ஆர். சூடாமணி யின் கதைகள் – ஒரு வாசிப்பு

ஆர். சூடாமணி அவர்களின் கதைகள் மிக நுட்பமான உணர்வுகளை, இயல்பான கதை ஓட்டத்தில், அவற்றின்  நுட்பம் குறையாத வகையில் வெளிக்கொணர்வன.  ஓடும் ஆறாக கதை ஒழுகிச்செல்ல, படுகையில் கூழாங்கற்களாக உணர்வுகளும், உறவுகளும் உட்பாதங்களை நெருடுவதாகப் படைப்பதில் தனி ஆற்றல் கொண்டவர் அவர்.  அவரது கதைகளை பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை எனினும், மனித உணர்வுகளை, கதையின் தொடக்கக் காட்சிகளில் அறிமுகப்படுத்தி, நடுவே கதாபாத்திரங்களின் உரையாடல்களின் வழியாகவோ, சுய அலசல்களின் வழியாகவோ வெளிப்படையாக வரவைத்து , இறுதியில் அவ்வுணர்வுகளின் தாக்கத்தை கதையின் இயக்கத்தில் ஏற்றி. உணர்வுகள், உறவுகள் இவற்றின் தொடர்புகள், அலசல்கள் என்பவற்றிலேயே அவர் கதைகளை நகர்த்தி வந்தார் என்றளவில் பொதுமைப் படுத்தலாம்.


மூன்று கதைகள் அழியாச்சுடர்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்நியர்கள், பூமாலை, இணைப்பறவை.. மூன்று தலைப்புகளும் சற்றே நேரடித் தொடர்பு என்றளவில் கதையில் ஏறவில்லை. கதையைப் படித்தபின்னரே, தலைப்பின் தொடர்பை அறிந்து உணர முடியும்.  1960களில் அருமையான உத்தி அது.


அன்னியர்கள் கதையில் இரு சகோதரிகள், தங்களது பொதுமையான வளர்ப்பையும், அதன்மூலமாகவோ, அதில்லாமலோ கிடைத்த பொதுக்க்குணங்களை வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் கண்டெடுத்து அதில் திளைத்திருக்கையில், தனித்துவம் என்ற பண்பு எவ்வாறு இருவரையும் வேற்றுமைப் படுத்துகிறது என்பதை பல நிகழ்வுகளில் உணர்கிறார்கள்.  யதார்த்தம் என்பதும், உறவின் வழி, வளர்ப்பின் வழி வருகின்ற எதிர்பார்ப்புகளும் வேறுபட்டவை என்பதை சிறு அதிர்ச்சிகளில் உணர்வதை மிக அழகாக உணர்த்தும் கதை “அந்நியர்கள்”


”பேச்சு என்றால் அதில் தொடர்ச்சி கிடையாது. அல்லது, அத்தொடர்ச்சி தனி வகைப்பட்டது ஒருநாள் பேசியிருந்த விஷயத்தைப் பற்றி அடுத்த நாளோ மூன்றாம் நாளோ வேறொரு சந்தர்ப்பத்தினிடையே திடீரென்று, “அதுக்காகத்தான் நான் சொல்றேன்…” என்று தொடரும்போது இழைகள் இயல்பாய்க் கலந்துகொள்ளும். அவர்களுக்குத் தொடர்ச்சி விளங்கிவிடும். மேலே தெரியும் சிறு பகுதியைவிடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது உடன்பிறப்பின் பந்தம்; வெளியே தலை நீட்டும் சிறு தெறிப்புகளுக்கு ஆதாரமாய் அடியில் பிரம்மாண்டமான புரிந்து கொள்ளல்.”

இப்படி ஆழமான அழுத்தமான உறவும், புரிதலும் கொண்ட சகோதரிகள் இறுதியில் சிந்திக்கும்பொழுது,

”ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ஒரே மரபினாலும் ஒரே வகையான பராமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், மதிப்புகளும்! ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு? ஒவ்வொரு மனித உயிரும் ஓர் அலாதியா? அதன் தனிப்பட்ட தன்மையை ஒட்டித்தான் வாழ்க்கை எழுப்பும் எதிரொலிகள் அமைகின்றனவா? ஒருவரையொருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை அறிவீனம்? எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. காலம் கொண்டுவரும் மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல…”

என்பது உறவுகளின் பொது அலசலை சுயத்தில் ஏற்றிச் சிந்திக்க வைத்த சூடாமணியின் அபார சாதுர்யம். 

சிறுவயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்த பெண் , திருமணமான பின் முழு அன்பினை எதிர்பார்த்து, கணவன் ஒரு அழகான பெண்ணை ரசித்ததில் வெகுண்டு, தன் ஏமாற்றங்களில் வெந்த எதிர்ப்பார்ப்புகளை மனத்தில் வைத்து வாழ்கிறாள். ஒரு கடிதம் மூலம் அந்த விஷ விதைகளை வெளியேற்றச் சொல்லும் உத்தியை லாகவமாக சூடாமணி கையாண்டிருக்கிறார். பழைய புண்களை இன்றும் சுமந்து, நிகழ்கால நிக்ழ்வுகளை அப்புண்களின் வலியின் எதிர்ப்பாக வெளிப்படுத்துவதை இடித்துரைக்கும் கடிதம் முற்றுப் பெறுவதும்,ஒரு எதிர்பார்ப்புடனே…


“அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.”


வாழ்வில் இன்பத்தை அனுபவிக்காது, பழங்கால துன்பத்தை நினைவு கூர்ந்தே வலியில் கழிப்பதை அழகாக எடுத்துக்காட்டிய வரிகள் இவை.உறவின் வலிமை, அதனை இழக்கும் போதுதான் தெரிகிறது என்பதைக் காட்டுகிறது இணைப்பறவை என்ற கதை..   வீட்டில் பாட்டி இறந்துவிட, அவ்வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணங்களையும், இழப்பினைத்  தாங்கும் விதத்தையும் காட்டிய கதை இது. தன் மனைவி இறந்தபோது அழாத முதியவரின் அழுத்தம் அனைவரையும் திகைக்க வைக்கிறது, கவலை கொள்ள வைக்கிறது. ஓவ்வொருவரும் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் முதியவர் தனக்கு நிகழ்ந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாகக் காட்டிய விதம் சூடாமணி அவர்களின் எழுத்துத் திறனுக்கு ஒரு சான்று.


வாழ்வினைப் பாட்டி எப்படி எடுத்துக் கொண்டாள் என்பதை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக இப்படிச் சொல்கிறார்


“ நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும், அழிவும் சாவும் தோற்கறதுன்னும் மனசிலே பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால் தான் சொன்னேன், அவளுக்குத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு”


ஆர். சூடாமணி அவர்களின் கதைகளின் மூலம் மனிதர்களின் உணர்வை வாசிக்கிறோம்.


நன்றி அழியாச்சுடர்கள்   http://azhiyasudargal.blogspot.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s