நேரா யோசி_6

எதிரி 6 : முன் அனுபவம்
தொண்ணூறுகளில் டேப் ரிகார்டர்களில் பாட்டு கேட்க, ஒலி நாடாவில் பாட்டுகளைப் பதிந்து தரும் கடைகள் இருந்தன. ராயல்டி பற்றி எவரும் கவலைப்படாமல், நாம் கேட்டிருக்கும் பாடல்களை, நாடாவில் பதிந்து தருவார்கள். இதில் அவர்களுக்கே ஒரு திறமை வாய்த்திருப்பதால்,  நோயாளிகளை மருத்துவர்கள் கேட்பது போல்  “ சிவாஜியா எம்ஜியாரா? ஜெமினி. சேக்கலாமா? ஏ ஸைடுல , கடைசில ரெண்டு நிமிசம்தான் வரும்.. இங்க, ம்யூஸிக் போட்டுட்டு, ‘ சின்ன்ஞ்சிறிய வண்ணப்பறவை’, அடுத்த பக்கத்துல பதிஞ்சிடறேன் “ என்று தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப பதிவார்கள்.
ஒரு முறை எம்.எஸ்ஸின் பஜகோவிந்தம் முதலாக சில பாடல்களைப் பதியக் கொடுத்தேன். கடையில் இருந்த முதியவரிடம் “ அண்ணாச்சி, ராஜாஜி பேசறது முதல்ல வரணும்” என்றேன். “ அட, அது தானா வரும்தம்பி. பஜகோவிந்தம்னாலே முதல்ல ’ஆதி சங்கராச்சார்யா”ன்னு ராஜாஜி பேச்சுலதான் தொடங்கும்.” என்றார். ஊருக்குப்போய்ப் பார்த்ததும் புரிந்தது , ராஜாஜி பேச்சு பதியப்படவில்லை.
அனுபவசாலி, பல எண்ணற்ற கேசட்டுகளைப் பதிந்து தந்தவரால் இதனைப் பொறுக்க முடியவில்லை. கடைப் பையனை வார்த்தைகளால் விளாசினார். “அண்ணாச்சி, பஜகோவிந்தம்னு எழுதியிருந்தீய. அது வேற” என்று அவன் சொன்னதைக் காதிலேயே அவர் வாங்கவில்லை. தன் கணிப்பு தவறிய அதிர்ச்சியில் சில நொடிகள் மவுனமாக இருந்தார்.
இதேதான், வழக்கமாகப் போகும் ரயில் புறப்படும் நேரம் மாறியிருப்பதைச் சரிபார்க்காமல், “ ஏழு அம்பதுக்குத்தான் வண்டிய எடுப்பான். அவசரமே இல்லாம ஏழரைக்குப் போனாப் போறும்” என்பவர், ஏழாகாலுக்கு அந்த வண்டி கிளம்பிப் போனதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார் “ எப்ப நேரத்தை மாத்தினான், வீணாப்போனவன்?” என்று ரயில்வேயைத் திட்டிக்கொண்டிருப்பார்
இது அனுபவம் குறித்த அனுமானப் பிழை. அனுபவம் எப்போதும் சரியாகவே இருக்க வேண்டியதில்லை. கேள்வி என்ன? என்பதை முதலில் அனுபவம் கொண்டு, பெருமூளை தீர்மானிக்கப் பார்க்கிறது. வெகு விரைவில்,தன்னிடம் வந்த சவாலை தீர்த்துவிட்டு, அமைதியாக்க் கிடக்கவேண்டும். அதுதான் அச்சோம்பேறியின் திட்டம். அனுபவம் பெரும்பாலும் சரியான பதிலைத் தரும். ஆனால்  தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதற்கும் நேராக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு? நேராக யோசிப்பது என்பது ஒரு முறை பின்னூட்டமும், சரிபார்த்தலும் அடங்கியது. ‘ ஏழு அம்பதுக்குத்தான் ட்ரெயின். எதுக்கும் ஒரு தடவ செக் பண்ணிக்கிடறேன்” என்பது உங்கள் அறிவை, அனுபவத்தை குறைத்து மதிப்பிடுவதாகாது. மாறாக, சரியாகச் செல்ல வைக்கும். Trust , but verify என்பது ஒரு நல்ல பழக்கம்.
முன் அனுபவம் என்பது நமக்கு ஏற்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. சிறுவயதில் கேட்ட நேராகக் அறிவுரைகளும், பிறரது உரையாடல்களில் இருந்து எடுத்து, அதனுடன் ஒரு அனுபவத்தைக் கோர்த்தெடுத்துக்கொண்ட்தாகவோ கூட இருக்கலாம். இது, ஆராயப்படாது பதிந்துபோன ஒரு அனுபவ நினைவாக இருந்து, உரித்த நேரத்தில் அப்படியே வெளிவரும் ஆலோசனை அன்றி இயக்கமாக இருக்கச் சாத்தியங்கள் உண்டு.
1984ல் வீட்டை விட்டு முதன்முறையாக நானும் என் நண்பனும் துணையின்றி  மதுரைக்குச் செல்லவேண்டியிருந்த போது, நண்பனின் பெரியப்பா சொன்னார் ”மதியம், ராத்திரி சோறு திங்கணும்னா, ரயில்வே ஸ்டேஷன்ல போயி சாப்புடுங்க என்னா?” சரியெனத் தலையாட்டினாலும் ஏன்?என்று விளங்கவில்லை. அவரே சொன்னார் “அங்கத்தான் சோத்துல சோடாஉப்பு சேக்க மாட்டான்.”
அவரது அறிவுரையின் பின்புலம், 1940களில் இரண்டாம் உலகப்போரின்போது, அரிசி தட்டுப்பாடு வந்ததன் தாக்கம். பிற ஓட்டல்களில் அரிசி குறைவாக இருக்கவே, அதில் சோடா உப்பு சேர்த்து, வயிறு நிரம்பச் செய்தனர்.. ஆனால், ரயில்வே காண்டீனில், அரசு தரும் அரிசி என்பதாலும், அரசின் நேரடிக் கண்காணிப்பு இருந்த்தாலும் சோடா உப்பு சேர்க்காமல் இட்டனர்.  இதெல்லாம் எப்பவோ போய்விட்டது என்றாலும், அவர் மனதில் இருந்து அந்த அனுபவம் நீங்கவில்லை. சூழ்நிலையை ஆராயாது , மனம் ’பேரண்ட்’ என்ற நிலையிலிருந்து பகிரும் அனுபவப் பரிமாற்றம் இது.
நம் முன் அனுபவத்தின் நீட்சியாக பலவற்றையும் பார்த்தல் இதுபோன்றே பல கசப்பு அனுபவங்களைத் தந்துவிடும். ”அந்த காலேஜ்ல டீச்சர் எல்லாம் அருமையானவர்கள். கண்ணை மூடிட்டுச் சேருங்க”   என்று ஒரு காலேஜை பரிந்துரைப்பவர் மனதில் நினைத்திருந்த்து ‘ நான் படிக்கறப்போ சுப்ரமணியன் சார் க்ளாஸ் எடுத்தார்னா, ஒரு பய ஃபெயிலாக மாட்டான்’ என்பது. அவர் எப்பவோ ரிடயர்ட் ஆகிவிட்டார் என்பதும், கல்லூரியில் தற்போது தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு மாரடிக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. விளைவு?
எனவே, முன் அனுபவம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் “ இது என் அனுபவம். எதுக்கும் ஒரு தடவை…” என்று சரிபார்ப்பது தவறுகளைத் தடுக்கும். பல நேரங்களில், இது வேண்டாத முயற்சியாக இருக்கலாம். அதில் சலிப்படைவதைத் தவிர்க்க “ இது , எனக்காகச் செய்வது” என்று மனதில் நினத்துக்கொள்வது பயனளிக்கலாம். சிலர் “ சரி, விடு. எத்தன தடவ சரி பார்ப்பே?” என்று உள்ளூறத் திட்டினாலும் , ‘எதற்கும் ஒரு முறை” என்று மனதுள்ளே சொல்லிக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும்.
எல்லாவற்றிலும் சந்தேகப் பிராணியாக இருக்கவேண்டுமா? உறுதியாக எதையும் நம்பிவிடக் கூடாதா? என்று கேள்வி எழலாம். அனுபவத்தை எங்கே பயன்படுத்துவது? நிலையான ஒரு தகவல் இருக்குமானால் அனுபவம் தவறல்ல. இதுவும் நம் முன் அனுபவ நீட்சிதான். நாம் பேசும் பொருள் என்ன? சரி பார்ப்பது. எதில் சரிபார்க்கவேண்டும்? சூரியன் கிழக்கே உதிப்பதையா? அல்லது நாளைக்கு எத்தனை மணிக்கு இண்ட்டர்வியூ என்பதையா?   இந்த பகுத்தறிவு அவரவர் தம்மில் வரவேண்டிய ஒன்று.
யோசிக்க வேண்டிய செயல்களில் முன் அனுபவத்தைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை என்பதையே முன் அனுபவப் பிழை முன்னிறுத்துகிறது. வடவிந்தியாவில் ஜுகாட் (Jugaad) என்றொரு சொல் உண்டு. ஒரு சவாலுக்கு, தனக்குத் தெரிந்த, கிடைத்தபொருட்களை வைத்து ஒரு தீர்வைக் கொண்டுவருதல் என்பது ஜுகாட்.
அம்ரிதசரஸ்ஸ் அருகே, ஒரு கிராமத்தில் , லஸ்ஸி தயாரித்த கடையொன்றில், பெருமளவு லஸ்ஸி தேவைப்பட, இத்தனை தயிரை எப்படிக் கடைவது? என்று யோசித்தார்கள். வீட்டிலிருந்து, பழைய வாஷிங்மெஷினை கடை முதலாளியின் மனைவி கொண்டுவந்தார். நன்றாகத் தேய்த்து கழுவி, அதில் தயிரைக் கொட்டி, சுழல வைக்க, பத்து லிட்டர் தயிர் ஐந்து நிமிடத்தில் ரெடியானது. இது ஜுகாட். அனுபவம் – வாஷிங் மெஷினில் நீர் சுழல்வது. அதன் நீட்சி, தயிர் கடைவது. இங்கு அனுபவம் சரியாக இயங்குகிறது.
ஆனால், எல்லா சூழ்நிலையிலும் இது ஒத்துப் போகாது.  ஒருவன், வயிற்று வலிக்கு எட்டு கடுக்காய்களை அரைத்து உண்டு, வலி சரியாகிப்போக, எந்த வலியுடன் வந்தவர்களுக்கும் எட்டு கடுக்காய் சாப்பிடுங்கள் என்று சொல்வது அபத்தம் என்பதையே முன் அனுபவப்பிழை காட்டுகிறது. “எல்லா வலிக்கும் எட்டே கடுக்காய்” என்று ஒரு பழமொழியே உண்டு.
எனவே, தன் அனுபவத்தைக் கருத்தாகவோ, அறிவுரையாகவோ முன்வைக்குமுன்னர். ஒரு நிமிடம் ‘இது சரியாக இருக்குமா?” என்று தன்னிடமும் பிறரிடமும் கேட்டுப் பின்னூட்டம் பெற்றுக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும்.  இந்த ஒரு நிமிட இடைவெளியில் பல செயல்கள் சாத்தியம்.
இந்த இடைவெளியைப் பல கோணங்களில் உளவியலாளர்கள் அலசியிருக்கிறார்கள்.
பரிமாற்ற ஆய்வுகளில், இது அடல்ட் எனப்படும் மனச் சிந்தனையின் பலம் என்று சொல்கிறார்கள். இதனை ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே” மற்றும் ’ஸ்டேயிங் ஓகே’ போன்ற பரிமாற்ற ஆய்வு பிரபல புத்தக்ங்களில் விளக்கமாக்க் காணலாம். .
ஸ்டீபன் கோவே  தன் புத்தகமான செயலூக்கமுள்ளவர்களின் ஏழு பழக்கங்கள் 7 Habits of Effective People என்ற புத்தகத்தில், தூண்டலுக்கும் , எதிர்வினைக்குமான இடைவெளியைப் புகழ்கிறார்.
டேனியல் கானேமான் “விரைவாகச் சிந்திப்பது, மெல்லச் சிந்திப்பது’ ( Thinking Fast, Thinking Slow)  என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில் ,எதிர்வினையின் வேகத்தையும், அது வரும் இடைவெளியின் அளவையும் முக்கியமாகச் சொல்கிறார்.
எப்போது முன் அனுபவத்தை மேற்கொள்ளவேண்டும்? எப்போது சிந்தித்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்? இதனைப் பற்றித் தெரியவேண்டுமானால், மேலே கூறிய மூன்று புத்தகங்களையும் வாசியுங்கள். சில காலம் அதில் உள்ள கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதன்பின் நம் அனுபவம் சார்ந்த ஒரு பழக்கம் ஏற்படும்.