கருப்பி என்ற தேங்காத் துருத்தி

ஞாயிறு காலை 6 மணி என்பது நடுநிசி என்றுதான் என் அகராதியில் பொருள். அந்த நேரத்தில் தொலைபேசி அடிக்கவும், தூக்கக் கலக்கத்தில் குழறினேன். “அல்லோ”

“லே, இன்னுமா எந்திக்கல? ஒரு விசயம் சொல்லணும்டே” சிவகுமாரின் குரல் உறக்கத்தைக் கலைத்தும் கலைக்காமலுமான ஒரு நிலையில் வைத்திருக்க, அவன் அடுத்த வாரம் அவன் மும்பை வரப்போகும் சேதியைச் சொன்னான். பேசி முடிக்கும்போது “தெரியுமாடே, தேங்காத்துருவி ஆச்சி போயிட்டு” என்றான்.

“யாரு?” எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை. அவனது மவுனத்தில் ஒரு கோபம் எழுந்து வருவதை மெல்ல உணர்ந்தேன். மங்கலாகத் தோன்றிய நினைவில் கருப்பி ஆச்சி கண்ணில் பட்டாள்.

“யாரு?கருப்பி ஆச்சியா?” என்றேன்,சோம்பல் முறித்தவாறே.

“ஆமா, ஒரு மாசமாச்சி. ஞாபகமிருக்கா? சொர்ணா கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடிதான் அவங்க அறுவது நடந்துச்சு. நீ இருந்தேல்லா?”

புதுத் தெருவிலிருந்து வடக்குத் தெரு திரும்பும் இடத்தில் பெரிசாக ‘காந்திமதியம்மன் ஜெனரல் ஸ்டோர்ஸ்” என்று போர்டு போட்டிருக்கும் தணிகாசலம் கடையில் ‘கணக்கு நோட்டு வேணும்ணாச்சி. ரெஜினா  டீச்சர் திட்டுவாங்க” என்று இரவு எட்டுமணிக்கு நினைவுக்கு வந்து பதட்டத்துடன் சொன்னாலும் , “ சோவாறிப் பயலே. இப்பத்தான் கேக்கணும்னு நனவு வந்துச்சாங்கும்? பள்ளிக்கூடத்துல எங்கல வாய்ப் பாத்துகிட்டிருக்கீய? “ என்று உரிமையுடன் திட்டியபடியே  கணக்கு நோட்டை எடுத்துத் தருவார். 5 பைசாவுக்கு, 10 பைசாவுக்கு என்று ,  நீல மையினை அடர்வு மாற்றி, வாங்குபவனின் பண நிலைக்கு ஏற்ப பவுண்டன் பேனாவில் நிரப்பிக் கொடுப்பார். மை நிரப்புவதும், கோடு போட்ட, போடாத நோட்டு கொடுப்பதும் மட்டும்தான் அவரது வேலை என்று வெகுநாள் நினைத்திருந்தேன்.

ஒரு நெடிய பனை மரம் போலிருப்பார் தணிகாசலம். கருகருவென அவர் கால்கள் முட்டியிலிருந்து கீழே தெரிய, வெள்ளை வெளேரென்று வேட்டியை மடித்துக் கட்டியபடி அவர் நிமிர்ந்து நடப்பதைப் பார்க்கும்போது, ”அண்ணாச்சி மாதிரி இருக்கணும்” என்பேன் , தையற்கடை ஆறுமுகத்திடம்.

”போல” என்பார் அவர் சிரித்தபடியே.”இவம் மாரி இருந்தா குடும்பம் வெளங்கும். கல்யாணங் கட்டிட்டும் இன்னிக்கும் ப்ரம்மச்சாரி. நாலு கழுத வயசாயிட்டு.” அப்போது புரியாதது, கல்லூரி பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் , ஆறுமுகம் சொல்லச்சொல்லப் புரிந்தது.

தணிகாசலத்தின் முறைப்பெண் மீனாட்சி , கருப்பாக, குண்டாக இருப்பாள். அத்தோடு முன்னால் தெற்றுப்பற்கள் மூன்று மஞ்சளாகப் பெரிதாகத் தெரியும். கொஞ்சம் அப்பாவியான மீனாட்சி, வாயைத் திறந்தாலே மற்றவர்கள் சிரிக்கத்தொடங்கிவிடுவார்கள். அவளைக் கருப்பி என்றும் தேங்காத் துருத்தி என்றுமே அழைத்துப் பழக்கம்.

ஊர் அவளது அப்பாவித்தனத்தை, மந்த புத்தி என்றும், பைத்தியம் என்றும் பேரிட்டு வைத்தது. சொத்து போய்விடக்கூடாது என்பதற்காகவும் “ என் பொண்ண நீதான் வாக்கப்படுதணும் தம்பீ” என்று அவள் அம்மா கதறியதாலும், தணிகாசலம் அவளைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் என்ன நடந்தது என்பது ஊரில் அவரவர் வாய்ப்படி பேசப்பட்ட கதைகள்.

அடுத்த மாதமே, அவளைத் தாய்வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு. “இவளோட குடும்பம் நடத்த எனக்கு ஒப்பு இல்ல. பெரியவக மன்னிக்கோணும். “ என்றாராம் தலையில் கைகூப்பியபடிகுடும்பத்தில் பெரிய ஆண்கள் தனியாக அவரை விசாரித்தபோது “ சொல்லக் கூசுது. அவ ஒடம்புல ஒரு நாத்தமடிக்கி. கவுச்ச மீன் வாடை. தோலு, மீன்செதிலு கணக்கா சொரசொரன்னு. மீனான்னு கூப்பிடறப்போ, மீனுதான் நெனவுக்கு வருது. என்னத்த சொல்ல? விசயம் இன்னும் நடக்கல” என்றாராம்.

பெரியவர்கள் கூடிப் பேசிய பின், சொக்கலிங்கம் தாத்தா ’மீனாட்சியின் தங்கை சுந்தரியை அவருக்கு மணமுடித்துக் கொடுத்துடணும். ரெண்டு பெண்களையும் தணிகாசலம் காலம் முழுக்க வச்சுக் காப்பாத்தணும்’என்பதாக ஒரு தீர்ப்பைச் சொன்னார்.  தணிகாசலம் ஒத்துக்கொள்ளவில்லை.

“லே,நீ என்னா இப்படி கொதிக்க? சுந்தரிக்கு என்னா கேடு? நம்ம சாதியில ரெண்டு கட்டறது பழக்கம்தான்டே. வச்சுக்கவா சொல்லுதேன்? கட்டுன்னுதான சொல்லுதேன்?”

“பெரியவக மன்னிக்கோணும்.” தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாராம் தணிகாசலம். “ இவளக் கட்டினபொறவு இன்னொரு கட்டு எனக்கில்ல. என்ன, இவ கூட வாழ மனசு ஒப்பமாட்டேங்கு. மாசாமாசம் இவளுக்கு ஒரு தொகை கட்டிப் போடுதேன்.” அன்று அக்கா வீட்டிலிருந்து வெளியேறியவர், எத்தனையோ பெண்களின் வலைவீச்சுக்கும், குடும்ப வற்புறுத்தலுக்கும் மசியாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

“இதான் கேக்கேன். இதென்ன வாழ்க்கையாடே? கட்டினா, அவகூட கிடக்க வேண்டியதுதானே? லைட்டை அணைச்சிட்டா, கருப்பென்னா, வெளுப்பென்னா,?” ஆறுமுகத்தின் சில தருக்கங்களை உசாதீனப் படுத்த  முடியாது என்றாலும், ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

ஆயிற்று. இருவத்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. ஊர்ப்பக்கம் அடிக்கடி போக்கு இல்லை என்றாலும், எப்போவாவது தணிகாசலத்தை அவர் கடையில் தூரத்திலிருந்து பார்க்க நேரிடும். வயது ஏறிய ஒரு உறுதியான பனைமரம் மெல்ல மெல்லத் தளர்வதைப் பார்க்க என்னவோ போலிருக்கும்.

இரு வருடங்கள் முன்பு, சிவகுமாரின் தங்கையின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். அடுத்த நாள் திருமணம் என்பதால், மாலையில் சாவி தருவதாக மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். சில சாமான்களைக் கொண்டு வைப்பதற்காக மதியமே நானும் சிவகுமாரும் போயிருந்தோம்.

“அறுவது ஒண்ணு இன்னிக்கு காலேல. முடிஞ்சிட்டு. இப்ப கிளம்பிருவாங்க. இரிங்க” என்றார் மண்டப ஆபீஸர்.

“யாருக்கு அறுவதாங் கல்யாணம்?” என்றான் சிவகுமார். மண்டபம் கிட்ட்த்தட்ட காலியாயிருக்க, நாற்காலிகள் வரிசையின்றி கலைந்து கிடந்தன. அங்கங்கே சிலர் கூட்டமாக அமர்ந்து வதந்தி பேசிக்கொண்டிருக்க, ஒரு மூலையில் கலகலவென ஒலி. சில வயதான பெண்களும், அவர்களின் நடுவே இரு நாற்காலிகளில் மாலையும் கழுத்துமாக இரு வயோதிகர்கள்.

“லே மக்கா, அது தணிகாசலம் அண்ணாச்சில்லா?” என்றேன் வியப்போடு.

அவர்களின் பின்புறமாகத் தாண்டி ஸ்டோர்ஸ் செல்ல வேண்டியிருந்ததால், அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது.

”அக்காங். ரெண்டு மாசம் அண்ணாச்சி ஆசுபத்திரியில கெடந்தப்ப , கருப்பிதான வந்து எல்லாஞ் செஞ்சா? அவளுக்கு நீரு,ஒரு பவுனு போட்டா என்னவாம்?” ஒரு கிழவி சீண்ட, தணிகாசலம் நெகிழ்ந்திருந்தார்.

“ ஆமாட்டி, கருப்பி, நீ வரலன்னா, பக்கவாதத்துல, புழுத்தேல்லா அங்கிட்டு செத்திருப்பேன்? . கொஞ்சமும் சுளிக்காம மலம், மூத்திரம் அள்ளிப் போட்டியேடி? ஒனக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்?”

“ஏ புள்ள, கருப்பி, இதான் நேரம். கேளு, ஒனக்கு என்னா வேணும்னு சட்டுன்னு சொல்லிப்போடு.” எவளோ கூட்டத்தில் சொல்ல, “ஆமா, ஒரு புள்ள வேணும்னு கேளு” என்றாள் இன்னொருத்தி. கூட்டம் கலகலவென சிரித்தது.

நான் சுற்றி வந்திருந்தேன். மீனாட்சி என்ற  கருப்பி என்ற தேங்காத் துருத்தி எனக்கு வலப்பக்கம் வெகு அருகில் தெரிந்தாள். அவளது கரிய முகத்தில், கண்களின் ஓரம் கண்ணீர் பளபளத்தது.

“என்னாத்த பெரிசாக் கேட்டுறப் போறன்? அன்னிக்கு எங்காத்தா வூட்டுல வுட்டுட்டுப் போறப்போ ஒரு வார்த்த சொன்னீய.” இவளக் கட்டுனபொறவு எனக்கு வேற கட்டு இல்ல” ஒம்ம மனசுல நான் இல்லாட்டி இந்த வார்த்த வந்திருக்குமா? என் மனசுல நீரு இருந்தீரு. மலம் மூத்திரம் அள்ளிப்போட்டன்னு சொல்லுதீயளே? வயித்துல சொமந்த புள்ளைக்குக் கூடத்தான் ஒருத்தி குண்டி தொடைக்கா. மனசுல சொமந்த ஆளுக்கு செஞ்சா என்னா? அடுத்த சென்மம்னு இருந்தா, நீரு எம் புருசனாயிருக்கணும், நான் ஒம்ம நெனப்புல இப்ப மாரியே எப்பவும் இருக்கணும். அதான் வேணும்”

“கருப்பி” என்றார் தணிகாசலம் கண்களைத் துடைத்தபடி.

நானும் சிவகுமாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அது பற்றி இருவரும் ஒன்றும் பேசவில்லை.

”லே மக்கா, லைன்ல இருக்கியா?” சிவ குமாரின் குரலில் நனவில் மீண்டேன்.

“ஆங் இருக்கேன். இப்ப தணிகாசலம் அண்ணாச்சி எங்க இருக்காரு?”

“அவரு பைத்தியமாயிட்டாரு. கருப்பி, கருப்பின்னு பொலம்பி, வேட்டி அவுந்தது கூடத் தெரியாம பஸ் முன்னாடி போய் நின்னு… ஊர்க்காரங்க அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம்.” அதன் பின் அவன் பேசியது என் நினைவில் இல்லை.

“அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்னம் மாநீர்ச்சேர்ப்ப!

இம்மை மாறி மறுமையாகிலும்,

நீயே ஆகியர் என் கணவனை

நானே ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே!”

“அணில் பல் போன்ற கூரான முட்களை உடைய செடியில் கார் அன்னப் பறவைகள் கூடுகட்டுகின்ற வளமையான நெய்தல் நாட்டை உடையவனே! இந்த பிறப்பு போய் மறுபிறப்பு வருமானாலும், நீயே என் கணவனாக ஆகுக. நான் மட்டுமே உன் நெஞ்சில் இருப்பவளாக ஆகக் கடவேன்” குறுந்தொகையில், தன்னிடம் திரும்பி வந்த தலைவனைப் பார்த்து தலைவி பாடியது இப்பாடல்.

கூடி இருந்து குழந்தைகள் பெற்றால் மட்டும்தான் இல்வாழ்வா? இல்லறம் என்பது நெஞ்சில் இருப்பது.

3 thoughts on “கருப்பி என்ற தேங்காத் துருத்தி

 1. சேக்காளி

  //கருப்பி என்ற தேங்காத் துருத்தி//
  துருவி என்பது தானே சரியானதாக இருக்கும்.
  அப்புறம்
  //லைட்டை அணைச்சிட்டா, கருப்பென்னா, வெளுப்பென்னா,?” //
  அவர் அவளை கருப்பென்ற காரணத்திற்காக நிராகரிக்க வில்லை.
  முடிவில் கருப்பிக்கு இணையாய் கருப்பனையும் மனதில் சிம்மாசனமிட்டு அமர்த்தி விட்டீர்.
  எந்தூருண்ணே ஒங்களுக்கு?.

  Like

  1. kasturisudhakar Post author

   துருவிதான் சரி. சில கிராம வழக்குகளில் துருத்தியாகும். நான் வட்டார வழக்கு மாற்றவேண்டாமெனப் பார்த்தேன். சொந்தூரு நாங்குநேரின்னாலும், பொறந்து வளந்து சோவாறித் திரிஞ்சதெல்லாம் தூத்துக்குடி பாத்துகிடுங்க. நல்ல பேரா வச்சிருக்கீயளே “சேக்காளி”!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s