவன் நிலக்கடலையை அதிகமாகத் தின்று தலை சுற்றி அதன்பின் நிறுத்தியதும் சொன்னது நினைவுக்கு வந்தது.

புதிதாக மதம் மாறியவர்கள் , ஒரு உத்வேகத்துடன் தங்கள் புதிய மதக்கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும், பிறருக்கு பரப்புவதும் போன்ற செயல்களுக்கும், பழக்க வழக்க மாறுபாட்டில் சற்றே பயன்பெற்றவுடன் இதுதான் சரியான மருந்து என்று ஆனந்தத்தில் திளைப்பதற்கும் வித்தியாசமில்லை.

நண்பன், இதோடு 30 புத்தகங்களை வாங்கி தன் குடியிருப்பில் இருப்பவர்களுக்கு வினியோகித்திருக்கிறானாம். என்னையும் வாங்க வற்புறுத்தினான்.

இன்று ஒரு குறுஞ்செய்தி “ மக்கா, சூரிய நமஸ்காரம் செய்யி. இன்னா? அந்த புத்தகத்துலேயும் அதுதான் எழுதியிருக்காரு” .

ஆயாசத்துடன் பதில் அடித்தேன் “ மக்கா, சூரிய நமஸ்காரெம்ல்லாம் புக்குல போட்டிருக்குன்னு தடபுடலா செய்யக்கூடாது. சுளுக்கிட்டி நிக்கும். ஒழுங்கா யோகா பயிற்சியாளரிடம் போய் கத்துக்கணும்”
“நீ இப்படித்தான் நம்பாம நடக்க. நல்லதில்ல கேட்டியா? ஒந் நன்மைக்குத்தான் சொல்லுதேன். அவரு என்ன சொல்லுதாருன்னா….”

ஒரேயொரு வார்த்தை என்னிடமிருந்து  “சோலியப் பாருலே”

1 thought on “இயற்கை மருத்துவமென்ற பெயரில்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s